‘வலியும் வாழ்வும்’ – செறிவூட்டப்பட்ட அரிசியால் யாருக்கு நன்மை

இந்தியப் பிரதமர் கடந்த ஆண்டு (2021) தனது விடுதலை நாள் உரையில் இந்திய மக்களுக்கு இனிமேல் சத்துமிகுந்த வலியூட்டப்பட்ட அரிசியைப் பொது வழங்கல் திட்டம் போன்ற அரசுத்திட்டங்களின் வழியாகக் கொடுக்க உள்ளதாகப் பேசினார். (விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் துன்பம் தரக்கூடிய திட்டம் என்பதால் கட்டுரையில் Fortified Rice என்பது ‘ வலியூட்டப்பட்ட அரிசி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது) அதற்கான காரணங்களைப் புள்ளி விவரங்களுடன் அரசுத் தரப்பில் இருந்து யாரும் வெளியிடவில்லை. நிதி அயோக், உணவு மற்றும் பொதுவழங்கல் துறை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர அதிகாரத்துறை (FSSAI) ஆகிய யாரும் ஏன் இந்த அரிசியை இந்திய மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற தரவுகளை வெளியிடவில்லை. அதற்கு மாற்றாக எப்படி வழங்கப்போகிறோம் என்றே விரிவாகக் கூறுகிறார்கள். அதிலும் எந்த அளவு சத்து இரசாயனங்களை யாரிடமிருந்து இறக்குமதி செய்யப்போகிறோம் என்றும் வெளியிடவில்லை.

அது என்ன வலியூட்டப்பட்ட அரிசி (fortified rice)? இந்தியக் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அனீமியா எனப்படும் இரத்தசோகை உள்ளதாகவும் மேலும் சில நுண்ணூட்டச் சத்துக்குறைபாடு உள்ளதாகவும் அதனால் அவர்களது வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் கருதிச் செயற்கையாக அரிசியைத் தயார் செய்து, அதில் இரும்புச்சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்ற இரசாயனங்களைச் சேர்த்துச் சத்து உண்டாக்கி ரேசன் கடைகள் எனப்படும் பொது வழங்கல் முறை மூலம், மாநில அரசுகளின் நிதியையும் எடுத்துக்கொண்டு ஒன்றிய அரசு கொடுக்கப்போகிறது! அப்பாடா மூச்சு முட்டுகிறதா? இதுமட்டுமல்ல, இப்படிச் செய்யப்படும் அரிசியில் சேர்ப்பதற்கான சத்துக்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து ஏறத்தாழ 3000 கோடி ரூபாய்க்கு வாங்கி அரிசியில் சேர்த்துத் தரப்போகின்றது. அந்த வேலைகளும் தொடங்கிவிட்டன.

OPERATIONAL GUIDELINES ON PILOT SCHEME FOR FORTIFICATION OF RICE AND ITS DISTRIBUTION UNDER PDS

தமிழ்நாட்டிலும் அந்தத் திட்டம் திருச்சி மாவட்டத்தை முன்னோடியாகக் கொண்டு நியாயவிலைக்கடைகள் மூலம் செயலாக்கம் பெறுகின்றன. இந்தியாவில் அதிக அளவு இரத்தசோகை, சத்துக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பீகார், மேற்குவங்காளம், அரியானா, அந்தமான் நிகோபார் (ஒன்றியப்பகுதி) ஆகியவையே முன்னணியில் உள்ளன. இந்த மாநிலங்களுக்கு வலியூட்டப்பட்ட அரிசித்திட்டம் இல்லை. ஒருவேளை பீகார் மக்கள் கோதுமை உண்பதாகக் கொண்டால், மேற்கு வங்காளத்திற்கு ஏன் போகவில்லை? அத்துடன்  குறைவான இரத்தசோகை முதலிய பாதிப்புகள் கொண்ட கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இத்திட்டம் அறிமுகமாகியுள்ளது ஏன்?

இம்மாதிரியான கருத்துக்களின் ஊற்றுக்கண் எதுவாக இருக்கிறது என்றால், அது உலகச் சுகாதார நிறுவனமும் அதன் துணை அமைப்புகளாகவும் உள்ளன. குறிப்பாக பில்கேட்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இதற்கு வழங்கும் நிதிகளின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. முன்னர் அரசுகள் அளித்த நிதியில் ஐ.நா. நிறுவனங்கள் தனித்தன்மையுடன் இயங்கி வந்தன. தற்போது நிதி ஆதாரங்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்து இயங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

உண்மையில் இந்த வண்ண அரிசிக்கு ஒதுக்கும் தொகையை மரபரிசிகளுக்கு ஒதுக்கினால் பலநூறு உழவர்களுக்கும் பயன்கிட்டும், மரபு நெல்லினங்களும் பாதுகாக்கப்படும், மக்களுக்கும் சத்தான அரிசி உள்ளூரிலேயே கிடைக்கும். ஆனால் ஒன்றிய அரசு 5 பெரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 3000 கோடி ரூபாய்களை அள்ளி வழங்குகிறது  (பார்க்க. டவுண்டுஎர்த், செப். 2019).

உலகம் முழுவதும் இந்த மாதிரியான செயற்கை ஊட்டமேற்றும் முறைக்கு எதிர்ப்புகள் உருவாகி வருகின்றன. அனைத்து மக்களும் உண்பார்கள். யாருக்கு என்ற சிக்கல் உள்ளது என்று யாருக்கும் தெரியாது. இரசாயனங்களை உணவில் சேர்க்கும் போது அளவுக்கு அதிகமானால் அதுவே நஞ்சாக மாறிவிடும். என்று அமெரிக்கன் சர்னல் ஆப் கிளினிக்கல் நூட்ரீசியன் தெரிவிக்கிறது.

இப்படிக் கோடி கோடியாக அள்ளித்தந்து எந்தச் சத்தை வாங்கப் போகிறார்கள் என்று பார்த்தால் வைட்டமின் பி-12 என்று கூறுகிறார்கள். அரிசியைப் பழைய சோறாக்கிச் சாப்பிட்டால், அல்லது நீராகாரமாக்கிக் குடித்தால், ஏன் கேப்பைக் கூழ், கம்பங் கூழ் குடித்தால் வைட்டமின் பி-12 சாதாரணமாகக் கிடைக்கும் இதை நாம் சொல்லவில்லை. அரசு உணவு ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றன. பழையசோறு சாப்பிடும் பழக்கத்தையும் கூழ் குடிக்கும் பழக்த்தையும் நம்மிடம் இருந்து இழிவு படுத்தி விரட்டியது யார்? அதற்கு எதற்கு 3000 கோடி ரூபாய்கள்? அந்தப்  பழக்கத்தை மீட்டு விட்டாலே போதுமல்லவா?

அடுத்தாக இரும்புச்சத்தைச் செயற்கை அரிசி (வலியூட்டப்பட்ட அரிசி) மூலம் தரப்போகிறோம் என்கிறார்கள். பொதுவாகத் தீட்டாத அரிசியில் இரும்புச்சத்து உண்டு, அதிலும் செந்நெல் யாவற்றிலும் இரும்புச்சத்து இன்னும் கூடுதல் உண்டு, கருப்பு நெல்லிலும் உண்டு. கருங்குறுவை என்ற அரிசியில் மற்ற அரிசியை விட ஆறு மடங்கு இரும்பச்சத்து கூடுதலாக உள்ளதை ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாகக் காடியாக (நொதிக்க வைத்து) மாற்றும்போது கருப்பு அரிசிகளில் மிகச் சிறப்பாக இரும்புச்சத்து கிடைக்கிறது. அதனால் தான் சித்த மருத்தவர்கள் கருங் குறுவைக் காடியை ஒரு துணைமருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். ஆக பழைய சோற்றுக்கு மாறினால் 3000 கோடி ரூபாய் மிச்சம். இந்தத் தொகையை மரபு நெல்லினங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தலாம்.

அடுத்ததாக முருங்கைக் கீரையில் இவர்கள் கூறும் அனைத்துச் சத்துகளும் உள்ளன. இதற்கு எந்த இறக்குமதியும் செய்ய வேண்டாம். ஒரு கிலோ அரிசியில் 28 மி.கி இரும்புச் சத்து உள்ளதாகக் FSSAI கூறுகிறது. ஆனால் முருங்கை இலையில் ஒரு கிலோவிற்கு 54.9 மி.கி. இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. (பார்க்க:https://ejmcm.com/pdf_2965_60490be228805e96a5f29fbb7010be58.html)

தீர்வுகளை எத்தனையோ வழிகளில் தேடுவதை விட்டு குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் இலாபம் தரும் முறையைக் கையாளுவது நாட்டிற்கு நல்லதல்ல. செர்மனியின் பிஏஎஸ்எப், சுவிட்சர்லாந்தின் லான்ட்சா, பிரான்சின் அடிசியோ முதலிய ஐந்து நிறுவனங்களுக்கு மட்டும் தொகை அளிக்கப்படவுள்ளது.

‘ஒற்றை மயத்தின்’ கூறான ‘ஒரேநாடு ஒரே ரேசன்கார்டு’ மூலம் சில பன்னாட்டு நிறுவனங்கள் பயன்பெறப் போகின்றன. ஆனால் அல்லும் பகலும் உழைத்துச் சத்தான மரபின நெல்லை உருவாக்கும் பரந்துபட்ட மக்களுக்கான எந்தத் திட்டமும் இல்லை. இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமான அமுல் உணப்பொருளில் வலிவூட்டும் முறையைக் கடுமையாக எதிர்த்துள்ளது. அதன் மேலாண்மை இயக்குநர் சோதி இதழ்களில் பேட்டியளித்துள்ளார். அதற்காக இந்த நிறுவனத்தை FSSAI  மிரட்டிய செய்திகளெல்லாம் வந்தன.

டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்து அறிவியல் நிறுவனத்தைச் சார்ந்த டாக்டர் உமேஷ்கபில் என்பவர் வலியூட்டப்பட்ட உணவை எடுத்துக்கொள்வதால் சத்துக் குறைபாடு சரியாகும் என்று எந்த மெய்ப்பிக்கக் கூடிய எந்தத் தரவுகளும் இல்லை என்று கூறுகிறார். (Dr. Umesh Kapil of the department of gastroenterology and human nutrition unit at the All India Institute of Medical Sciences, Delhi)

அனைத்துத் திட்டங்களையும் மையப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டத்தையும் ஒன்றிய அரசு நோக்குவதாகத் தெரிகிறது. இதனால் மாநிலங்களின் தனித்த உணவுப் பண்பாட்டிற்கு ஊறு ஏற்படும்.

எஸ்கிமோக்கள் ஒரு நாளைக்கு நான்கு கிலோ இறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக உலகில் உள்ள அனைவரும் அப்படி உண்ண வேண்டிய கட்டாயமில்லை. பீகாரிகள் கோதுமையை உண்கிறார்கள் என்பதற்காக, அனைவரும் கோதுமைதான் உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது, ஏன் தமிழர்கள் அரிசி உண்கிறார்கள் என்பதற்காக உலகில் உள்ள அனைவரும் அரிசிதான் உண்ண வேண்டும் என்று அடம் பிடிக்கலாகாது.

ஒன்றிய அரசை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையான சுதேசி சாக்ரன்மஞ்ச் என்ற அமைப்பும் கூட இந்த வலியூட்டும் அரிசிக்குத் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதை நாம் உற்றுக் கவனிக்க வேண்டும்.

அனைத்தையும் சந்தையாக்குவது என்பது ஆபத்தானது, குறிப்பாக உணவும், உடல்நலமும் அறமற்ற சந்தைக்குள் வரும்போது அது சீர்செய்ய இயலாத ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பிட்ட காலத்தில் செய்து முடித்து விட்டு அடுத்த வேலைக்குப் போவதற்கு இஃது எழுத்தறிவு போன்ற திறன் கொடுக்கும் திட்டமல்ல, தொடர்ந்து தரவேண்டிய பணியாகும். இதில் தற்சார்பும் நன்னலமும் மிக முதன்மையானவை.

செயற்கை அரிசி, பால், கோதுமை, சர்க்கரை என்று பெரும் வணிக  நிறுவனங்களின் கைகளில் நமது உணவு இறையாண்மையைக் கொண்டு சேர்க்கும் பரப்புதல் பணியில் PATH, பில்கேட்டிசின் மெலின்டா கேட்ஸ் பவுண்டேசன்  போன்ற அமைப்புகள் ஈடுபடுகின்றன. இவை பன்னாட்டு  நிறுவனங்களின் அமைப்புகள் அல்லது அவற்றிடமிருந்து பெரும் நிதிபெறும் நிறுவனங்கள். இவை உலகம் தழுவியக் கருத்தியலை, தங்களுக்கானத் தரவுகளை உருவாக்கிக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக டால்பெர்க் (Dalberg) என்ற நிறுவனம் இந்தியாவில் 70 விழுக்காடு மக்கள் சத்துக் குறைபாட்டால்  அவதிப்படுகின்றனர் என்று தெரிவிக்கிறது. ஐஜேஎம்ஆர் கட்டுரையில் எங்கும் அந்தத் தகவல் இல்லை. அதன் முன்னுரையில் முன்பு இருந்த சத்துக்குறைபாட்டு அளவான 50-60 விழுக்காடு குறைந்து கொண்டு வருகிறது என்றுதான் குறிப்பிடுகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டுக் குழந்தைகளில் கடும் சத்துப் பற்றாக்குறை 1% அளவிற்கே உள்ளது. ஆனால் ஓரளவு சத்துக் குறைபாடு 40 முதல் 50 வரை உள்ளது. இப்படியாகத் தரவுகளைத் தங்களுக்கு ஏற்ப மாற்றி ஒரு கருத்தை உறுதிசெய்ய முனையும் அமைப்புகள் அரசுக்கு ஆலோசனை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளன.

வரலாற்றில் கல் உப்பிற்கானத் தடையைப் பற்றிப் பார்ப்போம். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பே கல் உப்பை விற்கக்கூடாது என்று தடை விதித்தார்கள். ஆங்கிலேயர் உப்பிற்கு வரி விதித்தபோது, அதை முறியடிக்க உப்புக் காய்ச்சும் போராட்டத்தைக் காந்தியடிகள் முன்னெடுத்தார். அவரது பெயரால் விடுதலை பெற்ற இந்தியா, கடலில் இருந்து சாதாரண மக்கள் உப்பை எடுத்து விற்க முடியாத நிலைக்குப் போனதை நினைத்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

இந்தியாவின் தேவையான 60.5 லட்சம் டன்னில் 59.7 லட்சம் டன் சந்தையில் விற்கப்பட்டு விட்டதாக உப்பு ஆணையர் நிறுவன அறிக்கைத் தெரிவிக்கிறது. அப்படியானால் ஏறத்தாழ 99 விழுக்காடு மக்கள் அயோடின் உப்பை எடுத்து விட்டார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆக, இந்தியாவில் அயோடின் பற்றாக்குறை அறவே இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இந்தியாவில் அயோடின் பற்றாக்குறை இல்லாத ஒரு மாநிலம் கூட இல்லை என்று தேசியக் குடும்ப நலக் கணக்கீடு (NFHS) தெரிவிக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாகச் சட்டம் போட்டுச் சாதாரண உப்பைத் தடுத்து விட்டார்கள்.  அப்படியானால் இதன் மூலம் பயன்பெற்றவர்கள் யார்? ஆண்டுக்கு 1080 கோடி ரூபாய்கள் வரை சாதாரண உப்பளத் தொழிலாளர்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டுப் பெருந் தொழிற்சாலைகளுக்குக் கைமாற்றப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. உப்பும் கொடுத்தாகி விட்டது, சிக்கலையும் சரிசெய்ய முடியவில்லை.

அயோடின் உப்பைப் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது ‘கல்உப்புக்குத் தடை’ என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாதாரண உப்புடன் அயோடின் சேர்ப்பது கலப்படம் என்று நீதிமன்றம் கூறியது. அது வலியூட்டப்பட்ட அரிசிக்கும் பொருந்தும். சாதாரண அரிசியை வாங்குவதற்கான உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு. அனைத்து மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு, அனைத்து மக்களும் வாங்கும் பொது வினியோகத் திட்ட அரிசியில் ஊட்டம் சேர்க்கிறேன் என்ற பெயரில் ‘கலப்படம்’ செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்.

பிரேசில் நாட்டில் செய்யப்பட்ட ஆய்வில் அதிகமான இரும்புச்சத்து உட்கொள்ளப்பட்டதால் உடல்நலத்திற்கு கேடான விளைவுகளைச் சந்தித்ததை அறிய முடிகிறது. (Assunção M., Santos I., Barros A., Gigante D., Victora C.G. Flour fortification with iron has no impact on anaemia in urban Brazilian children—Corrigendum. Public Health Nutr. 2013;16:188. doi: 10.1017/S136898001200376X.)

அதுமட்டுமல்லாது இந்தச் செயற்கை அரிசியை இருப்பு வைக்கும்போது அதிலுள்ள வைட்டமின் போன்ற சத்துக்கள் குறைந்து வருவதை கம்போடியாவில் செய்த ஆய்வுகள் காட்டுகின்றன. இதை இந்தியாவில் விற்பவர்களும் சத்துகளின் ஆயுட்காலம் 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் மூன்று மாதத்தில் காலாவதியாகும் பொருளை எப்படி ரேசன் கடைகளில் வழங்க முடியும். மூன்று மாதங்களுக்குள் அனைத்துச் சரக்குகளையும் விற்க முடியுமா போன்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன. எதற்கும் பதில் இல்லை. எவ்வளவு வேகமாக விற்றுத் தீர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக விற்க முனைகிறார்கள்.

நாம் தீர்வுகளை நம்மிடமிருந்து தேடுவதை விட்டுவிட்டு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து தேடுகின்றோம். இது தற்சார்பிற்கு வழிவகுக்காது.

– பாமயன்

ஒன்றிய அமைச்சரவையின்  முடிவு குறித்த செய்திக் குறிப்பைப் படிக்க

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
SANGEETHA
SANGEETHA
1 year ago

NENGA SOLRA ELLAMEY PURIUTHU. BUT EPDI NAMMA ETHIRPA THERIVIKIRATHU? INDIA MAKKALAI SEERALIKRATHULA DHA CENTRAL GVT THEEVIRAMA IRUKU.