படுகொலை செய்யப்படும் பசுமைக் காவலர்கள்

உலகம் முழுவதும் இயற்கை வளங்களை கைப்பற்றவே பெரும்பான்மையான போர்களை அரசுகள் நடத்துகின்றன. அதேசமயம் வளங்களுக்காக இன்னொரு புறம் வேறொரு விதமான போரும் நடைபெற்று வருகிறது. ஆனால், அந்தப் போர் வளங்களைச் சுரண்டுவதற்காக அல்ல வளங்களைக் காப்பதற்காக. ஆம்! இந்தப் போரை நடத்துவது அணு ஆயுதத்தைக் கையில் வைத்திருக்கும் வல்லரசுகள் அல்ல மாறாக அறிவாயுதத்தைக் கையில் ஏந்தி நிற்கும் எளிய மக்கள்.

உலகம் முழுவதும் 2021 ஆம் ஆண்டு  மட்டும் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலவுரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடிய 200 பேர் கொல்லப்பட்டதாக ‘குளோபல் விட்னஸ்’ எனும் சர்வதேச அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. அந்த அறிக்கையின்படி அதிகபட்சமாகக் கடந்த ஆண்டில் மெக்சிகோவில் 54 பேரும் கொலம்பியாவில் 33 பேரும் பிரேசிலில் 26 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு 14 சூழலியல் செயல்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அதிகமான சூழலியல் படுகொலைகள் நடைபெற்ற நாடுகளின் வரிசையில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு ஆறாவது இடத்திற்கு வந்துள்ளது.

குளோபல் விட்னஸ் எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலகெங்கும் நடக்கும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் அதனால் ஆளும் அரசாங்களாலும், இலாப நோக்கம் கொண்ட பெறு நிறுவனங்களாலும் கொல்லப்பட்டவர்கள் குறித்து ஆண்டறிக்கை வெளியிட்டு வருகிறது. சுரங்கப்பணிகள், அணை கட்டுமானப் பணிகள், வேட்டைத் தடுப்பு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை, காடுகளை அழிக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஆகியவற்றை எதிர்த்து நேரடியாகக் களத்தில் போராடியவர்கள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய, ஏற்படுத்த முயன்றவர்களை அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் கொன்று வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

 

இந்த 2021 ஆம் ஆண்டு அறிக்கையில் உள்ள முக்கியமான தரவுகள்:

  • அதிக சூழலியல் மரணங்கள் மெக்சிகோவில் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட அங்கு 40% படுகொலைகள் அதிகரித்துள்ளது.
  • பிரேசிலிலும் இந்தியாவிலும் இந்தச் சூழலியல் படுகொலைகள் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட அதிகரித்துள்ளது. அதே சமயம் கொலம்பியாவிலும் பிலிப்பைன்சிலும் இது குறைந்துள்ளது.
  • இலத்தின் அமெரிக்க நாடுகளான பிரேசில், பெரு, வெனிசுலா ஆகியவற்றில் நடந்த தாக்குதல்களில் 78% தாக்குதல் அமேசான் பகுதியில் அதாவது உலகின் நுரையீரல் எனச் சொல்லப்படும் அமேசானைக் காப்பதற்காக நடந்துள்ளது.
  • உலக அளவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட நிகழ்வு 12 நடந்துள்ளது அதில் மூன்று இந்தியாவிலும் நான்கு மெக்சிகோவிலும் நடந்துள்ளது.
  • கொல்லப்பட்டதில் அதிகமானோர் சுரங்கப்பணிகளுக்கு எதிரான போராட்டத்திற்காகக் கொல்லப்பட்டனர். அதாவது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் மெக்சிகோவில் அதிகபட்சமாக 15 பேரும் பிலிப்பைன்சில் 6 பேரும் வெனிசுலாவில் 4 பேரும் நிகரகுவா மற்றும் ஈகுவடார் நாடுகளில் தலா ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
  • ஆப்பிரிக்காவில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அதில் காங்கோவில் அதிகபட்சமாக 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
  • 2021 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டவர்கள் 50 பேர் சிறு விவசாயிகள். கொல்லப்பட்டவர்களில் பத்தில் ஒருவர் பெண் அதில் மூன்றில் இரண்டு பேர் பழங்குடியினப் பெண்கள்.
  • உலகில் பழங்குடிகளின் எண்ணிக்கை 5% மட்டுமே ஆனால் உலக அளவில் சூழலியல் படுகொலைகளில் 40% அவர்களே கொலை செய்யப்படுகின்றனர்.

 

அதிக கொலைகள் நிகழ்ந்த நாடுகளின் வரிசைகொலைகளின் எண்ணிக்கை

2021ல் கொலைசெய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

எண் நாடுகளின் பெயர் கொலைகளின் எண்ணிக்கை
1. மெக்சிகோ 54
2. கொலம்பியா 33
3. பிரேசில் 26
4. பிலிப்பைன்ஸ் 19
5. நிகரகுவா 15
6. இந்தியா 14
7. காங்கோ மக்களாட்சிக் குடியரசு 8
8. ஹோண்டுராஸ் 8
9. பெரு 7
10. குவாத்தமாலா 4
11. வெனிசுலா 4
12. ஈக்குவடோர் 3
13. கென்யா 1
14. சிலி 1
15. அர்ஜென்டினா 1
16. பொலிவியா 1
17. காபோன் 1

குளோபல் விட்னஸ் அமைப்பு 2021 ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை ‘Decade of Defiance’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. மேலும் அதில் கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற சூழலியல் படுகொலைகளையும் தொகுத்து வழங்கியுள்ளது. 2012 முதல் 2021 வரையிலான பத்து ஆண்டுகாலத்தில் 1733 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட மக்களில் 39% பழங்குடி இனமக்கள். ஏனெனில் பழங்குடியின மக்களே தங்கள் நிலத்தைக் காப்பாற்றும் பணியில் எப்பொழுதும் முன் நிற்பவர்கள். மேலும் கொலை செய்யப்பட்டவர்களில் 11% பெண்கள். இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் பெண்களின் பங்களிப்பு ஆண்களைவிடவும் அதிகம் எனினும் அவர்கள் கொலை செய்யப்படுவது குறைவாகவே உள்ளது. ஆனால், அதற்குப் பதில் அவர்கள் குடும்ப வன்முறை, சமூக வன்முறை அல்லது பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றிற்கு ஆளாக்கப்படுகின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் நம்ப முடியாத அளவு அதாவது 68% பேர் இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே என்று குறிப்பிடும் அறிக்கை மேலும் பல தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்களில் அதிகபட்சமாகப் பிரேசிலில் 342 பேரும் கொலம்பியாவில் 322 பேரும் பிலிப்பைன்ஸில் 270 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 79 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பத்தாண்டு சூழலியல் கொலைகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. தனிமனிதக் கொலைகளைத் தாண்டி பல போராட்டக்காரர்களையும் சமூகக் குழுக்களையும் மட்டுப்படுத்துவதற்காகக் கொலைமிரட்டல், பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துதல், பாலியல் தொல்லைகள், சமூகத்தால் குற்றம் சாட்டப்படுதல் போன்றவற்றைச் செய்து அவர்களை மனதளவில் பாதிக்கின்றனர் என்கிறது அறிக்கை.

2012-2021 ஆகிய பத்தாண்டுகளுக்கு இடையில் கொலைசெய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

எண் நாடுகளின் பெயர் கொலைகளின் எண்ணிக்கை
1. பிரேசில் 342
2. கொலம்பியா 322
3. பிலிப்பைன்ஸ் 270
4. மெக்சிக்கோ 154
5. ஹோண்டுராஸ் 117
6. குவாத்தமாலா 80
7. இந்தியா 79
8. காங்கோ மக்களாட்சிக் குடியரசு 70
9. நிக்கராகுவா 57
10. பெரு 51
11. வெனிசுலா 17
12. இந்தோனேசியா 14
13. பரகுவை 13
14. தாய்லாந்து 13
15. கம்போடியா 10
16. ஈரான் 9
17. மியான்மர் 8
18. அர்ஜென்டினா 7
19. வங்காளத்தேசம் 7
20. கென்யா 6

இந்தியாவில் கடந்த ஆண்டு மே 17 அன்று சத்தீஸ்கரில் நடந்த பழங்குடிகள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொவா சிவாகா, உர்சாபீமா, உய்காபண்டு ஆகிய பழங்குடியின செயல்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கர்நாடகாவில் ஸ்ரீதர் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்த பழங்குடியின செயல்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி அவர்கள் அரசாங்கத்தால் தனது 83 ஆவது வயதில் நோய்வாய்பட்டிருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய கடைசி ஜாமீன் மனு விசாரணையின்போது தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் இந்தநிலை இப்படியே தொடர்ந்தால் தான் விரைவில் இறக்கக் கூடும் என்று அவர் கூறியிருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அரசு வேண்டுமென்றே பிணை தராமல் அவரின் உடல்நிலையை மோசமாக்கியது. இது திட்டமிட்டு சூழலியல் செயல்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்காகவே அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கொலை என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கூறிவருகின்றனர்.

மேலும் இந்த அறிக்கை நமது தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த மிகக் கொடூரமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்படுகொலை குறித்து தமிழ் நாடு அரசிற்கு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.

  • தூத்துக்குடி படுகொலை தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக் கமிஷன் அறிக்கையையும், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையையும் (Action Taken Report) தமிழக அரசு உடனடியாக வெளியிட்டு, அந்த அறிக்கையின் பரிந்துரைகள் மீதான விவாதத்தைத் தமிழக சட்டப்பேரவையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து, குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

 

  • NHRC விசாரணையில் வெளிப்படைத்தன்மைக் கடைபிடிக்கவில்லை, தூத்துக்குடி படுகொலைகள் தொடர்பான புகார்களையும் 16 போராட்டக்காரர்களைக் கொன்று மேலும் 200 க்கும் மேற்பட்டவர்கள் காயப்படுத்திய காவலர்களின் கொடூரத் தாக்குதல் நடந்தேறிய ஐந்தே மாதங்களுக்குள் விசாரனையை முடித்தது; அதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி இந்த வழக்கை மீண்டும் திறக்க NHRC மறுத்துள்ளது. எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையரின் (OHCHR) ஐ.நா அலுவலகம், பாரிஸ் கோட்பாடுகளால் வகுக்கப்பட்டுள்ள சர்வதேசத் தரங்களுடனான இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) இணக்கத்தினை மதிப்பிடுவதற்கான சிறப்பு நடைமுறைகளைத் தொடங்க வேண்டும்.

 

  • இந்திய அரசும் – மற்ற அரசுகளும், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள், சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பிராந்தியத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் போன்ற உலகச் சமூகத்தினரும் – தூத்துக்குடி மக்களுடன் நின்று, தூத்துக்குடிப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

  • உலகெங்கிலும் உள்ள சூழலியல் செயல்பாட்டாளர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்காக இல்லாமல் காலநிலை நெருக்கடி, வளங்கள் சுரண்டப்படுதல், பல்லுயிரிழப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றனர். ஆனால், அவர்கள் மக்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அரசாங்கள் மற்றும் தனியார் பெருநிறுவனங்களால் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அரசாங்கங்கள் இந்த மக்களுக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் போராடுபவர்களுக்கு எதிரான ஆபத்திலிருந்து அவர்களைக் காக்க வேண்டும். பெருநிறுவனங்களின் இலாபத்தைவிட இந்த பல்லுயிர்த் தன்மையும் சுற்றுச்சூழலும் முக்கியத்துவம் வாய்ந்தது என அவர்கள் உணர வேண்டும். இந்த இரண்டும் நடக்காதவரை காலநிலை நெருக்கடி அல்லது சூழலியல் படுகொலைகள் தடுக்கப்படாது.

நிலத்திற்காகவும் அதன் வளத்தைக் காப்பதற்கும் போராடும் மக்கள் எவ்வளவு அழுத்தங்களையும் அபாயங்களையும் எதிர்கொள்கின்றனர் என்பதற்கு இந்த அறிக்கையை ஒரு அடையாளம் என்று குளோபல் விட்னஸ் அமைப்பின்‘ கிரிஷ்மேடன்’ சென்ற ஆண்டு கூறியிருந்தார். ஆனால், இந்தநிலை அப்படியே தொடர்வது கவலையளிக்கிறது. இந்த அமைப்பு சூழலியல் படுகொலை அதிகம் நடைபெறும் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியே பரிந்துரைகளைத் தந்த போதிலும் பொதுவாக அனைத்து அரசாங்கங்களுக்கும் கீழ்க்கண்ட பரிந்துரைகளைக் கூறுகின்றது.

  • சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கான ஒரு பாதுகாப்பான மற்றும் எந்த ஒரு தடையும் இல்லாமல் அவர்களின் குரல்களைப் பதிவு செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்.
  • தனியார் நிறுவனங்கள் செய்யவேண்டிய பொறுப்புகளை அவற்றைச் செய்ய வைக்க அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது தனியார் நிறுவனங்கள் தொடுக்கும் வன்முறைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தடுக்கவும் அதனால் ஏற்படும் விளைவுகளை நிவர்த்தி செய்யவும் வேண்டும்.
  • நிறுவனங்கள் தங்களின் பொறுப்புகளைக் கடைபிடிப்பதையும் சட்ட இணக்கமாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • காலநிலை மாற்றம் குறித்துப் பேசுவதற்கான அடிப்படை அணுகுமுறையை அனைத்து இடங்களிலும் கொண்டுவர வேண்டும்.

 

நாம் இந்த அறிக்கையில் காணும் படுகொலைகளின் எண்ணிக்கை எல்லாம் நடப்பு‘ சூழலியல் கொலைகள்’ எனப் பதிவு செய்யப்பட்டக் கொலைகளின் கணக்கு மட்டுமே. உண்மையில் சூழலியல் படுகொலைகள் என்று பதிவு செய்ய்யப்படாதவற்றையும் கணக்கிட்டால், சரியான எண்ணிக்கையானது நம்மை இதைவிட மேலும் அச்சுறுத்துவதாகவே இருக்கும்.

சென்ற மாதம் கரூரில் சட்ட விரோத கல்குவாரிக்கு எதிராகச் குரல் கொடுத்ததற்கா கல்குவாரி உரிமையாளர்களால் படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன், இப்படி நம்மைச் சுற்றிலும் நமக்காக நம் வருங்காலச் சந்ததி பாதுகாப்புக்காகப் போராடும் பலரை நாம் இழந்து வருகிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று சொன்ன உடனே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, மரம் நடுவது, கடற்கரையைச் சுத்தம் செய்வது மட்டுமே அல்ல அது நம்மைச் சுற்றி பெருநிறுவனங்களும் அரசாங்கமும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களைக் கொண்டு வரும்போது அதற்கு எதிராக நம் சூழலையும் பல்லுயிர்த் தன்மையையும் பாதுகாக்க குரல் கொடுப்பதுமாகும். அத்தோடு அப்படிக்குரல் கொடுப்பவர்களுக்குத் துணை நிற்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

  • கார் முகில்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments