சென்னையில் மோசமடையும் காற்றின் தரம்

classic.nullschool.net

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகரின் ஆலந்தூர், அரும்பாக்கம், கொடுங்கையூர், மணலி, பெருங்குடி, ராயபுரம் ஆகிய பகுதிகளில் காற்று தரக் குறியீடு 117 முதல் 195 வரை பதிவாகியுள்ளது.

சென்னையில் 23.10.2023 தேதியிலிருந்து காற்றின் தரம் மோசமடைந்து வருவதை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் காற்று தரக் குறியீட்டு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. சென்னையில் எ இடங்களில் உள்ள காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களைக் கொண்டு காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது. வாரியம் வெளியிடும் அன்றாட காற்று தரக் குறியீடு அறிக்கையின்படி, சென்னையில் அக்டோபர் 23ஆம் தேதிக்கான சராசரி காற்று தரக் குறியீடு 109 ஆகவும், 24ஆம் தேதி 121 ஆகவும், 25ஆம் தேதி 127 ஆகவும் பதிவாகியுள்ளது.

AQI

காற்று தரக் குறியீடு 50ஐத் தாண்டினாலே உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்கிறது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம்.

 

26ஆம் தேதி காலை 6 மணி நிலவரப்படி சென்னையின் காற்று தரக் குறியீடு

இடம் காற்று தரக் குறியீடு
மணலி 192
ஆலந்தூர் பேருந்து பணிமனை 104
கொடுங்கையூர் 119
அரும்பாக்கம் 111
ராயபுரம் 103
பெருங்குடி 152
வேளச்சேரி 71

வங்கதேசத்தை ஒட்டி வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஹாமூன் புயலின் தாக்கத்தால் சென்னைக்கு வடக்கிலிருந்து  காற்று வீசுவதே காற்றின் தரம் குறைந்ததற்கு காரணம் என்கிறார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் “ஹாமூன் புயல் வலுவிழந்து அதன் தாக்கம் குறைந்த பின்னர் இந்த நிலைமை மாறும் எனவும் சென்னைக்கு கிழக்கத்திய காற்று வீசும்போது காற்று மாசுபாட்டின் அளவு குறையும்” என அவர் தெரிவித்தார்.

மிக தீவிர புயலான ஹாமூன் நேற்று மாலை 1730 மணி அளவில்  தீவிர புயலாக வலுவிழந்து 25.10.2023 காலை  0130-0230 மணி அளவில் புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை தெற்கு சிட்டகாங் (Chittagong) க்கு அருகில் கடந்தது. இதன் தாக்கத்தால் வடக்கிலிருந்து வந்த குளிர் காற்று சென்னையின் இரவு நேர வெப்ப நிலையையும் குறைத்துள்ளது.

வானிலையின் தாக்கம் ஒருபுறமிருக்க இது தீபாவளி காலம் என்பதால் இப்போதே பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதும் காற்று மாசுபாட்டை அதிகரிக்கிறது. காற்றின் தரத்தில் ஏற்பட்ட இம்மாறுபாட்டை தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உன்னிப்பாக கவனித்து வருவதாக வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வயதானவர்கள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் தீபாவளி முடியும் வரை கவனமாக இருப்பதே நல்லது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

  • செய்திப் பிரிவு.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments