பறவை அப்படினு நாம சொன்னதும் பறவைகள் எல்லாம் சுதந்திரமா எங்கவேண்ணாலும் போகலாம்,என்ன வேண்ணாலும் சாப்பிடலாம்னு பல கருத்து இருந்து வருது. இந்த உலகம் நமக்கானது மட்டுமேனு செயல்படுற ஆறு அறிவுகொண்ட மனிதர்களால அண்மைக்காலமா பறவைகள் படுற கஷ்டத்தை கொஞ்சம் சொல்லலாம்னு இந்த கட்டுரைய எழுத ஆரம்பிச்சேன்.
பறவை
* குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் *
நம்ம வீட்டுக்கிட்ட இருக்க மரம், ஓடை, ஏரி , குளம், கடல், மலை, குன்று என எந்த இடமா இருந்தாலும், நாம பறவைகள பார்க்க முடியும், கருப்பு, சிவப்பு, சின்னது, பெருசு அப்படி எந்த வேறுபாடும் இல்லாம ஒரே இடத்துல பல பறவைகள நம்மளால பார்க்க முடியும். இந்த மாதிரி என்னுடைய சின்ன வயசுல வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போனப்போ தான் பல்லாயிரம் பறவைகளை பார்த்தேன். அட இவளோ அழகா இருக்கே, இவங்க எல்லாம் எங்க இருந்து வராங்க?, உணவு என்ன, என்னோட வீடுகிட்ட வராம இங்கமட்டும் வரக் காரணம் அப்படினு பல கேள்வி எனக்குள்ள ஆச்சரியமா எழுந்துச்சு.
அந்த கேள்விக்கான பதில்கள் திரு சலீம் அலி, திரு தியோடர் பாஸ்கரன், திரு முகமது அலி, திருமதி ராதிகா ராமசாமி போன்றவங்களோட புத்தகங்கள், புகைப்படங்கள் மூலமா பூச்சி உண்ணும் பறவைகள், மகரந்தச்சேர்க்கை செய்யும் பறவைகள், பழங்கள், விதைகள சாப்பிடுற பறவை, பறவைகளை வேட்டையாடி உண்ணும் பறவைகள் இருக்குறதும், தண்ணீர், இரை போன்ற விஷயங்களுக்காக வலசை போறது, ஒவ்வொரு பறவைக்குமான சூழல் மாறுபடுறது என இன்னும் பல ஆச்சரியமான விஷயங்கள் இருந்துச்சு.
பறவைகளின் வலசை
இனப்பெருக்கம் , உணவு தேவை, வாழ ஏற்ற சூழ்நிலை போன்ற காரணங்களால பூச்சிகள்ல இருந்து மிருகங்கள் வரை எல்லோரும் வலசைபோறாங்க. அந்தமாதிரி பறவைகள் நட்சத்திரங்கள், புவிவிசை போன்றவற்றை கொண்டுதான் வலசை செல்லுகிறதுனு பறவையாளர்கள் சொல்லுறாங்க. பல்லாயிரம் வருஷமா வலசை நடந்து வருவதை நம்முடைய அகநானுறு , நற்றிணை போன்ற தமிழ் இலக்கியங்கள்ல நம்மால படிக்கமுடியும்.
பறவையாளர்கள் உலகுல பறவைகள் வலசை வழித்தடங்கள்னு மிசிசிப்பி அமெரிக்க வழித்தடம், பசிபிக் அமெரிக்க வழித்தடம், அட்லாண்டிக் அமெரிக்க வழித்தடம், கருங்கடல் வழித்தடம், மத்திய ஆசிய வழித்தடம், கிழக்கு ஆப்பிரிக்கா மேற்கு ஆசிய வழித்தடம்,கிழக்கு ஆசிய வழித்தடம் என ஏழு வழிய சொல்லுறாங்க,
கடல் தாண்டும்
பறவைகெல்லாம் இளைப்பாற
மரங்கள் இல்லை கலங்காமலே
கண்டம் தாண்டுமே
அப்படி வர பாட்ட நாம கேட்டு இருப்போம், அது எப்படி அவங்களால முடியுதுனு தெரியல. பேருள்ளான் (Godwit) என்ற பறவை அமெரிக்காவோட அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்து வரை 9 நாட்கள் 17460 கி.மீ வலசைபோயிருக்குனு நான் படிச்சு இருக்கேன். இப்படி கண்டம் விட்டு கண்டம், நாடுவிட்டு நாடு மட்டும் இல்லாம, இந்தியாவுல மாநிலம் விட்டு மாநிலம் வலசை போற பறவைகளும் இருக்கு.
காலநிலை மாற்றமும் பறவைகளும்
” அதோ அந்த
பறவைபோல வாழ
வேண்டும் இதோ இந்த
அலைகள்போல ஆட
வேண்டும்”
இந்த பாட்டுல சொல்லி இருக்கமாதிரி பறவைபோலவும், அலையைப்போலவும் வாழ்ந்தா கஷ்டந்தான் படனும். ஏன்னா பறவைகளோட வாழ்விடங்கள மனிதனோட முன்னேற்றம் அப்படியென்ற பேருல அழிக்க ஆரம்பிச்சதுல இருந்து, ஏரி , குளம், ஆறுனு ஒன்னு விடாம மாசாக்கி, விளைநிலங்களுக்கு வேதியியல் உரம், பூச்சி கொல்லி மருந்து கலந்து, கனிமவளங்கள அளவுக்கு மீறி எடுத்து, கடல்ல குப்பைகள கொட்டி என்னென்ன பண்ணமுடியுமோ அது எல்லாமே பண்ணிட்டோம்.
பறவைகள வேட்டையாடுறது மட்டுமில்லாம மேல சொல்லிருக்க எல்லாமே பண்ணி, அவங்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைய பறிச்சிகிட்டோம். கூடவே காற்று மாசு, புவிவெப்பமயமாகி காலநிலை மாற்றங்கள கொண்டுவந்துட்டோம். இதனால பறவைகள், மிருகங்களோட வலசை பாதிக்கப்பட்டுள்ளதா அண்மைல முடிவடைஞ்ச COP’28 மாநாடுல ஒரு அறிக்கையா வெளியிட்டு இருக்காங்க. பெருங்கடல் நீரோட்டம், காற்றின் தன்மை, உணவு இருக்குற அளவு, அளவுக்கு அதிகமான வெப்பம் அல்லது குளிர், காலம் மாறிய மழை பொழிவுனு பறவைகளோட வலசை கடந்த சில ஆண்டா குறிப்பிட்ட தினங்களுக்கு முன்னதாக ஆரம்பிச்சு, காலம் கடந்து முடியுது.
பொறுப்பற்றத்தன்மை
எண்ணூர் கழிமுகம்/ சிற்றோடை (creek ), பழவேற்காடு ஏரி, மணலி சதுப்பு, சென்னைல இருந்த அலையாத்தி காடுகள்ல மிச்சம் இருக்க ஒருசில இடங்கள்னு . எண்ணூர் சிற்றோடை சுற்றுசூழலுக்கு முக்கியமான இடமான இருக்கு. அதிகமான வெள்ளம், இல்ல வறட்சி போன்ற காலங்கள இந்த பகுதி கடற் சுற்றுசூழலுக்கு முக்கியமானதா இருந்து வருது.
இவ்வளவு முக்கியமான எண்ணூர் சிற்றோடை/கழிமுகம் , எண்ணூர் பகுதில 40த்திற்கு மேற்பட்ட அபாயகரமான கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள் இருக்கு. அதுல இருந்து வரும் நச்சால் மக்களுக்கும், பறவைகளுக்கும் ஏற்படுற தீங்குனு சொல்லப்போனா அவ்வளவு இருக்கு. அதுல குறிப்பிட்டு சொல்லணும்னா
அதிக வெப்பமான ஆண்டு, வறட்சி, அதிக குளிர், மழை, வெள்ளம், புயல் எல்லாம் கடந்த 2023ல அதிகமா பார்த்து , இயற்கைல மாறுதல் ஏற்பட்டு இருக்குனு நமக்கு புரியவைச்ச பல நிகழ்வுல ஒன்னுதான் 2023 டிசம்பர் மாசம் வந்த மிக்ஜாங் புயல். திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னைக்கு புயல் எச்சரிக்கை, எப்பொழுதும்போல கடைகளுக்கு போயி தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி 2015 போல வெள்ளம் எல்லாம் வராம இருக்கணும்னு எல்லோரும் டிசம்பர் 4, 2023 அன்று இருந்தோம். ஆனா வெள்ளம் நான்கு மாவட்டத்துக்கும் வந்துச்சு.
சந்தோசம் வந்தா நிறையவரும், கஷ்டம் வந்தாலும் அப்படியே தான்னு இருக்குற வடசென்னை பகுதியான எண்ணூருக்கும் வெள்ளம் வந்துச்சு. சரி மற்ற இடங்களபோல வெள்ளத்துக்கு மட்டும் நாம நடவடிக்கை எடுக்கலாம்னு யோசிச்ச அந்த பகுதிக்கு கட்சா எண்ணெய் கொசஸ்தலை ஆறுல வெள்ளம் மூலமா கலந்து அங்கு வாழ்ந்துகொண்டு இருக்கும் 2300க்கும் மேற்பட்ட மீனவ குடும்ப வாழ்க்கைய தலைகீழாக மாத்திபோட்டுடுச்சு.
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைல (Chennai Petroleum Corporation Limited) வெள்ளம் வந்ததால, எண்ணெய் ஆத்துல கலந்துடுச்சுனு முதல்கட்ட அறிக்கை சொல்லுது. டிசம்பர் 4 கலந்த அந்த எண்ணெய் மழைநீர் வடிகால் வழியா பக்கிங்காம் கால்வாய் வந்து, அங்கிருந்து எண்ணூர் கழிமுகம் வந்து வங்காள விரிகுடால கலந்து 20Sq.Km அளவுக்கு விரிஞ்சு கலந்துடுச்சுனும், 105,280 லிட்டர் எண்ணெய் கலந்த நீரையும், 393.7 டன் எண்ணெய் கசடுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அகற்றியதாக டிசம்பர் 20 அன்று சொல்லி இருக்காங்க.
2017லையும் எண்ணூர் துறைமுகம்ல இரண்டு கப்பல்கள் மோதி 251.46 டன் எண்ணெய் கசடு 35Sq.Km அளவுக்கு கடல்ல கலந்துச்சு. அக்டோபர் முதல் பிப்ரவரி வரைதான் பறவைகள் வலசை வரும். இந்த மாதத்துல சென்னையோட முக்கிய நீர்த்தேக்கம், சதுப்புநிலம் எல்லாம் பறவையா நிறைஞ்சி இருக்கும். எண்ணூர், மணலி சதுப்புநிலம் , எண்ணூர் கழிமுகம், முகத்துவாரம், அலையாத்திக்காடு பகுதிகள்ல நீல தாழைகோழி (purple swamphens), சின்ன சீழ்க்கைக் சிறகி ( lesser whistling ducks), தாமரைகோழிகள் ( pheasant tailed jacana, bronze winged jacana), புள்ளிமூக்கு வாத்து (spot-billed ducks), முக்குளிப்பான் ( grebes), கூழைக்கடா ( pelicans) , பவழக்கால் உள்ளான் (black-winged stilts) , நத்தைகுத்தி நாரை (open billed storks), ஆள்காட்டி (red-wattled lap wings) போன்ற நீர்பறவைகள், நெல்வயல் நெட்டைக்காலி paddy field pipits, சின்னான் red-vented bulbuls,சாம்பல் வாலாட்டி grey wagtails, கல்லுக்குருவி pied bush-chats, கரும்பருந்து black kites and பஞ்சுருட்டான் green bee-eaters போன்ற தரைவாழ்/மரம்வாழ் பறவைகள். பொன்னிற உப்புக்கொத்தி pacific golden plovers, பச்சைகாலி greenshanks, தூக்கணாங்குருவி baya weavers, கருவால் மூக்கன் black-tailed godwits, பெரிய பூநாரை greater flamingoes போன்ற கடற்கரை வாழ் பறவைவைகளை காணமுடியும்.
பறவைகளும் எண்ணெய் கசிவும்
2023 எண்ணெய் கசிவு நடந்த பகுதிகள்ல 50க்கும் மேற்பட்ட சாம்பல் கூழைக்கடா ( spot billed pelicans ), சங்குவளை நாரை ( painted stork ) பறவைகள அதிகமா பாதிச்சு இருக்குறதாவும், அவங்கள மீட்க்கும் பணியில வனத்துறை அதிகாரிகள், மீனவர்கள், தன்னார்வலர்களும் ஈடுபட்டதாவும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் வனத்துறை அறிக்கை சமர்ப்பிச்சாங்க. மேலும் பறவைகள் எல்லாம் உயரமான அலையாத்தி மரங்கள்மேல இருக்கறதுனால அவைகள பிடிக்க சிரமமா இருக்குனும் தெரிவிச்சாங்க. மேலும் நீர்காகங்கள் (Lesser Cormorant, Great Cormorant), பாம்புத்தாரா ( Darter), பெரிய கோட்டான் Eurasian Curlew, காஸ்பியன் ஆலா Caspian Tern, மீசை ஆலா Whiskered Tern, பழுப்புத்தலை கடற்காகம் Brown Headed Gull போன்ற பறவைகளும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. எந்தவித இறப்பும் ஏற்படலனு சொன்னாலும் அலையாத்தி மரங்கள்ல சில பறவைகள் இறந்ததா சொல்லுறாங்க, ஆனா 2017 எண்ணெய் கசிவுல பறவைகள், 100க்கும் மேற்பட்ட பங்குனி ஆமைகள் (Olive ridley turtle) இறந்துடுச்சு.
உடல் முழுசா கருப்பு கட்சா கசடு எண்ணெய்ல முழுகி இருக்க சாம்பல் கூழைக்கடா படங்கள பார்க்கும்போதே தெரிஞ்சிருக்கும் எண்ணெய் கசிவு எவ்வளவு மோசமான ஒன்னுனு. பறவைகளுக்கு இறகு முக்கியப்பகுதி தண்ணீர்ல இருக்கும்போதும், பறக்கவும், வெப்பம்ல இருந்து பாதுகாக்கவும் உதவுது. ஆனா கசடு நிறைஞ்சி இருக்கும் பறவைக்கு , மேலே சொன்ன எதுவும் இல்லாம செய்து, குளிர்ல பாதிப்படையவச்சி, இயற்கையான மிதவைத்தன்மைய குறைச்சு தண்ணீர்லையே மரணமடைய இந்த கசிவு வழிவகுக்கும். சாம்பல் கூழைக்கடா ( spot billed pelicans ), சங்குவளை நாரை ( painted stork ) பறவைகள் மாநிலம் விட்டு மாநிலம் வலசை செல்லும், பொன்னிற உப்புக்கொத்தி (pacific golden plovers), காஸ்பியன் ஆலா Caspian Tern, மீசை ஆலா Whiskered Tern, பழுப்புத்தலை கடற்காகம் Brown Headed Gull போன்ற பறவைகள் கண்டம் விட்டு கண்டம் வலசை செல்லும். இவைகள் கீழே உள்ளதுபோல பாதிப்புகள சந்திக்க வேண்டி இருக்கும்.
- சின்ன எண்ணெய் கசடு கலந்தாலே பறவைகள் பறக்க 20% அதிகமான சக்தி தேவைப்படும்
- எண்ணெய் கசிவால், பறவைகளின் பிரதான உணவான மீன்கள், மிதவைவாழிகள் (Plankton) இறந்துபோச்சு, அதை சாப்பிடுற பறவைகளுக்கும் உடல்பாதிப்பு ஏற்படும்
- வலசை பறவைகள் எல்லாம் அதன் உடல் கொழுப்பை நம்பித்தான் வலசைபோகும். அப்படி எண்ணெய் கசடுகளால பாதிக்கப்பட்ட பறவை வலசைபோனால் , இயல்பைவிட 45% அதிக கலோரி தேவைப்படும்
- அதிக கலோரி தேவைப்படுறதுனால , வழக்கமா வலசைபோற வழியில 2 முறைமட்டும் இரையுண்ணத் தரையிறங்கும் பறவைகள், 4 அல்லது 5 இடங்கள்ல தரையிறங்க வேண்டியிருக்கும். இதனால உரிய நேரத்துல இனப்பெருக்க இடத்துக்கு போக முடியாது.
- இறகுல இருக்க எண்ணெய தன்னோட அலகு கொண்டு எடுக்கும்போது, அதை உட்கொண்டு வயிற்றுக்கோளாறு ஏற்படும்.
- எண்ணெய் கசடு இறகு/மார்பு/மேல்பகுதி ஆகிய இடங்கள இருக்கறதுனால, பறவைகள் இயல்பைவிட குறைவான உயரத்துலதான் பறக்கமுடியும். இது வேட்டையடிகளோட சுலபமான இரையாக மாறவும் , வாகனங்கள மோதுறது போன்ற ஆபத்தை சந்திக்க வேண்டி வரும்.
- வலசை காலம் உச்சத்துல இருக்கும் பிப்ரவரி,மார்ச், ஏப்ரல் மாதங்கள் எண்ணூர், மணலி , பழவேற்காடு போன்ற பகுதிக்கு வரும் பறவைகள் வேறு வாழ்விடம் தேடி, குஞ்சிகளுக்கு இரை தேடவேண்டிய நிலை.
- எண்ணூர் எண்ணெய் கசிவுல பாதிக்கப்பட்ட கூழைக்கடா பறவைகள, அடையாறு, கூவம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற சென்னை சுற்றுவட்டார பகுதில மற்ற பறவைகள்கிட்ட இருந்து தள்ளியிருப்பத இயற்கைஆர்வலர்கள் பார்த்து இருகாங்க.
நீர்ப்பறவைகளுக்கு எண்ணெய் கசிவு எப்போதும் பெரிய கவலைதான் காரணம், எண்ணூர் மட்டும் இல்லாம உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பறவை எண்ணெய் கசிவால உயிர் இறக்குதுனு ஒரு ஆய்வு சொல்லுது. இந்த பொல்லாத உலகத்திலே…ஏன் என்னை படைத்தாய் இறைவா…வலி தாங்காமல் கதறும் கதறல்…உனக்கே கேட்கவில்லையா னு ஜெய் பீம் படத்துல வர பாடல் போலத்தான் பறவைகள் எல்லாம் என்ன செய்யுறதுனு தெரியாம இருக்காங்க.
வெள்ளம், புயல் மக்களுக்கு உதவித்தொகை 6000, எண்ணூர் எண்ணெய் கசிவுனு பாதிக்கப்பட்ட மீனவர்கள்னு சிறிதளவும் உதவி தொகையாச்சும் கிடைச்சது. ஆனா எண்ணூர் எண்ணெய் கசிவுல பாதிக்கப்பட்ட பறவை, விலங்கு, மரங்களுக்கு என்ன உதவித்தொகைய நாம தரப்போறோம்? மனிதர்கள் இந்த உலகம் நமக்கானதுனு நினைக்கிறது மாறுவது எப்போ? இப்படி இயற்கை, பறவைகளை பாதிக்கும் வகைல நடக்கும் விஷயங்கள், நடக்காம இருப்பது எப்போ? இந்த கேள்விகளுக்கான பதில்கள் என்ன? இதற்கு எல்லாம் இயற்கைப்பற்றின புரிதல்தான் பதில் சொல்லனும்.
– சக்திவேல்
குறிப்பு: இக்கட்டுரை பூவுலகு ஜனவரி மாத இதழில் இடம் பெற்றிருந்தது.