பிளாச்சிமடா கோக் ஆலை ஒரு சட்ட சரித்திரம்

கேரள மாநில அரசின் அழைப்பின்பேரில்தான் ஹிந்துஸ்தான் கோககோலா மென்பான நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டில் தனது உற்பத்தியை துவக்கியது. தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகா, பெருமாட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிளாச்சி மடா உள்ளிட்ட கிராமங்கள் கேரளாவின் நெற்களஞ்சியம் என்று புகழ்பெற்றவை. இந்த பிளாச்சிமடா கிராமத்தின் வளமிக்க பகுதியில் 42 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தியை துவக்க எண்ணியபோது, உலகத்தில் எங்குமே பெறாத ஒரு புதிய அனுபவத்தை அடையப்போவதை கோக் நிறுவனம் கற்பனைகூட செய்திருக்காது. பழங்குடி மக்களும், பட்டியல் இன மக்களும் அதிகம் வசிக்கும் பகுதிகள் சூழ்ந்திருந்த கோக் நிறுவன வளாகத்தில் 65க்கும் அதிகமான ராட்சத ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட்டு இரவும், பகலுமாக நீரை சுமார் 5 லட்சம் முதல் 15 லட்சம் லிட்டர் இறைக்கத் துவங்கின. நாள் ஒன்றுக்கு 5,61,000 லிட்டர் மென்பானங்களை கோக் நிறுவனம் தயாரிக்கலாம் என்று கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்திருந்தது. இதன் காரணமாக வளமான வேளாண் பகுதியான பிளாச்சிமடாவும், சுற்றுப்புற கிராமங்களும் நீர்ப்பற்றாக்குறையை அனு பவிக்கத் தொடங்கின. மேலும் குளிர்பான தயாரிப்பின்போதும், பாட்டில்களை கழுவி சுத்தம் செய்யும்போதும் வெளியிடப்படும் கழிவுப்பொருட்கள் சுத்திகரிக்கப்படாமல் நிலத்தில் விடப்பட்டது. இதன் காரணமாக கோக் வளாகத்திற்கு அருகிலிருந்த நிலமும், நிலத்தடி நீரும் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. விளைச்சல் குறைந்ததோடு, விளைபொருட்களின் தரமும் குறைந்தது. அப்பகுதியில் வசிக்கும் மக்களின் உடல்நலமும் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்கள் பரவியதாகவும் கூறப்பட்டது. மக்கள் கோக் நிறுவனத்திற்கு எதிராக போராடத் தொடங்கினர். அரசு வழக்கம்போல போராடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முனைந்தது. ஆனால் ஆதிவாசி மக்களும், தலித் மக்களும் அரசின் இரும்புக்கரத்தை கொண்டு அஞ்சாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த 2003 ஆண்டில் பெருமாட்டி கிராம பஞ்சாயத்து நீர்வளம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இதற்கிடையில கோக் நிறுவனத்திற்கு அளித்த அனுமதியை பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்து புதுபிக்க மறுத்ததோடு, உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு கடந்த 2003ம் ஆண்டில் உத்தரவிட்டது. கிராமப் பஞ்சாயத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோக் நிர்வாகம், கேரள மாநில அரசிடம் மேல் முறையீடு செய்தது. இதையடுத்து நீர் தொடர்பான நிபுணர் குழு ஒன்றை அமைக்குமாறும், அந்தக் குழு பரிந்துரையின் பேரில் இந்தப் பிரச்சினையில் முடிவு மேற்கொள்ளுமாறு கேரள மாநில அரசு, கிராம பஞ்சாயத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பெருமாட்டி கிராமப் பஞ் சாயத்து தொடுத்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ண நாயர், கோக் மென்பான ஆலையை மூடுமாறு பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்து பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தார். 2004ம் ஆண்டில் கேரள அரசின் உத்தரவுப்படி கோக் ஆலை மூடப்பட்டது. 2005ம் ஆண்டு ஏப்ரலில் கோக் ஆலை தொடர்ந்த வழக்கில் தினமும் 5 இலட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்க அனுமதி அளித்ததோடு, கோக் ஆலைக்கு அனுமதியை புதுப்பிக்குமாறு பெருமாட்டி கிராம பஞ்சாயத்துக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் எம். ராமச்சந்திரன் மற்றும் கே. பாலச்சந்திரன் ஆகியோர் கொண்ட கேரள உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவில், நிலத்தின் உரிமையாளர் நிலத்தடி நீரை எடுப்பதற்கு தடை செய்யும் சட்டம் எதுவும் நடைமுறையில் இல்லாத நிலையில், கோக் நிறுவனம் நிலத்தடி நீரை எடுப்பதற்கு பெருமாட்டி கிராம பஞ்சாயத்து அனுமதி மறுக்க முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் கோக் ஆலைக்கு அனுமதியை புதுப்பிக்க பெருமாட்டி கிராமப் பஞ் சாயத்து மறுப்பு தெரிவிக்கவே, கோக் ஆலை கேரள உயர்நீதிமன்றத்தை மீண்டும அணுகியது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோக் ஆலைக்கு இரண்டு வாரங்களில் அனுமதியை புதுப்பிக்க வேண்டும், தவறினால் அனுமதி பிறப்பிக்கப்பட்டதாக கருதி கோக் உற்பத்தியை துவக்கலாம் என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து கோக் ஆலைக்கு மூன்று மாதங்களுக்கு அனுமதி அளித்து பெருமாட்டி கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டது. 2006ம் ஆண்டில் கோக் ஆலை இயங்கும் அனுமதியை புதுப்பித்த பெருமாட்டி கிராம பஞ்சாயத்து 13 நிபந்தனைகளை விதித்தது. அவற்றில் உள்ளூர் பகுதியில் நிலத்தடி நீரை கோக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை மிகவும் முக்கியமானது. கோக் நிறுவனத்துக்கு ஆதரவாக கேரள உயர்நீதிமன்ற பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கேரள மாநில அரசு ஒரு வழக்கையும், கேரள மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒரு வழக்கையும், பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்து மூன்று வழக்குகளையும் தொடர்ந்துள்ளன. இந்த அனைத்து வழக்கு விசாரணைகளும் சுமார் 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இவற்றுக்கிடையே அப்பகுதியில் கோக் மென்பான தயாரிப்பு ஆலை அமைக்கப்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து வகையான இழப்புகளும் மதிப்பிடப்பட்டன. கோககோலா ஆலையால் பிளாச்சிமடா பகுதி மக்களுக்கு சுமார் 216 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை கோக கோலா நிர்வாகம் ஈடுசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த இழப்பு குறித்த வழக்குகளை விசாரிப்பதற் கென சிறப்பான தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க கேரள மாநில அரசு முன்வந்தது. “பிளாச்சிமடா கோக்கோலா பாதிக்கப்பட்டோர் நிவாரணம் மற்றும் இழப்பீடு சிறப்பு தீர்ப்பாயம்” அமைப் பதற்கான சட்ட முன்வடிவு கடந்த 2011ஆம் ஆண்டில் கேரள மாநில சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைக்கப் பட்டுள்ள நிலையில், இந்த “பிளாச்சி மடா கோக்கோலா பாதிக்கப்பட்டோர் நிவாரணம் மற்றும் இழப்பீடு சிறப்பு தீர்ப்பாயம்” அமைப் பதற்கான சட்ட முன்வடிவை ஏற்கமுடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள காலக் கெடுவான ஐந்து ஆண்டுகள் காலாவதியாகி
விட்டதாலும், கேரளாவில் உள்ள ஏழை விவசாயிகள் சென்னையிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு வருவது சிரமம் என்ற கருத்துகளை மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் கோககோலா மீதான அதிரடி தாக்குதலை கேரள மாநில அரசு தொடுத்துள்ளது. பிளாச்சிமடா பகுதியில் உள்ள நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக எடுத்ததன் மூலமாகவும், நிலத்தடி நீரை நச்சுப்படுத்தியதன் மூலமாகவும் அப்பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் மற்றும் பட்டியல் இன பழங்குடியினரின் வாழ்வாதாரங்களை அழித்ததாக கோககோலா நிர்வாகம் மீது, பட்டியல் இன மக்கள் மற்றும் பட்டியல் இன பழங்குடிகள் (வன்கொடுமை தடுப்புச்) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு செல்லும் பாதையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கேரள மாநிலத்திற்குள் கோக்கோலா ஆலை நிர்வாகம் இழைத்த சூழல் அநீதிகளுக்கு நிவாரணம் தேட கேரள மக்கள் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் இது போன்ற குளிர்பான ஆலைகள் எந்த எதிர்ப்பும், விமரிசனமும் இல்லாமல் இயங்குவது வியப் பிற்குரிய அம்சமே!

சட்டசிட்டன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments