பிபோர்ஜாய் புயலும் ‘திரட்டப்பட்ட ஆற்றலும்’

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியை துவம்சம் செய்த பிபோர்ஜாய் புயல் கவலை தரும் பல புதிய ஆச்சரியங்களைக் நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக பிபர்ஜாய் புயலின் திரட்டப்பட்ட ஆற்றல் எல்லா ஆய்வாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அது என்ன புயலின் திரட்டப்பட்ட ஆற்றல்? (Accumulated Cyclone Energy)

புயலின் திரட்டப்பட்ட ஆற்றல், அதன் தீவிரத்தன்மை மற்றும் அது கடலுக்குள் இருக்கும் காலத்தை, அதாவது கரைக்கடந்து வலுவிழக்கும் வரையிலான காலத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.

இந்தவகையில் பிபர்ஜாய் புயல் புதிய சாதனையைப் படைத்துள்ளது. பிபோர்ஜாய் புயலின் திரட்டப்பட்ட ஆற்றல் அளவு 23.6 Sq.Knots ஆகும். இது 2019 ஏப்ரலில் உருவான ஃபானி மற்றும் மே 2020 ஆம் ஆண்டில் உருவான அம்பான் ஆகிய புயல்கள் திரட்டப்பட்ட ஆற்றல் அளவுகளை முறியடித்துள்ளது, அதன் ACEகள் முறையே 21.96 மற்றும் 19.75 ஆக இருந்தது என்கிறார் தென் கொரியாவில் உள்ள ஜெஜு தேசிய பல்கலைக்கழகத்தின் டைபூன் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் வினீத் குமார். மே மாதம் உருவான மோட்சா புயலின் ACE 15.2 இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் அனைத்து மாதங்களிலும் உருவான புயல்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட கியார் புயலுக்குப் பிறகான இரண்டாவது இடம் பிபோர்ஜாய் புயலுக்குக் கிடைத்துள்ளது. இந்த புயலின் அதிகமான திரட்டப்பட்ட ஆற்றலுக்கான முக்கியக் காரணம் மிக அதிகமாகியுள்ள கடற்பரப்பின் வெப்ப அளவும், கடலின் வெப்ப உள்ளடக்கமும்தான். புயல் உருவானபோது கடற்பரப்பின் வெப்பம் 31-32 டிகிரி செல்சியாக இருந்தது, அதாவது இயல்பை விட 2-3 டிகிரி கூடுதல். கடலின் வெப்ப உள்ளடக்க அளவு 80 கிலோ ஜூல்ஸ் ஆக இருந்து, 40 இருந்தாலே புயல் தீவிரத்தன்மை கொண்டதாக மாறிவிடும்.

மேலும், பிபோர்ஜாய் கடலில் அது வாழ்ந்த கால நேரத்திலும் புதிய சாதனை படைத்துள்ளது, கடலில் 216 மணி நேரம் இருந்து முதலிடத்தை பிடித்துள்ளது, இதற்கு முன்னர் 186 மற்றும் 150 மணி நேர அளவுகளே அதிகமானதாக இருந்தன. இவ்வளவு நேரம் கடலில் இருந்த மற்றொரு சமீபத்திய புயல், இந்தியப்பெருங்கடலில் உருவான பானி புயலாகும், அது சுமார் 10-11 நாட்கள் கடலில் நிலைகொண்டிருந்தது. பிபோர்ஜாய் கடலில் அதிக நேரம் இருந்ததற்கு முக்கியமான காரணம் அரபிக் பெருங்கடல் அதிக வெப்பமானதுதான். இந்தியப் பெருங்கடல் அதிகமான புயல்களை சந்தித்து வந்ததால் அதற்கூடான தரவுகளை வைத்து புயல்களின் நகர்வு, அதன் வேகம், தீவிரத்தன்மை ஆகும் காலம் ஆகியவற்றை கொண்டு ஓரளவிற்காவது கணிக்க முடிந்தது, ஆனால் அரபிக் கடலின் வெப்பம் கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துள்ளதால் போதிய தரவுகளை இல்லாமல் புயலைக் கணிப்பது கடினமாவதாக வானிலை அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிபோர்ஜாய் புயல் கடலில் இருந்த காலகட்டத்தில், இரண்டு முறை தீவிரமாகியுள்ளது, ஒன்று ஜூன்6-7 காற்றின் வேகம் 30 knots இல் இருந்து 75 knots ஆக அதிகரித்தது. இரண்டாவது ஜூன் 10-11 தேதியில், 65 லிருந்து 105 ஆக அதிகரித்தது. காலநிலை மாற்றத்தால் கடற்பரப்பின் வெப்பம் அதிகரிப்பதும் அதனால் புயல்களின் தீவிரத்தன்மை அதிகரிப்பதும், புயல்கள் அதிக நேரம் கடலில் இருப்பதற்கான காரணிகளாகும்.

 

  • கோ.சுந்தர்ராஜன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments