ஜேம்ஸ் வெப் சொல்லப்போகும் பிரபஞ்சத்தின் கதை

nasa

பூமி ஒரு தட்டை வடிவம் கொண்டது என இக்கட்டுரையில் நான் கூறினால், அடுத்த வரியைப் படிக்காமல் இந்தக் கட்டுரையை மூடி வைக்க யோசித்திருப்பீர்கள். பூமியைப் பற்றிய ஆரம்ப காலப் புரிதல் பூமி தட்டை வடிவில் உள்ளது என்பதே. பிற்காலங்களில் தான், பூமி வட்ட வடிவம் உடையது எனக் கண்டுப்பிடிக்கப்பட்டு நிருபிக்கப்பட்டது. வட்ட வடிவம் கொண்டது எனக் கூறினாலும், பூமியைச் சுற்றித்தான் சூரியனும், நிலவும் பிற கோள்களும் சுழல்கின்றன எனும் கோட்பாட்டை முன்வைத்தனர்.. 16-ம் நூற்றாண்டில், சூரியனைச் சுற்றித் தான் பிற கிரகங்கள் சுழல்கின்றன என்று நிக்கோலஸ் காப்பர்னிக்கஸ் விளக்கினார். அக்காலத்தில் பூமியைப் பற்றிய பல அறிவியல் விளக்கங்கள் அறிஞர்களால் கூறப்பட்டு வந்தாலும் அப்போது மத நம்பிக்கைக்கு முரணாக உள்ளது என ஏற்றுக்கொள்ளப்படவில்லை, பல அறிஞர்கள் கொலை செய்யப்பட்டனர். அறிவியலை ஏற்றுக்கொள்ளாத மனநிலை இன்றளவும் சிலரிடம் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

20-ம் நூற்றாண்டில் அனைவைரையும் வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் 1968-ல் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் வண்ணப் புகைப்படமாகும். இதற்குமுன், கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வந்திருந்தாலும், பூமியின் வண்ணப் புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் தான், கடந்த சில வாரங்களாக வலைத்தளம் முழுக்க பிரபஞ்சத்தின் புகைப்படங்கள் நிரம்பப்பெற்று ஆச்சரியத்தால் பகிரப்பட்டடு வந்தது. அந்தப் புகைப்படங்கள் ஏன் அவ்வளவு சிறப்புப் பெற்றது எனப் பலருக்குக் கேள்வி எழுந்து இருக்கலாம். இந்த மனித சமூகத்தின் மிகப்பெரிய கேள்விக்குப் பதில் கிடைக்கப்பெற்றால் அது சிறப்பு வாய்ந்ததாக தானே இருக்கக்கூடும் .

நம் சிறுவயது முதலே நாம் வியந்து பார்த்து பிரமித்த சில விஷயங்களில் நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கும். நாம் விண்மீன் கூட்டத்தைப் பார்க்கும் போது நம் எல்லோருக்கும் எழுந்த கேள்வி, “இந்த பிரபஞ்சம் எப்படி உருவாகி இருக்கும்”? அதன் தொடக்கம் எது? அதன் முடிவு எது? பிரபஞ்சத்திற்கு முற்று உண்டா? இப்பிரபஞ்சத்தில் நம் பால்வழி எங்கு உள்ளது? இப்பிரபஞ்சம் விரிவடைவது உண்மையா? இங்குள்ள அனைத்தும் வெற்றிடத்தின் வெடிப்பில் இருந்து வந்தவையா? எனும் பல கேள்விகளுடன் நாம் வளர்ந்து இருப்போம். இக்கேள்வி அனைத்திற்கும் ‘பெருவெடிப்பு கோட்பாடு’ வழங்கிய பதில்கள் இருந்த சந்தேகங்களை தீர்த்தும், மீண்டும் பல சந்தேகங்களை எழுப்பவும் செய்தது. இதற்கு விடை தேடி ஆராய்ச்சியாளர்கள் பல முயற்சிகள் எடுத்து வந்தனர். அதற்காக பல விண்வெளி தொலைநோக்கிகளை விண்ணில் செலுத்தி ஆராய்ந்தனர். இந்த விண்வெளி தொலைநோக்கிகளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது ‘ஹாபல் விண்வெளித் தொலைநோக்கி’ (Hobble Space Telescope). இது 1990-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. பிரபஞ்சம் பற்றிய கேள்விகளைச் சற்று ஆழமாகத் தீர்த்து வைக்க இது உதவியது. இதன் தொடர்ச்சி தான் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று அமெரிக்கா (NASA), கனடா (CSA) மற்றும் ஐரோப்பா(ESA) நாடுகளின் விண்வெளி ஆய்வு மையத்தின் கூட்டு முயற்சியில் விண்ணில் செலுத்தப்பட்ட ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி’ (James Webb Space Telescope)ஆகும்.

விண்ணில் செலுத்தப்படும் தொலைநோக்கிகள் ஒளிகளின் அலைநீளத்தைக் (wavelength) கொண்டு செயல்படுபவை. மனிதக் கண்களுக்கு உணரப்படும் அலைநீளத்தின் அளவு மிகவும் குறைவு. இதுவே அகச்சிவப்புக் கதிர்களின் அலைநீளத்தின் அளவு அதிகம். ஒளியை எந்த அளவிற்கு உள்வாங்குகிறதொ; அந்த அளவிற்கு தொலைநோக்கிகளால் விண்வெளியில் உள்ள பொருள்களை உள்வாங்கிக்கொள்ள முடியும்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் மின்காந்தக் கதிர்வீச்சை வெளியேற்றும். இந்த மின்காந்தக் கதிர்வீச்சில் (ElectroMagnetic Radiation (EMR))பல வகைக் கதிர்கள் உண்டு. காமா கதிர்கள் (gama rays), x-கதிர்கள் (x-rays), புற ஊதாக் கதிர்கள் (ultravioletrays),கண்ணுறு ஒளி (visiblelight), அகச்சிவப்புக் கதிர்கள் (Infra-red rays), நுண் கதிர்கள் (microwave), வானொலிக் கதிர்கள் (radiowaves) ஆகியவை உண்டு. ஒவ்வொரு அலையும் தனக்கெனத் தனியான அலைநீளத்தைக் (wavelength) கொண்டவை. இவற்றில் 0.000015 முதல் 0.004 அங்குலம் அளவில் இருக்கும் கதிர்கள் மட்டுமே மனிதக் கண்களுக்குத் தெரியும்(visiblelight).

 

நாம் காணுகின்ற அனைத்து நிறங்களும் மேலே குறிப்பிட்ட அலைநீளத்தில் அடங்கியவையே. விண்வெளியில் உள்ள அனைத்து விண்பொருள்களில் இருந்து வெளியேறும் ஒளியில் இருந்து மின்காந்தக் கதிர்வீச்சு ஒளி வெளியேறும். இந்த ஒளியின் கதிர்வீச்சுகளை உள்வாங்கி தான் விண்வெளி தொலை நோக்கி புகைப்படங்களை அனுப்பும். ஹாபல் தொலைநோக்கி வெறும் கண்ணுறு ஒளியை மட்டும் உள்வாங்கும் அமைப்பில் உருவாக்கப்பட்டது. ஆனால் விண்வெளியைப் பற்றி இன்னும் அறிய அது போதுமானதாக இல்லை.

nasa
கரீனா நட்சத்திரக் கூட்டம் (புகைப்படம்: : NASA, ESA, CSA, and STScI )

 

கடந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கும் திறன் கொண்டது போல் வடிவமைக்கப்பட்டது. பூமியில் இருந்து 15 இலட்ச கி.மீ தொலைவில் பாய்ந்து அங்குள்ள அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கி புகைப்படங்களாக அனுப்புகிறது. பிரபஞ்சத்தின் தெளிவான, ஆழமான முதல் புகைப்படம் இவையாகும். ஜேம்ஸ் வெப் உள்வாங்கிய அகச்சிவப்புக் கதிர்கள்  கிட்டத்தட்ட பெருவெடிப்பு ஏற்பட்ட காலத்தில் உருவாகிய விண்மீனிலிருந்து வெளியேறிய கதிர்கள் ஆகும். இந்தக் கதிர்கள் தோன்றி 1300 கோடி ஆண்டுகள் ஆகிறது. புகைப்படத்தில் இருக்கின்ற அமைப்பு 1300 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த அமைப்பு ஆகும். இதை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், பொதுவாகச் சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகும். நீங்கள் இப்போது உங்கள் வீட்டின் ஜன்னல் வழியாகவோ அல்லது, மாடியில் இருந்தோ அல்லது வீட்டின் வெளியில் இருந்து சூரியனை பார்த்தால் அது 8 நிமிடத்திற்கு முன் இருந்த சூரியனின் நிலையாகும். ஜேம்ஸ் வெப் வெளியிட்ட முதல் புகைப்படம் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த நட்சத்திரங்கள் வெடிக்கும் போது உருவாகிய அகச்சிவப்புக் கதிர்களை, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தற்போது படம்பிடித்துள்ளது. தற்போது அதன் நிலை அந்தப் புகைப்படத்தை இருப்பது போல இருக்காது. இத்துடன் சேர்த்து இன்னும் 4 புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பியது. அதில் WASP-96b எனும் கிரகத்தின் புகைப்படமும் அடங்கும். கிட்டத்தட்டப் பூமியில் இருந்து 1120 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் தண்ணீர் இருப்பதாகத் தற்போது கண்டுப்பிடிக்கப்படுள்ளது.

இன்னும் 10 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரபஞ்சம் குறித்துய் இன்னும் பல பதில்களைக் கொடுக்கப் போகிறது. பெருவெடிப்பைப் பற்றி இன்னமும் நமக்குப் பதில் கிடைக்கலாம். பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியக் கதையின் முதல் வரியைப் பார்த்துவிட்டோம். இங்கு கூறப்பட்டு வந்தக் கட்டுக் கதைகளை உடைத்தெறிய முழு கதைக்குக் காத்திருப்போம்.

  • லோகேஷ் பார்த்திபன்

Reference

  1. https://www.nasa.gov/
  2. https://www.bbc.com/news/science-environment-62140044
  3. https://www.bbc.com/news/science-environment-59476869
  4. https://www.livescience.com/38169-html
  5. Book- “A brief History of Time” by Stephen Hawking

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments