கடந்த மூன்று நாட்களாக எண்ணூர் கழிமுகத்தில் நச்சுதன்மை வாய்ந்த தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் அதிக அளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. மிக்ஜாங் புயலில் ஏற்பட்ட மழை வெள்ள நீரில் எண்ணெய் கழிவுகளும் கலந்திருப்பதால் எண்ணூர், எர்ணாவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வெள்ள நீர் புகுந்த இடங்களில் உள்ள வீடுகளின் சுவர்களிலெல்லாம் எண்ணெய் கசடுகள் படிந்துள்ளன, மணலி தொழ்ர்பேட்டையிலிருந்து வெள்ள நீரை எடுத்துச்செல்லும் வடிகால் வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கும் அங்கிருந்து எண்ணூர் கழிமுகத்திற்கும் கடலுக்கும் இந்த எண்ணெய் கழிவு பரவியுள்ளது.
பக்கிங்காம் கால்வாயிலும், எண்ணூர் கழிமுகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் கெட்டியான எண்ணெய் கசிவுகள் படிந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மூன்று நாட்களாக கழிமுகத்தை வாழிடமாக கொண்ட எந்த பறவைகளையும் அங்கு பார்க்க முடியவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெள்ளநீர் வடிந்த இடங்களில் சூரிய வெப்பம் பட்டு எண்ணெய் கழிவுகளில் இருந்து நச்சுக்காற்று பரவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மூச்சு விடவே சிரமப்படுவதாகவும் சில இடங்கள் மிகவும் வெப்பமாக இருப்பதாகவும் தெரிவிக்கும் மக்கள் தீப்பற்றி விடுமோ எனும் அச்சத்தில் சமையல் செய்யக்கூட நெருப்பு பற்ற வைக்காமல் தவித்து வருகின்றனர்.
எண்ணெய் கசிகிற விஷயத்தை மீனவர்கள் கூறத் தொடங்கி இரண்டு நாளுக்குப் பின்னர் 7.12.2023 அன்று சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், எண்ணெய்க் கழிவு CPCL ஆலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் ஆலை வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை வெகியேற்றும்போது ஆலையில் உள்ள எண்ணெய் கழிவுகளும் வெளியேறி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உத்தரவின்பேரில் தற்போது எண்ணெய் வெளியேற்றம் பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தப்பட்டு, ஆலை வளாகத்தில் உள்ள எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்படுவதாகவும் வாரியம் கூறியுள்ளது. கொருக்குப்பேட்டை, கொடுங்கையூரில் உள்ள IOCL மற்றும் சரக்கு முனையத்திலிருந்து வரும் நீரிலும் எண்ணெய் கலந்திருந்ததாக மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கை தெரிவிக்கிறது.
Report of TNPCB on suspected oil leak (1)இரண்டு நாட்களுக்குப் பிறகு மாசு கட்டுப்பாடு வாரியம் வந்து உத்தரவிட்டதன் பிறகுதான் எண்ணெய் கசிவு குறித்து CPCL நிறுவனத்திற்கு தெரியவந்தது என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். அது உண்மையாக இருந்தால் இவ்வளவு பெரிய நிறுவனம் எப்படி இந்த அளவிற்கு கவனக் குறைவாக செயல்படலாம். சுற்றுச்சூழலையும் வடசென்னையின் மக்களையும் துச்சமெனக் கருதுபவர்களால் மட்டுமே இந்த அளவிற்கு அலட்சியமாக இருக்க முடியும்.
உடனடியாக தமிழ் நாடு அரசு இப்பிரச்சினைக்குத் தனிக்கவனம் செலுத்த வேண்டும். துறைசார் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே வெள்ள நீர் வடியாமல் வீட்டிற்குள் புகுந்து அவதிபட்டுக் கொண்டிருக்கும் எர்ணாவூர் பகுதி மக்கள் வீட்டிற்குள் தற்போது தொழிற்சாலை கழிவுகள் புகுந்து இருப்பது மேலும் பாதிப்பை அதிகரித்துள்ளது. இது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறியிருக்கும் அபாயகரமான நச்சு எண்ணெய் என்பதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அரசு விரைந்து அப்புறப்படுத்த வேண்டும். விதிமீறல்களில் ஈடுபட்ட தொழிற்சாலைகளை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்பட்ட இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள்தான் காரணம் என்ற அடிப்படையில் அவர்களின் செலவில் பாதிகப்பட்ட இடங்களை முழுமையாக சர்வதேச தரத்தில் சுத்தம் செய்து தர வேண்டும் . பாதிகப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து அரசு உடனடியாக பெற்றுத்தர வேண்டும்.
முதற்கட்டமாக எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் ஒரு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என தமிழ் நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.