எல்லைகளைத் தகர்த்தல்

எவ்வித வெளிச்சமுமற்ற சுழன்றோடும் மலைப்பாதையில் முன்விளக்கு அணைக்கப்பட்ட அதிவிரைவான காரை ஓட்டிச் செல்வதாய் கற்பனை செய்து பாருங்கள். குன்றுகளில் சரிந்துவிடக் கூடிய  அபாயத்தைத் தவிர்க்க வழிகாட்டலுக்கு வெளிச்சத்தை விரும்புவீர்கள். நாம் சந்திக்கவிருக்கும் அபாயங்களை நமக்கு உணர்த்தத்தான் அறிவியல் எப்போதும் முயற்சி செய்கிறது.

நமது புவி இயக்க விதிகளைக் குறித்த விஞ்ஞானிகளின் அண்மைகால கண்டுபிடிப்புகள் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானவையாகும். புவி இயக்க வழிமுறைகளைப் பற்றிய நமது புரிதல் எப்போதும் முன்னகர்ந்து கொண்டேயிருக்கிறது. உயிர்களின் நுண்ணிய சிக்கலான பிணைப்புகள் நாம் வாழ்வதற்கு எத்தகைய அவசியமானது என்பதை நம்மால் காணமுடிகிறது. ஆனால் இப்புவியின் உயிரியல் பன்மை குலைந்து கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றமடைந்து கொண்டிருக்கிறது.

நாம் அறிவியலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனென்றால்  மனித இனத்தின் மேம்பாட்டிற்காக இப்புவியின் நிலைப்புத்தன்மையையும் ஆற்றலையும் அறிந்து கொள்ளக்கூடிய முதல் தலைமுறை நாமாக இருக்கிறோம். முதல் மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து புவி வெப்பநிலை சீரற்றே இருந்துவந்திருக்கிறது. ஒவ்வொரு தசாப்தத்திற்கும் நாம் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்றத்திற்கும் குறைதலுக்கும் இடையில் போராடி வந்திருக்கிறோம். எனினும் ஆச்சரியப்படும் வகையில் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக புவி வெப்பநிலை  சீரான நிலையை அடைந்திருக்கிறது. வியக்கத்தகுந்த வகையில் இதுவே முதல் சீரான இடையூழிக்காலம்(Inter-Glacial Period) ஆகும். புவியியலாலர்கள் இந்தக் காலகட்டத்திற்கு  ஹோலோசீன்  (Holocene)  எனப் பெயரிட்டுள்ளார்கள்.

ஹோலோசீன் (Holocene )

மனித நாகரிகம் தோன்றும் முன்பு வரை புவியின் சராசரி வெப்பநிலை  10 டிகிரி செல்சியஸ்  உயர்ந்தும் குறைந்தும் நிலையற்றதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த பத்தாயிரம் ஆண்டுகாலமாக மட்டும் இந்த சராசரி வெப்பநிலை  உயர்வு  -1 க்கும் +1 க்கும் இடையில் மட்டுமே அதிகரிக்கவோ குறையவோ செய்யும்  ஒரு புவியமைவு காலகட்டத்தை அடைந்துள்ளது. இது மிகவும் குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையே நாம் தற்போது அறியும் இப்புவியை உருவாக்கியது. ஹோலொசீனின் நிலையான வெப்பநிலையே நமக்கு நிலையான ஒரு பூமியை  அளித்துள்ளது. கடல் மட்டம் நிலையானதாயிற்று. முதல் முறையாக நம்மிடம் யூகிக்கக்கூடிய பருவகாலங்களும் சார்ந்திருக்கக் கூடிய வானிலையும் அமைந்தன. மனித இனம் போன்ற ஒரு செழிப்பான  நாகரிகம் தோன்ற இந்த நிலைப்புத்தன்மை அவசியமாயிருந்தது. தனது சகல பரிணாம வளர்ச்சிக்கும் மனித சமூகம் இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டது. ஒரே சமயத்தில் வெவ்வேறு கண்டங்களில் நாம் அரிசி, கோதுமை, திணைவகைகள், சோளம்  என அனைத்தையும் பயிரிட்டுள்ளோம். இரண்டு நிரந்தரமான பனிப்படுகைகள், பாய்ந்தோடும் ஆறுகள், கவிழும் வனங்கள், தக்க வானிலை மற்றும் உயிர்வளமான சூழல் ஆகிய கூட்டமைவு இயங்கியல் விதிகள் இந்த ஹோலோசீன் நெடுகிலும்  நமக்கு உண்பதற்கு உணவும் குடிப்பதற்கு நீரும் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றும் வழங்கி வந்துள்ளன.

 

ஹோலோசீனின் முடிவு

இப்புவியில் நிலையான உயிர்ச்சூழல் நீடித்திருக்க குறிப்பாக மனித இனம் சார்ந்திருக்கக் கூடிய ஒரே புவியமைவு காலகட்டமான ஹோலோசீன்  முடிவடைந்து விட்டதாகவும் தற்சமயம் நாம் இருப்பது மனித மையப்படுத்தப்பட்ட ஒரு  புவியமைவை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். அதாவது இப்புவியின் சாதக பாதகங்கள் அனைத்தும் இனி மனித நடவடிக்கைகள் சார்ந்தே உள்ளன. ஆனால் நாம் ஏற்கனவே  பூமியின் பாதிக்கும் மேற்பட்ட வாழ்விடங்களை பயிர்கள் உற்பத்தி செய்யவும் கால்நடைகளுக்கும் பயன்படுத்திவிட்டோம். புவியின் எந்த இயற்கை நிகழ்வுகளைக் காட்டிலும் அதிகளவிலான பாறைகளையும் படிவங்களையும் அகழ்ந்தெடுக்கிறோம். பாதிக்கும் அதிகளவிலான கடல் மீன்பிடித்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. நம்மில் பத்தில் ஒன்பது நபர்கள் அசுத்தமான காற்றை சுவாசிக்கிறோம். கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக நாம் இருந்து வந்த இயற்கை சூழலில் இருந்து வெறும் ஐம்பதே ஆண்டுகளில் பூமியை ஒரு டிகிரி செல்சியசுக்கு அதிகமாக வெப்பமடையச் செய்துள்ளோம். உலகின் மிகப்பெரும் காடுகளை பாதிக்கும் மேலாகக் குறைத்துவிட்டிருக்கிறோம், டன் கணக்கில் கரியமில வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். இப்புவியின் சமநிலையை  நிலையிழக்கச் செய்யும் அபாயத்திற்கு  நாம் மிக அருகில் இருக்கிறோம். புவியின் சமநிலையை நிலைநாட்ட அதை நிலையாக வைத்திருக்கும் காரணிகளை  அறிந்துகொள்வது மிக அவசியமானது. இந்தக் காரணிகள் எப்படி ஒன்று மற்றொன்றுடன் இணைந்து உயிர்ப் பெருக்கத்தை சாத்தியப்படுத்துகின்றன என்பது குறித்தான மேம்பட்ட புரிதல் நமக்கு மிகவும் உறுதுணையானதாக இருக்கும். மேலும் ஒன்றின் அழிவு எப்படி  சங்கிலித் தொடர்ச்சியாக மற்றொன்றின் அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதும் இதன் மூலம் தெளிவாகும்.

 

Tipping point

இந்த எல்லைகளில் ஆபத்தான கட்டத்தை நாம் எட்டிவிடும் போது எந்த வித மனிதத் திறனாலும் கட்டுபடுத்த முடியாத மீளாநிலையை நாம் அடைந்துவிடுவோம். இதை விஞ்ஞானிகள் tipping point எனக் குறிப்பிடுகிறார்கள். இதை சரிவான ஒரு தடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் ரயிலுடன் ஒப்பிடலாம். ரயில் நகரத் தொடங்கியதும் அதன் வேகம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி ஒரு கட்டத்தில் அதை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அது வேகமெடுத்துவிடும்.

ஒன்பது எல்லைகள்

 உலகம் முழுதும் உள்ள விஞ்ஞானிகளை ஒன்று திரட்டி பெரும் ஆய்வுகளை மேற்கொண்டு  IPCC தனது முடிவுகளை வெளியிட்டது. 2009இல் விஞ்ஞானிகள் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாய் பூமியை சமநிலையுடன் வைத்திருந்த ஒன்பது புவியியல் காரணிகளை வரையறுத்தார்கள். ஹோலோசீன் நெடுகிலும் இக்காரணிகள் ஒவ்வொன்றும் திட்டவட்டமான எல்லைகளைக் கொண்டு பூமியின் சமநிலையை நிலநாட்டி வந்திருக்கின்றன. இந்த ஒன்பது காரணிகள் ஒவ்வொன்றும் தங்களுக்கான குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றை மீறும் பட்சத்தில் நாம் தவிர்க்கவியலாத பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்பதே அவர்கள் ஆய்வுகளின் முடிவுகள் தெரியப்படுத்தின. இந்தக் காரணிகள் ஒவ்வொன்றிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு என மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பச்சை நிறம் பாதுகாப்பையும் மஞ்சள் நிறம் அதிகரிக்கும் ஆபத்தையும் சிவப்பு நிறம் அசாதாரண விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தையும் குறிப்பதாக இந்தக் கட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. காலநிலை மாற்றத்தினால் நாம் சந்தித்து வரும் இடர்களைக் கணக்கிட்டு இந்த எல்லைகளில் நாம் தற்சமயம் இருக்கும் கட்டத்தை விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளார்கள். இவற்றில் இரண்டு காரணிகளின் எல்லைகளைத் திட்டவட்டமாக வரையறுக்க முடியாவிட்டாலும் மற்ற ஏழு காரணிகளின் எல்லை வரைவுகள் நம்மிடம் உள்ளன. இவற்றின் உதவியுடன் நம்மால் இப்புவியின் சமநிலையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், அரசால் அமல்படுத்தக்கூடிய வளங்குன்றா வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கவும் முடியும் என்பற்கான சாத்தியம் உள்ளது. புவி வெப்பமயமாதல், தாவரப்புலம், உயிரியல் பன்மை, நன்னீர் சுழற்சி, போசணைகள், பெருங்கடல்கள், ஓஸோன் படலம், காற்றுமாசு, மாசுபடுத்திகள் ஆகியவையே இந்த ஒன்பது காரணிகள்.

 

1.புவி வெப்பமயமாதல்

முதற்காரணியான புவி வெப்பமடைதல் நாம் அனைவரும் நன்றாக பரிச்சயப்பட்ட ஒன்றே. IPCC 2018இல் வெளியான ஆய்வு முடிவுகளைக் கொண்டு புவி வெப்பமையமாதலைப் பொறுத்தவரை நாம் ஏற்கனவே அபாய கட்டத்தை நெருங்கிவிட்டோம் என அறிவித்தது. புவி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸிற்கு நகரும் போது உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருமளவிலான பொருளாதார நெருக்கடிகளையும் இயற்கைப் பேரிடர்களையும் சந்திக்க நேரும் என அறிவித்தது. விஞ்ஞானிகளின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 2015இல் உலக நாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. புவி வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸிற்குக் கீழ் வைத்திருக்கும் வகையில் புதைப்படிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது. பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் போது நாம் பயிர்களை பராமரிப்பதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாவோம். நோய்த் தொற்றுகளைக் கட்டுபடுத்துவது சிரமமானதாக இருக்கும். செப்பச் சலனங்கள் மற்றும் வறட்சி சமாளிக்கமுடியாததாக இருக்கும். ஆனால் தற்சமயம் நாம் செய்யவேண்டியது 2 டிகிரி செல்சியஸை அடையாமல் இருப்பதை இலக்காக நிர்னயிப்பதே.

மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் இதுவரை இல்லாத அளவு புவி வெப்பம் அதிகரிப்பால்  உருகிவரும் பனிப்பாறைகளே இதற்கு ஆதாரம்.  சிறிய பனிப்பாறைகள் உருகும்  நிகழ்வுகள் பெரிதளவில் பாதிப்புகளை எற்படுத்தக் கூடியவையாக தோன்றாமல் இருக்கலாம்.இப்புவியின் சமநிலைக்கு  இரண்டு நிரந்தர பனிப்படுகைகள்  (ஆர்டிக், அண்டார்டிகா) அடிப்படை முன்நிபந்தனைகளாக அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு பனிப்படுகைகள் மற்ற சிறு பனியுறைவிடங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. அதனால் ஒரு சிறிய பனிச்சரிவாயினும் அது ஸ்வீடனாயினும் கிரீண்லாந்தாயினும் அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மிகவும் அச்சமூட்டக்கூடியதாக இருக்கின்றன. புமியின் தட்பவெப்பத்தை குளிரூட்டுவதற்கு இந்த பனிப்பறைகள் நிலையாக இருப்பது மிக அடிப்படையான ஒன்று. பூமியின் பனி நிலப்பரப்புகள் சூரியனிடமிருந்து வெளியேறும் வெப்பத்தில் 90 முதல் 95 விழுக்காடு வெப்பத்தை விண்ணிற்கு திருப்பி அனுப்பக்கூடிய ஆற்றல் கொண்டவை. இந்த பனி உருகத் தொடங்கியவுடன் இவை அளவில் சுருங்கிவிடுவது மட்டுமில்லாமல் விளிம்பு நிலப்பகுதிகள் ஒரு வகையான அடர் நிறத்தை அடைந்துவிடுகின்றன. பனிப்பரப்புகள் நிறம் மாறத் தொடங்கியவுடன் அவை வெப்பத்தைப் பிரதிப்பலிப்பதை நிறுத்தி அதிகளவிலான வெப்பத்தை உள்வாங்கத் தொடங்கிவிடுகின்றன. இந்த நிலையில் அவை ஒரு மீளா நிலையை (tipping point)  அடைந்துவிடுகின்றன. ஒரு காலத்தில் கிரிண்லாந்தில் பொழியும் பனி உருத்திரண்டு, அதை ஒரு மாபெரும் மாடமாக குவிந்திருந்தது. இப்பனிப்பரப்பு இரண்டு அடி தடிமனாக உருவாகி வளிமண்டலத்தை மிகவும் குளிர்மையாக வைத்திருந்தது. பனி உருகத் தொடங்கியதும் பனிநிலப்பரப்பு உஷ்ணமான காற்றை எதிர்கொள்ளத் தொடங்குகிறது. இதன் விளைவு,  பனியுருகுவதை இது மேலும் விரைவாக்குகிறது. பனிப்பறைகள் உருகுவதை சமன்செய்ய தட்பவெப்பம் மேலும் குளிராக இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கிரீன்லாந்தில்  வெப்பநிலை மிகவும் உஷ்ணமானதாக மாறிவிட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் கிரீன்லாந்து சராசரியாக நொடிக்கு 10,000 சதுர அடி பனியை இழந்து வருகிறது. புவி வெப்பமயமாதல் அதிகரிக்க, இந்நிலை மேலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். காலநிலை மாற்றத்தை  நம்மால் கட்டுக்குள் வைக்கமுடியாத வரையில்  கிரின்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவது தவிர்க்கவியலாத  ஒன்றாக மாறிவிடும். இது கடல் மட்டத்தின் அளவை 7 அடி உயர்த்தும். நூற்றுக்கணக்கான நகரங்கள், கடலோர வாழிடங்கள் கடல் மட்ட உயர்வினால் அச்சுறுத்தலுக்குள்ளாக நேரிடும். இத்தனைக்கும் கிரீன்லாந்து உலகின் ஒரு பனிப்படுகை மட்டும்தான். ஒப்பீட்டளவில் இது அண்டார்டிகாவை விடச் சிறியதும்கூட.

சில வருடங்களுக்கு முன்பு வரை அண்டார்டிகா என்பது எந்த வித கால நிலை மாற்றத்திற்கும் உள்ளாகாத தடுப்பரணாகக் கருதப்பட்டு வந்தது. இந்த நிலை மாறி பெருமளவிலான பனிப்பாறைகள் உருகி கடலில் கரைந்து விடுவதை நாம் இன்று காண்கிறோம். மேற்கு அண்டார்டிகா முழுவதும் உருகும் பட்சத்தில் கடல் மட்டத்தில் 5 அடி வரை உயரக்கூடும். அதே நேரத்தில் கிழக்கு அண்டார்டிகா இதைக் காட்டிலும் பத்து மடங்கு பெரியது. எனவே அது ஏறத்தாழ 50 அடி கடல் மட்டத்தின் உயர்வுக்கான சாத்தியம் கொண்டிருக்கிறது.

இதில் விஞ்ஞானிகளின் முக்கியமான கவலை  இப்புவியின் இயக்கமுறைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. எனவே காலநிலை மாற்றம் என்னும் ஒற்றைக் காரணி அதனுடன் தொடர்புடைய இயற்கை இயக்கங்களை, அவற்றின் மீளாநிலையை (Tipping points)  நெருங்கச் செய்யும். இதனை அவர்கள்  டோமினோ விளைவு (Domino effect)  என அழைக்கின்றனர்.  ஒன்றின் சரிவு அதனையடுத்த பிற இயக்கவிதிகளையும் குலைக்கும்.

காலநிலை மாற்றத்திற்கு முதன்மையான காரணம் பசுங்குடில் வாயுக்கள். 1988ஆம் ஆண்டில் நாம் வளிமண்டலத்தில் 350 பி.பி.எம் என்ற அளவில் கரியமில வாயுவை வெளியேற்றிக் கொண்டிருந்தோம். இங்குதான்  பாதுகாப்பான நிலையிலிருந்து அபாயக் கட்டத்தில் முதல் அடியை எடுத்து வைத்தோம். தற்போது நாம் 415 பி.பி.எம் என்ற அளவில் கரியமில வாயுவை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே நம் எல்லைகளைக் கடந்து மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அதிகரித்துவரும் வறட்சி, பருவமழை பிந்துதல், வெள்ளப்பெருக்கு, பனிப்பாறை உருகுதல், காட்டுத்தீ பரவல் என பல வடிவங்களில் காண்கிறோம். நாம் மிக வேகமாக 450 பி.பி.எம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். முழுவதுமான அபாயக் கட்டத்தை நம்மால் சொல்லமுடியாவிட்டாலும், விஞ்ஞானிகள் நம் எல்லையை முதல் கட்ட அபாயமாக 350 பி.பி.எம் முதல்  450 பி.பி.எம் இரண்டாம் கட்ட அபாயத்தை வரையறுக்கின்றனர். 450 பி.பி.எம் என்பது மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் மீளா நிலையாகும்.

தாவரப் புலங்கள் (Biomes)

இப்புவியின் நிலவமைவு பற்றி நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று. மூன்று மழைக் காடுகள், மித வெப்பமண்டலக் காடுகள், வடதுருவக் காடுகள், புல்வெளி நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் என தாவரப் புலத்தின் இக்கூட்டமைவு எப்படி சாத்தியமாகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய இயற்கை கூட்டமைவின் பெரும் சொத்தான அமேசான் மழைக்காடுகளை நாம் இழக்கும் தருணத்தில் உள்ளோம்.

1970லிருந்து அமேசான் காட்டின் பெருமளவிலான நிலங்கள் சோயா பயிரிடுவதற்கான நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதன் விளைவுகளை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் 1998இல் இதுவரை எந்த மழைக் காட்டிலும் நடத்தப்படாத பெரும் ஆராய்ச்சிகளை நடத்தினார்கள். இந்த மழைக் காடுகள் எப்படி தங்களுக்கு ஏற்ற பருவநிலையை உருவாக்கும் தன்னிலயல்பைப்  பெற்றிருக்கின்றன என்பதை இவர்கள் ஆராய முயன்றார்கள். காட்டின் பெரும் பகுதிகளில் உயரமான கண்காணிப்பு கோபுரங்கள் எழுப்பப் பட்டன. ஆராய்ச்சி முடிவுகளின்படி காட்டின் பெரும்பகுதி வறண்டு வருவதைக் காட்டியது. வழக்கமாக அமேசானில் கோடைக்கால வறட்சி மூன்று மாத காலம் வரை நீடிக்கக் கூடியது. ஆனால் காலநிலை மாற்றம், காடழிப்பு ஆகியவற்றின் விளைவால் கோடைக்கால வறட்சி 1980 முதல் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஆறு நாட்கள் அதிகமாக நீடிக்கிறது. தொடர்ச்சியாக மரங்கள் அழிக்கப்பட்டுவரும் நிலையில் நீர் சுழற்சி பாதிக்கப்படுவதுடன் கோடைக் காலங்களில் மழையை உருவாக்கும் தன்மையையும் இக்காடுகள் இழந்து வருகின்றன. இந்த வறட்சி காலம் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்குமானால் இங்குள்ள மரங்கள் உயிரிழந்து சவான்னா மையமாதல் என்னும் நிலை உண்டாக்குகிறது. சவான்னா மையமாதல் என்பது மரங்கள் உயிரிழக்கத் தொடங்கியவுடன் அவை கரியமில வாயுவை வளிமண்டலத்தில் வெளியேற்றத் தொடங்கிவிடும். தற்சமயம் நாம் 20 சதவீதம் அமேசான் மழைக் காடுகளை இழந்துவிட்டோம். 20 முதல் 25 % காடுகள் அழிக்கப்படும் நிலையில் அமேசான் 50 முதல் 60 சதவிதம் சவான்னாவாக மாறிவிடக்கூடிய அபாயம் உள்ளது. மேலும் அமேசான் காடு அடுத்த முப்பது ஆண்டுகளில் 200 பில்லியன் டன் கரியமில வாயுவை வெளியிடக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகம் மொத்தமும் வெளியேற்றியுள்ள அளவிற்கு நிகரானது. அமேசான் காடுகளைச் சார்ந்து இருக்கும் தாவர விலங்கினங்கள் அழியும் சூழலை நாம் உருவாக்கியுள்ளோம். மொத்தம் எட்டு மில்லியன் உயிரினங்களில் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழிவை எதிர்கொண்டு வருகின்றன. வெறும் ஐம்பதே ஆண்டுகளில் மனித இனம் 68% கானக வாழ் உயிரினங்களைத் துடைத்தெறிந்து விட்டிருக்கிறது. எஞ்சியுள்ள உயிரினங்களுக்குப் போதுமான உணவு கிடைக்கும் சூழல் கூட நம்மிடம் இல்லாது போகும் அபாயத்தை நாம் சந்திக்க நேரிடலாம்.

ஒருமுறை ஸ்வீடன் நாட்டுப் பத்திரிகை சிறிய உயிரினங்களின் அழிவைத் தெரிவிக்கும் மிக துன்பகரமான செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தியானது இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஸ்வீடன் நாட்டிற்குள் ஒரு குறிப்பிட்ட தேனீ வகைகளை அபகரிக்க வந்திருப்பதாகக்  குறிப்பிட்டிருந்தது. ஐரோப்பா முழுவதும் இந்த வகை தேனீக்கள் மகரந்தச் சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இந்த ரக தேனீக்கள் அருகி வருவதாக அந்த நாடு அறிவித்தது. தாங்கள் அழித்துவிட்ட ஒரு இனத்தை மீண்டும் தங்கள் நாட்டிற்குக் கொண்டுசெல்ல வந்திருந்தவர்கள் அந்த விஞ்ஞானிகள். ஒரு நாடு மற்றோரு நாட்டிற்குள் புகுந்து தனது மகரந்தச் சேர்க்கையாளர்கள் திருடும் நிலை தன்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாகியதாக யோஹான் விவரித்தார்.

ஏறத்தாழ 70 சதவீத பயிரினங்கள் மகரந்தச் சேர்க்கைக்காக பூச்சியினங்களைச் சார்ந்திருக்கின்றன. ஆனால் ஒற்றைப் பயிர் சாகுபடி காரணமாக பெருமளவிலான பூச்சியினங்கள் அழிந்துவருகின்றன. முரண் என்னவெனில் எந்த உயிரினங்களைச் சார்ந்து நம் உணவு உற்பத்தி முறை கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ அவ்வுயிரினங்களையே நாம் அழித்து வருகிறோம். பல்லுயிர்ச் சூழலைப் பேண வேண்டியதன் அவசியம் அழகுணர்ச்சியாலன்றி, மனித இனம் உயிர்வாழ பூச்சியினங்களே அவசியம் என்பதால்தான்.  பூச்சிகளின் அன்றாட செயல்களைக் கவனித்தாலே அவை ஓவ்வொன்றும் தங்களுக்குரிய வகையில் நுண்ணியப் பங்களிப்பை வழங்குகின்றன. பூச்சிகள் இல்லாத ஒரு புவி, வாழ்வியக்கம் இல்லாத ஒரு இடமே. பூச்சியினத்துடன் இது நின்று விடுவதில்லை. விவசாய நிலத்தின் பெருக்கத்தால் பெரும்பாலான விலங்குகளின் வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டுவிட்டன. இன்றைய நிலையில் பூமியில் வாழும் பறவையினங்களில் வெறும் 30 சதவீதம் மட்டுமே காட்டில் வாழக்கூடியவையே. மேலும் காட்டில் வாழக்கூடிய  பாலூட்டிகளின் எண்ணிக்கை 4 விழுக்காடு மட்டுமே. எனவே உயிர் பன்மையின் திட்டவட்டமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய எல்லையை நாம் எவ்வாறு தீர்மானிப்பது? நம்மால் இன்னும் எத்தனை வளங்களைப் பறிகொடுக்க முடியும்? இத்தனை புதிரான உயிரியக்கத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுக்க முடியாவிட்டாலும் நாம் ஒரு மீளாநிலையைக் கடந்துவிட்டோம் என்பதற்கான விளைவுகளைத்தான் நாம் சந்தித்து வருகிறோம். இப்புவியில் பல்லுயிர் சூழல் நிலைக்க வேண்டுமென்றால் நாம் முடிந்த வரையில் விரைவாக இயற்கையின் சீர்குலைவை நிறுத்தவேண்டும்.

நன்னீர் சுழற்சி

உயிரின மண்டலத்தின் மூன்றாவது முக்கியமான காரணி இப்புவியின் நாளங்களில் பயனிக்கும் நன்னீர். ஒரு இன நாகரிகம் நாடியிருக்கும் பிரதானமான வளங்களில் முதன்மையானது நன்னீர். ஒரு தனிநபர் தனது ஒரு நாளில் மட்டும் 3000 லிட்டர் தண்ணீரை சார்ந்திருக்கிறார் என்பது உங்களுக்கு ஆச்சரியமூட்டலாம். ஒரு தனி நபருக்கு சுமார் 50 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கும் சுகாதாரத்திற்கும் பயன்படுகிறது என வைத்துக்கொள்ளலாம். சலவை, சமையல் என வீட்டு உபயோகங்களுக்கு சுமாராக 100 லிட்டர் பயன்படுத்துகிறோம். தொழிற்சாலைகள் 150 முதல் 300 லிட்டர் வரை தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. மீதமுள்ள 2500 லிட்டர் தண்ணீர் என்பது நாம் அன்றாடம் உண்ணும் உணவை உற்பத்தி செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நீரின் தேவை இத்தனை மிகுதியான அளவில் இருக்கையில் இவ்வுலகிற்குப் போதுமான நீர் நம்மிடம் இருக்கிறதா என்பதையே நாம் அறிந்துகொள்ள முயல்கிறோம். நன்னீரைப் பொறுத்தவரையில் நாம் இதுவரை பாதுகாப்பான கட்டத்தில்தான் இருக்கிறோம் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஆறுகளிலிருந்து உறிஞ்சப்பட்டு அவை வற்றிவிடும் அபாயத்திற்கு நாம் வெகு தொலைவிலும் இல்லை.

போசணைகள் (Nutrients)

மற்றுமொரு முக்கியமான காரணி போசணைகளின் சுழற்சி. நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய இரண்டு மூலப்பொருள்கள் உயிரினங்களுக்கு அத்தியாவசியமானவை. அதே நேரத்தில் இவ்விரண்டும் உரங்களின் மூலப்பொருட்கள். நாம் நைட்ரஜனைக் காற்றிலிருந்து வேதியியல் முறையில் பயன்படுத்தக்கூடிய வடிவில் மாற்றுகிறோம் மற்றும் பாஸ்பரஸை நிலத்திலிருந்து அகழ்ந்தெடுக்கிறோம். செயற்கை உரங்கள் பயிர்களின் வளர்ச்சியை இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகரித்தன. உலகளாவிய உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய இத்தகைய உரங்கள் அத்தியவசியமானதாய் இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் இந்த உரங்களைப் பயிர்களால் உட்கொள்ளக்கூடியதை விட அதிகளவிலான உரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம். பயிர்களால் உட்கொள்ளப்பட்டது போக நிலத்தில் எஞ்சிய உரம் ஆறுகளில் சென்று கலந்து அவற்றையும் பாதிக்கத் தொடங்கின. இதனைப் பட்டழிதல் ( eutrophication)  என்று குறிப்பிடுகிறோம். செயற்கை உரங்கள் ஏரி குளங்களில் கலக்கும் போது அவை நீரில் உள்ள பாசிகளை உயிரிழக்கச் செய்கின்றன. உயிரிழந்த பாசிகள் நீரின் மேற்பரப்பில் பச்சை நிறத்தில் மிதப்பதை நாம் காண்கிறோம். மேலும் இவற்றிடமிருந்து துர்நாற்றமும் வெளிப்படத் தொடங்குகிறது. இந்த இறந்த ஆல்காக்கள் நீரில் உள்ள ஆக்சிஜனை உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கியவுடன்  அடிப்பரப்பில் உள்ள வண்டலின் வேதியியல் கூறுகள் மாற்றமடையத் தொடங்கி அவை மேலும் பாஸ்பரஸை உருவாக்கத் தொடங்குகின்றன. Eutrophication ஆறுகளில் மட்டுமில்லாமல் கடலிலும் நடைபெறுகிறது. கடலில்  பல ஆயிரம் கிலோ மீட்டர் அளவிலான பகுதிகள் உயிரோட்டமிழந்து விட்டன. இதுவரை பூமியில் நிகழ்ந்துள்ள ஐந்து பேரழிவுகளில் பட்டழிதலுக்கு  ஒரு பெரும் பங்கு இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதர சூழல்களுடன் ஒப்பிடும்போது செயற்கை உரங்களால் ஏற்படும் பாதிப்புகள் பெரியளவில் கவனத்திற்கு வருவதில்லை. ஆனால் இதன் எல்லையையைப் பொறுத்தவரையில் நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம்.

மாசுபொருட்கள்

இறுதியான இரண்டு காரணிகளான மாசுபொருட்கள் மற்றும் காற்று மாசு ஆகியவை ஹோலோசின் அல்லது புவியின் நான்கரை கோடி ஆண்டுகளில் அறிமுகமே இல்லாத ஒன்று. இவை மனிதர்களால் பூமியில் அறிமுகபடுத்தப்பட்டு இயற்கையுடன் எண்ணற்ற வகைகளில் இணைந்து பாதிப்புகளை உருவாக்குபவை. இவற்றில் சில கழிவுகள் அரசுகளால் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டவை. 1945இல் அமெரிக்கா முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது அதனைத் தொடர்ந்து 1949இல் ருஷ்யா, 1960இல் பிரான்ஸ், 1964இல் சீனா அணு ஆயுதச் சோதனைகளின் கழிவுகள்  பெருமளவில் பூமியில் சேருவதை அறிந்தபின்னர் 1963இல் அணு ஆயுத பரிசோதனைகள் தடை ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால்  இது மனிதர்கள் உருவாக்கியிருக்கும் ஓராயிரம் கழிவுப் பொருட்களில் ஒன்று மட்டுமே.

மாசுப்பொருட்கள் என்பது அணுக் கழிவு முதல் உலோகக் கழிவுகள், நுண் ஞெகிழி  வரை மனிதர்கள் சுமாராக 100,000 புதிய வகையான மாசுபடுத்திகளை உருவாக்கியுள்ளார்கள். இவை ஒவ்வொன்றும் பல வகைகளில் சுற்றுச்சூழலுடன் இனைந்து பெரும் அழிவுகளை உண்டாக்கக்கூடியவை. இவற்றின் எல்லையை நம்மால் தீர்மானமாகச் சொல்ல முடியாவிட்டாலும் இவை ஏற்படுத்தியிருக்கும் சேதங்களைக் கொண்டு காலம் தாழ்த்துவதில் பயனில்லை.

காற்றுமாசு

இரண்டாவது காரணியான காற்று மாசு ஏற்கனவே உலகளவில் பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.  வளிமண்டலத்தில் ஏரோசோல் (Aerosol) எனப்படும் நுண்ணிய துகள்கள் சூரியனிடமிருந்து வரும் வெளிச்சத்தை இடைமறித்து சிதறடிக்கச் செய்கின்றன. நாம் காணும் பனிப்படர்வைப் போல் வானிலை தோன்றுவதற்கு இதுதான் காரணம். 70 விழுக்காடு ஏரோசோல் புதைப்படிவ எரிபொருட்களால் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் விளைவாய் குளிர்மையான ஒரு வானிலை ஏற்படுவதாய் தோன்றினாலும் இந்தத் தற்காலிகமான குளிர்ச்சியான வானிலைப் பசுமை இல்ல வாயுக்கள் ஏற்படுத்தும் புவி வெப்ப விளைவை நாம் காண்பதற்குப் பெரும் தடையாய் இருப்பவை. காற்று மாசால் வருடந்தோறும் எழுபது லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர் மற்றும் ஒரு தனிநபரின் ஆயுட்காலத்தில் மூன்று ஆண்டுகள் குறைகிறது. திட்டவட்டமான ஒரு எல்லை தெரியாவிட்டாலும் வருடந்தோறும் எழுபது லட்ச மரணங்கள் என்பதே நாம் அபாயக் கட்டத்தில் உள்ளோம் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.

ஓசோன் படலம்

இறுதியாக முக்கியமான காரணி ஓசோன் படலம். நாம் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு காரணியென்றால் அது இதுதான். சூரியனிடமிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் நம் தோலுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. இந்தக் கதிர்களைத் தடுத்து நிறுத்தி அவற்றின் பாதிப்பிலிருந்து  நம்மைக் காப்பது ஓசோன் படலம்தான். அதனால்தான் 1980களில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் துளை கண்டுபிடிக்கப்பட்ட போது உலகளவில் பெரும் பதட்டமான சூழல் நிலவியது. உலகம் முழுவதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. ஒரு அறிவியல் எச்சரிக்கை பெரும் அரசியல் இயக்கமாக மாற்றப்பட்டது என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாயிருந்தது. நம்மால் இப்புவியில் உருவாகியிருக்கும் சீர்குலைவை சீர்செய்ய முடியும் என்பதற்கு இதுவே சான்று. விஞ்ஞானிகள் நாம் கடைபிடிக்கவேண்டிய எல்லைகளை நமக்கு வகுத்துக் கொடுத்திருக்கின்றனர். தற்போதைய நிலையில் நாம் நன்னீர் மற்றும் ஓசோன் ஆகிய இரு காரணிகளில் மட்டுமே பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம். காற்று மாசு மற்றும் மாசுப்பொருட்கள் ஆகிய இரண்டில்  தீர்மானமான முடிவுகள் நம்மிடம் இல்லாத நிலையில் பிற நான்கு காரணிகளால் நாம் ஆபத்தான நிலையை எட்டிவிட்டோம். மனித நாகரிகம் நிலைத்திருக்க அவசியமான புவியின் சமநிலையை திரும்பப் பெறமுடியாத வகையில் நாம் எல்லைகளைத் தகர்த்துவிட்டிருக்கிறோம்.

காலநிலை மாற்றம், தாவரப்புலம், பல்லுயிர் சூழல், நீர், போசணைகள் ஆகிய ஐந்து முக்கியமான காரணிகள் ஒன்றிணைந்து இப்புவியின் சமநிலையை நிலைத்திருக்கச் செய்கின்றன. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முழுமையான சித்திரத்திற்கு இவை போதுமானது அன்று என்பதையும் உணர்ந்திருந்தார்கள். மற்றும் சில நிகழ்வுகள் நம் கவனத்திற்கு  வர வேண்டியுள்ளன. இவை உண்டாக்கும் உடனடி பாதிப்புகள் இப்புவியில் மற்ற நிகழ்வுகளைக் காட்டிலும் பெரியவை.

கடல் நீர் அமிலமாதல் (ocean acidification)  

அதிகளவிலான கரியமில வாயு வெளியேற்றப்படும் போது அவற்றில் மூன்றில் ஒரு பங்கு  கடலில் சென்றடைகிறது. இவ்வாறு கலக்கும் கரியமில வாயு நீரின் வேதியியல் கூறுகளுடன் இணைந்து கார்பனிக் அமிலமாக (Carbonic Acid) மாறுகின்றது. இது நீரின் காரத்தன்மையைக் (Base) குறைத்து அமிலத்தன்மையை (Acidic) அதிகரிக்கச் செய்கிறது. இதனை அமிலமாக்கம் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த அமிலம் நீரில் உள்ள கார்பனேட் அயனிகளின் அளவைக் குறைக்கத் தொடங்குகிறது. சிப்பிகள், பவளப்பாறைகள் மற்றும் கடல் உயிரினங்களின் எலும்புகளின் வளர்ச்சிக்கு இந்த கார்பனேட் அயனிகள் மிக முக்கியமானவையாகும். நவீனமயமாக்கத்திற்குப் பிறகு உலகளவில் கடல்கள் 26 சதவீதம் அமிலமாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நாம் பாதுகாப்பான கட்டத்தில்தான் இருக்கிறோம் என்றாலும்  அதிகளவிலான கரியமில வாயு வெளியேற்றப்படும் நடைமுறை தொடருமானால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.

அவசரநிலையை அறிவிப்பது

மனித சமூகம் பூமியில் நீடிக்க வேண்டும் என்றால் நாம் இந்த அனைத்து காரணிகளின் எல்லைகளிலும் பாதுகாப்பான ஒரு கட்டத்திற்குத்  திரும்பிச் செல்லும் வகையில் நிலைமைகளை சீர் செய்ய வேண்டும். காலநிலை மாற்றம் குறித்து  உடனடித் தீர்வுகளை அமல்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்பதற்கு தேவைக்கதிகமான அறிவியல்பூர்வமான  நிரூபணங்கள்  நம்மிடம் இருக்கின்றன. ஆனால் வல்லாதிக்க  நாடுகளின் முனைப்பின்றி இவை அனைத்தும் பயனற்றதே. உலக வர்த்தக  நிறுவனத்தின் பொருளாதாரக் கொள்கைகள் சுற்றுச்சூழல் குறித்த எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் எதிரானவைகளாகவே இருக்கின்றன. 2015இல் போடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் பெருமளவில் செயலற்றே இருக்கிறது. இனிமேலும் நமது அணுகுமுறை ஒரு புறத்தில் பொருளாதார வளர்ச்சியை நோக்கியதாகவும் மறுபுறத்தில் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதாகவும் இல்லாமல் நமது கொள்கைகள் அனைத்தும் வளங்குன்றா நீடித்த வளர்ச்சியை மையப்படுத்திய ஒன்றாக மறுகட்டமைப்பு செய்யப்படவேண்டும். அதே நேரத்தில் நாம் உடனடியாக செயல்படவேண்டிய முக்கியமான சில முன்னெடுப்புகள் இருக்கின்றன.

 

பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது 

நாம் உடனடியாகக்  கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்ஜியத்திற்குக் கொண்டுவர வேண்டும். தொழிற்புரட்சி காலம் முதல் இன்று வரை நாம் 240 கோடி டன் கரியமில வாயுவை வெளியேற்றியுள்ளோம். புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸிற்கும் கீழே இருக்க வேண்டுமென்றால் நாம் மேலும் 300 கோடி டன்னிற்குக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.   2018இல் பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது போன்ற புவி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸிற்குக் கீழ் இருக்க நாம் முதலில் 2030க்குள் கரியமில வெளியேற்றத்தை 50 விழுக்காடாகக் குறைக்க வேண்டும். இதனைக் கடைப்பிடித்தால் வருடத்திற்கு 6 முதல் 7 % வரை நாம் கரியமில வெளியேற்றத்தைக் குறைக்கமுடியும். புதைப்படிவ எரிபொருட்களின் உபயோகத்தைக் குறைப்பதன்  மூலம் காற்று மாசு, கடல் அமிலமாக்கம் ஆகிய நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும். புதிய மரங்களை நடுவது, ஓற்றை பயிர்சாகுபடியைத் தவிர்த்து கூட்டுப் பயிரினங்களை விளைவிப்பது ஏற்கனவே காற்றில் உள்ள கரியமில வாயுவின் அளவை குறைக்க உதவும்.

 

கொரோனா தொற்று நம் அனைவரின் வாழ்க்கையையும் ஒருசேர பாதித்திருக்கிறது. உலகப் பொருளாதரத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது. மருத்துவத் துறையை திணறடித்தது. இவ்வளவு பாதிப்பிற்கும் காரணம் நாம் இயற்கையின் இத்தகைய பேரிடரை எதிர்கொள்வதற்கு எந்த விதத்திலும் தயாராக இல்லை என்பதே. பொதுமக்களை இது பெருமளவிற்கு ஆச்சரியமூட்டுவதாக இருந்தாலும் உலக சுகாதார அமைப்பு இத்தகைய ஒரு பேரிடரின் வருகையை முன்னமே எச்சரித்திருந்தது. நாம் இயற்கையை அழித்துக் கொண்டிருந்தோம், சுற்றுச்சூழலை அழித்துக் கொண்டிருந்தோம், மிக வறட்டுத்தனமாக விளைநிலங்களை அழித்துக் கொண்டிருந்தோம். பெருமளவிலான மரங்களை வெட்டிக் கொண்டிருந்தோம். நாம் வாழும் மாசுபட்ட நகரங்களையும் அவற்றின் மக்கள் தொகையையும் வைத்துப் பார்த்தால் ஒரு நோய்த் தொற்று உருவாவதற்கான மிகப் பொருத்தமான சூழலை நாம் ஏற்படுத்தியிருந்தோம். இயற்கையின் எதிர்ப்பாற்றல் குறையத் தொடங்கும்போது. விலங்குவழித் தொற்றுக்கள் மனிதர்களை வந்தடைகின்றன. ஒரு ஆரோக்கியமான இயற்கைச் சூழல் பேரிடர்களை உருவாக்குவது அல்ல. அப்படியே நிகழ்ந்தாலும் ஏதாவதொரு குறிப்பிட்ட இனம் ஒரு குறிபிட்ட சூழலுக்குட்பட்டேதான் பாதிக்கப்படும். இவற்றின் வாழிடத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கும் போதுதான் அது மனிதர்களைப் பாதிக்கிறது. மனித நலனும் விலங்குகளின் நலனும் சுற்றுச்சூழல் நலனும் ஆகிய மூன்றும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பவை. கொரோனா பெருந்தொற்று நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் மிகப் பெரிய பாடம் என்னவென்றால், இவ்வுலகின் ஏதோ ஒரு மூலையில் நிகழும் பேரிடர் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையையும் ஒருசேரப் பாதிக்கக்கூடியது என்கிற உண்மையை நமக்கு உணர்த்தியது. கொரோனா பெருந்தொற்று நாம் ஒரு இக்கட்டான காலத்தில் இருப்பதை எச்சரிக்கச் செய்கிறது. ஆனால் அதே நேரத்தில் அது நமக்கு நிலைமைகளை ஒரு வழியில் சீர் செய்யும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை இல்லாத ஒரு பல்லுயிர்ச் சூழல் பெருக்கத்தைக் கற்பனை செய்து பாருங்கள். இது நம் அனைவராலும் மிக எளிய முயற்சிகளால் சாத்தியமாக்கக் கூடியது. ஒவ்வொரு தனிநபரின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும்தான் இம்மாற்றம் நிகழ முடியும். நாம் எந்த மாதிரியான உணவுமுறையைத் தேர்வு செய்கிறோம் என்பதற்கு இதில் முக்கிய பங்குண்டு. கழிவுகளற்ற ஒரு மனித சமுதாயத்தை உருவாக்குவதற்காக நாம் உபயோகிக்கும் பொருட்களின் தேவைகளைக் கருத்தில்கொள்வது மிக அவசியம். இப்புவியில் நம் வாழ்வை வழிநடத்தும் வழிகளை நாம் இயற்கையிடமிருந்தே பெற்றுக்கொள்ள முடியும். 2020 – 2030 ஆகிய இந்த பத்து வருடங்களில் நாம் உடனடியாகச் செயல்பட்த் தொடங்க வேண்டும். இனி வரும் தலைமுறைக்கு  ஒரு வளமான எதிர்காலத்தை அமைத்துத் தருவதே நம் கடமை.

  • ராகேஷ் தாரா
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments