இந்தியாவில் நடப்பாண்டில் மட்டும் பேரிடர்களால் 2,002 பேர் மரணம்

NDRF Vellore rescue
Image: NDRF

புயல், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் மட்டும் நாடு முழுவதும் நடப்பாண்டில் 2,002 பேர் மரணமடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள உள்துறை அமைச்சகம் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நாடு முழுவதும் 2,002 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 53,228 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் 7,80,058 குடியிருப்புகளும் 50.40 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

rain loss

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆண்டறிக்கையின் அடிப்படையில் மழை, வெள்ளம், இடி, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் 2019ஆம் ஆண்டு 1,562 பேரும், 2020ஆம் ஆண்டில் 1,444 பேரும் உயிரிந்துள்ளனர். 2021ஆம் ஆண்டு முடிவடைய இன்னமும் ஒரு மாதம் மிச்சமிருக்கும் நிலையில் பேரிடர்களால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கையானது தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் வடகிழக்குப் பருவமழை காலத்தில் மட்டும் தமிழ்நாடில் 105பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், மக்களவையில் உள்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலில் தமிழ்நாட்டில் 54பேர் மட்டுமே இந்த ஆண்டு பேரிடர்களால் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையினையும் முழுமையாகக் கணக்கிட்டால் 2,002 என்கிற எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments