காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இந்தியாவின் பங்களிப்பு செயல்திட்டத்தை(NDC) ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான அமைப்பிற்கு(UNFCC) வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
03.08.2022 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. பாரீஸ் ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்டது போல், காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலுக்கு உலகளாவிய நடவடிக்கையை வலுப்படுத்துவதை நோக்கிய இந்தியாவின் பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில் இந்த தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இந்த NDC-யானது பிரதமர் மோடி கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டில் கூறிய பஞ்சாமிர்தக் கொள்கைகளை ஒட்டியே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் தனது முதல் NDC -யை ஐ.நா. சபையிடம் அளித்தது. எட்டு இலக்குகளை உள்ளடக்கிய அந்த NDC-யில் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கார்பனின் சார்பை 30%-33% வரை குறைப்போம் எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது புதுப்பிக்கப்பட்ட NDCயில் கார்பனின் சார்பை 45% குறைப்போம் எனவும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குத் தேவைப்படும் எரிசக்தித் தேவையில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய NDCயில் இது 40 விழுக்காடாக இருந்தது.
மேலும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் இயற்கை வளப்பாதுகாப்பின் மதிப்பீடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆரோக்கியமான மற்றும் வளங்குன்றா வாழ்க்கை முறையை பரப்பும் வகையில் LIFE( ‘Lifestyle for Environment’) எனப்படும் மக்கள் பிரச்சார இயக்கம் தொடங்கப்படும் என்றும் புதுப்பிக்கப்பட்ட NDCயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய NDC காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு குடிமக்களை மையப்படுத்திய அணுகுமுறையை கையாளப் போவதாகவும் இந்தியாவை மாசற்ற ஆற்றல் மாற்றத்தை நோக்கி வழிகாட்டுவதை இலக்காகவும் கொண்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி இந்த புதுப்பிக்கப்பட்ட NDC ஆனது பிரதமர் மோடி கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டில் கூறிய பஞ்சாமிர்தக் கொள்கைகளை ஒட்டியே அமைக்கப்படிருந்தாலும் ”2030-ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 500 கிகாவாட்டாக இந்தியா அதிகரிக்கும்” மற்றும் ”இந்தியா தனது கார்பன் உமிழ்வில் 1 பில்லியன் டன் அளவைக் குறைக்கும்” என்கிற பிரதமர் மோடியின் அறிவிப்பு புதிய NDCயில் இடம்பெறவில்லை.இது 2070ம் ஆண்டில் இந்தியா பூஜ்ய உமிழ்வை அடையும் என்கிற இலக்கை கடுமையாகப் பாதிக்கும் என சில காலநிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
”இந்தியாவின் தற்போதைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கு என்பது 2030ம் ஆண்டிற்குள் 175GW ஆக உள்ளது. 2070ம் ஆண்டுக்கு பூஜ்ய உமிழ்வை அடைய வேண்டுமானால் 2030 வரையில் குறுகிய காலத்தில் அடையக் கூடிய திட்டங்களை வகுக்க வேண்டும்” என IEEFA அமைப்பைச் சேர்ந்த ஆற்றல் பொருளாதார நிபுணர் விபுதி கார்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட NDC-யானது நாட்டின் வளர்ச்சிப்பாதைகளில் கரியமிலவாயு வெளியேற்றங்களை குறைக்க உதவும் என்றும் இது நாட்டின் நலன்களை பாதுகாப்பதோடு, அதன் எதிர்கால வளர்ச்சித் தேவைகளுக்கும் பாதுகாப்பை அளிக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
-செய்திப் பிரிவு