கழுவெளியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை

mudskipper
Mudskippers Image: Yuvadeeban

கழுவெளியின் முகத்துவாரத்தில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கழுவெளி எனும் ஏரி அமைந்துள்ளது. திண்டிவனம், மரக்காணம், மற்றும் ஆரோவிலுக்கு இடைப்பட்ட 72,329 ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து வடியும் நீர் இந்தக் கழுவெளி வழியாக மரக்காணத்தில் உள்ள எடையன்திட்டு உப்பங்கழி சென்று, கடப்பாக்கம் அருகில் கடலை அடைகின்றது.

எடையன் திட்டு உப்பங்கழியின் முகத்துவாரப்பகுதியில் உள்ள ஆலம்பரைக் குப்பம் மற்றும் அழகங்குப்பம் என்ற இடங்களில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் கட்டுவதற்கு தமிழ்நாடு மீன்வளத்துறை முயன்று வருகிறது. மேலும், உப்பங்கழியின் 5 ஹெக்டேர் பரப்பில் உள்ள மணல் திட்டைத் தோண்டி, 400, 600 மீ அளவில் இருபுறமும் கற்களைக் கொட்டி முகத்துவாரத்தை எந்நேரமும் திறந்திருக்கச் செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. உயர் ஓத காலத்தில் மட்டும் (High tide) உள்வந்து கொண்டிருந்த நீர் இப்பொழுது எந்நேரமும் உட்புகும் நிலை உண்டாகிறது. பெருந்தூண்டில் கொண்ட, இயக்குகருவிகள் கொண்ட படகுகளின் (Mechanized & Motorized boats) உரிமையாளர்களே இந்த திட்டத்தால் லாபமடைவர் என்றும், இந்தத் துறைமுகம் தொடக்கப்பட்டால் எண்ணெய்க்கசிவு, கழிவுகளால் நீர்நிலை பாதிப்படையும் என்றும் சிறுகுறு படகுகள் வைத்து மீன்பிடிப்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

watershed

இத்திட்டத்திற்கு எதிராக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இயற்கை ஆர்வலர் யுவதீபன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில், திட்டத்தின் அமைவிடம் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ளதா என்பதை ஆராய்ந்து, ஒரு அறிக்கையை சமர்பிக்குமாறு, தீர்ப்பாயம் ஒரு விசாரணை குழுவை அமைத்தது. இக்குழு கழுவெளியில் திட்ட அமைவிடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் திட்ட அமைவிடம் CRZ 1A (கடல்சார் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த) பகுதிக்குள் இல்லை என்றும், அங்கு பங்குனி ஆமையின் முட்டையிட்ட இடங்கள் ஏதும் தென்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அலையாத்திக் காடுகள் திட்ட அமைவிடத்தின் எதிரே தான் உள்ளது, மணல்மேடு அருகில் தான் உள்ளது ஆனால் திட்டம் முன்மொழியப்பட்டுள்ள இடத்தில் இல்லை என்றும், சேற்றுப் பகுதிகள், கடற்புற்கள் ஏதும் அங்கு தென்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. திட்ட அமைவிடம் கழுவெளி பறவைகள் சராணாலயத்தின் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு (Eco sensitive zone) வெளியில் அமைந்திருப்பதால்,  இத்திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. எந்த ஒரு சூழல் முக்கியத்துவமும் அந்த இடங்களுக்கு இல்லை என்பதால், மீன்பிடி துறைமுகங்களை தாராளமாக அங்கு அமைக்கலாம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

JC Report

விசாரணைக் குழு நேரில் மேற்கொண்ட ஆய்வின் போது, அவர்களுடன் சென்ற மனுதாரர் யுவன், இந்த ஆய்வறிக்கை உண்மைகளை மறைத்து, திட்டத்திற்கு சாதகமான வகையில் எழுதப்பட்டுள்ளதாக, தக்க சான்றுகளுடன் கூறுகிறார். விசாரணையின் போது அங்கு காணப்பட்ட பங்குனி ஆமைகளின் சடலம், அவை முட்டையிட்டு திரும்பியதற்கான தடங்கள், உயிர்பன்மயம் நிறைந்த சேற்று பகுதிகளின் அமைவை உறுதி செய்யும் Mudskippers என்னும் சேற்று உளுவை மீன்கள், கையாட்டி நண்டுகள் (Fiddler crabs) மற்றும் கடல் ஆலாக்கள் (Greater crested and Caspian Terns), கடற்காகங்கள், முக்கியமாக வட ரஷ்யாவில் இருந்து வலசை வரும் ஹூக்லின் கடற்காகம்(Heuglin’s Gull), Sanderlings, Whimbrel, Plovers போன்ற கடலையும், உவர்சதுப்பு நிலங்களையும் சார்ந்து வாழும் பறவைகள் ஆகியவற்றை பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவிற்கு தான் காட்டியும் கூட அதுகுறித்த ஒரு தகவல்களை அறிக்கையில் குறிப்பிடாமல் மறைத்து விட்டனர் என யுவதீபன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

திட்ட அமைவிடத்தில் எடுக்கப்பட்ட படங்கள்:

திட்ட அமைவிடத்தின் சூழல் முக்கியத்துவத்தை நேரில் காண்பித்தும் கூட அதை தங்களது அறிக்கையில் இடம்பெறாமல் செய்த விசாரனைக் குழுவின் அலட்சியம் சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– மேகா சதீஷ்

படங்கள்: யுவதீபன்

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments