சித்தூர் – தட்சூர் ஆறு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு

அழியப்போகும் 1460 ஏக்கர் வேளாண் நிலம்; 19 ஆயிரம் மரங்கள்: சித்தூர் – தட்சூர் ஆறு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு.

ஆந்திராவின் சித்தூரிலிருந்து தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தட்சூர் வரைக்குமான  126 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.

ECL_AUTH_9360V3_IA_AP_MIS_75727_2018

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்திலிருந்து தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தட்சூர் வரைக்குமான 126 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டிருந்தது. தமிழ் நாட்டிற்கு வடக்கேயுள்ள மாநிலங்களிலிந்து சென்னைக்கு அருகிலுள்ள எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாகவும் நெரிசலின்றியும் வருவதற்காக இச்சாலை அமைக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்தச் சாலை ஆந்திராவில் 82 கிலோமீட்டரும் தமிழ்நாட்டில் 44கிலோமீட்டர் தூரமும் பயணிக்கவுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடங்கும் இந்தச் சாலை ஸ்ரீரங்கராஜபுரம், நகரி, விஜயாபுரம் வழியே தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வழியாக தட்சூரில் ஏற்கெனவே சென்னை சுற்றுவட்டச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் இணைகிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் 2018ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தது. அவ்விண்ணப்பத்தை பரிசீலித்த நிபுணர் மதிப்பீட்டுக்குழு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியிருந்தது. இந்தச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள வழியில் பெரிய நீர் நிலைகள் பாதிக்கும்படி உள்ளதாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புலிக்குன்றம் காப்புக் காட்டை பாதியாக துண்டிக்கும்படி உள்ளதாலும், இந்த சாலையின் தொடங்கும் இடம் முடியும் இடம் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை, சாலையைத் தேர்ந்தெடுக்கும்போது வேறு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை முறையாக ஆய்வு செய்யவில்லை என்பது போன்ற காரணுங்களுக்காக மேலும் சில ஆய்வுகள் செய்து திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய சுற்றுச்சூழல் வல்லுனர் மதிப்பீட்டுக்குழு தெரிவித்திருந்தது.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாதையைவிட வேறு பாதைகள் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்தப் பாதையில் சாலை அமைப்பதற்கு அனுமதி அளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியிருந்தது. அதன்படி கடந்த 2018 அக்டோபரில் இந்த பாதையில் சாலை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை ஒன்றிய சுற்றுச்சூழல் வல்லுனர் மதிப்பீட்டுக்குழு வழங்கியது.

இதன் தொடர்ச்சியாக இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் 2019ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள சிவ பார்வதி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

‎NH716 என்றழைக்கப்படும்  இச்சாலைத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 3,840 கோடி ஆகும். மொத்தமாக 2,097.92 ஏக்கர் நிலம் இத்திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்படவுள்ளது. அதில், 791 ஏக்கர் நிலம் தமிழ் நாட்டில் கையகப்படுத்தப்படவுள்ளது. இதில் 70% விவசாய நிலமாகும். இத்திட்டத்தால் 27 நீர் நிலைகள் பாதிக்கப்படும்.

பெரியதும் சிறியதுமாக 19,684 மரங்கள் இத்திட்டத்திற்காக அகற்றப்படவுள்ளன. இந்தச் சாலையில் 4 பெரிய பாலங்கள், 19 சிறிய பாலங்கள் கட்டப்படும். 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமலைராஜூப்பேட்டை காப்புக்காட்டில்   8.4 ஏக்கரும், நெடியம் காப்புக்காட்டில் 26.2 ஏக்கரும் இச்சாலைத் திட்டத்தால் பாதிப்படையவுள்ளது. இதற்கான முதற்கட்ட அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில்தான் தற்போது சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி விவசாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேளாண் நிலங்களை விடுத்து மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல்படுத்துமாறு கடந்த 3 ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி ஆந்திராவில் தமிழ்நாட்டிலும் கையகப்படுத்தப்படும் நிலத்தில் 460 ஏக்கர் வேளாண் நிலமாகும். தமிழ்நாட்டில் கையகப்படுத்தப்படவுள்ள நிலத்தில் 70 விழுக்காடு, அதாவது 534.73 ஏக்கர் விவசாய நிலமாகும். மேலும், 34 ஏக்கர் மானாவாரியும், 14 ஏக்கர் மேய்ச்சலும், 51 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமுமாகும்.

இத்திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்தபோது பொதுமக்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அக்கூட்டத்தில் பேசிய ஊத்துக்கோட்டை தாலுகா, பனப்பாக்கத்தைச் சேர்ந்த குணசேகர் என்பவர் ” தஞ்சாவூருக்கு அடுத்து திருவள்ளூர் மாவட்டமே தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குகிறது. இத்திட்டத்தால் வேளாண் நிலங்கள் கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்திருந்தார். காகாவாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார் பேசுகையில் ” இத்திட்டத்தால் 15 குளங்களுக்கும் மேல் பாதிக்கப்படும் என்பதால் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி தாலுகாக்களில் நிலத்தடி நீர்வளம் கடுமையாகப் பாதித்து கடல்நீர் உட்புகும். திருவள்ளூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்தால் சென்னையை வெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியாது. கோயம்பேடு, செங்குன்றம் சந்தைகளுக்குப் பெருமளவில் அனுப்பப்படும் காய்கறிகளின் உற்பத்தி பாதிப்படையும்” எனக் குறிப்பிட்டார்.

இச்சாலை அமைக்கப்பட்டால் அதானியின் காட்டுப்பள்ளித் துறைமுகத்திற்குத்தான் பலன் கிடைக்குமே தவிர விவசாயிகளுக்கு எவ்வித பலனும் கிடையாது என்ற கருத்தே அக்கூட்டத்தில் பேசிய மக்களிடம் வெளிப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

  • சதீஷ் லெட்சுமணன்

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments