கொரோனா தடுப்பு மருந்து – காப்புரிமை எனும் மரண வணிகம்

உலகத்தின் வல்லரசு நாடுகளையே மிரட்டிவரும் கொரோனா வைரஸுக்கு எதிராக சுமார் 10 தடுப்பு மருந்துகள் புழக்கத்தில் உள்ளன. மேலும் பல தடுப்பு மருந்துகள் ஆய்வுநிலையில் உள்ளன. இந்த தடுப்பு மருந்துகள் அனைத்தும் பெரும் பொருட்செலவில், ஆபத்து மிகுந்த சூழ்நிலையில் ஆய்வு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்படுகின்றன. எனவே இம்மருந்துகள் அனைத்தும் பேடன்ட் என்ற காப்புரிமையை பெறுகின்றன. இதன் விளைவாக இந்த பேடன்ட் காப்புரிமை பெற்ற நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்கள் இந்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே இந்த தடுப்பு மருந்து பேடன்ட் காப்புரிமை பெற்ற சில மருந்து நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சிக்கி விடுகிறது. இதனால் ஏழை நாடுகள் இந்த தடுப்பை பெறமுடியாமல் அந்நாடுகளில் வசிக்கும் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது.

போர்க்காலங்களிலும், பெருந்தொற்று நோய்க்காலங்களிலும் பேடன்ட் காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்து பரவலாக விவாதிக்கப்படுகிறது. எனினும் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் எட்டாக்கனியாகவே உள்ளன.

இந்நிலையில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகளுக்கான பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பேடன்ட் உரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக வர்த்தகக் கழகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதன் மூலம் பல ஏழை நாடுகள் இந்த கொரோனா நோய்த்தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்தோ, வாங்கியோ அந்த நாடுகளில் கொரோனா காரணமான உயிரிழப்புகளை தடுக்கமுடியும் என்று இந்நாடுகள் கூறுகின்றன. சுமார் 100 ஏழை மற்றும் வளர்ந்துவரும் நாடுகள் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.  ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், நார்வே, பிரேசில் உள்ளிட்ட நாடுகள், சில மருந்து நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் ஆகியோர் கொரோனா நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான பேடன்ட் உரிமையை ரத்து செய்யக்கூடாது என்று உரத்து குரல் எழுப்புகின்றனர். கொரோனா நோய்த்தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் செலவுகள் மிக அதிக அளவில் இருப்பதாலும், இது மிகவும் ஆபத்து மிகுந்த பணியாக இருப்பதாலும் அதற்கான வெகுமதி மிகவும் அவசியம் என்றும், பேடன்ட் காப்புரிமையை ரத்து செய்தால் புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியே நடைபெறாது என்றும் பேடன்ட் காப்புரிமை ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பேடன்ட் காப்புரிமை பெற்ற நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கும், அதன் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்குவதற்கும், அதன் மூலம் மிக அதிகளவில் முதலீட்டை திரட்டவுமே பேடன்ட் காப்புரிமை பயன்படுவதாக பேடன்ட் காப்புரிமை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தங்களின் கொள்ளை லாபவெறிக்காக சக மனிதர்கள் கொத்துக்கொத்தாக மரணம் அடைவதை நிறுவனங்களும், அதன் முதலீட்டாளர்களும் வேடிக்கைப் பார்ப்பதை அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பல மருந்துகள் பேடன்ட் காப்புரிமை பெற்றிருந்தாலும், வளரும் நாடுகளில் உள்ள பல மருந்து நிறுவனங்கள் அம்மருந்துகளை reverse engineering முறையில் தயாரித்துவிடும். இம்முறையில் பேடன்ட் காப்புரிமை பெற்ற மருந்தை தமது ஆய்வகங்களில் பகுத்தாராய்ந்து அதன் மூலப்பொருட்களை கண்டறிந்து அவற்றை வேறு முறைகளில் சேர்த்து நோய் தீர்க்கும் அம்மருந்தை ஏறக்குறைய தயாரித்து விடுவார்கள். ஆனால் அந்த முறை நோய்த் தடுப்பு மருந்துகளில் பயன்படாது. ஏனெனில் நோய் தீர்க்கும் மருந்துகள் உயிரற்ற வேதிப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஆனால் நோய்த்தடுப்பு மருந்துகள் வைரஸ் போன்ற நுண்ணுயிர்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. எனவே அதன் உண்மையான கண்டுபிடிப்பாளர்களின் உதவியின்றி அந்த தடுப்பு மருந்தை மற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் reverse engineering முறையில் யாரும் நகலெடுக்க இயலாது.

ஆஸ்ட்ரா ஜெனிகா, நோவாக்ஸ், ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன், காமாலியா ஆய்வு மையம் போன்ற பல பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது கண்டுபிடிப்புகளான கொரோனா நோய்த்தடுப்பு மருந்துக்கான பேடன்ட் காப்புரிமையை (voluntary lincensing) இந்தியாவிலுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பயாலஜிக்கல் ஈ, டாக்டர் ரெட்டிஸ் லாபரேட்டரீஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு தாமாகவே முன்வந்து voluntary lincensing முறையில் வழங்கியுள்ளன. இதன் மூலம் லாப நோக்கமற்ற நியாயமான விலையில் ஏழை நாடுகள் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் உரிய உடன்பாடு செய்துகொண்டு அந்த தடுப்பு மருந்தை தயாரித்தோ, வாங்கியோ பயன்படுத்தி தம் மக்களை பாதுகாக்க முடியும். அது சாத்தியமில்லாத தருணங்களில் ஒரு நாட்டின் அரசு தன்னாட்டில் மருந்து வணிகம் செய்யும் நிறுவனத்துடன் compulsory licensing முறையில் உடன்பாடு செய்ய முடியும். இதன் மூலம் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இழப்பீடாக ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துவிட்டு அந்த தடுப்பு மருந்தை தமது நாட்டில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்க உரிமம் பெற இயலும்.

இந்தியாவில் முதற்கட்டமாக கோவிஷீல்ட், கோவாக்ஸின் என்று இரு தடுப்பு ஊசி மருந்துகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகா தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. சிம்பன்சி வகை மனிதக்குரங்கிடம் இருந்து எடுக்கப்பட்ட சாதாரண சளி தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தும் “அடினோ வைரஸ்” மூலம் இந்த கோவிஷீல்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் என்ற தனியார் வணிக நிறுவனம் இதை தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுள்ளது.

கோவாக்ஸின் தடுப்பு மருந்தை ஒன்றிய அரசு நிறுவனங்களான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. கொரோனா தொற்றுக்கு ஆளாகியவர்களிடம் இருந்து பெறப்பட்ட கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்து செயலிழந்த அந்த வைரஸ்கள் மூலம் கோவாக்ஸின் தயாரிக்கப்படுகிறது.

கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் பேடன்ட் காப்புரிமை ஆஸ்ட்ரா ஜெனிகா என்ற தனியார் நிறுவனத்திடம் இருக்கிறது. அந்த நிறுவனம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அவசர மருத்துவத் தேவைக்காக கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான பேடன்ட் காப்புரிமையை voluntary licensing முறையில் வழங்குவதாக கூறியுள்ளது. பொதுவாக voluntary licensing முறையில் மருந்தை கண்டுபிடித்து, தயாரிப்பதற்கான செலவுத் தொகை மட்டும் லாபம் ஏதுமில்லாமல் வழங்கப்படுகிறது. ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்திற்கும், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தம் என்னவென்று பொதுவெளியில் செய்தி ஏதுமில்லை. எனினும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் சார்பில் இந்தியா போன்ற நாடுகளுக்கு கோவிஷீல்ட் மருந்தை தயாரிப்பதற்கான அனுமதியை வழங்குவதாக தாமாகவே அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் பேடன்ட் லாப நோக்கோடு கூடிய காப்புரிமைத் தொகையை செலுத்தவில்லை என்பது உறுதியாகிறது.

இந்தியாவின் சொந்தத் தயாரிப்பான “கோவாக்ஸின்” தடுப்பு மருந்து இந்திய அரசு நிறுவனங்களான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் இதுவரை பொதுவெளியில் கிடைக்கப்பெறவில்லை. இந்த கோவாக்ஸின் தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான முயற்சியில் இந்திய அரசு நிறுவனங்களின் பங்களிப்பு என்ன? பாரத் பயோடெக் நிறுவனத்தின் முதலீடு எவ்வளவு? கோவாக்ஸின் மருந்தின் பேடன்ட் காப்புரிமை யாரிடம் இருக்கிறது? போன்ற எந்த கேள்விக்கும் பொதுவெளியில் பதில் இல்லை. தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் சிலர் இந்தத் தகவலை பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியைத் தழுவின. அரசு நிறுவனங்களும் இந்த தகவல்களை வழங்குவதற்கு மறுத்து வருகின்றன.

கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் பங்களித்திருக்கிறது என்று பார்த்தோம். ஆனால் அந்த கோவிஷீல்ட் தடுப்பு மருந்திற்கான பேடன்ட் காப்புரிமை ஆஸ்ட்ரா ஜெனிகா என்ற தனியார் நிறுவனத்திடம் உள்ளது. இதற்கு இங்கிலாந்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பொதுமக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் கூட்டுமுயற்சியில் உருவான கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் பேடன்ட் காப்புரிமையை ஆஸ்ட்ரா ஜெனிகா என்ற தனியார் வணிக நிறுவனத்திற்கு கொடுத்ததற்கு இங்கிலாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதை சமாளிக்கும் விதத்திலேயே இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் பேடன்ட் காப்புரிமையை voluntary lincensing முறையில் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்திய வைராலஜி நிறுவனம் ஆகியவை ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு நிறுவனங்களாகும். இந்த அரசு நிறுவனங்கள் முழுமையாக மக்களின் வரிப்பணத்தில்தான் இயங்குகின்றன. இந்த அரசு நிறுவனங்களின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் கோவாக்ஸின் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இதன் பேடன்ட் காப்புரிமையில் இந்திய அரசுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் உரிய பங்கு இருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த தகவல்களை ஒன்றிய அரசு மறைக்கிறது. மேலும் இந்த கோவாக்ஸின் மருந்தின் விலையை நிர்ணயம் செய்வதிலும் அரசுக்கோ, ஆய்வுகளில் பங்கேற்ற அரசுத்துறைகளுக்கோ என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவில்லை. கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் விலைநிர்ணயம் குறித்த விபரங்களை பாரத் பயோடெக் நிறுவனம் மட்டுமே வெளியிடுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்திற்கான பேடன்ட் காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று உலக வர்த்தகக் கழகத்திடம் கோரிக்கை விடுக்கும் இந்திய அரசு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் பேடன்ட் காப்புரிமை குறித்த தகவல்களைக்கூட கொடுக்க மறுப்பது இந்திய அரசின் இரட்டை நிலையை காட்டுகிறது. மேலும் இந்த தடுப்பு மருந்தை தயாரிக்க பல நிறுவனங்கள் தயாராக உள்ள நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மட்டும் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதும் பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளது. இந்த பாரத் பயோடெக் நிறுவனம் வெளிநாடுகளுக்கும் கோவாக்ஸின் தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்திய மக்களின் வரி்ப்பணத்தில் இயங்கும் ஒன்றிய அரசு அமைப்புகளான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்திய வைராலஜி நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் என்ற ஒற்றைத் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அரசு ஒப்படைத்தது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களின் பேடன்ட் காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்து கொரோனா தடுப்பு மருந்து அனைத்து நாடுகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உலக வர்த்தக கழகத்திடம் வலியுறுத்தும் மோடி தலைமையிலான இந்திய அரசு, அதற்கு முன்மாதிரியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் மருந்தின் பேடன்ட் காப்புரிமையை நாட்டுமையாக்கி இலவசமாக இந்திய மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.

இந்தியாவில் உள்ள பெரும்பகுதியினரான ஏழைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிருக்கு பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பேடன்ட் காப்புரிமை என்ற மரண வணிகத்தை இந்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே!

– வழக்கறிஞர். பி. சுந்தரராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *