நடப்பு ஜூலை மாதத்தில் உலகமுழுவதும் பதிவான வெப்பநிலையானது ஏற்கெனவே பதிவான பல உச்சங்களைத் தகர்த்துள்ளது. இதுகுறித்து உலக வானிலை அமைப்பு வெளிட்ட அறிக்கையின் சுருக்கம்:
ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் இயங்கி வரும் பெற்ற கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் (CS3) மற்றும் ERA5 தரவுகளின்படி , ஜூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே புவியின் மிக வெப்பமான மூன்று வார காலமாகும், மேலும் இந்த மாதம் மிகவும் வெப்பமான ஜூலை மற்றும் புவி வரலாற்றில் அதிகம் வெப்பம் பதிவான மாதமாக இருக்கும்.
இந்த வெப்பநிலையானது வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் நிலவிய வெப்ப அலைகளுடன் தொடர்புடையது, இது கனடா மற்றும் கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீயுடன் சேர்ந்து மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரங்களில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
” இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் “ வட அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பரந்த பகுதிகளுக்கு – இது ஒரு கொடூரமான கோடை. முழு கிரகத்திற்கும், இது ஒரு பேரழிவு. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, சந்தேகத்திற்கு இடமின்றி இத்தீவிரத்திற்கு மனிதர்கள்தான் காரணம் என்கின்றனர். இவை அனைத்தும் கணிப்புகள் மற்றும் தொடர்ச்சியான எச்சரிக்கைகளுடன் முற்றிலும் ஒத்துப்போகின்றன. இம்மாற்றங்களின் வேகம்தான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது: என்றார்.
July has already seen:
The hottest three-week period ever recorded.
The three hottest days on record.
The highest-ever ocean temperatures for this time of year.
It is still possible to avoid the very worst of climate change, but only with dramatic, immediate #ClimateAction.
— António Guterres (@antonioguterres) July 27, 2023
மேலும் பேசிய அவர் ”புவி வெப்பமயமாதலின் சகாப்தம் முடிந்துவிட்டது; புவி கொதிநிலையின் சகாப்தம் வந்துவிட்டது. காற்ரு சுவாசிக்க முடியாததாகியுள்ளது. வெப்பம் தாங்க முடியாததாகியுள்ளது. புதைபடிவ எரிபொருள் இலாபங்களின் அளவு மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதிப்பைத் தடுக்காமல் இருக்கும் நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. இனி தயக்கம் வேண்டாம். இனி சாக்குபோக்குகள் இல்லை. மற்றவர்கள் முதலில் நகர்வார்கள் என்று இனி காத்திருக்க வேண்டாம். அதற்கு நேரமில்லை” என்றார்.
ஜூலை 6 அன்று, தினசரி சராசரி உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை ஆகஸ்ட் 2016 இல் பதிவான உச்சத்தை முறியடித்தது, இது ஜூலை 5 மற்றும் ஜூலை 7 சற்று பின்தங்கிய நிலையில் தொடர்ந்தது. (ஜூலை 6 – ), இது வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் வெப்பமான நாளாகும். ஜூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் மிக வெப்பமான மூன்று வார காலமாகும். இந்த மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வாரத்தில் உலகளாவிய சராசரி வெப்பநிலை தற்காலிகமாக தொழில்புரட்சிக்கு முந்தைய மட்டத்தைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகியது.
மே மாதத்திலிருந்து, உலகளாவிய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை* இதற்கு முந்தைய ஆண்டுகளில் இதே காலத்தில் பதிவான மதிப்புகளைவிட அதிகமாக இருந்தது. ERA5 தரவுகளின்படி, இதற்கு முந்தைய வெப்பமான மாதம் ஜூலை 2019 ஆகும். நடப்பு ஜூலை மாதத்திற்கான முழுமையான ERA5 தரவானது வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் C3S மாதாந்திர அறிக்கையின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உலக வானிலை அமைப்பானது C3S மற்றும் காலநிலை கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் காலநிலை அறிக்கைகளை மேற்கொள்ளும் ஐந்து பன்னாட்டு அமைப்புகளின் தரவுகளை ஒருங்கிணைத்து ஆராய்ந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் கார்லோ புவோன்டெம்போ, “உலக வெப்பநிலையில் கடுமையான அதிகரிப்புப் போக்கின் ஒரு பகுதியாக வரலாறு காணாத வெப்பநிலை உள்ளது. மனிதர்களால் ஏற்பட்ட உமிழ்வுகள்தான் வெப்பலையின் உயர்வின் முக்கிய உந்து சக்தியாகும்” என்றார்.
உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெத்தாரி தாலஸ் கூறுகையில், “ “ஜூலை மாதத்தில் பல கோடி மக்களை பாதித்த தீவிர வானிலை கெடுவாய்ப்பாக காலநிலை மாற்றத்தின் கடுமையான யதார்த்தம் மற்றும் எதிர்காலத்திற்கான முன்னறிவிப்பைக் காட்டுகிறது. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதற்கான தேவை முன்னெப்போதையும் விட மிகவும் அவசரமாகியுள்ளது. காலநிலை நடவடிக்கை ஒரு ஆடம்பரம் அல்ல, ஆனால் அவசியம்” எனக் குறிப்பிட்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இதுவரை பதிவுசெய்யப்பட்டதிலேயே வெப்பமான ஆண்டாக இருக்க 98% வாய்ப்பு இருப்பதாகவும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளில் ஒரு ஆண்டிற்கு 1850-1900 காலத்தின் சராசரியை விட தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியசைச் தாண்ட 66% வாய்ப்பு இருப்பதாகவும் உலக வானிலை அமைப்பு ஏற்கெனவே கணித்திருந்தது குறிப்பிடத்தது.
தரவுகள்
- அதிகபட்ச தினசரி உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை
ERA5 தரவுத்தொகுப்பின்படி, உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை 6 ஜூலை 2023 அன்று அதன் அதிகபட்ச தினசரி மதிப்பை (17.08 டிகிரி செல்சியசை) எட்டியது. மேலே உள்ள விளக்கப்படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, ஜூலை 3 முதல் அனைத்து நாட்களும் ஆகஸ்ட் 13, 2016ல் பதிவான முதல் முந்தைய உச்சமான 16.80 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருந்தன.
- அதிகபட்ச மாதாந்திர உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை.
ERA5 தரவுத்தொகுப்பின்படி, ஜூலை 2023 முதல் 23 நாட்களில் உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்று வெப்பநிலை 16.95 டிகிரி செல்சியஸ் ஆகும். இது ஜூலை 2019 முழு மாதத்தில் பதிவான 16.63 டிகிரி செல்சியஸை விட அதிகமாகும், இதனால் தற்போது மிக வெப்பமான ஜூலை மற்றும் வெப்பமான மாதம் என்கிற உச்சத்தை நடப்பு ஜூலை அடைந்துள்ளது. இந்த கட்டத்தில், ஜூலை 2023 க்கான முழு மாதாந்திர சராசரி வெப்பநிலை ஜூலை 2019 ஐ விட கணிசமான வித்தியாசத்தில் அதிகமாக இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
- சராசரியை விட அதிகமான உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை.
உலகளாவிய வெளிப்புற பெருங்கடல்களில் (60°S–60°N) சராசரியாக தினசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை (SST) ஏப்ரல் 2023 முதல் ஆண்டின் காலப்பகுதியில் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக, மே மாத நடுப்பகுதியில் இருந்து, உலகளாவிய எஸ்.எஸ்.டி.க்கள் இந்த ஆண்டின் காலத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன. ERA5 தரவுகளின்படி, ஜூலை 19 அன்று, தினசரி SST மதிப்பு 20.94 °C ஐ எட்டியது, இது 29 மார்ச் 2016 (20.95 °C) இல் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச மதிப்பில் 0.01 °C மட்டுமே குறைவு.
- புதிய தேசிய வெப்பநிலை பதிவுகள்
சீனா ஜூலை 16 அன்று (சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள டர்பான் நகரம்) 52.2 டிகிரி செல்சியஸ் என்ற புதிய தேசிய வெப்பநிலை சாதனையை படைத்தது என்று சீன வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 11 ஆகஸ்ட் 2021 அன்று சிசிலியில் அளவிடப்பட்ட 48.8 °C (119.8 °F) ஐரோப்பா கண்டத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை யாக பதிவாகியுள்ளது. நடப்பாண்டின் டிசம்பரில் நடக்கவுள்ள காலநிலை உச்சி மாநாட்டில் COP28-க்கு சமர்ப்பிக்கப்படும் உலகளாவிய காலநிலை 2023- ன் தற்காலிக நிலை அறிக்கையில், இந்தப் புதிய தேசிய வெப்பநிலை பதிவுகளின் விவரங்கள் இடம்பெறவுள்ளன.
- செய்திப் பிரிவு