காட்டு வளங்களைச் சுரண்டுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா 2023 மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை மக்களவையில் இன்று தாக்கல் செய்தது.
ஒன்றிய அரசு கடந்த மார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. இம்மசோதாவிற்கு எதிர்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த கூட்டுக் குழுவில் 21 மக்களவை உறுப்பினர்களும், 10 மாநிலங்களவை உறுப்பினர்களும் என மொத்தம் 31 பேர் இடம் பெற்றிருந்தனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஜேந்திர அகர்வால், எம்.பி., (லோக்சபா) இக்குழுவின் தலைவராக இருந்தார். இக்குழுவின் முதல் அமர்வில். மசோதாவுக்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பு அமைச்சகமான சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் பிரதிநிதிகளால் குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இரண்டாவது முதல் ஐந்தாவது அமர்வுகளில், உள்துறை, பாதுகாப்பு, பழங்குடியினர் விவகாரங்கள், ரயில்வே (ரயில்வே வாரியம்), சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய பத்து ஒன்றிய அமைச்சகங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை குழு கேட்டறிந்தது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மூன்று மாநில அரசுகளின் பிரதிநிதிகளின் கருத்துகளையும் கேட்டறிந்தது. ஆறாவது மற்றும் ஏழாவது அமர்வில், இந்த விஷயத்தில் சில நிபுணர்களின் கருத்துக்களையும், குழுவிடம் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்த சில தனிநபர்களின் கருத்துக்களையும் குழு கேட்டது.
மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளை வரவேற்று ஒரு பத்திரிகை அறிக்கையையும் குழு வெளியிட்டது. இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை கேட்டு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், மொத்தம் 1309 கோரிக்கைகள் பரிந்துரைகள் குழுவால் பெறப்பட்டன. இதில் பெரும்பாலான கருத்துகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களால் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்குழு 2023 ஜூன் 2 முதல் ஜூன் 7 வரை ஸ்ரீநகர், கவுஹாத்தி மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு அனைத்து வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மீதமுள்ள இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் உட்பட பதினைந்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தது.
ஒடிசா மற்றும் ஆந்திராவில் மசோதாவின் பல்வேறு விதிகள் குறித்து இராணுவம் Northern Command (XV Corps), எல்லையோர சாலைகள் அமைப்பு(BRO), எல்லையோர காவல்படை (BSF), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), ஹைட்ரோகார்பன் இயக்குனரகம்(DGH) and ONGC போன்ற பல்வேறு பங்குதாரர் அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் குழு விவாதித்தது.
பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குபின் இக்குழு 2023 ஜூலை 11 அன்று நடைபெற்ற தனது ஒன்பதாவது அமர்வில் வரைவு அறிக்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்டது. இறுதியில் ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இம்மசோதாவில் கோரிய அத்தனை திருத்தங்களையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் இரா. கிரிராஜன் இம்மசோதாவை எதிர்த்து கருத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும் இந்திய தேசிய காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியச் சேர்ந்த தலா 2 எம்.பிக்கள் எதிர் கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க. உறுப்பினர் கிரிராஜன் தான் சமர்ப்பித்த எதிர் அறிக்கையில் (Dissent Note) சட்டத்தின் பெயரை சமஸ்கிருத்தில் மாற்றுவது, பொதுப்பட்டியலில் உள்ள காடுகளின் மீதான அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குவதால் மாநில உரிமைகள் பறிக்கப்படுவது, சில திருத்தங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளது ஆகிய காரணங்களுக்காக இம்மசோதாவை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் முதல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வரை 400 க்கும் மேற்பட்ட சூழலியலாளர்கள் கொண்ட குழு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு வனப் பாதுகாப்பு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி கடிதம் எழுதியுள்ளனர். இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். இம்மசோதாவை நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.
JPC Report FCA2023