உங்கள் கனவு இல்லத்திற்குள் தென்றல் வரவேண்டுமா?

மொட்டை மாடியிலோ இல்லை வீட்டு முற்றத்திலோ காற்றோட்டததிற்காகக் காவலிருக்கும் நாம், வெளியே நம்மைத் தழுவிச் செல்லும் இதமான தென்றல் காற்று, ஏன் நம் வீட்டிற்குள் நுழையாமல் கடந்து செல்கிறது என்று பெரும்பாலும் யோசிப்பதில்லை. காற்றோட்டத்தில் ஜன்னல்கள் – கதவுகளின் அமைவிடமும் அளவும் மிக முக்கியமானது. வீட்டின் அழகிலும் பிரம்மாண்டத்திலும் கவனம் குவிக்கும் நாம் இவற்றில் கோட்டை விட்டு விடுவதாலேயேப் பெரும்பாலும் தென்றல் நம் இல்லத்தில் நுழைய மறுத்து வெளிநடப்பு செய்கிறது. வீடுகளில் இதமான தென்றலைப் பெற ஜன்னல்களை எப்படி அமைப்பது என்று ஒரு சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

 

ஜன்னலைத் திறந்து வைத்து விட்டால் மட்டும் உடனே காற்று உள்ளே வந்துவிடாது. ஜன்னலின் அமைவிடம் காற்றின் திசையாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்கள்பகுதியில் எந்தெந்த மாதங்களில் எந்தெந்தத் திசையிலிருந்து காற்றடிக்கும் எனபதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் சிறிய குன்றுகள் மற்றும் கட்டிடங்களைப் பொறுத்து இந்தக் காற்றின் திசையில் மாறுபாடுகள் இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

எப்படி மனிதர்கள் ஒவ்வொரு அறைக்குள்ளும் நடமாடவும் – வெளியே செல்லவும் – வீட்டினுள் வரவும் பாதைகள் இருக்குமோ அதேப்போன்று காற்று உள் நுளையவும் வெளியேறவும் தேவையானத் தங்குதடையற்றப் பாதைகள் உங்கள் வீட்டிற்குள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

சூடான காற்று அடர்த்தி குறைவானது எனவே அது அறையின் மேல் பாகத்திலும் குளிர்ந்த காற்று அறையின் கீழ் பாகத்திலும் இருக்கும். பழைய ஓடு அல்லது கூரை வேயப்பட்ட வீடுகளில் இயற்கையாகவே சூடாகி மேலெழும் காற்று கூரையின் இடைவெளிகள் வழியாக வெளியேறிவிடுவதால் வெளியே காற்று வீசவில்லையென்றாலும் தொடர்ந்து அறையினுள் காற்று சுழற்சி இருந்துகொண்டே இருக்கும். உங்கள் காங்கிரீட் கட்டிடத்திலும் அவ்வாறான காற்று சுழற்சியை உறுதி செய்ய காங்கிரீட் கூரையின் அடிப்பகுதியில் நீளவாக்கில் காற்று வெளியேறும் திறப்புகள் இருக்க வேண்டும்.

ஜன்னல்கள் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 3’ அகலம் 4’ உயரம் இருக்க வேண்டும். அறையின் அளவைப் பொறுத்து ஜன்னல்களின் எண்ணிக்கை இருக்கலாம். ஜன்னல்கள் அதிகமாக இருந்தால் காற்றோட்டம் அதிகரிக்கும் அதேநேரத்தில் privacy குறையவும் வாய்ப்புண்டு. வரவேற்பறை ஜன்னல்களை இன்னும் உயரமாக – அதாவது வீட்டின் தரைப்பகுதிக்கு சற்று மேலிருந்தே தொடங்கும்படிகூட அமைக்கலாம்.

கதவுகளும் ஜன்னல்களும் எதிரெதிர்ச் சுவர்களில் அமைந்தால் காற்று அதிக வேகத்தோடு உள்நுளையும். இதனால் அதிகக் காற்றடிக்கும் நாட்களில் அது தொந்தரவாகவும் இருக்கலாம். அதேநேரத்தில் ஜன்னல்கள் ஒரே சுவரில் இருந்தால் காற்றின் வேகம் குறைந்து காற்றோட்டம் குறைந்துவிடும்.

உங்கள் வீட்டின் சுற்றுச் சுவரோ, வெளியிலிருக்கும் அடர்த்தியான உயரமான செடிகளோ, ஜன்னலுக்கு வெளிப்புற கட்டுமான வேலைப்பாடுகளோ காற்றைத் தடுக்காது பார்த்துக்கொள்ளுங்கள். ஜன்னலுக்கு வெளிப்புற வடிவமைப்புகள் வீட்டினுள் நுழையும் காற்றின் திசையை மாற்றி அதைப் பயனற்றதாகக் கூட மாற்றிவிடக்கூடும். எனவே இதில் கவனம் தேவை.

காற்றின் திசையைப் பொறுத்து ஜன்னல்களை அமைக்கும் அதேநேரத்தில் சூரியனின் திசையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கையான சூரிய ஒளி மிக அவசியம் எனினும் நேரடியான சூரிய ஒளி அதிகநேரம் அறையினுள் விழுவது தொந்தரவாக இருக்கும். சூரியனின் திசையில் ஜன்னல்களை அமைக்கும்போது சூரிய ஒளியை தடுக்கும் வண்ணம் ஜன்னலில் வெளியே நிழல் தடுப்புகள் (Sunshade) அமைத்துக் கொள்ளலாம். அல்லது நிழல் கொடுக்கும் மரங்களைச் சிறிது இடைவெளி விட்டு நடலாம்.

 

ஜன்னல்களில் பொருத்தப்படும் கொசுவலைகள் காற்றோட்டத்தைத் தடுப்பதோடு தூசுகளின் உறைவிடமாகவும் இருப்பதால் படுக்கையில் பயன்படுத்தும் கொசுவலைகளைப் பயன்படுத்துவது நல்லது. மேலும் ஜன்னல்கள் இக்காலத்தில் பெரிதும் நழுவும் கண்ணாடிப் பலகைகளைக் (Sliding glass panels) கொண்டு மூடப்படுகின்றன. இவை ஜன்னலின் ஒரு பகுதி எப்போதும் மூடியிருக்கும்படி அமைவதால் இவற்றைத் தவிர்ப்பதோ அல்லது அந்த இழப்பை ஈடு செய்யும்படியானப் அகலமான ஜன்னல்களை அமைப்பதோ நல்லது.

நீங்கள் தரையில் படுக்கும் பழக்கம் உடையவராயின் 3’ அடி உயரத்தில் அமைக்கப்படும் ஜன்னல்கள் வழியாக நுழையும் காற்று உங்களைத் தழுவ வாய்ப்பில்லை. உள்நுழையும் காற்றின் திசையைக் கீழ் நோக்கித் திருப்பும்படியான Louvres எனப்படும் தடுப்புகளை அமைக்கலாம். அதேநேரத்தில் படுக்கைக்கு நேராக பொருத்தப்படும் ஜன்னல்களால் உங்கள் Privacy சமரசத்துக்கு உள்ளாகலாம். வீட்டினுள் உருவாக்கப்படும் போதுமானக் காற்றோட்டம் மின்சாரத் தேவையைப் பெருமளவில் குறைக்கிறது. அது பணத்தை மிச்சப்படுத்துவதோடு உடல் நலனையும் மேம்படுத்துகிறது. மின் சிக்கனமும் கட்டுமானப் பொருட்களின் தேர்வும் சூழலையும் பாதுகாக்க உதவுகின்றன.

வெளியே இதமான தென்றல் வீசிக் கொண்டிருக்கையில் நீங்கள் உங்கள் வீட்டினுள் மின் விசிறியின் கீழ் வியர்வையில் நனைந்தபடி அமர்ந்திருந்தால், உங்கள் வீட்டின் காற்றோட்டம் தடைபட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இறுதியாக மிக மிக முக்கியமாக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்.

கதவு ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். காற்று உள்ளே வரட்டும்.

  • ஜீயோ டாமின். ம
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments