#EnnoreGasLeak கண் எரிச்சல் முதல் புற்றுநோய் வரை

எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்படுத்திய ஆலையைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையிலிருந்து (Coromandel International ltd)  தொழிற்சாலையில் இருந்து டிசம்பர் 26ஆம் தேதி நள்ளிரவு 11.45 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயுக்கசிவால் பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வெளியேறினர்.

வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆலையை தற்காலிகமாக மூட தமிழ் நாடு அரசும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 1ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவினர் எண்ணூரில் கோரமண்டல் ஆலை மட்டுமின்றி பிற தொழிற்சாலைகளாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டனர். இக்கூட்டத்தை எண்ணூர் மக்கள் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைத்திருந்தது. இக்கூட்டத்தில் எண்ணூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளைக் கூறினர். மக்களின் கருத்துகள் பின்வருமாறு;-

ஷாஜிதா, கத்திவாக்கம்.

எங்களுடையது ஒரு அழகான கிராமம், இன்று மூச்சுவிடவேத் திணறுகிறோம். மிக்ஜாங் புயலுக்கு நடுவில் திறந்துவிடப்பட்ட எண்னெய்க கசிவால் சுற்றுசூழலும், சுகாதாரமும் பாதிப்படைந்தது. அதிலிருந்து மீளவே இல்லை, அதற்கும் அமோனியா கசிவு ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடிரென உடைமைகளை விட்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஒடினோம்.  தினம் தினம் நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம். கடலில் இல்லாமல் ஆலையில் அமோனியா கசிந்திருந்தால் மீன்கள் செத்து மிதந்தபோல மக்கள் நாங்கள் செத்து மிதந்திருப்போம். இழந்ததெல்லாம் போதும், இனி இழக்க முடியாது, நாங்கள் சாகனும், மீதி சென்னை நல்லா வாழனும் என்றால் இது என்ன நியாயம்.

குப்புலெட்சுமி, நெட்டுக்குப்பம்

புயல், மழையில் இருந்து மீண்டு விடுகிறோம். ஆனால், மூச்சுவிட முடியாத வாயுக்கசிவு தாக்கினால் எப்படி மீள்வது. எங்கள் கிராமம் பூங்காவனமாக.இருந்தது. எங்கள் காலம் நோயால் முடிந்தது. எங்கள் சந்ததி அதே பாதிப்பை அனுபவிக்கக்கூடாது. கோரமண்டல் ஆலை மருத்துவமனை வைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக ஆக்சிஜனுக்கும், மாத்திரைக்கும் நான் அந்த மருத்துவமனை செல்கிறேன். இப்போ அந்த சிகிச்சை போதவில்லை என வேறு மருத்துவமனைக்குப் போகிறேன்.  இப்படியெல்லாம் பிரச்சனை வருமென்றே மருத்துவமனை கட்டி வச்சிருக்கு ஆலை நிர்வாகம். எங்கள் மீன் தொழில் இல்லாமல் போய்விட்டது. 2 நிமிசம் சுவாசிச்சதுக்கே எங்கள் உயிர் போய் மீண்டும் வந்தது. 10 நிமிசம் சுவாசிச்சிருந்தா செத்துருப்போம்.

மோனிஷா, பெரியகுப்பம்

எங்கள் வீட்டுல உள்ள இரும்பு, சில்வர் எல்லாம் துருப்பிடிச்சுப் போச்சு. 10 மாசம் சுமந்து பெத்த பிள்ளைக்கு நுரையீரல் வளர்ச்சி இல்லைனு சொல்றாங்க. நச்சான வாயுக்கசிவ சுவாசிச்சதாலதான் எங்களுக்கு இந்தப் பிரச்சனை வந்துச்சு. வாயுக்கசிவை கண்டறிஞ்ச ஆலை நிர்வாகம், எச்சரிக்கை ஒலி ஏன் எழுப்பல. ரோந்து சென்ற போலீஸ்தான் எச்சரிச்சாங்க. ஆலை நிர்வாகத்தின் பாதுகாப்பு நெறிமுறைகள் எங்க போச்சு. ஒன்றரை லட்சம் மக்கள் உயிர் சாதாரணமா போச்சா?

குஜலாத்தி, சசத்தியவாணிமுத்துநகர்

45 வருசமா இங்க இருக்கோம். எங்க பல்லெல்லாம் கொட்டிப்போச்சு. குழந்தைங்க பல்லில் கறை படிஞ்சிருக்கு. கோரமண்டலிடம் இருந்து உயிரைக் காப்பாத்த 5000 பேர் போராடினோம், ஆனா 18 பேர் மேல வழக்குப் போட்ருக்காங்க. 18 இல்ல 18 ஆயிரம் பேர் மேல வழக்குப் போட்டாலும் நாங்க போராடுவோம்.

ஷோபா, சக்தி கணபதி நகர்

எண்ணெய் கழிவு பாதிச்சு, மின்சாரம் இல்லாம, உடைமைகள் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம். என் பேரன் 2 வாரமா ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா போய் வந்துட்டிருக்கான். 12கி எடை இருந்தவன் 7கி ஆகிட்டான்.

பிரேம ப்ரியா, தாழங்குப்பம்

சளி, காய்ச்சல்னு ஆஸ்பத்திரி போனாலே கேன்சர் இருக்கானு பார்க்க சொல்றாங்க. எண்ணெய் கசிவால் பாதிப்படைந்து மீன் பிடிக்காம கஷ்டப்படுறோம், இப்போ அமோனியா வாயுவிட்டு எங்கள் கொல்றாங்க. எங்களை ஊரை விட்டுத் துரத்த திட்டமிட்டு செய்கின்றனர். எங்களுக்கு இந்த ஆலைகள் வேண்டாம், கடலும் ஆறும்தான் வேண்டும். இந்த ஆலைகளை வெளியேற்றுங்கள்.

வடிவுக்கரசி, வள்ளுவர் நகர்

என் குழந்தைக்கு பிறந்த 15 நாளில் நுரையீரம் பிரச்சனை வந்தது. மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றால் எண்ணூரா அப்படித்தான் இருக்கும்னு செல்றாங்க. நோயில்லாத யாருமே இந்த ஊரில் இல்லை. சிறுவர்களையும், பெரியவர்களையும் கொல்லும்  ஆலைகள் எங்களுக்கு வேண்டாம்.

லலிதா, வ.உ.சி. நகர்

எங்கள் ஊரில் பல பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி இல்லை. 3 லட்சம் செலவு பண்ணி நான் குழந்தை பெற்றுள்ளேன். இப்போ நாங்க போராடுறோம், இனிமேல் போராட யாரும் இருக்க மாட்டாங்க, ஏன்னா யாருக்கும் குழந்தை இல்ல.

அருணா, முகத்துவாரக்குப்பம்

மழைத்தூறல் விழுந்தாலே, புகையை விடுறாங்க ஆலைகள். உறங்கும் குழந்தைகள் காலை ஆரோக்கியமா  முழிக்குமானே தெரியல. 100 நாள் ஆனாலும் இந்த கம்பெனிய மூடும் வரை போராடுவோம். மாசு கட்டுப்பாடு வாரியம் என்ன பண்ணுதுனே தெரியல.

ரிஸ்வானா, வ.உ.சி.நகர்

இந்தப் பகுதியில் மருத்துவமனைக்கு வரும் எல்லாருக்கும் மூச்சுப் பிரச்சினை இருக்கு. கேன்சருக்கான விரிவான சுகாதார ஆய்வை இங்கு மேற்கொள்ள வேண்டும். நிறைய பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை அதிகமா இருக்கு. இதற்குத் தீர்வு வேண்டும்.

பவானி, நெட்டுக்குப்பம்

கம்பெனில வேலை இந்திக்காரங்க, எண்ணெயை அள்ளறது எங்க மீனவங்க. எங்கள் பசியை பயன்படுத்துறாங்க. எங்க மேல வழக்குப் போடுறாங்க, கம்பெனிகாரன் அப்பன் வீட்டுச் சொத்தையா கேட்டோம், எங்க உயிருக்காக கம்பெனி வாசல்ல போய் நின்னோம். எத்தனை பேர் மேல வழக்குப் போட்டாலும் இந்த கம்பெனிய நாங்க விடமாட்டோம்.

சுபத்ரா, பெரியகுப்பம்

26ஆம் தேதி இரவு மூச்சுத் திணறிய எல்லோரையும் நாங்களே எங்க வாகனத்துல அப்புறப்படுத்தினோம். கம்பெனில நிர்வாக அறிவிப்பு கொடுத்தாலே ஊர் வரைக்கும் கேட்கும். ஆனா, கசிவு ஏற்பட்டப்போ எந்த அறிவிப்பும் கொடுக்கல. நாங்கெல்லாம் குடிச்சுட்டு வாந்தி எடுத்தோம்னு சொல்றாஙக.

சபீனா,

தான் தாய் ஆகியும் பிள்ளையை கொஞ்ச  முடியாத நிலை எண்ணூர் மக்களுக்கு மட்டுமே நடக்கும். எங்கள் சந்ததிகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த கம்பெனிகள் எங்களுக்கு வேண்டாம்.

மகேஷ்

33 கிராமங்களிலும் , ஊருக்கு 10 பேருக்கு கேன்சர் உள்ளது. 80களுக்கு முன்பு எங்களுக்கு சுகாதாரப் பிரச்சனைகள் இருந்தது இல்லை. இப்போ ஆலைகள் எங்களைச் சுற்றி முள்வேலி இல்லை, நெருப்பு வேலி போட்ருக்காங்க.

குமரி, சின்னக்குப்பம்

எல்லாரும் ஓடும்போது ஊர்பத்திகிச்சுனு சொன்னாங்க. என்னனு தெரியாமலே ஓடுனோம்.

குமரவேல், நெட்டுக்குப்பம் எண்ணூர் பாதுகாப்புக் குழு.

அரசு நடத்த வேண்டிய கருத்துக் கேட்பை மக்கள் நாங்கள் நடத்துகிறோம். எங்கள் நிலத்தை எடுத்துட்டு இழப்பீடாக காற்று மாசையும், சுடுதண்ணீரையும், சாம்பல் மாசையும் கொடுக்கின்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓய்புபெற்ற நீதிபதி கண்ணன், “ஆலையை மூடவேண்டும் எனக் கோருகிற மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. தங்கள் வாழ்வாதாரம் அழிந்துள்ளதையும் பெருமளவில் உடல்நலக் குறைவும், கருத்தரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதையும் மக்கள் கூறினர். எண்ணூர் பகுதியில் ஒரு விரிவான மருத்துவ ஆய்வை மேற்கொள்ள வேண்டும். மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் உண்மையில்லை. இந்த வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும். இப்பிரச்சினைக்குக் காரணமான ஆலை நிர்வாகத்தினர் மக்களைச் சந்திக்காதது மிகவும் கேவலமான விஷயம். மக்களுக்கான இழப்பீடு போதுமானதாக இல்லை. அது மிகவும் சிறிய விஷயம். அதைப் பிச்சைக்காசுபோல வழங்குவது நியாயமில்லை. உடனடியாக ஆலையைத் திறக்க வேண்டும் என்கிற முடிவை அரசு எடுக்கக் கூடாது. என்ன ஆய்வுகளை மேற்கொண்டீர்கள், என்ன உத்தரவுகளை ஆலைக்கு வழங்கினீர்கள் என்ற விபரங்ளைக்கூட வெளியிடாமல் மாசு கட்டுப்பாடு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். ஆலைமீது குற்றவியல் அலட்சியத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தின் அறிக்கை

Ennore PH Report

– சதீஷ் லெட்சுமணன்

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments