கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய நீரேற்று மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பத்தின் பரிசீலனையை ஒன்றிய அரசு தள்ளிவைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோதையார் நீர்த்தேக்கத்தை மேல் அணையாகவும் பேச்சிப்பாறை நீர்த்தேக்கத்தைக் கீழ் அணையாகவும் கொண்டு ரூ. 10,838 கோடி மதிப்பீட்டில் 1500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நீரேற்று புனல் மின்திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது.
ProjectLayoutஇத்திட்டம் சுற்றுச்சூழல் தாக்க மத்திப்பீட்டு அறிவிக்கை 2006ன் படி A வகை திட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவது அவசியமாகும். இந்த அனுமதியைப் பெறுவதற்கு சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளைக் கோரி கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு மின்வாரியம் விண்ணப்பித்திருந்தது.
இவ்விண்ணப்பத்தைப் பரிசீலித்த ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு திட்ட அமைவிடமானது கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதிகளுக்குள் இருப்பதால் நேரில் ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளது.
”காடுகள் காட்டுயிர்களுக்கு வாழிடமாகவும் உயிருள்ள, உயிரற்ற அனைத்து சூழல் அமைவுகளுக்கும் முக்கியமான ஆதரவாகவும் விளங்குகின்றன. இயற்கைச் சமநிலையைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் சூழல் அமைவின் ஆக்கத்திறனை பாதிக்கிறது. எனவே தமிழ்நாடு மின்வாரியம் இத்திட்டத்தால் பாதிப்படைய வாய்ப்புள்ள சூழல் அமைவுகள், காடுகள், உயிர்ப்பன்மையம், பழங்குடியினர் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மாற்றுத் திட்டங்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளது.
இத்திட்டத்தின் அமைவிடமானது மிகவும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயப் பகுதிக்குள் வருகிறது. 164.92 எக்டர் பரப்பளவில் அமையவுள்ள இத்திட்டத்திற்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் மேற்பரப்பில் 9.187 எக்டர், நிலத்துக்கடியில் 2.04 எக்டர் பகுதியும் கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயத்தின் மேற்பரப்பில் 0.80 எக்டர், நிலத்துக்கடியில் 7.80 எக்டர் பகுதியும் அரசு ரப்பர் தோட்டக் கழகத்திற்குச் சொந்தமான இடத்தின் மேற்பரப்பில் 133.94 எக்டர் நிலத்துக்கடியில் 11.16 எக்டர் பகுதியும் பயன்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தை அமைப்பதற்காக 40 எக்டர் பரப்பளவில் உள்ள 15,000 மரங்கள் அகற்ற்ப்படும் எனவும் அதற்குப் பதிலாக 30,000 மரங்கள் நடப்படும் எனவும் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிக பாதிப்பு இல்லாத இடத்தை ஆராய்ந்தே தற்போது முடிவான இடம் தேர்வு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் நேரில் செய்ய முடிவெடுத்துள்ள ஒன்றிய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு விரைவில் தனது துணைக் குழுவை அனுப்பி வைக்கவுள்ளது.
- செய்திப் பிரிவு