தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக குவாரி தொடர்பான வழக்கின் தீர்ப்பொன்றில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிதரண் என்பவர் உத்திரமேரூர் அருகேயுள்ள எடமச்சி கிராமத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தில் குவாரி ஒன்றை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையிடமிருந்து பெற்றிருந்தார். அனுமதி பெற்றிருந்த இடத்திற்கு அருகிலேயே இயற்கை விவசாயம் செய்து வந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான அர்ஜூன் கோபாலரத்னம் என்பவர் குவாரிக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக 2022ஆம் ஆண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், குவாரியின் சுற்றுச்சூழல் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் பல்வேறு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் மறைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக குவாரிக்கு அருகிலேயே இருக்கும் அனம்பாக்கம், நெற்குன்றம் ஆகிய கிராமங்களை விண்னப்பதாரர் தனது விண்ணப் படிவத்தில் குறிப்பிடவில்லை. இதனால் அக்கிராமங்களில் மாசுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது எனக் குறிப்பிடிருந்தார்.
மேலும், குவாரி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்திற்கு அருகிலேயே இருக்கும் எடமச்சி காப்புக் காடுகள், எடமச்சி ஏரி ஆகியவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிடாமல் விண்ணப்பதாரர் ஏமாற்றியிருப்பதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார். எடமச்சி ஏரியானது காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மூன்றாவது பெரிய ஏரி என்பதாலும் இது பல வலசைப் பறவைகள் வந்துபோகும் இடமென்பதாலும் குவாரி நடவடிக்கையால் ஏரி பாதிப்படையக் கூடும் என மனுதார் குறிப்பிட்டிருந்தார். இந்த ஏரியிலிருந்து 50மீ தொலைவிலேயே குவாரி அமைக்கப்படுவதால் இத்திட்டத்திற்கு வழங்கப்படட் சுற்ருச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.
இம்மனுவை நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின் முடிவில் மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிருபணமானது. 20.07.2023 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் இக்குவாரி திட்டத்திற்கு தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
மேலும், மிகப்பெரிய ஏரி, விவசாய நிலங்கள், காப்புக் காடுகள் இருக்கின்ற ஒரு இடத்தில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாமல் விண்ணப்பதாரர் சமர்ப்பித்த தகவல்களின் அடிப்படையில் நேரில் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியிருக்கக் கூடாது எனவும் இந்த நிகழ்வு தமிழ் நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவும் தனது அறிவைப் பயன்படுத்தாமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குவதற்கு சிறந்த உதாரணம் என கடிந்தனர்.
வறட்சி ஏற்படும் போது அது காடு மற்றும் காடு அல்லாத பகுதிகள் இரண்டையுமே பாதிக்கிறது. விவசாயம் பொய்த்துப் போகும்போது, பயிர்களை இழப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் காடு மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. காட்டின் விளைபொருட்கள் இல்லாமல் போவதால் காட்டை நம்பியிருக்கும் சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு அருகில் சுரங்கம் தோண்டுவது காட்டை நம்பியிருப்போர் மற்றும் காட்டு விளைபொருட்களை நேரடியாக பாதிப்பதாகவும் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
– செய்திப் பிரிவு
Kanchipiram quarry