இயற்கையை அறிவியல் வெல்ல முடியுமா?

இயற்கையை அறிவியல் வெல்ல முடியுமா? சூழல் சீர்கேடுகளை அறிவியல் மூலம் வென்றுவிட  முடியுமா? போன்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு சாரார், “இயற்கையின் சக்தி மிகவும் பெரியது; மனிதனால் என்றுமே அதை வீழ்த்த முடியாது. இயற்கையின் பிடியின் உள்ளேயே தான் மனிதன் இருந்திருக்கிறான், இருந்தாக வேண்டும்” என்கின்றனர். இன்னொரு சாரார், “மனிதர்கள் அறிவியலின் மூலம் இயற்கையின் பல சங்கிலிகளை உடைத்து எறிந்துள்ளனர். வரலாற்றில் இயற்கையின் இடர்கள், நோய்கள் போன்றவற்றை மனிதன் அறிவியலின் துணை கொண்டே வென்றுள்ளான். அதைப் போலவே இப்போது நடந்து கொண்டிருக்கும் சூழல் சீர்கேடுகள், காலநிலை மாற்றம் போன்றவற்றையும் மனிதர்கள் அறிவியலின் துணை கொண்டு வென்று விடுவர்” என்கின்றனர். இவற்றில் எந்த அளவு முழுமையான உண்மையுள்ளது; எது சாத்தியம் என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு மனிதர்களைப் பற்றியும் அவர்களின் அறிவியலைப் பற்றியும் வரலாற்று ரீதியில் பார்க்க வேண்டியுள்ளது.

 

அறிவியலும் அதன் சமூக அமைப்புச் சார்பும்:

 மனித சமூகத்தின் துவக்க காலங்களில் இருந்த நிலையை ஒப்பிடுகையில் மனிதன் இயற்கையின் பிடியில் இருந்து நிறையவே விடுபட்டுள்ளான் என்பது உண்மையே! துவக்கத்தில் மனித சமூகம் முழுவதும் இயற்கையின் பிடியில் தான் இருந்தது. இதனை ‘Environmental/Ecological Determinism’ என்பர். அதாவது மனிதனின் உணவு, வாழிடம், பழக்கவழக்கம், இறப்பு, கலாச்சாரம் என அனைத்தும் இயற்கையில், அதன் சூழலில் நடக்கும் மாற்றங்களை பொறுத்தே அமையும். இன்றும் மனிதனைத் தவிர பிற உயிர்கள் இந்த நிலையில்தான் உள்ளது. தற்போதைய மனித சமூகமும் சுற்றுச்சூழலின் தாக்கத்தில்தான் இருக்கிறது என்றாலும் கூட, முழுவதும் இயற்கையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுவது பிழை.

மார்க்சின் ஆரம்பகாலக் கட்டுரைகள் இதனை மிக ஆழமாக ஆராய்ந்துள்ளது. மனிதர்கள் உலகின் பிற உயிர்களைப் போல வெறும் ‘நுகரும் இனமாக’ மட்டும் இல்லை. மாறாக அவர்கள் உற்பத்தி செய்பவர்கள். இந்த உற்பத்தி தான் மனிதரையும் மனித சமூகத்தையும் பிற உயிர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டியது. இதனைக் கொண்டு மனிதசமூகம் இயற்கையின் பிடிகளைச் சிறிது சிறிதாக தளர்த்துகிறது. தனக்கான உற்பத்தியைத் துவங்கியது, உழவை கண்டுபிடித்தது, நீரைச் சேமிக்க அணைகளைக் கண்டுபிடித்தது, உலகம் முழுதும் பயணங்களைச் சாத்தியமாக்கியது போன்றவை அறிவியலைக் கொண்டு மனிதன் இயற்கையின் பிடிகளைத் தளர்த்தியதாகத்தான் பார்க்க முடியும்.

ஆனால் ‘அது மட்டும் தானா?’ என்றால் இல்லை. வரலாற்றில் அறிவியலோடு இன்னும் சிலவும் மனித இனத்தின் இருத்தலுக்கு மிகவும் தேவையாய் இருந்துள்ளது. அவை மனிதர்கள் கட்டமைத்த சமூக-அரசியல் கட்டுமானங்கள். மனித இனத்தின் வரலாற்றில் எந்த அளவு அறிவியல் தொழில்நுட்பம் முக்கியமோ; அந்த அளவு அவர்களின் குழுவாக வாழ்தல், குழுவாக உற்பத்தி செய்தல், தனக்கான சமூக-அரசியல் கட்டுமானங்களை உருவாக்குதல் போன்றவற்றையும் கூறவேண்டும். இவை இரண்டில் எதையும் தனித்துப் பார்த்து விட முடியாது.

மனிதனின் தீராத அறிவியல் தேடலும், குழுவாக வாழ்வதற்கு உருவாக்கப்பட்ட சமூகக் கட்டுமானங்களுமே மனித சமூகம் வரலாற்று காலத்தின் முன்பிருந்தே தன்னை ஒரு சிற்றினமாக இப்புவியில் தக்கவைத்துக் கொண்டதற்கு முக்கிய அல்லது அடிப்படை காரணம். ஆகவே இன்றைய சூழல் மாற்றங்களைப் பற்றிய கேள்விகள் அறிவியலுக்கு எதிராய் மட்டும் கேட்கப்படுவன அல்ல. இங்கிருக்கும் சமூக அரசியல் பொருளாதார அமைப்புகளுக்கு எதிராய் கேட்கப்படுவது என்பதை அழுத்தமாய் கூற வேண்டியுள்ளது. இன்னும் கூறப்போனால் ஒரு சமூகத்தின் அறிவியலே அதன் சமூக கட்டுமானங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது. உதாரணமாக, உலக வரலாற்றில் அரசு உருவாகாத எங்கும் நீர்தேக்கங்களோ அணைகளோ உருவானதில்லை.

இங்குதான் அறிவியல்-தொழில்நுட்பத்திற்கும், சமூக-அரசியல் கட்டுமானங்களுக்கும் உள்ள தொடர்பை நாம் உணர வேண்டும். இன்றைய உலகில் நடக்கும் சூழல் போராட்டங்கள் பலவும் இந்தத் தொடர்பை உணராமல் நடக்கும் காரணத்தினால் தான் நமக்கு, “அறிவியலா? இயற்கையா?” என்ற கேள்வி வருகிறது. முக்கியக் குற்றவாளி கண்ணில் படுவதில்லை.

குஹாவின் வகைப்பாடு:

ராமச்சந்திர குஹா இந்தியாவில் சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மக்களை மூன்று விதமாக பிரித்துள்ளார்1.

 

  1. காந்திய அறப்போராளிகள் (Crusading Gandhians) – இவர்கள் நுகர்வினை குறைத்து பண்டைய இந்திய வாழ்வியலுக்கு சென்று விடுவோம் என்று கூறுபவர்கள். ஐரோப்பிய/மேலை நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத் தாக்கமே இன்றைய சூழல் சீர்கேட்டிற்குக் காரணம் என்ற கருத்தை முன்மொழிபவர்கள்.

 

  1. தொழில்நுட்பவாதிகள் (Appropriate Technologists) – இவர்கள் சரியான அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம் தற்போது இருக்கும் சூழல் சீர்கேடுகளை வென்று விடலாம் என்று கூறுபவர்கள். அறிவியல் மூலம் இயற்கையை வெல்ல முடியும் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் பேசுபவர்கள் இவர்களே.

 

  1. சூழலிய மார்க்சியவாதிகள் (Ecological Marxist) – இவர்கள் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மறுக்காமல், இங்கிருக்கும் சமூக-அரசியல் நிறுவனங்களை மாற்றியமைக்கக் கூறுபவர்கள். முக்கியமாக முதலாளித்துவத்தையும், அதன் வேலியாய் நிற்கும் அரசினையும் எதிர்ப்பவர்கள்!

முதல் இரண்டு சாரார் அறிவியலை வைத்து அதனை ஆதரித்தும் எதிர்த்தும் நிலைபட்டிருக்க, ‘மார்க்சிய சூழலியலாளர்கள்’ அறிவியலை எதிர்க்காமல் அந்த அறிவியலின் அரசியலை எதிர்க்கின்றனர். சமூக சமத்துவமின்மையையும், அதனை உருவாக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர். இந்த சமூக அரசியல் பொருளாதார நிறுவனங்களை மாற்றாமல் அறிவியலால் மட்டுமின்றி எதனாலும் மனித இனத்தைக் காப்பாற்ற இயலாது என்பது அவர்களின் கருத்து. ஒரு  மார்க்சியவாதியாக என்னுடைய கருத்தும் இதுவே!

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், மின்சாரம் இல்லாத கிராமங்கள் இங்கு எத்தனை? நாளையே உலக பணக்காரர்களின் வீட்டில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை இணைத்து தண்ணீர் உண்டாக்கும் கருவிகள் வரலாம். அது அனைத்து மக்களுக்கும் சென்று சேராது. காலநிலை பாதிக்காத ‘Climate resilient’ நகரங்கள் வரலாம். ஆனால், அது அனைவருக்குமான நகரமாக இருக்காது. இங்கிருக்கும் முதலாளிய சமூக அமைப்புகளால் அறிவியலின் கண்டுபிடிப்புகளை அனைவருக்கும் கொடுக்க முடியாது. இன்னும் சரியாகக் கூறினால் கொடுக்கவும் விரும்பாது! இதனால் தான் சூழலியலில் அறிவியலை விட தொழில்நுட்பத்தை விட ‘அரசியல்’ பேச வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது.

விளிம்புநிலை மக்களின் அறிவியல் எதிர்ப்பு:

இந்தியாவில் விளிம்புநிலை மக்கள் எடுக்கும் போராட்டங்கள் எல்லாம் இயற்கை வளங்களையும் இதனால்தான் உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சூழலியல் என்பது ‘காந்தியவாதமாக’, தொழில்நுட்ப வாதமாக திரிந்துபோய் இருக்கும் நேரத்தில், விளிம்பு நிலை மக்களின் சூழல் போராட்டங்கள் அரசுக்கெதிராக, தொழிற்சாலைகளுக்கு எதிராக மார்க்சியப் போராட்டமாக மிளிர்கிறது.

விளிம்பு நிலை மக்களின் கவலை என்னவென்றால், இயற்கையாய் கிடைக்கும் சூழல் சேவைகளை (Ecological Services) அரசு கொடுப்பதாய் கூறிக்கொண்டு சூழலை சிதைக்கையில்; வழக்கம் போல் நாம் ஓரங்கட்டப் படுவோம் என்பதே. உதாரணமாகத் தண்ணீர் இயற்கையாய் கிடைக்கும் ஆறுகளை, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மாசுபடுத்தி விட்டு, அல்லது தனியாருக்கு ஏலம் விட்டுவிட்டு உங்களுக்கு தண்ணீர் குழாய்களில் தருகிறோம் என்ற அரசின் வாக்கு நிறைவேறுவதற்கு இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். இப்போது அரசிடம் இருந்தும் தண்ணீர் கிடைக்கவில்லை; இயற்கையாய் கிடைத்த ஆறுகளில் கிடைக்கும் தண்ணீரையும் பயன்படுத்த முடியவில்லை, தனியாரிடம் காசு கொடுத்தும் வாங்க முடிவதில்லை. இப்படி நட்டாற்றில் விடப்படுவது விளிம்புநிலை (சில சமயங்களில் நடுத்தர) மக்கள் தான்.

இது தவிர காடுகளைக் காப்பாற்றும் பழங்குடி மக்களின் போராட்டங்கள் இந்தியா முழுவதிலும் நடக்கிறது. வளர்ச்சித் திட்டம் என்று எது வந்தாலும் அது விளிம்பு நிலை மக்களான பழங்குடிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர், குறுவிவசாயிகள் போன்றவர்களின் வாழ்வாதாரத்தையும் வாழிடத்தையும் அழிப்பதாகவே முடிவதால் அவர்களின் போராட்டமும் அரசுக்கெதிரான பெருநிருவனங்களுக்கு எதிரான போராட்டமாக வெடிக்கிறது. இவை அனைத்தும் ‘சூழலியல் மார்க்சியர்களின்’ கருத்தான முதலாளித்துவத்திற்கு எதிராகவே இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இவர்களின் வளர்ச்சி திட்டங்கள் எதிர்ப்பு ‘அறிவியலின் எதிர்ப்பாக’ தெரிந்தாலும் அது ‘எந்த அறிவியல்?’ என்பதைத் தான் இங்கு பேச வேண்டியுள்ளது. வரலாற்றில் மனிதனின் முன்னேற்றத்திற்குப் பயன்பட்ட அறிவியல் வேறு. இன்று பெருநிறுவனங்கள் இலாபம் ஈட்ட, அரசுகள் சூழல் சீர்கேடை சமாளிக்கப் பயன்படுத்தும் அறிவியல் வேறு. முதலாளித்துவத்தோடு இணைந்து நிற்கும் அறிவியலைத் தான் இம்மக்களும், சூழலியல் ஆர்வலர்களும் (மார்க்சியர்கள்) எதிர்க்கின்றனர். ஆனால் இங்கும் அறிவியலின் முதலாளித்துவத் தொடர்பு இரண்டு விதமாக உள்ளது.

  1. பெருநிறுவனங்களின் உற்பத்தி மூலம் சூழல் சீர்கேட்டை உருவாக்கும் அறிவியல் (The Polluting Technologies of Capitalism)
  2. இந்த சூழல் சீர்கேடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பயன்படுத்தப் போவதாக கூறும் அறிவியல் (The Savior technologies of Capitalism)

இதில் முதல் பிரிவை நமக்கு நன்கு தெரியும். மிகத் தெளிவாக அதை அனைவரும் எதிர்க்கிறோம். ஆனால், இரண்டாவதான ‘Savior technologies’ஐ சிலர் நம்பி ஏமாறுகிறோம். அது முதலாவதைத் தொடர்ந்து நிலைபெற வைப்பதற்கும் ஒரு அங்கீகாரத்தை அதற்கு கொடுப்பதற்கும் நிகழ்த்தப்படுகிற சூழ்ச்சி. அதுவும் முதலாளித்துவத்தின் அடிப்படையில் இருந்து வருவது தானே. இதனை இன்னும் ஆழமாய்ப் புரிந்து கொள்ள நாம் Ulrich Beckஐ தெரிந்து கொள்ள வேண்டும்.

அபாயங்களின் சமூகமும், அரசின் சேவைகளும்:

1986ஆம் ஆண்டு Ulrich Beck என்ற சமூகவியலாளர் ‘Risk Society’ என்ற புத்தகத்தை எழுதுகிறார்2. அதில் முதன்முதலாக இந்தச் சமூகத்தின் அபாயங்கள் (Risk) எப்படி இங்கிருக்கும் சமூக-பொருளாதார நிறுவனங்களை/அமைப்புகளைச் (Systems) சார்ந்திருக்கிறது என்பதை விளக்குகிறார். அதிலும் முக்கியமாக சூழலியல் சார்ந்த அபாயங்கள்!

மனிதனின் எல்லா நடவடிக்கைகளும் (Anthropogenic activities) இயற்கையை, சூழலை பாதிக்கத்தான் செய்கிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் தான் மனிதனுக்கான உற்பத்திகளும், சேவைகளும் கிடைக்கின்றன. அது விவசாயம் ஆனாலும் சரி, அணுசக்தி ஆனாலும் சரி. இந்தச் சேவைகள் மக்களுக்கு சென்று சேரும் பொறுப்பினை இன்றைய காலகட்டத்தில் ‘Welfare States’ எனப்படும் சமூக நலன் அரசுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இவை பிரதானமாக முதலாளிய அரசுகளாக இருப்பினும் சில சமூக பொருளாதார உற்பத்தி மற்றும் சேவைகள் மக்களைச் சென்று சேர்வதை உறுதி செய்வதாகக் கூறிக்கொண்டுள்ளன. அரசுகள் மட்டும் அல்லாது பிற அமைப்புகளும் இந்த ‘Nature to People’ பரிமாற்றத்தில் பங்குகொள்கின்றன. இதற்கும் அவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தைத் தான் நம்பி உள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்கும் அமைப்புகள்தான் அதனால் விளையும் அபாயங்களுக்கும் பொறுப்பேற்கின்றன. இது தவிர சூழல் சீர்கேடுகளைக் குறைப்பதாகவும் கூறுகின்றன. உதாரணமாக அனைவருக்கும் குடிநீர் சென்று சேருவதை உறுதிப்படுத்துவதாக இந்திய அரசு கூறியுள்ளது. அப்போது சிலருக்கு குடிநீர் கிடைக்காமல் போவதற்கான அபாயங்களை (Risk of not getting pure Drinking water) அதே அரசு தான் சமாளிக்க வேண்டும். இதைச் சமாளிப்பதற்கான அந்த அரசின் திறனைப் பொருத்து அந்த அபாயத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை உயரும்.

ஆக பெக்கின் கூற்றுப்படி பார்த்தால் ஒரு அமைப்பு எத்தனை சேவைகளை வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளது, எத்தனை சேவைகளை வழங்கும் திறன் கொண்டது என்பதைப் பொருத்து எவ்வளவு மக்கள் அந்த ‘Risk’இன் உள்ளே போவார்கள் என்பது இருக்கிறது. நமது அரசுகளின் திறன் என்ன என்பது நமக்கு நன்கு தெரியும். அனைத்து மக்களுக்கும் எழுத்தறிவு, மருத்துவம், உணவு போன்ற அடிப்படைத் தேவைகளே இன்னும் சென்று சேரவில்லை.

இப்படிச் சமூக சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே தள்ளாடும் அரசு சூழலியல் சேவைகளை அறிவியலின் துணை கொண்டு, தானே வழங்குவதாக முன்வரும் போது எத்தனை ஆயிரம் மக்கள் அதன் ‘risk category’க்குள் போவார்கள் என்பதைச் சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம். சூழலியல் சேவைகள் பல்வேறு காரணிகளை (factors) உள்ளடக்கியது. அதைச் சரியாக புரிந்து கொள்வதும், உருவகப்படுத்த முயற்சிப்பதுமே (simulate) அத்தனை சிரமம். அதைப் பரவலாக ஒரு மக்கட்தொகைக்கு கொடுப்பது எத்தனை சிரமம்!

முதலாளித்துவ அறிவியலுக்கு எதிர்ப்பு:

மழைநீர் வடிகால் என்னும் சேவை இயற்கையாய் இங்கு அமைந்த நில-நீர் அமைப்புகள் மூலம் கிடைப்பது. நகரங்களில் இதை அரசு ஏற்பதாகக் கூறி, ‘Storm Water drain’ போட்டுவிடலாம் என்று கூறிவிட்டு வடிகால் அமைப்புகள் இருந்த நிலங்களைக் கட்டுமானத்திற்குத் தள்ளிவிடுகிறது. ஆனால் அந்த வெள்ள வடிகால் அமைப்பு என்னும் சூழலியல் சேவையைத் திறனாய் கையாள இயலாமல் மக்களை வெள்ளத்தில் நிறுத்துகிறது. இது போல் இயற்கையாய் கிடைக்கும் மழைநீரைக் கெடுத்துவிட்டு கடல் நீரில் இருந்து குடிநீர் எடுப்பது, அலையாத்திக் காடுகளை அழித்துவிட்டு சுவர் கட்டுவது, ஆறுகளை அழித்துவிட்டு லாரியில் தண்ணீர் அனுப்புவது, புறம்போக்கு நிலப் புல்வெளிகளை அழித்துவிட்டு ஆடு மாடு தீவனம் வழங்குவது போன்றவை தான் சூழலியல் சீர்கேடுகளுக்கான நமது அரசின் அறிவியல் தீர்வுகள். இந்த அறிவியலை தான் சூழலியல் ஆர்வலர்களும், விளிம்பு நிலை மக்களும் எதிர்க்கின்றனர்.

சூழலியல் ஆர்வலர்கள் இது போன்ற சூழலியல் சேவைகளை இயற்கையிடமே விட்டு விடுங்கள் என்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளாக அதனோட இணைந்து அதனைப் புரிந்து வாழ்ந்த மக்கள் அந்த இயற்கையிடம் இருந்தே பயனடைந்து கொள்வார்கள். இது அறிவியல் எதிர்ப்பு போல் தெரிந்தாலும் இது அடிப்படையில் முதலாளித்துவ எதிர்ப்பு தான். இதில் எந்த பழமைவாதமும் இல்லை. முதலாளியத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க எளிய மக்களுக்குக் கிடைத்த ஒரு ‘Cushion’ இது!

இது நமது முதலாளித்துவ அமைப்புகளின் போதாமை, அதன் இலாப வெறியினால் நிகழும் அதிகப் பிரசங்கித்தனம் ஆகியவற்றிலிருந்து மக்களை காப்பதற்கான தீர்வு. இதனை, இந்த போதாமையுடைய முதலாளித்துவ அமைப்புகளை எதிர்க்க வேண்டிய நாம் ‘இயற்கையா? மனிதனா?’ என்று அடித்துக்கொண்டிருக்கிறோம். எந்தச் சமூக அமைப்பினாலும் இயற்கை கொடுக்கும் அனைத்துச் சேவைகளையும் கொடுக்க முடியாது. “இயற்கையை மனிதனால் வெல்ல முடியாது!” என்ற ஏங்கல்ஸின் வார்த்தைகளுக்குப் பொருள் இது தான். நவீனமே வேண்டாம், வலிமையான இயற்கை அன்னைக்கு நமக்கு என்ன வேண்டும் என்பது தெரியும் என்பன போன்ற புரிதலில் அல்ல. அது இயற்கை வழிபாடு.  Understanding the biosphere as a system in feeble equilibrium is different from worshiping it!

முன்னேற்றம் என்ற பெயரில் சூழலை ஒழித்து விட்டு அது வழங்கிய அனைத்துச் சேவைகளையும் கொடுக்கும் அறிவியலையும், சமூக அமைப்புகளை உருவாக்கிவிடலாம் என்பது மடமை. அப்படியே உருவாக்கினாலும் அதை அனைத்து மக்களுக்கும் பரவலாக கொடுக்க முடியாது. இன்னும் மின்சாரம் சென்று சேராத கிராமங்கள் இருப்பதை நினைவில் கொள்க! இயற்கையாகவே இலவசமாக.

இயற்கையை வென்றுவிடலாம் என்று எக்காளமிட்டபடி உலகை கூறுபோட்டு விற்கும் அறிவியல் சில ஆளும் வர்க்க முதலாளிகளுக்கு உதவப் போகும் அறிவியல் மட்டுமே! மக்கள் அறிவியல் அல்ல. காலநிலை மாற்றம் போன்ற சூழலியல் பிரச்சனைகளில் இருந்து அறிவியல் உதவியோடு தப்பிக்கப் பார்ப்பதில் தீர்வு இல்லை; சூழலோடே சேர்ந்து இயங்கும் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளை உருவாக்குவதில் தான் தீர்வு உள்ளது!

 

  • . ஹரி பாரதி.

(ஆய்வு மாணவர், ஐதராபாத் பல்கலைக் கழகம்.)

[email protected]

 

 

 

குறிப்புகள்:

 

[1] Guha, R. (1999). Environmentalism: A Global History. Oxford University Press

[2] Beck, U. (1992). Risk Society: Towards a new Modernity. Springer publications

 

 

 

 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Bala
Bala
1 year ago

Good one Hari. Keep writing more in tamil.