ஜப்பானின் மினாமாட்டாவும் தமிழ்நாட்டின் நெய்வேலியும்

பாதரசம் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தைத் தரக்கூடிய ஒரு பொருளாகும். இதற்கு  உதாரணமாக ஜப்பானின் மினாமாட்டா உள்ளது. இன்னொரு உதாரணமாக மாறக்கூடாது தமிழ் நாட்டின் நெய்வேலி.

ஜப்பானின் குஷு தீவில் குமமாட்டோ மாநிலத்தில் உள்ள ஊர் மினமாட்டா. இந்த ஊரில் 1956 வாக்கில் திடிரென்று பூனைகளும் மற்ற உயிரினங்களும் விகாரமாக நடந்துகொள்ள ஆரம்பிக்கின்றன. ஒருவிதமாக விகாரமாக நடனமாடி பைத்தியம் பிடித்ததை போல் நடந்துகொண்டு உயிரைவிட ஆரம்பித்தன. வானத்திலிருந்து காக்காகள் செத்து விழ ஆரம்பித்தன, கடற்புற்கள் விளையாமல் போயின, மீன்கள் செத்து மிதக்க ஆரம்பித்தன. அதே ஆண்டின் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி 5வயது நிரம்பிய சிறுமி மேற்சொன்ன அதே அறிகுறிகளுடன் சிஸ்சோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அடுத்த சில நாட்களில் அந்த சிறுமியின் தங்கையும் அதே அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுகிறாள். அடுத்த சில நாட்களுக்குள்ளாக 8 பேர் இதே அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மே 1ஆம் தேதி அந்த மருத்துவமனையின் இயக்குனர் “சுகாதாரத் துறை” அதிகாரிகளுக்கு “நரம்புமண்டலம் தாக்குதலுக்கு” உள்ளாகி ஒரு நோய் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவலை அனுப்புகிறார். இதன் பின்னணி என்ன ?

1908ஆம் ஆண்டு சிஸ்சோ (Chisso) கார்பொரேஷன் மினமாட்டாவில் ஒரு ரசாயன தொழிற்சாலையை அமைத்து உற்பத்தியைத் துவக்கிறது. பல ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்கிறது, படிப்படியாக நிறுவனம் பெரிய அளவில் வளர்கிறது. ஒரு கட்டத்தில், அந்த நகரத்தின் பாதி வருவாயை இந்த ஒரு நிறுவனம் மட்டுமே கொடுக்கிறது, அதன் தாக்கம் அதனுடைய செல்வாக்கு உயர்கிறது. 1932ஆம் ஆண்டு acetaldehyde உற்பத்தியைத் துவக்கிறது, 210 டன் அளவிலிருந்து 1960ஆம் ஆண்டு 45,000 டன் அளவிற்கு உற்பத்தி உயருகிறது. acetaldehyde தயாரிப்பதற்கு வினையூக்கியாக மெர்குரி சல்பேட் பயன்படுத்தப்பட்டது. 1951பிறகு இன்னொரு துணை வினையூக்கி ferric sulphide ஆக மாற்றப்படுகிறது. இதன் விளைவாக ஒரு சிறிய அளவில் methyl mercury உருவாகிறது. இந்த ஆலையின் கழிவுகள் எல்லாம் மினாமாட்டா வளைகுடாவில் கொட்டப்படுகின்றன, இந்த நடவடிக்கை 1951 முதல் 1968 வரை தொடர்கிறது.

மக்கள் பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து, குமமாட்டோ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளை கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அவர்கள் நோயாளிகளை ஆய்வு செய்கிறார்கள். எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் வரும் நோய்தான் ஆச்சரியத்தைத் தருகிறது. 1956 அக்டோபர் மாதத்திற்குள் 40 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர், அவர்களில் 14பேர் உயிரிழக்கிறார்கள். இறப்பு விகிதம் 35% அதிசர்ச்சி அளிக்கிறது. காரணத்தைக் கண்டறிய அறிஞர்கள் குழு விரிவான ஆய்வுகளை மேற்கொள்கிறது, அதில் ஒன்று அந்த மக்கள் சாப்பிடக்கூடிய உணவு. அநேக மக்கள் கடல் உணவை அதிகம் எடுத்துக்கொள்பவர்களாக இருந்தனர், அவர்களுக்கான மீன் மினாமாட்டா வளைகுடாப்பகுதியில் இருந்துதான் வந்தது. வீட்டிலுள்ளவர்கள் சாப்பிட்ட மிச்சத்தை உணவாக உட்கொண்ட நாய்களும் பூனைகளும் பாதிப்பிற்கு உள்ளாகி உயிர் இழப்பதை விஞ்ஞானிகள் கண்டறிகின்றனர். நவம்பர் 4ஆம் தேதி, முதல்கட்டமாக “மினாமாட்டா நோய், மீன்கள் மற்றும் கடல் உயிரினங்கள் மூலமாக மனிதர்களுக்குள் செல்லும் கனஉலோகங்களால் ஏற்படுபவை என்பதை உறுதிசெய்கின்றனர்.

கன உலோகங்கள் என்றவுடன் எல்லோருடைய கவனமும் “சிஸ்சோ நிறுவனத்தின்” மீதுதான் படிந்தது, குமமாட்டோ பல்கலையின் ஆய்வுகளுக்கு ஒத்துழைக்க மறுத்தது அந்த நிறுவனம். அதுவரை வளைகுடா பகுதியில் தன்னுடைய கழிவுநீரை கலந்துவந்த சிஸ்சோ நிறுவனம், அந்த பகுதியில்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றவுடன் மினமாட்டா நதியில் கழிவுகளை கலக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக நதியின் முகத்துவாரப் பகுதியில் மீன்கள் செத்து மிதக்க ஆரம்பித்தன, அந்த பகுதியிலிருந்து மீன் உணவை சாப்பிடக்கூடியவர்கள்  குறிப்பிட்ட “மினாமாட்டா நோயால்” பாதிக்கப்பட  ஆரம்பித்தார்கள். சிஸ்சோ நிறுவனம் போதிய தரவுகளை கொடுக்க மறுத்ததால், அங்குள்ள மருத்துவமனையின் இயக்குனர் ஹொசோகவா மருத்துவமனையில் ஒரு சோதனைச் சாலையைத் தொடங்கினார். ஆலையில் இருந்துவெளியேறும் கழிவுநீரை உணவுடன் கலந்து ஆரோக்கியமான பூனைகளுக்கு கொடுத்தார், சரியாக 78 நாட்கள் கழித்து அந்த பூனைகள் விகாரமாக நடந்துகொள்ள ஆரம்பித்தன, மினமாட்டா நோயால் பாதிக்கப்பட்டது உறுதியானது.

குமமாட்டோ ஆய்வுகள் தொடங்கியவுடன், அவர்களுடைய கவனம் பல்வேறு கன உலோகங்கள் மீது படிந்தது. சிஸ்சோ நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு தன்னாய்வுகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய பல கன உலோகங்கள் கழிவுநீரில் கலந்து செல்வது உறுதியானது.  செத்துப்போன மீன்கள் மற்றும் மனிதர்களில் அதிகமான “மாங்கனீஸ்” அதிகமாக காணப்பட்டதால் அதுதான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது.  ஆனால் மார்ச் 1958 இல் அந்த பகுதிக்கு வந்த பிரிட்டன் நாட்டின் டக்ளஸ் அல்பினே “மினாமாட்டா நோய்” பாதரசத்தால் ஏற்படும் நோய்களுக்கான அறிகுறிகளுடன் இருப்பதாக தெரிவித்தார். பிப்ரவரி மாதம் 1959 ஆம் ஆண்டு மினாமாட்டா வளைகுடாப் பகுதியில் பாதரசத்தின் பரவல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் முடிவுகள் அதிர்ச்சி ரகம். ஹயக்கின் துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் அதிகமாகக் காணப்பட்ட பாதரச படிமங்கள் கடலைநோக்கி செல்ல செல்ல குறைய ஆரம்பித்ததன் மூலம் சிஸ்சோ நிறுவனம்தான் இதற்கு காரணம் என முடிவானது. மிக அதிகமான பாதரசம் காணப்பட்டதில், சிஸ்சோ நிறுவனம் ஒரு துணை நிறுவனத்தை தொடங்கி பாதரசத்தை மீட்க ஆரம்பித்தது.

1959 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு குழு ஆய்வு முடிவுகளை வெளியிட்டது; மினாமாட்டா நோய்க்கு காரணம், “அதிகமான பாதரச படிமங்கள் கொண்ட மீன்களை உட்கொண்டதுதான் காரணம் என்றது. அந்த பகுதியில் வாழக்கூடிய மீனவமக்கள் கடுமையான எதிர்வினையை ஆற்றினார்கள், பலசுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு இழப்பீடு வழங்க சிஸ்சோ நிறுவனம் ஒத்துக்கொண்டது.

அதன்பிறகு பல்வேறு மாற்றங்களை செய்ய ஒத்துக்கொண்டது. மேற்சொன்ன விஷயம் பாதரசம் எப்படி நரம்பு மண்டலத்தை பாதித்து மக்களின் உயிரை காவுவாங்கியது என்பதுதான். பூவுலகின் நண்பர்களும் மந்தன் அமைப்பும் சேர்ந்து நடத்திய ஆய்வில் நெய்வேலியில் சுரங்கத்தை ஒட்டிய பகுதியில் பாதரசத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட 250 மடங்கு அதிகமாக உள்ளது நிரூபணமாகியுள்ளது.

இந்த ஆய்வு ஒரு மிகப்பெரிய சூழலியல் சீர்கேட்டின் ஒரு துளி ஆதாரம்தான், அந்த பகுதி முழுவதும் ஆய்வுகள் மேற்கொண்டால் அந்த பகுதியில் எவ்வாறெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவரும். ஜப்பான் அரசாங்கம் மக்கள் மீது கொண்ட அக்கறையால் ஆய்வுகள் மேற்கொண்டு மினமாட்டா நோயை கண்டறிந்து மாற்றங்கள் கொண்டுவந்தது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை யார் கேள்வி கேட்கப்போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

  • கோ.சுந்தர்ராஜன்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments