21ஆம் நூற்றாண்டில் 21 வருடங்கள் கடந்தாகி விட்ட நிலையிலும், மக்கள் பேசுவதற்கும், அதன் இருத்தலை வெளிக்கொணர்வதற்கும் தயங்கும் பல விசயங்களில் ஒன்று ‘மாதவிடாய்’. வீட்டினுள்ளேயே சுற்றி உள்ளவர்கள் காதில் கேட்காத, கண்ணில் படாத வண்ணம் மாதவிடாய் காலங்களை பெரும்பாலான பெண்கள் கழித்துக்கொண்டிருக்கின்றோம். பள்ளி, கல்லூரிகளிலும், அலுவலகத்திலும் உள்ள ஆண் நண்பர்களிடம் ‘உடம்பு சரியில்லை, வயிற்று வலி’ என்று மறைமுகமாக மட்டுமே இதைப் பற்றி பகிர்ந்துகொள்ள முடிகின்றது. இன்று பல பெண்கள் இதைப்பற்றி உரக்கப் பேசத் தொடங்கி இருந்தாலும், பலர் இதனைப்பற்றி உரையாடாமல் இருப்பது ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இந்த வெற்றிடத்தை சுலபமாக ஒரு சிலர் லாப நோக்கில் பயன்படுத்துகின்றனர். வேறு சிலர் தாம் பின்பற்றுவது தான் சரியான பாதை என்பதை நிறுவுவதற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
மாதவிடாய் சார்ந்த உடல் வலி, மனம் சார்ந்த மாறுதல்கள், தீட்டு என்ற மூட நம்பிக்கை போன்ற முக்கியமாக பேசப்படவேண்டிய விஷயங்களில் இன்னொன்று ‘Sanitary Products’இன் பயன்பாடு. பல ஆண்டுகளாக இந்தியாவில் மாதவிடாய் நேரத்தில் பெரும்பாலும் துணிகளே பயன்பாட்டில் இருந்துள்ளது. இது பல்வேறு உடல்நலக்கேடு, பெண்களை பொது இடங்களுக்கு செல்ல முடியாமல் செய்தல் போன்ற இன்னல்களுக்கு வழிவகுத்துள்ளது. பின்னர், துணிகளின் பயன்பாட்டில் இருந்து ‘ஒரு முறை பயன்படுத்திய பின் எளிதாக அப்புறப்படுத்தக் கூடிய சுகாதார பட்டைகளுக்கு’ (Sanitary Pads) மக்கள் மாறினர். 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் வந்த இப்பொருட்கள், காலப்போக்கில் பல்வேறு வடிவங்கள் எடுத்தன. 1990களில் தான் இன்று நாம் பயன்படுத்தும் துணிகளில் ஒட்டக்கூடிய வகையில் சுகாதார பட்டைகள் அதிக அளவில் விற்பனையாகின. பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும் இந்த சுகாதாரப் பட்டைகள் வெகு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இவை பெண்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தின. சமீபத்தில், சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான புதுப்புது மாதவிடாய் பொருட்கள் பற்றிய விளம்பரங்களைக் காணமுடிகின்றது. இந்த விளம்பரங்கள் இப்பொழுது பயனில் இருக்கும் இந்த சுகாதார பட்டைகளில் இருந்து, மேற்கத்திய நாடுகளில் புழங்கும் சில வகை பொருட்களுக்கு மாறுவதற்கு பரிந்துரை செய்பவையாகும்.
அப்படியாக பிரபலமாகிக் கொண்டு வரும் சில பொருட்கள்: Menstrual Cup மற்றும் Tampon. இவை பெண்களின் பிறப்புறுப்பின் பாதையில் பொருத்திக்கொள்ளக் கூடிய பொருட்கள். Sanitary cups மருத்துவ அங்கீகாரம் பெற்ற Silicone rubberஆல் (Cups) செய்யப்பட்டவை. இவற்றை குறிப்பிட்ட மணிநேரத்தில் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம். Tampons ஒருமுறை பயன்படுத்தக்கூடியவை; எளிதாக மக்கக் கூடிய பஞ்சுகளால் செய்யப்பட்டவை. Cloth pads நெகிழிக்கு பதிலாக துணிகளில் செய்யப்பட்ட பட்டைகள். இவற்றை துவைத்து காயவைத்து மீண்டும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். இந்த பொருட்களின் விளம்பரத்தின் அடிப்படையாக இரண்டு கருத்துக்கள் அமைந்துள்ளன:
1. சௌகரியம்: அதாவது இவற்றை பயன்படுத்துவது வசதியாக இருப்பதாகவும், நெகிழி பட்டைகள் ஏற்படுத்தும் தடிப்புகள், அசௌகரியங்களில் இருந்து காப்பதாகவும் உள்ளன என்றும் இது பெண்களை தைரியமாகச் செயல்பட துணை செய்வதால் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது.
- சுற்றுச்சூழலுக்கு தீங்கின்மை: ஒருமுறை பயன்பாட்டில் உள்ள சுகாதார பட்டைகளில் 90% நெகிழி உள்ளதினால் இது மக்கிப்போக 800-900 ஆண்டுகள் ஆகும். இதனால் ஒரு பெண் தன் வாழ்நாளில் நுகரும் நெகிழியின் அளவு மிக அதிகமாக உள்ளதனால் அவர் தன் சுற்றுச்சூழலுக்கு அதீத தீங்கு விளைவிக்கின்றார் என்றும் கூறுகின்றனர். இப்படி சூழல் தன்னால் சீர்குலைவதை தடுக்க, தனி நபர் மாற்றமாக இவர்கள் பரிந்துரைக்கும் பொருட்களை பயன்படுத்தினால் பெண்களின் மாதவிடாய் sustainable என்ற சிறப்பை அடைந்துவிடும் என்கின்றனர். இக்காரணத்தால் பல சூழல் ஆர்வலர்களும் இதன் பயன்பாட்டை ஊக்குவிக்கிறார்கள்.
‘பெண்களின் மீதும் சுற்றுச்சூழலின் மீதும் உள்ள அக்கறையை தானே இந்த விளம்பரங்கள் வெளிக்காட்டுகின்றன. இதில் எந்த பிரச்சனையும் இல்லையே!’ என்பதை போன்ற பிம்பம் இந்த விளம்பரங்களுக்கு உண்டு. ஆனால் இவை உற்பத்தியாளர்கள் மீதும், நாட்டின் திடக்கழிவு மேலாண்மை மீதும் வைக்கவேண்டிய பொறுப்பை தனி நபர்கள் மீது வைக்கின்றன. சூழல் அக்கறை என்ற கூற்றின் மூலமாக பெண்களின் மீது குற்றம் சுமத்தி தங்கள் பொருட்களை விற்பனையாளர்கள் விற்றுக்கொள்கின்றனர். இவர்கள் கூறும் கருத்துகள் முழுக்க உண்மையானதும் அல்ல. நெகிழியால் செய்யப்பட்ட பட்டைகளில் சில பிரச்சனைகள் உள்ளன என்பதைப் போலவே மற்ற சுகாதார பொருட்களிலும் பிரச்சனைகள் உள்ளன.
ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பின் பாதையும் தனித்துவமானவை; அனைவராலும் Menstrual cups-ஐ ஒன்று போல பயன்படுத்த முடிவதில்லை. சிலருக்கு இது பயன்படுத்த சுலபமாக இருந்தாலும், சிலருக்கு இது கஷ்டத்தை கொடுக்கின்றது. நீர்வசதியும், சுகாதாரமான கழிப்பிடங்களும் இல்லாத இடங்களில் வாழும் மக்களுக்கும், பள்ளி, கல்லூரி, வேலைகளுக்கு பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கும் (நம் ஊர் பொதுக்கழிப்பிடங்கள் பற்றி சொல்லவா வேண்டும்), இதனை பற்றி முறையாக கலந்துரையாட, துணைபுரிய யாரும் இல்லாத பெண்களுக்கும் இது எப்படி சாத்தியமாகும்? ஏற்கனவே உடல் ரீதியாக பல அழுத்தங்களை சந்திக்கும் மாதவிடாய் நேரத்தில் இவை மன ரீதியாகவும் பெண்களை பாதிக்கின்றன. Tampons, Cloth pads போன்ற பொருட்கள் வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் விலைகளில் உள்ளன. துணி பட்டைகள் சுகாதரமான முறையில் சுத்தம் செய்யத் தேவையான தண்ணீர் வசதி இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இருப்பதில்லை. துவைத்த துணி பட்டைகளில் உள்ள கிருமிகள் அழிய, அவற்றை சூரிய ஒளியில் காய வைக்க வேண்டும். உள்ளாடைகளையே ஒளித்துக் காயவைக்கும் நம் மக்கள் இதையும் வீட்டிற்குள்ளேயே காயவைப்பதால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அனைத்து வர்க்க மக்களையும் கருத்தில் கொள்ளாத இப்பொருட்களை அனைவருக்குமானது என்று பிரகடனம் செய்யும் மேட்டிமைவாத (elitist) மனப்பான்மை மாதவிடாய் காலத்தை பெண்களுக்கு மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஒரு IPL நிகழ்ச்சி வெளியேற்றிடும் கழிவுகளையும், சூழல் அழுத்தத்தையும் விடவா பெண்களின் மாதவிடாய் சூழலை சீர்குலைக்கின்றது?. இந்தியாவில் எத்தனையோ தலை போகும் சூழல் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல், சில பத்தாண்டு காலமாக மட்டுமே வளர்ந்து வரும் பெண்கள் மீது தனிநபர் மாற்றம் என்றும் நுகர்வோர் பொறுப்புணர்வு என்றும் ஒரு கருத்தை திணிப்பது என்பது பாசிச மனப்பான்மையாகும்’!
நெகிழி என்பது மாபெரும் பிரச்சனை என்பதிலும், அதன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதிலும் மாற்று கருத்தே இல்லை. ஆனால் அதை எங்கிருந்து தொடங்க வேண்டும், யாரிடம் தொடங்க வேண்டும் என்பதை நாம் பகுத்தறிந்து செயல்பட வேண்டும். அன்றாடம் வகை வகையாக நெகிழிப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும் மாதவிடாய் பற்றி அனுபவம் இல்லாத ஆண்கள் கூட, பெண்களின் ஒரு தவிர்க்க முடியாத உடல் செயல்பாட்டை பற்றியும், அந்த நேரத்தில் அவர்கள் எதை பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் பெண்களுக்கே வகுப்பு எடுக்கும் நிலை இதனால் உருவாகியுள்ளது. அப்படி உண்மையிலேயே சூழலை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் சூழல் செயற்பாட்டாளார்கள் Extended Producers Responsibilityஐ (EPR) அமல்படுத்த முயல்வதில் கவனம் செலுத்தலாம். EPR என்பது நெகிழி உற்பத்தி செய்பவர்களே அதன் கழிவிற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை நிறுவும் அணுகுமுறை. சுகாதார பட்டைகளை மக்கக்கூடிய பொருட்களை வைத்து உற்பத்தி செய்து (Sustainable Sanitary Products) அதை எளிய மக்களும் வாங்கக் கூடிய விலையில் விற்க வேண்டியது உற்பத்தியாளர்களின் கடமை.
இன்றளவிலும் மொத்த இந்தியாவில் உள்ள 33.6 கோடி மாதவிடாய் காணும் பெண்களில் வெறும் 12.1 கோடி பெண்களே சுகாதரமான முறைகளை பின்பற்றுகின்றனர். இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள அனைத்து பெண்களுக்கும் முதலில் சுகாதாரமான மாதவிடாயை வழங்குவதே நம் கடமையாக இருக்க வேண்டும். பொது இடங்களில், பள்ளி, கல்லூரி, வேலை வளாகங்களில் இலவசமாக/மலிய விலையில் சுகாதார பட்டைகள் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும். அதேபோல அதன் கழிவுகளை சேகரிக்கவும், அப்புறப்படுத்தவும் தேவையான சேகரிப்பு தொட்டிகள், இயந்திரங்கள் போன்றவற்றை அதே இடங்களில் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் எந்த பொருளை பயன்படுத்த வேண்டும் என்பதை பெண்களே தேர்ந்தெடுக்கட்டும். அது அவர்களின் வாழ்கை முறை, வருமானம், வாழ்விடம், வசதி, பயணிக்கும் முறை, உடலின் அமைப்பு, தனிப்பட்ட கருத்து போன்ற பல காரணிகளை பொருத்து அவர்களால் தேர்ந்துடுக்கப்பட வேண்டிய ஒன்று. தனிநபர் மாற்றம் என்ற கருத்து, இந்தியாவின் சமூக கலாச்சார காரணங்களால் மேலும் மேலும் பெண்களையே குறி வைக்கின்றது. இது உண்மையான பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்புவதாக அமைகிறது. இதன் நீட்சியே நம் மாதவிடாய் பொருட்களின் மீதான சூழல் சீர்கேடு என்ற தாக்குதலும். நுகர்தலின் மீதான விழிப்புணர்வு அவசியமானதே; சூழலைக் காப்பாற்ற வேண்டியதும் அவசியம் தான். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வை குற்றக்குழியில் தள்ளித்தான் நடக்க வைக்க வேண்டும் என்பதல்ல. தவிர சூழலை காக்கும் பொறுப்புகளை உற்பத்தி செய்பவரிடம் ஒப்படையுங்கள்; மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களின் மீது வேண்டாம். சூழலியத்தை அனைவருக்குமானதாக பேசப் பழகுவோம்!
– மேகா சதீஷ்
This article well spoken about the concerns of women through facts
சிறப்பு மேகா