“பழங்குடியினருக்கெல்லாம் என்ன சார் பிரச்சனை இருக்கு. பழங்குடியினர்னு சான்றிதழ் இருந்தாப்போதும். அவங்க எவ்ளோதான் குறைவா மதிப்பெண் எடுத்தாலும், இட ஒதுக்கீடு மூலமா அவங்களுக்கு கல்லூரிகளில் எளிதாக எடம் கெடச்சிரும். அப்டியே வேலையும் கெடச்சிரும்” என்பது நம் எண்ணங்களில் ஆழப்பதிந்துள்ள கருத்து. ஆனால், எதார்த்தத்தில் மத்திய மற்றும் மாநில அரசுப்பணிகள், நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்றளவும் பழங்குடியினரின் பங்கேற்பு மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது. மேலும், அணைக்கட்டுகள், சரணாலயங்கள் அமைத்தல், மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பழங்குடியினர் நாடு முழுவதும் தொடர்ந்து இடப்பெயர்வுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கப் படுகின்றனர். இந்த சூழலில் தான், மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தி. இலஜபதிராய் எழுதிய “தமிழகத்தில் தொல்குடிகளும் காடுகளும் – ஒரு அறிமுகம்” என்ற நூலை ஜுன் மாதம் கீழைக்காற்று பதிப்பகம் வெளி யிட்டுள்ளது. அடியான், அரநாடன், கம்மாரா, குறிச்சான், குடியா, குறுமன், கொச்சு வேலன், கொண்டா காப்பு, கொறகா, மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மன்னான், பள்ளேயன் இது போன்ற பெயர்கள் நம்மில் பலருக்கு பரிச்சய மாயிருக்க நிச்சயமாய் வாய்பில்லை. இது போன்ற தமிழக பழங்குடி யினர்களின் பெயர்களே பொதுவாக தெரிந்திருக்காத நிலையில், தலை முறை தலைமுறையாய், அடர்ந்த வனத்திற்குள் வாழ்ந்து, நகர வாழ்க்கைக்கு எவ்வித தொடர்பும் அறிமுகமும் இல்லாமல் காட்டுக் குள்ளேயே மறைந்து போகும் பழங் குடியினர் குறித்தும் அவர்களது பழக்க வழக்கம், கலாச்சாரம், உணவு, உடைகள், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க சாத்திய மில்லை. நூலின் முகப்பு அட்டைப்படத்தில் இடம் பெற்றுள்ள பணியர் இன மூதாட்டி “நஞ்சி”யின் புகைப்படம் சிறப் பான தேர்வு. கட்டி அட்டையுடன், நல்ல வழுவழுப்பான தாளில், 390 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வு நூலில் பழங்குடியினர் வரைந்த ஓவியங்கள், தமிழக பழங்குடியினர் மற்றும் வனம், 58 வகையான பறவைகள், 23 வகையான விலங்குகள் உள்ளடங்கிய 450 வண்ண புகைப்படங்கள், 165 அடிக்குறிப்புகள். 25 ஆங்கிலம் மற்றும் 31 தமிழ் நூல்கள் துணையுடன், இந்தியாவிலுள்ள பழங்குடியினரின் பட்டியல் உள்ளிட்ட நமக்கு பெரிதும் அறிமுகமில்லாத எண்ணிலடங்கா அரிதிலும் அரிதான செய்திகளை உள்ளடக்கியுள்ளது. அரசியல், பொருளாதார, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும், உண்மையான பழங்குடியின மக்கள் பலருக்கு இன்னமும் ஜாதி சான்றிதழ் கிடைப்பதில் பல்வேறு சிக்கல் நீடிக்கும் நிலையில், பழங்குடியினர் அல்லாத மக்கள் எளிதாக பழங்குடியினர் சான்றிதழ் பெற்று வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதுடன், வளமடைந்தும் வருகின்றனர் என்பதை 1961, 2001 மற்றும் 2011ம் ஆண்டின் பழங்குடியினர் மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின் வாயிலாக நிருபித்துள்ளார் ஆசிரியர்.
1961ல் 3 பேர் மட்டுமே இருந்த “கொண்டா காப்பு” இனம் 2011ல் 521 பேராகவும், 1961ல் 8 பேர் மட்டுமே இருந்த “கொண்டா ரெட்டி” இனம் 2011ல் 9847 பேராகவும், 1961ல் 112 பேர் மட்டுமே இருந்த “குறுமன்” இனம் 2011ல் 30,965 பேராகவும் உயர்ந்துள்ளதற்கும் அரசு அதிகாரிகளுக்கும் நிச்சயமாய் தொடர்பில்லாமல் இல்லை. பழங்குடியினர் இந்து மதத்திற்கு முந்தைய மதத்தையும், பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்கள். ஆகவே பழங்குடியினருக்கு மதம் கிடையாது. நடப்பிலுள்ள விதிகளின்படி கிறித்தவ, இஸ்லாம் போன்ற மதங்களுக்கு மாறினாலும் அவர்களது பழங்குடியினர் தகுதி தொடரும் என்பதனை பல்வேறு தீர்ப்புகளை சான்றாக்கிக் கூறுகிறார். கடந்த 25.05.2016 அன்று நரிக்குறவர் உள்ளிட்ட மூன்று இனத்தினை, தமிழக பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட நடுவணரசு ஒப்புதல் வழங்கியது உள்ளிட்ட சமீபத்திய செய்தி வரையிலும் இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இது தமிழக பழங்குடியினர் குறித்த ஒரு ஆய்வு நூல் என்பதில் சந்தேகமே இல்லை. பழங்குடியினர் மத்தியில் பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினருக்குமான புத்தகமாக இருக்கிறது. மேலும், பழங்குடியினர் குறித்த ஒரு புதிய அறிமுகத்தை பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் கொடுக்கிறது. சிங்கவால் குரங்குகள் வாழும் சரணாலய காடுகளின் அருகே, தனியார் காடுகளின் நடுவே அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோயில் உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்ட பத்து பக்க “தமிழகத்தில் காடுகள்” மற்றும் எட்டு பக்க “தொல்குடிகளின் அடையாளச் சிக்கல்கள்” எனும் அட்டகாசமான இரு கட்டுரைகளை இப்புத்தகத்தில் இணைத்துள்ள ஆசிரியர், “காடுகளைப் பாதுகாக்க தொல்குடிகளால் மட்டுமே முடியும். காடுகளைப் பொருளீட்டும் கறவை மாடுகளாகக் கருதும் எண்ணமற்ற தொல்குடியினரை காடுகளிலிருந்து அன்னியப்படுத்துவதை அரசுகள் நிறுத்தினால் மட்டுமே காடுகளை காப்பாற்ற முடியும்“ என்று அறுதியிட்டுக் கூறுகிறார். தமிழகத்தில் அருகி வரும் பழங்குடியினர், அவர்களது கலாச்சாரம், அவர்களைக் குறித்த தரவுகள் போன்றவற்றை பாதுகாத்திடும் வகையில், 1961ம் ஆண்டில் நடத்தியது போல பழங்குடியினர் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், சர்வதேச தரத்தில் “பழங்குடியினர் பல்கலைக் கழகம்” உருவாக்கப்பட வேண்டும் எனும் நூல் ஆசிரியரின் கோரிக்கைகள் நிச்சயமாய் புதிதானதும், அத்தியாவசியமான ஒன்றுமாகும்.
ராபர்ட் சந்திரகுமார்
அலமாரி