பூச்சிகளால் அழியப்போகிறதா இப்பூவுலகு?

புவி வெப்பமயமாதலின் தாக்கம் பூச்சிகளின் ஆயுட்காலத்தையும் அவற்றின் வாழிடங்களில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நமது உயிர்த்துடிப்பு மிக்க புவியை “பூச்சிகளால் பிணைக்கப்பட்ட பூவுலகு” என்று சொன்னால் மிகையில்லை. பூச்சிகள் பலநேரங்களில் நமக்கு எவ்வளவுக்கு அருவெறுப்பும் தொந்தரவும் தருவதாக இருக்கின்றனவோ அதைவிட அதிகமாக நம் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாதவையாகவும் இருக்கின்றன. ஒருபக்கம் பூச்சிகளால் விளைச்சலில் ஏற்படும் சேதங்களைக் குறித்து நாம் கவலைப்பட்டாலும்கூட கிடைக்கும் மொத்த விளைச்சலுமே பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கையால் என்பதை நாம் பெரிதும் கவனிப்பதில்லை. பூச்சிகளுக்கும் உணவு உற்பத்திக்குமான உறவு மிகவும் நெருக்கமானது.

இந்த பின்னணியில், உலக வெப்பமயமாதல் பூச்சிகளின் பல்வகைமையிலும், நடத்தையிலும் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துமென்று தீவிர ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகள் கடும் அதிர்ச்சிதரும் பல்வேறு உண்மைகளை நமக்கு வெளிப்படுத்துகின்றன. அண்மையில் வெளியான ‘டவுன் டூ எர்த்’ இதழின் ‘Savage Mode’ என்ற கட்டுரையானது, புவி வெப்பமயமாதலால் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் எண்ணிக்கையிலும் பரவலிலும் தீவிரமடைவதோடு அவற்றின் பயிர்தாக்கும் திறனும் அதிகரிப்பதாக தெரிவித்திருக்கிறது.

இந்த கட்டுரையின் சாராம்சத்தையும் முக்கிய தகவல்களையும் இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.

  • முன்பு வெப்ப மண்டலப் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட பூச்சிகள் இப்போது புவி வெப்பமயமாதலால் குளிர் பிரதேசங்களுக்கும் விரைவாகப் பரவுகின்றன. சமவெளிகளில் காணப்பட்ட பூச்சிகள் மலைப்பாங்கான உயரமான (குளிரான) பகுதிகளுக்கு வேகமாகப் பரவி வருகின்றன. 1 டிகிரி வெப்பநிலை உயர்வு பூச்சிகளை 200 கிலோமீட்டர் கூடுதல் தூரங்களுக்கு பரவச் செய்கிறது.
  • விவசாயிகளுக்குக் கடந்த காலங்களில் அறிமுகமே இல்லாத புதிய பூச்சிகள் பரவும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்த வழக்கமான வழிமுறைகள் எதுவும் பலனளிக்கவில்லை.
  • வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயுவானது பூச்சிகளின் பெருக்கத்தையும் தீவிரத்தையும் அதிகரிக்கிறது. முன்பு பெரிய அச்சுறுத்தலாக இல்லாத பூச்சியினங்கள் இப்போது பெரும் அழிவு தருபவையாக மாறியிருக்கின்றன. அதாவது அவற்றின் பெருக்கமும் உணவு உண்ணும் தீவிரமும் அதிகரித்திருக்கிறது. இது பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டையும் பலமடங்கு அதிகரிக்கிறது.
  • காலநிலை மாற்றமும் மழைப்பொழிவில் மாற்றமும் அழிவு விளைவிக்கும் லோகஸ்ட் எனப்படும் வலசை செல்லும் வெட்டுக்கிளிகள் இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தை நீட்டித்திருக்கின்றன.
  • பூச்சிகளின் பெருக்கம் பயிர்களிடையே பூச்சிகளால் பரவும் நுண்ணுயிர்களால் பரவும் நோய்களுக்கும் காரணமாக இருப்பதால் நோய்த்தொற்றும் பயிர்களிடையே அதிகரித்து வருகிறது.
  • காலநிலை மாற்றத்தால் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியும் தாக்கமடைகிறது. குறிப்பிட்ட தாவரங்களை அழிக்கும் பூச்சியானது வழக்கமான காலகட்டத்துக்கு முன்பே இனப்பெருக்கம் செய்து பெருகும்போது அதனை இயல்பாக உணவாகக்கொண்டிருக்கும் பூச்சிகள் அவற்றை உண்பதற்குத் தயாராக இருப்பதில்லை; அதாவது இயல்பான பூச்சிகளின் எதிரிகள் சரியான நேரத்தில் பெருகுவதில்லை.
  • இயல்பாகவே பூச்சிகளின் வாழ்நாள் குறைவாக இருப்பதால் அவை எளிதில் சூழலுக்கு ஏற்றபடி தகவமைந்து பிழைத்துக்கொள்கின்றன. அதாவது அதிகமான தலைமுறைகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உருவாகும்போது மரபணு பல்வகைமையால் பல உயிரினங்கள் பிழைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கிறது. கூடுதலாக, வெப்பநிலை உயர்வு இன்னும் இவற்றின் வாழ்நாளைச் சுருக்கி தலைமுறைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 2 டிகிரி வெப்பநிலை உயர்வுக்கும் பூச்சிகளின் தலைமுறைகளின் எண்ணிக்கை 1-5 வரை அதிகரிக்கின்றன.
  • கார்பன் நைட்ரஜன் சமநிலை பாதிப்பால் ஊட்டச்சத்தற்ற பயிர்கள் உருவாகின்றன. ஆகவே, பூச்சிகள் கூடுதலாகப் பயிர்களை உண்ண வேண்டியிருக்கிறது. உயரும் வெப்பநிலைகள் பூச்சிகளின் உண்ணும் வேகத்தை அதிகரிக்கிறது. பூச்சிகள் தங்கள் வழக்கமான விருந்தோம்பிகளை விட்டுவிட்டு இதுவரையிலும் தாக்காத பயிர்களையும் தாக்குகின்றன.
  • மழை, பெருவெள்ளம் போன்றவற்றால் சிறு பூச்சிகள் அடித்துச் செல்லப்பட்டு பெரிய பூச்சிகள் பெருகுகின்றன. வறட்சியும்கூட பூச்சிகளின் பெருக்கத்தை மேலும் அதிகரிக்கின்றன.
  • குறிப்பிட்ட பயிர்களில் கார்பன் டை ஆக்சைடின் அதிகரிப்பால் ஒளிச்சேர்க்கை அதிகரித்து இலைதளைகளில் இனிப்புத் தன்மை அதிகரிக்கிறது. இதுவும் பூச்சிகளால் அவை பாதிப்படைய அதிக வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.
  • அரிசி, கோதுமை, சோளம் போன்ற பயிர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளவையாக இருக்கின்றன. இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமையின் விளைச்சல் 30 விழுக்காடு வீழ்ச்சியைச் சந்திக்குமென்று ஏற்கனவே ஆய்வுகள் குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருபுறம் எடுக்க இன்னொருபுறம் நம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய பூச்சிகள் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாக்குப் பிடிக்கும் பன்மைத்துவத்துமிக்க பயிர் சுழற்சிக்கு மாறுவது காலத்தின் கட்டாயம். அரிசி கோதுமை போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவது ஏதேனும் ஒரு சூழலில் அவை ஒட்டுமொத்தத் தாக்குதலுக்கு உள்ளாகும்போது பெரும் பஞ்சத்துக்கு வழிவகுக்கும். ஆகவே, சிறுதானியங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய பன்மைத்துவமிக்க பயிர் சுழற்சிக்கு மாறவேண்டியது அத்தியாவசியமாகிறது.

சுற்றுச்சூழல் பற்றிப் பேசும்போது “நாட்டிற்கு வளர்ச்சி வேண்டாமா?” என்று சந்தைப் பொருளாதாரவாதிகளும் வளர்ச்சியின் முதல்தரமான கனிகளை அறுவடை செய்யும் மேற்தட்டினரும் கூப்பாடு போடுகின்றனர். நம்மிடம் அவர்களுக்கு ஒரே பதில்தான் இருக்கிறது “எங்களுக்கு சோறு வேணும் பாஸ்!”

– ஜீயோ டாமின்

குறிப்பு:  இக்கட்டுரை டவுன் டு எர்த் தளத்தில் முதலில் வெளியான கட்டுரையின் சுருக்கம் மட்டுமே. விரிவாகப் படிக்க:

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments