Ennore Oil Leak: உண்மையான பாதிப்புகளை மறைத்ததா மாசு கட்டுப்பாடு வாரியம்? NGT உத்தரவுகள் என்ன?

ennore oil leak
IMAGE: NOMAD VICKY

சென்னை எண்ணூர் பகுதியில் வெள்ள நீரில் எண்ணெய் கசிவு குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையில் குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

டிசம்பர் 12ம் தேதி விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் குழுவுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை எண்ணூர் பகுதியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு 09.12.2023 அன்று விசாரித்தது.

மிக்ஜாங் புயலின் தாக்கத்தால் சென்னையில் டிசம்பர் 3, 4, 5 தேதிகளில் பெருமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. இந்த நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி எண்ணூர் கழிமுகத்துக்கு அருகாமையில் உள்ள மீனவர்கள் பக்கிங்காம் கால்வாய் வழியாக கழிமுகத்துக்கு வரும் நீரில் எண்ணெய் கலந்து வருவதைக் கண்டறிந்தனர். டிசம்பர் 5ஆம் தேதி அதிகளவில் எண்ணெய் கசிந்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட அரசுத் துறைகளிடம் மனு அளித்தனர்.

பக்கிங்காம் கால்வாய் வழியாக கசிந்த எண்ணெய் அனைத்தும் மணலி தொழிற்பெட்டையிலிருந்து குறிப்பாக CPCL ஆலை திறந்துவிட்ட கழிவுகள்தான் என மீனவர்கள் குற்றம் சாட்டினர். கால்வாயின் இருபுறமும் மக்கள் வாழும் எர்ணாவூர், எண்ணூர் பகுதிகளின் பல குடியிருப்புகளில் மழைநீர் வீடுகளுக்கு புகுந்தது இரண்டு நாட்கள் மழை நீருடன் சேர்ந்து வந்த எண்ணெய் கழிவுகள் வீடுகளில் உள்ள பொருட்கள், கால்வாய், கழிமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், மீன்கள், நாய்கள், பறவைகள் என வெள்ள நீர் சென்ற இடங்களிலெல்லாம் எண்ணெய் படிந்தது.

எண்ணெய் படிந்த பகுதிகளில் வெயில் பட்டவுடன் கிளம்பிய நாற்றம் பலருக்கும் தலைசுற்றல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 7ஆம் தேதி நேரில் ஆய்வு செய்த மாசுகட்டுப்பாடு வாரியம் ,  சென்னை பெட்ரோலிய கழகத்தின் தெற்கு நுழைவு வாயிலில் இருந்து இந்த எண்ணெய் தடயங்கள் தெரிந்ததாகவும், அது பக்கிங்காம் கால்வாய் வழியாக பரவியுள்ளாதாக தெரிவிக்கப்பட்டது.

மேற்கூறிய கருத்தையே மாசு கட்டுப்பாடு வாரிய தரப்பு வழக்கறிஞர் சாய் சத்யஜித் பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்தார். இதுவரை நடத்திய விசாரணையில், வெள்ள நீரில் வேண்டுமென்றே கச்சா எண்ணெய் கலக்கப்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், எண்ணெய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் வாரியம் தரப்பில் தெரிவிக்கபட்டது.

”மணலி தொழிற்பேட்டை சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகள், குடியிருப்புகள் முழுவதும் எண்ணெய் கழிவுகளைக் காண முடிகிறது. இதை எப்படி “Traces Of Oil” என மாசு கட்டுப்பாடு வாரியம் கூற முடியும், Traces of Oil” என்றால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலை அப்படி இல்லையே. TNPCB TRACES OF OIL என்கிறது, ஆனால் நீர்வளத்துறை அறிக்கை 5 கிலோமீட்டருக்கு பெரும் அளவில் எண்ணெய் கழிவுகள் காணப்பட்டதாக தெரிவிக்கிறது. 5 கிமீ பரவியுள்ள எண்ணெய் கழிவை எப்படி Trace of Oil என மாசு கட்டுப்பாடு வாரியம் கூற முடியும்” என தீர்ப்பாய உறுப்பினர்கள் மாசு கட்டுப்பாடு வாரியத்தை கேள்விகளால் துளைத்தனர்.

மழைவெள்ள நீரில் எண்ணெய் கலப்பதைத் தடுக்கவும், தேங்கியிருந்த எண்ணெய் கழிவுகளை சேகரிக்கவும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டிருந்தால் உடனடியாக தெரியவந்திருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை. அரசு மேற்கொள்ளும் ஆய்வுக்கு CPCL, IOCL ஒத்துழைக்கும் என மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் IOCL நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் சலீம் வாதிட்டார்.

பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களில் கசிவு நடக்கவில்லை, வெறும் தரைப்பகுதியில் இருந்த எண்ணெய் மழைநீரில் கலந்துவிட்டது என நீங்கள் கூறுவது உண்மையெனில் இப்படி நடக்கும் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியாதா?, 5 கி.மீ தூரத்திற்கு எண்ணெய் கழிவு கலந்த பிறகுதான் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த தகவல் தெரிந்தது என்றால் நிறுவனங்களிடம் என்ன பேரிடர் தடுப்பித் திட்டம் இருந்தது என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

மேலும், அப்பகுதி மக்கள் அன்றாட வாழக்கை நடத்த இயலாத நிலையில் உள்ளனர். எவ்வளவு எண்ணெய் சேகரிக்கபட்டுள்ளது, எண்ணெய் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உண்ணைமை நிலையை அறிய தமிழக அரசு ஏன் இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை எனவும் மாவட்ட ஆட்சியரும் வருவாய் நிர்வாகமும் என்ன செய்கின்றனர் என கேள்வி எழுப்பியது  தீர்ப்பாயம்.

இதற்கு பதிலளித்த மாசுக் கட்டுப்பாடு வாரிய தரப்பு, குழு அமைத்து விசாரணை நடத்தபட்டு வருவதாக தெரிவித்தது. கழிமுகமும், கிராமங்களும் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. விரிவான ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்போம் என்றார் தமிழ் நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன்.

தொடர்ந்து, சென்னை பெட்ரோலிய கழகத்தின் தரப்பில், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எந்த ஒரு கசிவும் இல்லை என்றும் வெள்ளத்தில் பரவி இருக்கக்கூடிய எண்ணெயை சேகரிக்கும் பணியை துவங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 25 ரசாயன ஆலைகள் இயங்கி வருவதால், எண்ணெய் கசிவிற்கு சென்னை பெட்ரோலிய கழகம் மட்டும் காரணமல்ல. இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்கு தேவையான நடைமுறைகள், ஏற்கனவே அமலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டது.

மீனவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ்வரன், இந்த எண்ணெய் கழிவுகள் கழிமுகம் வழியாக கடலில் கலந்தால் மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர் எனவும் எண்ணெயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என நிறுவனங்கள் கூறுவது உண்மை எனில் எண்ணெய் கழிவு எப்படி கடலையும் கடற்கரையும் சென்றடைந்தது என கேட்டார். எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட காட்டுக்குப்பம் பகுதி மீனவர் ஆர்,எல்,சீனிவாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ்வரன் தாக்கல் செய்த மனு 12ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தீர்ப்பாயம் கூறியது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆனையர் தலைமையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் சென்னை மண்டலம், தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குனர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், வளங்குன்றா கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தின் உறுப்பினர், மணலி தொழிற்பேட்டை சங்க செயலாளர்,  அடங்கிய, குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.

இக்குழுவானது உடனடி நடவடிக்கையாக பக்கிங்காம் கால்வாய், குடியிருப்புகள், எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது தீர்ப்பாயம்.

order

மேலும்,  டிசம்பர் 11ம் தேதி இக்குழுவின் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் நீர்நிலைகளில் மிதக்கும் எண்ணெயை சேகரிக்க வேண்டும், மக்களின் அரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும், பாதிப்புகள் குறித்த மதிப்பீடு செய்ய வேண்டும், மறுசீரமைப்பு மற்றும் இழப்பீடுக்குத் தேவையான நிதி குறித்து மதிப்பிட வேண்டும் என குழுவுக்கு உத்தரவிட்டு அடுத்த விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

காலை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாலை எண்ணெய் கழிவுகளால் பாதிப்படைந்த பகுதிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் S. S. சிவசங்கர் தலைமையில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நானும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர். K.R.N. ராஜேஷ்குமார்., திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் ஆகியோர் நேரொல் பார்வையிட்டனர்.

இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்ட அமைச்சர் மதிவேந்தன் “ திருவொற்றியூரில் உள்ள நெட்டுகுப்பம் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதியில், “Chennai Petroleum corporation Limited” பொதுத்துறை நிறுவனத்தின் கழிவு எண்ணெய் முற்றிலும் கடலில் கலந்து, கடல் வளத்தை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, கடல் முழுவதும் கருமை நிறத்திற்கு மாறி, கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இதனால் மீனவர்கள், தங்களதுவாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். #CycloneMichaung என்ற இயற்கை பேரிடரில், இந்த செயற்கை பேரிடரை ஏற்படுத்தியவர்கள் மீது, விசாரனை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையிலும் கள செயல்பாடுகளின்  அடிப்படையிலும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவே இருந்தது. பெரிய அளவிலான எண்ணெய் கசிவு நிகழ்ந்துள்ள நிலையில் அதனை வெறும் எண்ணெய்த் தடயங்கள் என அறிக்கை சமர்ப்பித்தது மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக எண்ணெய் கழிவுகள் படிந்துள்ள சில குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகள் என மாசு கட்டுப்பாடு வாரிய வழக்கறிஞர் தீர்ப்பாயத்தில் கூறியது இப்பேரிடர் குறித்த மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அலட்சியத்தையே வெளிக்காட்டுகிறது.

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments