யானை – மனிதர் எதிர்கொள்ளலை சமாளிப்பதற்கான கையேடு வெளியீடு.

இந்தியாவில் உள்ள காடுகள் மற்றும் காடுகளை ஒட்டிய பகுதிகளில் நிகழும் யானை – மனிதர் எதிர்கொள்ளல்( Human-Elephant Conflict-HEC) சம்பவங்களை சமாளைப்பது மற்றும் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேட்டைச் சுற்றுச்சூழல், வனம்  மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய வன ஆராய்ச்சி நிறுவனத்தில் 29.04.2022 அன்று நடந்த யானைகள் திட்டத்தின் வழிகாட்டுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் இக்கையேட்டை வெளியிட்டார். ஒன்றிய  சுற்றுச்சூழல், வனம்  மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்துடன் இணைந்து இந்திய காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனம்(WWI)  இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான நிலையில் யானை – மனிதர் எதிர்கொள்ளலைச் சமாளிப்பது, இச்சிக்கலைத் தவிர்ப்பதற்கு உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி அவர்களைத் தயார்படுத்துவது, மனிதக் குடியிருப்புகளில் அல்லது விவசாய நிலங்களில் புகும் யானைகளைத் தடுப்பதற்கு யானைகளைப் பாதிக்காதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது,  தொடர்ந்து மனிதர் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுள் புகும் தனி யானைகளை கண்காணிப்பதற்கான முறைகள், தரவுகளை சேமித்தல், கையாளுதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் இக்கையேட்டில் அடங்கியுள்ளது.

fieldmanual

இந்தக் கையேடு வெளியீட்டின் போது பேசிய யானைகள் திட்டத்தின் மூத்த அதிகாரி ரமேஷ் பாண்டே“யானை- மனிதர் எதிர்கொள்ளலைச் சமாளிக்க அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவது அவசியம். இந்தக் கையேடு களத்தில் பணியாற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

இந்தியாவில் 2018 – 2020 வரையிலான காலத்தில் மட்டும் 301 யானைகளும் 1,401 மனிதர்களும், யானை – மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்களில் உயிரிழந்துள்ளன. யானைகளின் வாழ்விடங்கள் அனைத்தும் பல்வேறு வகையானத் திட்டங்களுக்காகத் துண்டாடப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

– செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments