தமிழ் நாடு நிதிநிலை அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் கருத்து

தமிழ் நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

நம் மாநிலத்தின் கல்வி மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் இந்தியாவின் வேறெந்த மாநிலங்களும் கொடுக்காத அளவிற்கான முக்கியத்துவத்தை வழங்கியுள்ள இந்த பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. ஏழு முதன்மையான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த பட்ஜெட்டில் ’வளங்குன்றா பசுமையான எதிர்காலம்’ என்பதும் ஒரு முக்கிய நோக்கமாக அமைந்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

 நீர்வளம்

நம் மாநிலம் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை அதிகம் சந்திக்கும் ஒரு மாநிலமாகும். அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டில் கடும் வறட்சியையும் வரலாறு காணாத புயல் வெள்ளத்தையும் எதிர்கொண்டது. இந்த நிலையில் மாநிலத்தின் நீர்வளங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானதாகும். இதனடிப்படையில் இந்த பட்ஜெட்டில் நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

  1. ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்து மேம்படுத்தி, இயற்கையை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியாக இந்த ஆண்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் மக்கள் பங்களிப்போடு 5,000 நீர்நிலைகளைப் புனரமைக்கும் பெரும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
  2. “வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்” கீழ் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெட்டேரி, வில்லிவாக்கம், பாடி ஏரிகளை சீரமைத்தல்.
  3. வடசென்னைப் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு கழிவுநீரைத் திறம்பட அகற்றுவதற்கும், நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம்.

வடசென்னையை ’சூழல் அநீதியின் கோரமுகம்’ என்றே பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடர்ச்சியாகக் கூறி வருகிறோம். மாநிலத்தின் வளர்ச்சிக்காக காவு கொடுக்கப்பட்ட, அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட ஒரு பகுதிக்கு இப்போதாவது அடிப்படைத் திட்டங்கள் கொண்டு வரப்படுவது நம்பிக்கை அளிக்கிறது.

  1. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை பகுதிகள் வழியாகப் பாய்ந்து, வங்கக்கடலில் கலக்கும் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம், அரசு தனியார் பங்களிப்புடன்

சுமார் 1,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு கழிவுநீர்க் குழாய்கள் அமைத்து கழிவுநீர் வெளியேறுவதற்கு ஏற்ற மாற்று வழிகளை அமைப்பது, நாள் ஒன்றிற்கு 110 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆற்றின் கரையில் மக்களின் மனம் கவரும் வகையில் நான்கு பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நதிக்கரை நெடுக பசுமைப் பரப்புகளை அதிகரிப்பது போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்ட இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட்டு 30 மாத காலகட்டத்தில் பணிகள் நிறைவு செய்யப்படும். சைதாப்பேட்டை முதல் திரு.வி.க. பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள்ளாகவே இப்பணிகள் முடிக்கப்படும்.

  1. வைகை, காவிரி, தாமிரபரணி மற்றும் நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகள் சீரமைக்கப்பட்டு, நதிநீரை தூய்மையாகப் பராமரிக்கவும், கரையோரம் பசுமையான மரங்களுடன் கூடிய பூங்காக்கள், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களுடன், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஈரோடு, மற்றும் கோயம்புத்தூரில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வுப் பணிகள் மற்றும் திட்ட அறிக்கை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
  2. பருவகால மழைநீரை முறையாக சேமிக்கவும். பாசனத்திற்கு உரிய நீரை உறுதி செய்யவும். வரும் நிதியாண்டில் தரைகீழ் தடுப்பணை, கால்வாய் சீரமைப்பு, புதிய அணைக்கட்டு போன்ற நீர் செறிவூட்டும் கட்டுமானங்களும் நீர்ப்பாசனப் பராமரிப்புப் பணிகளும் 734 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  3. அணைகள் மற்றும் கதவணைகளில் பழுதடைந்துள்ள கதவுகளை மாற்றி புதிய கதவுகள் அமைத்திடவும். பழுது பார்த்துப் பராமரிக்கவும் 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அணைகள், தடுப்பணைகள் ஒரு ஆற்றின் உயிர்ச்சூழலை நிரந்தரமாக மாற்றியமைக்கக் கூடியவை. நீர்ச்செறிவூட்டுதலுக்காக அணைகள் அமைப்பது ஆற்றின் முழு ஓட்டத்திலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதுபோன்ற திட்டங்களைத் தீவிர ஆய்வுக்குட்படுத்தி உள்ளூர் மக்களின் ஆலோசனைகளைப் பெற்று மட்டுமே செயல்படுத்த வேண்டும்.

  1. மாநிலத்தில் உள்ள நீர்வளங்களின் மேலாண்மையைத் திறம்பட மேற்கொள்வதற்கு, தமிழ்நாடு நீர்வளத் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இணைய தகவல் தளம் விரைவில் தொடங்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீர்வளத் துறைக்கு 398 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்த 2030ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைப் பாதியாக குறைப்பது அவசியமாகும். பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளும் மாற்றங்கள் கார்பன் சமநிலையை எட்ட வழிவகுக்கும். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

  1. இந்நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதுமட்டுமன்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KfW) நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்து இந்நிதியாண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
  2. வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையை வழங்கிடும் நோக்கில் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சிற்றுந்து திட்டம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்படும்.
  3. சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக 12,000 கோடி ஒதுக்கீடு. ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும். பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கைதயாரிக்கப்படும்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மெட்ரோ விரிவாக்கம் செய்யப்படுவது தனிநபர் வாகனப் பயன்பாட்டால் உண்டாகும் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கும் என்ற வகையில் வரவேற்கப்பட்ட வேண்டிய திட்டமாகும். ஆனால், கடும் எதிர்ப்பைச் சந்தித்து வரும் பரந்தூர் விமான நிலையத்திற்குப் பயன்படும் வகையில் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில்த்திற்கு விரிவான செயலாக்க அறிக்கை தயார் செய்யும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

பசுமை ஆற்றல்

புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமான புதைபடிம ஆற்றலைப் பயன்படுத்துவதிலிருந்து பசுமை ஆற்றலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு நகர்வது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் யூனிட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றலை தமிழ்நாட்டில் உருவாக்கி, நாட்டிலேயே தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு உரிய திட்டங்கள் வகுக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே வேலையில் இத் திட்டங்கள் சூழலியலை எந்த வகையிலும் பாதிக்காதவாறு முற்றிலும் பசுமையாக இருத்தல் அவசியம். சூரிய ஆற்றல் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் போது அது பெரிய பரப்பளவிலான நில பயன்பாட்டினை மாற்றி அமைக்கும், ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட மின் உற்பத்தியாக இல்லாமல்,  1MW, 2MW, 5MW என பரந்துபட்ட மின் உற்பத்தியாக இருத்தல் வேண்டும். காற்றாலை மின்னுற்பத்தியைப் பொருத்தவரையில் offshore wind energy என்ற பெயரில் பல நூறு ராட்சத  காற்றாலைகளை ஆழ்கடலில் நிறுவுவது கடல் சூழலியலையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் சில இடங்களில் பாதிக்கும் அபாயம் உள்ளது.

அதேபோல் நீரேற்று புனல் மின் நிலையங்கள் சிறிய அளவிலானதாகவும் இயற்கை நீரோட்டத்தையும், காடுகள் மற்றும் காட்டுயிர்களின் வாழிடங்களை எந்த வகையிலும் மாற்றி அமைக்காத வண்ணம் இருத்தல் வேண்டும். Green Hydrogen போன்ற புதிய தொழில்நுட்பங்களின் சாதக பாதகங்கள் விரிவாக ஆராயப்பட்ட பின்னரே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

 நகர்ப்புரப் பசுமை

பெருகி வரும் காற்று மாசுபாடு, வெப்பநிலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றைச் சமாளிக்க நம் நகரங்களின் பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். அதனடிப்படையில் இந்த பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

  1. சென்னை கடற்கரையோரப் பகுதிகளை அழகுற சீரமைத்து மேம்படுத்திடும் நோக்கோடு கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைப் பகுதிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வசதிகளுடன் மெருகூட்டி அழகுபடுத்தப்படும்.

 

  1. பசுமைப் பரப்பை அதிகரிக்க வளர்ந்த மரங்கள் நடுவது, மியாவாக்கி காடுகள், பசுமைக்கூரைகள், செங்குத்துத் தோட்டங்கள், பசுமைச் சுரங்கப் பாதைகள், பசுமைத் திரைகள், நடைபாதைகளில் நடவடிக்கைகள் மரங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இப்பணிகள் பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு, நகர்ப்புர பசுமைத் திட்டம்என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும்.

எல்லா கடற்கரைகளையும் சுற்றுலா நோக்குடன் அழகுபடுத்த வேண்டிய அவசியமில்லை. அரசு குறிப்பிட்டுள்ள இடங்களில் பல கடற்கரைகளில் மீன்பிடி மற்றும் அதுசார்ந்த பணிகளுக்காக மீனவர்களின் நிலப்பயன்பாடு உள்ளது. இதனைப் பாதிக்கும் வகையில் கடற்கரை அழகுபடுத்தும் திட்டங்கள் அமையக் கூடாது. அப்படியான கடற்கரைகளை ஆக்கிரமிப்பு இல்லாமலும், கட்டிடக் கழிவுகள் போன்ற குப்பைகள் இல்லாமலும் பாதுகாத்தலே சிறந்த அழகுபடுத்தும் திட்டமாகும். அதேபோல மியாவாக்கிக் காடுகள் அமைப்பதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக புதர்க்காடுகள், புல்வெளிகள் போன்ற பகுதிகள் பல்வேறு சிறிய உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. அவற்றை அழித்து குறுங்காடுகள் திட்டம் செயல்படுத்தக் கூடாது.

  1. நெகிழிக் கழிவுகள் உள்ளிட்ட மட்காத குப்பைகள், கிராமப்புறங்களின் சுற்றுச்சூழலை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகிடுவதைத் தவிர்க்க, முறையான திடக்கழிவு மேலாண்மைக் கட்டமைப்புகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் உருவாக்கி, மட்காத குப்பைகளை முறையாகச் சேகரித்து மறுசுழற்சி செய்தல், தொழில் நிறுவனங்களின் எரிபொருள் பயன்பாட்டிற்கு வழங்குதல் போன்ற பணிகளைச் செயல்படுத்தி சுகாதாரமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் நோக்கோடு, ஒரு புதிய நிறுவனம் ஏற்படுத்தப்படும்.

சிமெண்ட் ஆலைகள் போன்ற ஆலைகளில் குப்பைகளை குறிப்பாக நெகிழிக் குப்பைகளை எரிப்பது கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு அது சூழல் நீதிக்கும் எதிரானது. ஒவ்வொரு பகுதிகளிலும் உருவாகும் குப்பைகள் அந்தந்த வட்டாரங்களிலேயே கையாளப்பட வேண்டும். மாநிலத்தின் பிற பகுதிகளில் இருக்கும் ஆலைகளில் எரிப்பதற்காக எடுத்துச் செல்லப்படக் கூடாது.

  1. குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் எட்டு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 50 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும். தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு. வெளிப்படையான பயனாளிகள் தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

பாராட்டத்தக்க இத்திட்டத்தின் மூலம் கட்டப்படும் வீடுகள் ஆற்றல் அதிகம் தேவைப்படாத இயற்கை வளப் பயன்பாடு குறைவான தமிழ் நாடு காலநிலை மாற்ற செயல்திட்டத்தின் கீழான பசுமை வீடுகளாக இருக்க வேண்டும்.

பேரிடர் மேலாண்மை

தீவிர வானிலை நிகழ்வுகளால் தமிழ் நாடு தொடர்ச்சியாக பாதிப்படைந்து வருகிறது. துல்லியமாக மழையைக் கணிப்பதில் இருக்கும் இடைவெளியால் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடும் உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தமிழ் நாட்டிற்கான பிரத்யே வானிலை முன்னறிவிப்பு தொழில்நுட்பங்கள் மிகவும் அவசியமானதாகும். அதற்காகவும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  1. நிகழ் நேர மழைப்பொழிவு மற்றும் வானிலை அளவீடுகளை பெறுவதற்காக 1400 புதிய தானியங்கி மழைமானிகளையும், 100 புதிய தானியங்கி வானிலை நிலையங்களையும் நிறுவிட அரசு 32 கோடி ரூபாய் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  2. வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அதிதிறன் மிக்க விரைவான கணினிச் சேவைகளைப் பெறவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் [Space Application Centre மேற்கொள்ளப்பட்டுள்ளது. (SAC)] வெள்ளம், புயல், நிலஅதிர்வு போன்ற இயற்கைப் பேரிடர்களை கண்காணித்து, பேரிடர் அபாயக் குறைப்பிற்கான கள நிலவரங்களுக்கு உகந்த செயல்பாட்டு உத்திகளை வகுக்க ஏதுவாக தொழில்நுட்ப மையம் ஒன்றும் அமைக்கப்படும்.
  3. வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்தும் வகையில், இராமநாதபுரம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் இரண்டு சி-பேண்ட் டாப்ளர் ரேடார்கள் (Doppler Radar) 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உயிர்ப்பன்மையம்

  1. பல்லுயிர் நலன் காக்கும் முயற்சியாக, அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதி ஒன்றை 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென முதற்கட்டமாக ஐந்து கோடி ரூபாயை அரசு வழங்கும். பிற அரசு நிறுவனங்கள், பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி, தேசிய சுற்றுச்சூழல் அமைப்புகளின் உதவியோடு, அழிந்துவரும் மற்றும் விளிம்பு நிலையிலுள்ள உயிரினங்களைப் பாதுகாக்க உரிய திட்டங்கள் வகுக்கப்படும்.

மாநில அளவில் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க இப்படி ஒரு நிதியம் ஏற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்திட்டம் மூலம் தமிழ் நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள பல பறவைகள், விலங்குகள், தாவரங்கள், பூச்சிகள் காப்பாற்றப்படும்.

  1. தமிழ்நாட்டில் பேசப்படும் சௌராஷ்டிரா, படுக மொழிகளையும் தோடர், கோத்தர், சோளகர், காணி, நரிக்குறவர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களையும் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் இனவரைவியல் (Ethnography) நோக்கில் ஆவணப்படுத்திப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்திடும்.

இதுவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாகும். பழங்குடிகளின் மொழி இயல்பாகவே இயற்கை சார் அறிவு வளமிக்கது. காடுகள், உயிரினங்கள் குறித்த அவர்களின் மரபார்ந்த அறிவைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்த இத்திட்டம் பயனளிக்கும்.

மொத்தமாக இந்த பட்ஜெட் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே மையப்படுத்திய திட்டங்களைக் கொண்டிராமல் தமிழ் நாடு முழுமைக்குமான பரந்துபட்ட திட்டங்களைக் கொண்டுள்ள பட்ஜெட்டாக அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.  சுற்றுச்சூழல் பார்வையில் வரவேற்கத்தகுந்த திட்டங்கள் இருந்தாலும், சில திட்டங்களைத் தவிர்ப்பதும், சில திட்டங்களை மறுபரிசீலனை செய்வதும் மிகவும் அவசியமாகும். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகளை தமிழ் நாடு அரசு பரிசீலிக்கக் கோருகிறோம்.

 

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments