“Don’t look up” தன் அழிவை கற்பனை செய்யும் மனிதன்

அண்மையில் நாசா வெளியிட்ட பிரபஞ்சத்தின் புகைப்படங்கள் பெருமளவில் இணையதளத்தில் ஒற்றை வாசகத்துடன் இணைத்து பகிரபட்டன. இம்மாபெரும் பிரபஞ்சத்தில் பூமியும் மனிதனும் ஒரு சிறு துளியளவே ,இத்தனை பிரம்மாண்டத்தின் முன் அவன் தனக்கென கட்டியெழுப்பி வைத்திருக்கும் மூட்நம்பிக்கைகள், அவனது பேராசைகள் உள்ளிட்ட அனைத்தும் பயனற்றவை.  மானுடமைய நோக்கத்தில் மட்டுமே இயங்கும் சமூகத்திடம் அதன் இருப்பு எத்தனை சிறியது என்பதை உணர்த்தும் நோக்கத்தில் இக்கூற்று புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால், இம்மாபெரும் பிரபஞ்சத்தில் தனது இருப்பை கண்டுணர்ந்து கொண்ட ஒரே உயிரினம் மனிதன் மட்டும் தான் என்று உணரும்போதே மனிதன் சுதந்திரமானவனாய் தன் அனைத்து செயல்களுக்கும் நியாயங்கள் கற்பித்துக் கொள்ளக்கூடிய தகுதி பெற்றவனாகி விடுகிறான் இல்லையா. மனிதனைக் காட்டிலும் இயற்கை சக்தி வாய்ந்தது என மனிதன் உணர்ந்துவிட்ட பின் இயற்கையில் எழும் ஒரு சுழிப்பு ஒட்டுமொத்த மானுட இனத்தையே துடைத்தழித்துவிடும் என்று அறிந்துகொண்டபின் தன்னுடைய பேராசைகளை கீழ்மைகளை துறந்து அவன் கடமையுணர்ச்சியோடு இருப்பதற்கு அவனுக்கு எந்த நிர்பந்தமும் இல்லையென்றாகி விடுகிறதே.

எதுவொன்றை நிர்ணயிக்கும் இடத்தில் அவன் இல்லையென்று உணர்ந்தபோது இத்தனை பெரிய மாபெரும் உயிரியக்கத்தில் அவன் தன்னை எதற்காக பொறுப்புள்ளவனாய் உணர்வான். பூமியை நோக்கி விழக்கூடிய ஒரு விண்கல் அவன் வாழ்நாள் முழுவதும் உண்டாக்கிய சிதைவுகளை இல்லாமலாக்கிவிடும் என்கிறபோது அவன் எதற்காக தன் செயல்களுக்கான பொறுப்பை தன் தலையில் தூக்கிச் சுமக்க போகிறான். பேரழிவுகள் குறித்தான திரைப்படங்களைப் பார்க்கும்போது எல்லாம் எனக்குள் எழும் கேள்வி இதுதான். சென்ற ஆண்டின் இறுதியில்  வெளியான “Dont look up” மற்றுமொரு பேரழிவு குறித்த திரைப்படம். பூமியை அழிக்கக்கூடிய அளவிற்கு பெரிய விண்கல்லின் வருகையை அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கும் இரு வானியலாளர்கள் அதை அரசிற்கும் மக்களிடமும் தெரிவிக்க முனைகிறார்கள். ஆனால், முற்றிலும் தகவல் நுகர்வு சமூக வலைதளங்களின் அபரிமிதமான கட்டுக்குள் இருக்கும் சமூகத்திற்கும் அதிகார நலனிற்காக மட்டுமே செயல்படும் அரசிடமும் அறிவியல் பூர்வமான ஒரு உண்மையை கொண்டு சேர்ப்பதற்கு அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும், நவீன சைபர்சொசைட்டியிடம் ஒரு உண்மை சென்று சேருவதற்கு அது எப்படியெல்லாம் பரிணாமமடைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை இந்த படத்தில் காணலாம். மனித உணர்வுகள் அனைத்தும் நுகர்வுப் பொருளாகிப்போன ஒரு சமூகச் சூழலில் ஒரு உண்மையை நிலைநாட்ட இப்படத்தில் எதிர்கொள்ளப்படும் போராட்டங்களை    சமகாலத்தில் காலநிலை மாற்றம்  குறித்தான விழிப்புணர்வு, அதற்கான ஏற்பு, அதை மறுக்கும் தரப்பு, மேலும் ஆராயவேண்டிய காரணிகள் ஆகியவற்றுடன் நாம் பொறுத்திப் பார்க்கலாம். இன்றையச் சூழலில் காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதில் சமூக வலைதளங்களை பெருமளவில் சார்ந்திருக்கும் நிலையில் நாம் யூகித்தறியாத எதிர்விளைவுகளை அது எற்படுத்தக்கூடிய சாத்தியங்களை ஆராய்வது மிகவும் அவசியமாகிறது.

உணர்வு நுகர்ச்சி

இன்று நாம் எதார்த்த உலகிலிருந்து வெகு தொலைவிற்கு வந்துவிட்டிருக்கிறோம். ஒரு சராசரி மனிதனின் அன்றாட செயல்பாடுகளில் நேரடியான வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பிரதிபலித்து வெளிப்படும் எதிர்வினைகள்  இன்று மிகவும் அரிது. நமது புறப்பொருட்களுடன் இருந்த உறவு முற்றிலும் அழிந்துபோய் நமக்கான சுயம் என்பது எதன் மேலும் பிரதிபலித்து உரையாடாமல் சமூக வலைதளத்தின் மாயைகளால் கட்டமைக்கப்படுகிறது. நம் உணர்வு வெளிப்பாடுகள் அனைத்தும் அதனால் தீர்மானிக்கப்படுகின்றன. எந்த வித காரண காரியங்களும் இல்லாமல் அனைவரும் ஒரே செயலை நகலெடுத்தபடி இருக்கிறோம். அமெரிக்காவில் இருக்கும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு பாட்டிற்கு போடும் ஒரு ரீல்ஸை எண்ணிலடங்காத மக்கள் பிரதியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த வித அர்த்தத்தைதும் தாங்கி நிற்காமல் அது செய்யபடுவது ஒன்றே அதன் இருப்பிற்கு அர்த்தமாகியிருக்கிறது. நம்மை நாம் ஒரு தனி சுயமாக அடையாளம் காண முடிவதில்லை. உதாரணமாக பெரும் துன்பத்தில் இருக்கும் ஒருவர் தான் துயரத்தில் இருப்பதாக  ஒரு பதிவில் வெளிப்படுத்திய பின் வரும் அனுதாபங்களை படித்தபின்னரே தனது துன்பத்தை உணர்ந்து கண்ணீர் விடுகிறார். உணர்தல் பகிர்தல் என்கிற சுழற்சி மாறி முதலில் பகிர்தல் அதன் வழியாக தன்னை உணர்தல் என்கிற வகையில் மாற்றம் அடைந்திருக்கிறது நம் சுயம். பிறர் நம்மை உணர்வதன் மூலம் நம்மை நாம் உணர்கிறோம்.எந்த பயணமும் செல்லாமல் எந்த நாட்டிற்கும் போகாமல் இருந்த இடத்திலிருந்தே உலகம் முழுதும் சுற்றிய உணர்வை அனைத்து உணவு வகைகளையும் சாப்பிட்ட நிறைவை நம்மால் அடைந்துவிட முடிகிறது. எதார்த்தத்துடன் எந்த இணக்கமும் இல்லாமல் அதை விட்டு வெளியேறாத வகையில் நிஜ அனுபவங்களை ஒத்த பிரதியனுபவங்களால் நிறைவடைந்துவிடுகிறோம். நமக்குத் தேவையான வீடியோக்களை தகவல்களை நமக்கு வழங்கிக்கொண்டிருப்பதே இந்த சமூக வலைதளங்களின் வேலை.

இன்று சமூக வலைதளத்தில் ஒரு உண்மை பகிரப்படுகிறது என்றால் அது அந்த உண்மையின் நிரூபனத்தன்மைக்காக அல்லாமல் அதை நுகரப்படும் சுவாரசியத்திற்காக மட்டுமேயாக பகிரப்படுகிறது. இந்தப் படத்தில் நாம் காணும் இத்தகைய சமூகத்தில் அக்கறைகொண்ட ஆய்வாளர்கள் உணர்ச்சிப்பூர்வமாக உண்மையைப் பேசும் போது அது காரணங்கள் இல்லாமல் கேலிக்கை பொருளாக மாற்றப்படுகிறது. அதன் உண்மைத்தன்மையை மக்கள் விமர்சிப்பதற்கு மாறாக அதை பேசியபோது ஒருவரின் முகம் எவ்வளவு நகைச்சுவையாக இருந்ததென்பதே அங்கு பேசுபொருளாகிறது. உலகம் அழியப்போகிறது என்கிற அறிவியல் உண்மையை உணர்ந்து கொள்ள நமக்கு தகவல்கள் மட்டுமே போதுமானதாக இல்லை. மாறாக அதை ஒரு பாப் பாடகரை கொண்டு மிக உருக்கமான வரிகளால் பாடலாக அமைத்து. அதை ஒளிபரப்பி சோகமயமான ஒரு உணர்வெழுச்சிகளை மக்களிடம் எழுப்பிய பின்னரே தனக்கான ஆதரவை பெற முடிகிறது அந்த ஆராய்ச்சியாளர்களால் . இந்த கட்டத்தில் படம் தவரவிட்ட அல்லது அது சென்று உணராத உண்மை என்னவென்றால் அப்படி உணரப்படும் ஒரு உண்மை மக்களுக்கு ஒரு நுகர்வு பொருள் மட்டுமே. அதன் உண்மை அவர்களுக்கு முக்கியமல்ல அது அளிக்கும் துயர பாவனைதான் அவர்களுக்கு வேண்டும்.பூமி அழியப்போகும் போது ஒட்டு மொத்த மானுடமும் கைகோர்த்து இணைந்து நிற்கும் மிகையுணர்வு அளிக்கும் கிளர்ச்சி மட்டுமே. அன்றாடங்களில் சலித்து ஒரு பெரு உணர்ச்சி வெடிப்புக்கு காத்திருக்கும் சலிப்பான மக்களுக்கு அதுதான் தேவை.

இதே போக்கை காலநிலை மாற்றம் குறித்தான வெகுசன ஊடகங்கள், பத்திரிகை நிறுவனங்களில் நாம் பார்க்க முடியும். பெருவெள்ளங்கள், புயல், நிலச்சரிவுகள் என பேரிடர் காலங்களில் மட்டுமே காலநிலை தொடர்பான செய்திகளை அப்போதைய சூழலில் நுகர்வுப் பொருளாக அதைப் பேசுகின்றன. காலநிலை மாற்றத்தின் பின்னிருக்கும் காரணங்கள், அதன் விளைவுகள் பேரிடர்களுக்கு பிந்தைய நிலை என மேற்கொண்டு எதைப்பற்றியும் அவை அக்கறை கொள்வதில்லை. இத்தகைய பேரிடர்களின் போது அதன் மூலமாக மனிதாபிமான உணர்வெழுச்சிகளை வழங்குவதே அவற்றின் நோக்கம்.

மிகையான உணர்வெழுச்சிகளை வழங்கி வழங்கி ஒரு கட்டத்தில் ஒரு பிரச்சனை குறித்தான நமது உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன. ஒரு குறிபிட்ட காலத்திற்கு மேல் அது நமது கவனத்தை ஈர்க்க முடிவதில்லை. அது மேலதிகமான ஒரு திடுக்கிடலுடன் நம்மை வந்து சேர்ந்தால் ஒழிய அது நம்மை சுவாரசியப்படுத்துவதில்லை.

இன்றைச் சூழலில் காலநிலை மாற்றம் குறித்தான விழிப்புணர்வை சரியான வகையில் சேர்ப்பதற்கு மேற்கத்திய நாடுகள்  இதழியல் துறையில் பல்வேறு வழிவகைகளை மேற்கொண்டு வருகிறது. செய்தி வழங்கும் முறை, அதில் பயன்படுத்தப்படும் மொழி, ஒவ்வொரு மொழியிலும் சூழலியல்  தொடர்பான சொற்களை உபயோகிப்பது எனப் பல்வேறு வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. சூழலுக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்பட்ட தமிழ்ப் பண்பாட்டில் இன்று மொழியியல் ரிதியாக மிகச் சில முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மனித இனமே பெரியது.

அழிவு பற்றிய சிந்தனைகள் மனிதனுக்கு இயல்பாகவே ஒரு கற்பனை விளையாட்டுபோலதான். பேரிடர்களைப் பற்றிய படங்கள் பெருமளவில் ரசிக்கப்படுவதற்கான காரணமும் இதுதான். ஆனால், மனிதனின் இந்த விசித்திர கற்பனைக்குத் தீனி போடும் இத்தகைய படங்கள் செய்வது முன்பே சொன்னதுபோல் நம்மை விட இயற்கை பெரியது என்று அதனிடம் சரணடையும் மனப்போக்கை உண்டாக்கி நம்மை நம் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பதேயாகும். படத்தில் ஒரிரு நொடிகளே வரும் ஒரு காட்சி இதற்கு சரியான உதாரணமாகும். பூமி அழியப்போகும் இறுதி நாளில் உளச்சோர்வை போக்க மக்கள் ஒன்று கூடி நிர்வாணமாக கேளிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். மற்றொரு பக்கம் நம் உலகம் அழியும் தருணத்தில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் நண்பர்களுடனும் நம் குடும்பத்துடனும் ஒரு நல்ல இரவுணவை சாப்பிட்டு மகிழ்ந்தவாறே உயிரிழப்பது தான். இத்தகையப் படங்களில் இறுதியாக காட்டப்படும் ஒட்டுமொத்தமான அழிவு அனைவருக்கும் சமமான ஒன்று வழங்கப்படும் என்னும் கற்பிதத்தை நமக்கு அளிக்கிறது. காலநிலை மாற்றம் ஒவ்வொரு சமூக படிநிலைகளில் இருக்கும் மக்களின் இயங்குச் சூழலுடன் ஒன்றிணைந்து அவர்களின் ஒடுக்குமுறைகளின் பக்க விளைவாய் செயல்படக்கூடியது. அதனால் தான் அதை நாம் அனைவருக்குமான ஒற்றை அழிவு என்கிற அர்த்தத்தில் பேசமுடியாது. விவசாயம் அழிந்து நிலமிழந்து நிற்கும் மக்கள் ஒருபுறம் என்றால் மீனவர்கள் கூட்டம் கூட்டமாக இடப்பெயர்வுக்கு உள்ளாகுவது மறுபக்கம். நகரத்தில் வாழும் ஒருவரும் அவரது வேலைவாய்ப்பு பறிபோவது. இதில் அனைவருக்குமான சமமான அழிவும் அதன் மூலம் எழும் மனிதாபிமான உணர்வு ஒடுக்கும் சமூதாயத்திற்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம். இதை எல்லாம் உணர்வதற்கு எந்த விண்கல்லும் பூமியை நோக்கி வரவேண்டியதில்லை. தற்சமயம் நாம் இருப்பதே சீரழிவின் விளிம்பில் தான். மாபெரும் அழிவை கற்பனையில் பார்த்துப் பார்த்து நாம் நம் கண்முன் அழிந்துகொண்டிருப்பதை உணர மறுக்கிறோம். மீண்டும் மீண்டும் இயற்கை மனிதனைக் காட்டிலும் பன்மடங்கு பெரியது என்று சொல்லுபோது நாம் செய்வது என்ன? மனிதனின் எத்தனை அந்நியாயங்களுக்கு பிறகும் பூமி தன்னை சீர்செய்துகொள்ள முடிவெடுத்தால் அது மனிதனின் இருப்பை அழித்துவிடும் என்பதையா? பூமியின் நலனுக்காக தன் ஒட்டுமொத்த இருப்பையே மனிதன் தியாகம் செய்யும் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், நாம் சொல்ல வேண்டியது உயிரியல் பரிணாமத்தில்  மிகவும் மேம்பட்ட பிரஞ்கைப்பூர்வமான ஒரு உயிரினத்தின் கையில் இந்த பூமி வசப்பட்டிருக்கிறது. அது தன் நலனிற்காக எத்தனை அழிவையும் சாத்தியப்படுத்தக்கூடியது. தான் நுகர்ந்து நிறைவடைய அது தன்னையே அழித்துக்கொள்ளும் கற்பனைகளுடன் விளையாடக்கூடியது. அது பூமியைக் காட்டிலும் பலமடங்கு அழிவை உண்டாக்கும் திறன்கொண்டது. பூமி அல்ல நாம் தான் அதை விட பல மடங்கு பெரியவர்கள். அதை ஏற்றுக்கொண்டு நம் பொறுப்புகளிலிருந்து விடுபடாமல் நம் செயல்களுக்கு நாம் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதே மேற்கொண்டு உத்வேகமிக்க செயல்களுக்கு வழிவகுக்கும்.

  • camus.gmail.com
  • ராகேஷ் தாரா
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments