உணவில் நீரில் காற்றில் பரப்பப்படும் புற்றுநோய்

இந்த அறிவியல் செய்தி, இங்கே கோனேரிப்பட்டியில் குத்தவைத்து இருக்கும் விவசாயிக்குப் போய்ச்சேர இன்னும் இருபது ஆண்டுகள் ஆகும். இன்று தமிழகமெங்கும் பெருவாரியாக அத்தனை நிலத்திலும் தெளிக்கப்படுவது
இந்த  GLYPHOSATE  களைக்கொல்லிதான்.

உலகில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன் படுத்தப்படும் களைக்கொல்லி இரசாயனத்தின் பெயர் GLYPHOSATE . நம் ஊர் பட்டி தொட்டியெல்லாம் இந்த களைக்கொல்லி மிகப் பிரசித்தியானது. “புல்லு, பூண்டுகூட பக்கத்தில் முளைக்காது; உன் கத்தரிச் செடி மட்டும் சந்தோசமாய் வளருமாக்கும்” என வேளாண்துறை கூவிக் கூவி விற்ற பொருள் இது. பிளாட்பாரத்தில், அழகைக் கெடுக்கும்(?) புல் வளராது இருக்க, ரயில் தண்டவாளத்தை ஒட்டி பார்த்தீனியமும் பிற செடியும் வளராமல் இருக்க, ”நோகாமல், நொங்கெடுக்காமல், வியர்க்காமல், வண்டியில் போய் விளையாடுவாங்களே”, பணக்கார கோல்ப் விளையாட்டு அதற்கு மைதானத்தில் மற்ற செடி வளராமல் பராமரிக்க என அத்தனைக்குமான விஷம் இந்த GLYPHOSATE  களைக்கொல்லிதான். பூச்சிக் கொல்லிகளான ‘‘மாலத்தியான், டயாசினான்” ஆகிய இரண்டும் இதே கூட்டத்தைச் சேர்ந்தவைதான். இந்த “மருந்து பாட்டில்கள்” அநேகமாக எல்லாக் காய்கறி விவசாயிகளின் ஓட்டு வீட்டுப் புழக்கடையின் ஓரத்தில் சொருகி இருக்கும். “எப்பா?, அமாசைக்காட்டுக்காரங்க வாங்கு வாங்கல்ல… இந்த முளகா மருந்து. ஒரு பாட்டில்; அப்புறம் டவுணாபீஸ்காரர் சொன்னாருல்லா..அந்த சூப்பர் டூப்பர் ஒரு பாட்டில் கொடு” என நேரடியாகக் கடையில் வாங்கும் கலாச்சாரம்தான் கிராமத்து விவசாயப் பண்பாடு. கடனில் வாங்கிய இந்த கொல்லிகளையெல்லாம் ”கலக்கு கலக்கு” என கலக்கித் தெளிக்க நிமிர்ந்து வளரும் வெண்டைக்காயைச் சாப்பிட்டால் “பிள்ளை மட்டும் கணக்கு போடாது. பிள்ளையாரும் நம் வாழ்நாள் கணக்கைப் போடுவார்” என அந்த வட்டிக் கணக்குப் பார்த்து பதறும் ஏழை விவசாயிக்குச் சத்தியமாய்த் தெரியாது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மரபணுப் பயிர்களுக்கான ஒரு ஊடக விவாதத்தில் பங்கேற்ற போது, ‘‘வேண்டாம் இந்த மரபணு பயிர்கள். ஏற்கனவே பூச்சிக்கொல்லியில் நொறுங்கி வருகிறோம்”, என பேசிய போது, அப்போது உயர் பதவியில் இருந்த வேளாண் அறிவியலாளர், “புற்றுக் காரணிக்கான பட்டியலில் பூச்சிக்கொல்லிகள் இல்லை தெரியுமா? எதனாச்சும் ரிசர்ச் பேப்பர் வச்சிருக்கீங்களா?” என ஆவேசமாகச் சண்டைக்கு வந்தார். ஆண்டு பத்து ஆகிவிட்டது. அவரும் ஓய்வுபெற்றிருக்கக்கூடும். ஆனால் உண்மை ஓயவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின்  INTERNATIONAL AGENCY FOR RESEARCH ON CANCER  என்ற அமைப்பு  GLYPHOSATE மற்றும் மாலட்டியான் டயாத்தியான் வகையறாக்களை  PROBABLE CARCINOGEN (GROUP 2A) & POSSIBLE CARCINOGEN (GROUP 2B)  அதாவது புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புள்ள காரணிகள் என அடையாளம் காட்டிவிட்டது. என்ன, இந்த அறிவியல் செய்தி, இங்கே கோனேரிப்பட்டியில் குத்தவைத்து இருக்கும் விவசாயிக்குப் போய்ச்சேர இன்னும் இருபது ஆண்டுகள் ஆகும். இன்று தமிழகமெங்கும் பெருவாரியாக அத்தனை நிலத்திலும் தெளிக்கப்படுவது இந்த  GLYPHOSATE  களைக்கொல்லிதான்..  “ROUNDUP இரசாயனம்” (அத்தனையையும் வளைத்துகட்டி கொல்கிறதாம்) என்ற பெயருடன் உலகெங்கும் இந்த இரசாயனம் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, மரபணு மாற்ற உணவுப் பயிர்கள் உற்பத்திக்கு வந்துவிட்டால் அந்தப் பயிர் பாதுகாப்பிற்கு இந்த GLYPHOSATE ன் தேவை மிக மிக அதிகமாம். புற்றுநோயின் பிடி அதிகம் உள்ள மேற்கத்திய நாடுகளில் இந்த நிலிசீறிபிளிஷிகிஜிணி போட்ட மரபணுப் பயிர் விவசாயம்தான் புற்றுநோய்க்கும் காரணமோ என்றும் இந்த ஆய்வு விரிகிறது.

இரத்தப் வெள்ளணுக்கள் புற்று நோய்  (NON HODGYNS LYMPHOMA), கணையப்புற்று நோய் (PANCREATIC CARCINOMA),  ஆண்களுக்கு வரும் புராஸ்டேட் புற்று நோய் (PROSTATIC CARCINOMA) ஆகிய புற்று வகைகளை இந்த பூச்சிக்கொல்லிகளும் களைக்கொல்லிகளும் கொண்டுவரும் வாய்ப்பு இருப்பதாக முதல் கட்ட ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டிவிட்டன. இதனை உலக சுகாதார நிறுவனம் அறிவித்த அடுத்த கணம் பல நாடுகளில்  GLYPHOSATE தடை செய்யப்பட்டுவிட்டது. நம் ஊரில் இதுவரை எந்த சத்தத்தையும் காணோம்.  சல்லடைக்கீரை, ஓட்டைக் கத்தரிக்காய், அழுக்குப் பப்பாளி, பூச்சிபட்ட கொய்யா என ஒதுக்கியவை எல்லாம் இந்த விஷவித்துக்கள் படாதவை அல்லது தொடாதவை என எடுத்துக் கொள்ளலாம். ‘பளபள’ என பாலிஷ் போட்டு, போஷாக்காய் விம்மியிருக்கும் காய்கறிகள் எல்லாமே PROBABLE/ POSSIBLE  விஷங்களைத் தொட்டுத்தான் விளைந்திருக்கும்.

எப்போது துவங்கியது இந்த சிக்கல்?

‘கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையடு இந்நான்கல்லது உணாவும் இல்லை’  (புறநானூறு: 335)

என்ற மாங்குடிக் கிழாரின் சங்க இலக்கியப் பாடலை வைத்துப் பார்க்கும் போது வரகு, தினை, கொள்ளு, அவரை என இந்த நான்கும்தான், நம் பிரதான உணவாக இருந்தது தெரிகின்றது; அவை வளர இந்த நச்சுக்கொல்லிகளின் நயவஞ்சகம் தேவையிருக்கவில்லை. ஆனால், இன்றைக்கு நூற்றுக்கணக்கான காயும் தானியமும் இருந்தும் நலவாழ்வு மட்டும் நசுங்கிக் கொண்டே போகின்றது. மழையை நம்பிய பயிர், மானாவாரிப் பயிர், ஆற்றுப் பாசனம், கிணற்றுப் பாசனம் என வாழும் நிலத்தையும் பருவத்தையும் பொழுதையும் சார்ந்து இருந்த விவசாயம் இப்போது காணாமல் போய்விட்டது.  2000அடிக்கு குழாய் பாய்ச்சி, சுடுநீர் உறிஞ்சி, உரமென்று, மருந்தென்று சொல்லி இரசாயன நச்சுக்களைக் கலந்து, புதுபுது வீரிய ஒட்டுரகப் பயிர்களோடு நாம் முறையற்று செய்யும் நவீன விவசாயம், பாமரனின் வயிற்றுப்பசிக்குப் பரி மாறியதை விட, பன்னாட்டு நிறுவன வணிகப் பசிக்கு இறைத்ததுதான் ஏராளம்.  ‘மன்னுமைப் பொருளியம்’ (Economy of Permanence) பேசிய ஜே.சி குமரப்பாவின், காந்தியின் விவசாயத் திட்டங்களைப் ஒட்டுமொத்தமாய்ப் புறந்தள்ளியதன் விளைவு, இன்று நம் பாமரனின் அலுமினியத் தட்டில் உலக நாடுகள் தடைசெய்து வைத்துள்ள 13 வகை இரசாயன நச்சுக்களுடன் காய்கறி தானியங்களைப் பரிமாறுகிறோம். கூடவே அவன் மரபணுவோடு மரண விளையாட்டும்  விளையாடி வருகின்றோம்.  GLYPHOSATE  களைக்கொல்லி விவகாரம் சமீபத்தில் வெளிவந்திருக்கும் தரவு. இதுபோல இன்னும் பல காத்திருப்பில் உள்ளனவாம்.  இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது, சாமானியனின் காய்ச்சலுக்கும் வசதிபடைத்தவனின் மூட்டில் வரும் பசிக்கும் இரையாகும், “ரொட்டி” யில் அதை மென்மையாக்க, POTASSIUM BROMATE சேர்ப்பதால் புற்று நோய்க்கு சிகப்புக் கம்பளம் விரிப்பதை Centre for Science and Environment   அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

உண்ணும் ஒவ்வொரு கவளத்திலும் உறிஞ்சும் ஒவ்வொரு துளி நீரிலும், சுவாசிக்கும் மூச்சு காற்றிலும் புற்று புறப்படுகிறது என்கிறார்கள். மரபணுப் பயிராக, களைக் கொல்லியாக, பூச்சிக் கொல்லியாக, நறுமணமூட்டியாக, பதப்படுத்தியாக, பக்குவப்படுத்துவோனாக, பாதுகாப்பியாக ஒவ்வொரு துளி உணவிலும் நடத்தப்படும் வணிக வன்முறையை உதாசீனப்படுத்தாமல் உற்றுப்பார்த்துத்தான் ஆகவேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை என ஒன்று மனிதருள் ஆரோக்கியமாய் நடமாடும்.

மருத்துவர் கு. சிவராமன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments