சூழலையும் உடல்நலனையும் கெடுக்கும் புட்டிக் குடிநீர் விற்பனைத் திட்டத்தைக் கைவிட தமிழக அரசைக் கோருகிறோம்.

தமிழக அரசு ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் புட்டிகளை விற்பனை செய்யப்போவது பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

தொல்தமிழ் இலக்கியங்கள் முதலாய் தமிழரின் கலாச்சாரத்திலும் விருந்தோம்பல் பண்பாட்டிலும் அதிமுக்கிய இடம் வகிப்பது தண்ணீர். எதிரியே ஆயினும் தாகத்தோடு இருப்பவருக்கு பிரதிபலன் எதிர்பாராது தண்ணீர் கொடுப்பது நமது மரபும்கூட. எனினும், எதையும் வணிகத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கும் சந்தைப் பொருளாதாரம்  சார்ந்த உலகில், கடந்த பல பத்தாண்டுகளாக குடிநீரை தனியார் மயமாக்கி விற்பனைப் பண்டமாக்கும் முயற்சிகள் அசுரவேகத்தில் நடைபெற்று வருகின்றன. உயிர் வாழ்வின் இன்றியமையாதத் தேவையாகவும் இயற்கையின் கொடையுமான தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றுவது ஏற்புடைய செயலன்று.

இந்நிலையில், குடிமக்களுக்கான அடிப்படைத் தேவைகளைத் தாண்டியும்கூட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திவரும் தமிழக அரசு, மக்களின் அடிப்படைத் தேவையும் உரிமையுமான ‘பாதுகாப்பான சுகாதாரமானக் குடிநீரை’அனைத்துப் பொது இடங்களிலும் இலவசமாகக் கிடைக்கும்படி உறுதி செய்வதுதான் விவேகமான முன்னெடுப்பாக இருக்க முடியும்.

அதுமட்டுமின்றி புட்டிக் குடிநீர் ஏராளமான சூழல் தாக்கங்களையும் கொண்டிருக்கிறது.

  • தண்ணீர் அடைக்கப் பயன்படும் PET புட்டிகள் தம்மளவில் நச்சுத் தன்மை உடையவை. குறிப்பாக புற்றுநோயை உருவாக்கும் Antimony, Cobalt, Phthalate, Bromine போன்ற நச்சுக்கள் PET பாட்டில்களிலிருந்து தண்ணீரில் கசிவது கண்டறியப்பட்டிருக்கிறது. ஆதாரம்: https://defendourhealth.org/campaigns/plastic-pollution/problem-plastic/.
  • உலகம் முழுதும் உற்பத்திப் பொருட்களைப் பொட்டலமாக்குவதில் நெகிழியை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அரசுகளும் நிறுவனங்களும் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும்  நிலையில்,  தமிழக அரசு புதிதாக நெகிழியைச் சார்ந்த ஒரு உற்பத்தியைத் தொடங்குவது ஏற்புடையதன்று. முழுமையாக புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட இலக்கு நிர்ணயித்திருக்கும் நிலையில் பெட்ரோலியத்தை மூலப்பொருளாகக் கொண்ட நெகிழிப் புட்டி நீண்டகால அளவில் சரியான முன்னெடுப்பாக இருக்க முடியாது.
  • PET புட்டிகளை மறுசுழற்சி செய்ய முடியாது. அவற்றை ஒருசில முறைகள் குறைசுழற்சி (Downcycling) மட்டுமே செய்ய முடியும். இந்த குறைசுழற்சி அதிக சூழல் தாக்கம் கொண்டது. இவை உள்ளாட்சிக் குப்பைகளில் சேர்ந்து குப்பை மேலாண்மையை இன்னும் மோசமாக்கும் வாய்ப்புள்ளது. மேலும் அரசு அரைலிட்டர் புட்டிகளையும் உற்பத்தி செய்யவிருப்பதாகத் தெரிகிறது. சிறிய அளவுடைய புட்டிகள் நுகர்வைப் பலமடங்கு அதிகரிப்பதோடு சேகரிக்க முடியாத சிறு குப்பைகளை உருவாக்குவதால் கழிவு மேலாண்மையையும் இன்னும் அதிக சவாலானதாக்கும்.
  • நெகிழிப் புட்டியின் உற்பத்தியில் செலவிடப்படும் மறைநீரின் அளவு அதன் எடையை விடப் பல மடங்கு அதிகம். நெகிழியின் வாழ்க்கை சுழற்சியில் அதன் எடையைவிட ஐந்து மடங்கு அதிகமாக கார்பன் டை ஆக்சைடு உமிழப்படுகிறது.
  • புட்டிக் குடிநீருக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துத் தண்ணீர் எடுக்கப்படும் பகுதிகளில் நிலத்தடி நீர்வளம் குறையும் ஆபத்து இருக்கிறது. முந்தைய அரசின் தண்ணீர் விற்பனையில்கூட பாதிக்கப்பட்டக் கிராமங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
  • அரசு தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கும்போது இங்கு ஏற்கனவே இருக்கும் பொதுக் குடிநீர் கட்டமைப்புகள் சிதையும் வாய்ப்புள்ளது. இது விளிம்புநிலை மக்களை அதிகம் பாதிக்கும். அதே நேரத்தில் மலிவு விலையில் புட்டிக் குடிநீர் விற்பனை செய்யப்படும்போது தனக்கானத் தண்ணீரை எடுத்துச் செல்பவர்கள்கூட அதைத் தவிர்த்துவிட்டு புட்டிக் குடிநீரை நாடுவர். இது சூழலை மட்டுமல்ல உடல் நலத்தையும் கெடுப்பதாகவே அமையும்.

தமிழ்நாடு மக்களின் சுகாதாரத்திலும் சூழலிலும் அக்கறை காட்டிவரும் தமிழக அரசு, மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் தண்ணீரைப் புட்டிகளில் விற்பனை செய்யும் இந்த முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று  பூவுலகின் நண்பர்கள் சார்பில் கோருகிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments