உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழிவில் 60% பங்கு அயல் படர் உயிரினங்கள்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
அயல் படர் உயிரினங்கள்
இப்பூவுலகின் பலகோடி ஆண்டுகள் நீண்ட பரிணாமத்தில் பல இலட்சம் உயிரினங்கள் அவ்வவற்றின் வாழிடத்தின் சூழலுக்கு ஏற்றபடி நன்கு தகவமைந்திருக்கின்றன. இயற்கையாகவே அமைந்த மலைகள் கடல்கள் போன்ற அரண்களாலும் வேறுபட்ட சூழலுக்கு பொருத்தமற்ற தகவமைவுகளாலும் இவற்றின் பரவல் இயற்கையாகவே தடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, துருவத்துப் பென்குயின்களால் இந்தியாபோன்ற வெப்பமண்டல நாடுகளின் கடற்பரப்புகளை அடைய முடியாது. அப்படியே அடைந்தாலும் அவற்றால் பிழைத்திருக்க முடியாது.
ஆனால், இதற்கு மாறாக சில உயிரினங்கள் புதிய வாழிடச் சூழல்களை அடையும்போது தளைத்து வாழும் பண்புகளைப் பெற்றிருக்கின்றன. அரிதாக சுனாமி, வெள்ளம், புயல்கள் போன்றவற்றால் இயற்கையாக ஒரு வாழிடத்திற்கே உரிய உயிரினங்கள் இன்னொரு வாழிடத்தை அடைவதுண்டு. கண்டங்களிலிருந்து பிரிக்கப்பட்ட தீவுகளை அடைந்து அங்கே தளைத்து வாழும் உயிரினங்களை இவற்றுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
இயற்கையாக அன்றி மனித நடவடிக்கைகளால் வேண்டுமென்றே திட்டமிட்டோ, அறியாமையாலோ, தவறுதலாகவோ, சரியான புரிதலின்றியோ பல உயிரினங்கள் ஒரு வாழிடத்திலிருந்து இன்னொரு வாழிடத்துக்குக் குடிபெயர்கின்றன. இவ்வாறு குடிபெயரும் உயிரினங்கள் புதிய சூழலை ஆக்கிரமித்து தளைத்து வாழ்வதை ‘அயல் படர்’ உயிரினங்கள் என்கிறோம்.
ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தைல மரங்களை இதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம். இப்படியான அயல் உயிர்கள் இங்கு தளைத்து வளர்கின்றன என்றாலே அதன் பொருள் இங்கு இன்னொரு உயிருக்கான உணவை அவை எடுத்துக்கொள்கின்றன என்பதே. தைல மரங்கள், உண்ணிச் செடி எனப்படும் லாந்தனா (அமெரிக்க வெப்ப மண்டலத் தாவரம்) போன்ற தாவரங்களின் பரவலால் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப்பன்மையம் சீரழிந்துவருவது நாம் நன்கு அறிந்த ஒன்றாகும்.
இதுபோன்றே, தமிழ்நாட்டின் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன் (Cat fish), திலேப்பியா போன்ற மீனினங்கள் இங்கிருந்த பெரும்பாலான இயல் மீனினங்களை முற்றிலும் அழித்துவிட்டிருக்கின்றன. எந்த மோசமான சூழலிலும்கூட வாழ்ந்துவிடும் தன்மைகொண்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் பள்ளிக்கரணை சதுப்புநிலம் போன்ற மிகுந்த உயிர்ப்பன்மைய முக்கியத்துவமிக்க நீர்நிலைகளில் ஆக்கிரமித்து சிறிய மீனினங்களையும் அவற்றின் முட்டைகளையும்கூட அழித்து விட்டிருக்கிறது. இதனால் பறவைகளின் முக்கிய உணவு ஆதாரம் சிதைக்கப்படுவதோடு இயலுயிர்களின் பன்மைத்துவமும் குறைகிறது.
பல இலட்சம் ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்டப் பகுதியின் சூழலுக்குத் தகவமைந்து வாழும் உயிரினங்கள் புதிய அயல் படர் உயிரினங்களை எதிர்கொள்ள முடியாமல் அழிகின்றன. இது உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் கடும் தாக்கத்தை உருவாக்குகிறது. அது மட்டுமின்றி, இவை தொற்றுநோகளைப் பரப்பும் வாகனமாகவும் பல நேரங்களில் மாறிவிடுகின்றன. உலக அளவில் அதிக தொற்று நோய் மரணங்களுக்குக் காரணமான டெங்கு நோய் பரப்பும் ஏடிஎஸ் கொசுவானது நம் மண்ணைச் சார்ந்ததல்ல. கோவிட் தொற்றுக்குக் காரணமான கொரோனா நச்சுயிரிகூட உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கும் ஒரு அயல் படர் உயிரினம்தான்.
சீமைக் கருவேலம், சென்னை உட்படத் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாகக் காணப்படும் ஒரு வகை நத்தை (African Gaint Snail), தென்னமரிக்க வெப்ப மண்டலத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ஆகாயத் தாமரை, அமெரிக்க வெப்ப மண்டலத்தைச் சார்ந்த பார்த்தீனியம் போன்றவை நம் மாநிலத்தில் பெருவாரியாக அச்சுறுத்தலாக உணரப்பட்டிருக்கும் அயல் படர் உயிரினங்களாகும்.
நவீன உலகத்தில் பொருட்களின் ஏற்றுமதி – இறக்குமதி, வாகனங்கள் மற்றும் மனிதர்களின் போக்குவரத்து அதிகரிப்பு, கனிமங்கள் போன்றவற்றுக்கான வாழிட அழிப்பு, உலக வெப்பமயமாதல் மற்றும் தீவிர காலநிலை நிகழ்வுகள், அழகுச் செடிகள், வளர்ப்புப்/செல்லப் பிராணிகள் என்ற பெயரால் சந்தைப்படுத்தப்படும் உயிரினங்கள் போன்றவற்றால் விலங்குகள் எப்போதும் இல்லாத அளவில் ஒரு சூழலிலிருந்து இன்னொரு சூழலை அடைகின்றன. உதாரணமாக, வெப்பநிலை அதிகரிப்பால் வெப்ப மண்டல சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைப்பாங்கான குளிர்பகுதிகளுக்கு பரவும் பூச்சிகளைக் குறிப்பிடலாம். இவை உணவுப் பாதுகாப்புக்கும்கூட பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
இந்த அயல் படர் இனங்களை கண்டறிவதும் அவற்றின் பரவலைத் தடுத்து அழிப்பதும் மிகவும் பொருட்செலவு உடையது மட்டுமின்றி பலநேரங்களில் நடைமுறை சாத்தியமற்றதும்கூட. சில நேரங்களில் புதிய சூழல்களில் நன்கு பரவியிருக்கும் அவற்றை அழிக்க முயல்வதுகூட மோசமான விளைவுகளை உருவாக்கக்கூடும். இவற்றுக்கு தொழில்நுட்பங்களைத் தாண்டிய மிக ஆழமான சூழல் புரிதலும் ஆய்வும் தேவைப்படும்.
உயிர்ப்பன்மையம் மற்றும் சூழல் அமைவுகள் வழங்கும் சேவைகள் குறித்தான அறிவியல் மற்றும் கொள்கைக்கான பன்னாட்டுக் குழு (Intergovernmental Platform on Biodiversity and Ecosystem Services) மேற்கொண்ட ஆய்வில் உலகமுழுவதும் அயல் படர் உயிரினங்கள் இயற்கை, பொருளாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின்படி 37,000 க்கும் மேற்பட்ட அயல்படர் உயிரினங்கள் மனித நடவடிக்கைகளால் உலகெங்கிலும் உள்ள பிராந்தியங்கள் மற்றும் உயிர்த்தொகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 3,500 க்கும் மேற்பட்டவை கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடியவை.
2019ஆம் ஆண்டில் IPBES வெளியிட்ட ‘Global Assessment Report’ எனும் ஆய்வறிக்கை உயிர்ப்பன்மைய அழிவுக்குக் காரணமான 5 முக்கியக் காரணிகளில் அயல் படர் உயிரினங்களும் ஒன்று எனக் கண்டறிந்தது. இதற்கான ஆதாரங்களையும் இதன் தாக்கத்தைத் தடுப்பதற்கான கொள்கை அறிவுரைகளையும் வழங்குமாறு உலக நாடுகள் IPBES-யிடம் கோரின. அதனடிப்படையில் 49 நாடுகளைச் சேர்ந்த 86 நிபுணர்கள் இணைந்து உலகமுழுவதும் உள்ள பழங்குடிகள், உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் கூடிய 13 ஆயிரம் ஆவணங்களைக் கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆராய்ந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
இந்த உயிரியல் ஊடுறுவல்களின் தாக்கங்களில் 34% அமெரிக்காவிலிருந்தும், 31% ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்தும், 25% ஆசியா மற்றும் பசிபிக்கிலிருந்தும், சுமார் 7% ஆப்பிரிக்காவிலிருந்தும் பதிவாகியுள்ளன என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் பெரும்பான்மை தாக்கங்கள் நிலத்தில் (சுமார் 75%) பதிவாகியுள்ளன – குறிப்பாக காடுகள், மற்றும் பயிரிடப்பட்ட பகுதிகளில் – நன்னீர் (14%) மற்றும் கடல் (10%) வாழ்விடங்களில் கணிசமாக குறைவாகவேப் பதிவாகியுள்ளன . அயல் படர் உயிரினங்கள் தீவுகளில் மிகவும் தீங்கு விளைவித்துள்ளன, இவற்றின் தாக்கம் இப்போது அனைத்து தீவுகளிலும் உள்ளூர் தாவரங்களின் எண்ணிக்கையை விட 25% அதிகமாக உள்ளது.
”இன்று அறியப்படும் 37,000 அயல் படர் இனங்களில் 37% இனங்கள் 1970 முதல் பதிவாகியுள்ளன . பெரும்பாலும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் மனித பயணங்களின் அதிகரிப்பால் இவை ஏற்பட்டுள்ளன. ‘business-as-usual’ எனப்படும் வழக்கம்போலான வணிக நடவடிக்கைகள் தொடர்ந்தால் , அயல் படர் இனங்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று நாங்கள் கணிக்கிறோம்” என IPBES குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ஹெலன் ராய் தெரிவித்துள்ளார்.
IPBES நிபுணர்கள், அயல் படர் இனங்களால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிக்க பொதுவாக போதுமான நடவடிக்கைகள் இல்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர். 80% நாடுகள் தங்கள் தேசிய உயிர்ப்பன்மையத் திட்டங்களில் அயல் படர் இனங்களை நிர்வகிப்பது தொடர்பான இலக்குகளைக் கொண்டிருந்தாலும், 17% மட்டுமே இந்த சிக்கல்களை நிவர்த்தி செய்யும் தேசிய சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளைக் கொண்டுள்ளன. இது அண்டை மாநிலங்களுக்கு அயல் படர் இனங்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. 45% நாடுகள் உயிரியல் ஊடுறுவல்களை நிர்வகிப்பதில் முதலீடு செய்வதில்லை என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஆய்வின் முக்கிய முடிவுகள்
அயல் படர் இனங்களின் பரவல்
- உலகமுழுவதும் 37 ஆயிரத்திற்கும் மேலான அயல் படர் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு ஆண்டிற்கும் 200 புதிய அயல் படர் உயிரினங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
- 1970ஆம் ஆண்டிற்குப் பிறகு மட்டும் இதுவரை கண்டறியப்பட்டதில் 37% இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அயல் படர் இனங்களின் எண்ணிக்கை 2005ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2030 ஆண்டில் 36% அதிகரிக்கும்.
அயல் படர் இனங்களின் தாக்கங்கள்
- அயல் படர் இனங்களின் தாக்கம் 75% நிலத்தில் ஏற்பட்டுள்ளது.
- நன்னீர் சூழல் அமைவுகளில் 14% தாக்கம் ஏற்பட்டுள்ளது.
- கடற் பகுதிகளில் 10% தாக்கம் ஏற்பட்டுள்ளது.
- 60% உயிரினங்கள் அற்றுப்போன நிகழ்வுகளில் அயல் படர் உயிரினங்களின் பங்கும் உள்ளது.
- 16% உயிரினங்கள் அற்றுப்போனதற்கு அயல் படர் இனங்கள் மட்டுமே முக்கியக் காரணமாகும்.
- 1215 வகையான நாட்டு இனங்கள் குறிப்பிட்ட பகுதியில் அற்றுப் போனதற்கு 218 அயல் படர் உயிரினங்கள் மட்டுமே காரணமாகும்.
- பழங்குடிகளால் நிர்வகிக்கப்படும் நிலங்களில் மட்டும் 2300 அயல் படர் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கொள்கை மற்றும் மேலாண்மை
- உலகில் 83% நாடுகள் அயல் படர் இனங்களின் பாதிப்பைத் தடுக்க குறிப்பிட்ட தேசிய சட்டம் அல்லது ஒழுங்குமுறைகள் இல்லாத நாடுகளாக இருக்கின்றன.
தமிழ் நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் காடுகளில் பரவியுள்ள அயல் படர்/முற்றுகைத் தாவரங்களை அழிப்பதற்கு வனத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், கடல், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை நமக்கு உணர்த்துகிறது. இதனைக் கருத்தில்கொண்டு இதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழ் நாடு அரசு உருவாக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
விரிவான அறிக்கைக்கு: https://www.ipbes.net/IASmediarelease