செய்திக் குறிப்பு
செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் ஆபத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் மனு
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியின் பையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க தமிழ் நாடு மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அரசு 15.3.2022 அன்று, செறிவூட்டப்பட்ட அரிசியின் விநியோகம் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசியின் தரத்தைப் பராமரிக்கும் பொருட்டு தர மேலாண்மை நெறிமுறைகளுக்கான நிலையான இயக்க நடைமுறையை (SOP) வெளியிட்டது. தமிழ்நாடு மற்றும் பிற மாநில அரசுகள் பயனாளிகளுக்கு நல்ல தரமான செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்காக இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
ஒன்றிய அரசு 04.18.2022 அன்று “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோகத் திட்டம் (Targeted Public Distribution System (TPDS)) மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்திய அரசின் பிற நலத் திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியை படிப்படியாக வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.
தமிழ் நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் துவங்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுகளின் செறிவூட்டல்) ஒழுங்குமுறைகள், 2018ன் படி ” தலசீமீயா (Thalassemia), சிக்கில் செல் அனிமீயா(Sickle Cell Anaemia ) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இதை உண்ண வேண்டும்” எனும் எச்சரிக்கை வாசகத்தை செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யும் பைகளில் அச்சிட்டிருப்பது அவசியம். ஆனால், மேற்கூறியவாறு தமிழ் நாட்டில் இச்செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படவில்லை.
ஏற்கெனவே தலசீமியா, சிக்கிள் செல் அனிமீயாவால் பாதிக்கப்பட்டோர் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொள்வதால் அவர்களுக்கு வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இந்த எச்சரிக்கை வாசகத்தை அச்சிடுவது மிகவும் அவசியமாகும். எந்த எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் இந்த அரிசி விநியோகிக்கப்படுவது தவறு எனக்கூறி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், சட்டவிதியின் படி உரிய எச்சரிக்கை வாசங்களுடன் மட்டுமே செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத்திட்டத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும், இதைப் பின்பற்றாமல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கக் கூடாது எனவும் கோரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் 11.08.2023 அன்று விசாரணைக்கு வந்த போது, பூவுலகின் நண்பர்களின் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு. இராதாகிருஷ்ணன் வாதங்களை முன்வைத்தார். அரிசி அடைக்கப்பட்டுள்ள கோணிப்பையில் இந்த எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோணிப்பையில் உள்ள எச்சரிக்கை வாசகம் நுகர்வோருக்கு எப்படி தெரியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து செப்டம்பர் 21ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி தமிழ் நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.