தமிழகத்தில் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள கடவூர் ,அய்யலூர் வனப்பகுதிகளை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளை தேவாங்கு சரணாலயமாக தமிழக அரசு அண்மையில் அறிவித்திருக்கிறது. இது காட்டுயிர்கள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் பெருமகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி ஆகும். இதுதான் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள முதல் தேவாங்கு சரணாலயம் .
தேவாங்கு, குரங்கு இனத்தைச் சார்ந்த ஓர் உயிரினம். இந்தியாவில் மக்காக் ( macaque) வகைகளில் 6, லங்கூர் (langur) வகையில் 5, தேவாங்கு (loris) வகையில் 2, வாலில்லா குரங்கு (gibbon) வகையில் 1 என 14 வகை குரங்கினங்கள் உள்ளன.
வட கிழக்கு இந்தியப் பகுதிகளில் காணப்படும் வங்காள மந்த தேவாங்கு (Bengal Slow Loris), தென்னிந்தியாவில் உள்ள சாம்பல் நிற மெலிந்த தேவாங்கு ( Grey Slender Loris) ஆகியவை இங்குள்ள இரண்டு தேவாங்கு வகைகளாகும் .
சாம்பல் நிற மெலிந்த தேவாங்குகள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படுபவை. இவை சுமார் 25 சென்டிமீட்டர் நீளமும் 125 முதல் 340 கிராம் வரை எடையும் கொண்டவை. மரங்களில் வாழ்பவை. இவை இரவாடி உயிரினம். பகல் பொழுதில் இலை மறைவுகளிலும் மரப்பொந்துகளிலும் மறைந்திருக்கும்.
மெலிந்த கால்கள், அடர்த்தியற்ற மென்மையான தோல், தொலைநோக்கி பார்வை கொண்ட கண்கள், பெரிய காதுகள் , கூர்மையான மூக்கு என உடல் அமைப்பு கொண்டவை .
நாய், பூனை வகை விலங்கினங்களுக்கு இருக்கும் ‘ஈர மூக்கு’ தேவாங்குகளில் இருப்பது, மற்ற குரங்கினங்களில் இருந்து இவற்றை வேறுபடுத்துகிறது.
மெதுவாக நகரக் கூடியவை எனினும் ஆபத்து எனில் மரங்களில் விரைந்து நகர்ந்து மறைந்துவிடும். பெரும்பாலும் தனித்து வாழ்பவை என்றாலும் ஒரு தாய் மற்றும் அதன் பல்வேறு பருவ குட்டிகள் ஒன்றாகக் காணப்படும்.
இரு பாலினங்களும் ஒத்த உருவில் இருந்தாலும் ஆண் சற்றே பெரிதாக இருக்கும். மரங்களில் வாழ்பவை எனினும் அவ்வப்போது தரை இறங்கி புதர்களில் இரை தேடும் இயல்புடையவை.
தமது சிறுநீரை கை, கால், முகம் ஆகிய பகுதிகளில் தடவிக் கொள்ளும் வினோத பழக்கமுடையவை. மரங்களில் தடங்களைப் பதித்து தமது இருப்பை உணர்த்த, தகவல் பரிமாற, பூச்சிகளின் நச்சுக் கொடுக்குகளின் தாக்கத்தை குறைக்க என பல காரணங்களுக்காக இவை பயன்படலாம் என்று கருதப்படுகிறது.
பெரும்பாலும் பூச்சிகளை உண்பவை. அரிதாக பழங்கள், இலைகள் மற்றும் எலி, ஓணான், மரத் தவளை போன்ற சிறு விலங்குகளையும் உணவாகக் கொள்ளும் . பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் உயிரினம் இது.
சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ மகண்மா ‘ எனும் சொல் தேவாங்கை குறிக்கும் என்று எழுத்தாளரும் ஆய்வாளருமான பி.எல். சாமி தனது ‘சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்’ எனும் நூலில் எழுதி உள்ளார். ‘காட்டு பாப்பா’ என்ற பெயரும் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்திருப்பதாக அவர் கூறுகிறார். கன்னடத்தில் ‘காடு பாப்பா ‘ என்றும் தெலுங்கில் ‘ தேவாங்க பில்ல ‘ என்றும் அழைக்கின்றனர்
தென்னிந்தியாவில் வாழும் தேவாங்குகள் மலபார் தேவாங்கு, மைசூர் தேவாங்கு எனும் இரு உட்பிரிவுகளைக் கொண்டவை. மலபார் தேவாங்குகள் செம்பழுப்பு வண்ணமும் மைசூர் தேவாங்குகள் சாம்பல் பழுப்பு வண்ணமும் உள்ளவை. மலபார் தேவாங்குகளின் கண்களைச் சுற்றியுள்ள வட்ட வளையம் அவற்றைத் தனித்து அடையாளம் காண உதவுகிறது.
மைசூர் தேவாங்குகள் கோதாவரி ஆற்றுக்கு தெற்கே உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியின் கிழக்குச் சரிவுகளிலும் காணப்படுகின்றன.
மலபார் தேவாங்குகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியின் மேற்குச் சரிவுகளில் காணப்படுகின்றன. எனினும் பாலக்காட்டு கணவாய்க்குத் தெற்கே சில பகுதிகளில் இருவகை தேவாங்குகளும் காணப்படுகின்றன.
மலபார் தேவாங்குகள்
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் மேற்கு தொடர்ச்சி மலைகளில்1200 மீட்டர் உயரம் வரை உள்ள உலர்ந்த காடுகளில் காணப்படுகின்றன. தொடர்ச்சியான வாழ்விடம் கொண்டவை. களக்காடு- முண்டந்துறை, மேகமலை- ஸ்ரீவில்லிபுத்தூர், ஆனைமலை ஆகிய புலிகள் காப்பகங்கள் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் பலவற்றில் இவற்றின் வாழ்விடம் உள்ளது.
மைசூர் தேவாங்குகள்
இவை பெரும்பாலும் தமிழ்நாடு, கர்நாடகம் , ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் 500 மீட்டர் வரை உள்ள வெப்ப மண்டல வறண்ட காடுகளில் காணப்படுகின்றன. . இவற்றின் வாழ்விடங்களில் சரணாலயம், தேசிய பூங்கா, புலிகள் காப்பகம் போன்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் வெகு சிலவே உள்ளன. அக்காடுகள் தொடர்ச்சியானவை அல்ல. எனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கடவூர் தேவாங்குகள் சரணாலயம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) மதிப்பீட்டின்படி அச்சப்படும் அளவு எண்ணிக்கையில் உள்ள (Near Threatened) உயிரினமாக மெலிந்த தேவாங்குகள் உள்ளன. இந்திய காட்டுயிர்கள் பாதுகாப்பு சட்டம் – 1972 , பட்டியல் -1இல் இவ்விலங்கு உள்ளது. அழியும் நிலையில் உள்ள உயிரினங்களே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
குறி சொல்லுதல் போன்ற பல்வேறு மூடநம்பிக்கைகளுக்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் மனிதர்களால் பிடிக்கப்பட்டதால் தேவாங்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போயின. காடுகள் அழிக்கப்பட்டதால் அவற்றின் வாழ்விடங்களும் சுருங்கிப் போயின. இந்திய காட்டுயிர்கள் பாதுகாப்பு சட்டமே மீதமுள்ள தேவாங்குகளின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக உள்ளது.
தேவாங்குகள் இரவாடி விலங்கினம் என்பதால் அரிதாகவே கண்களில் புலப்படும். கடவூர் அய்யலூர் வனப்பகுதிகளில் சுமார் 4000 எண்ணிக்கையில் அவை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே வனப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் தேவாங்குகள் இங்குதான் உள்ளன. இப்போது சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அவற்றின் பாதுகாப்பில் கூடுதலான அக்கறை செலுத்தப்படும்.
வனப்பகுதிக்கு வெளியே விளைநிலங்களில் உள்ள பனை உள்ளிட்ட மரங்களிலும் தேவாங்குகள் வாழ்கின்றன. அவற்றின் பாதுகாப்பையும் உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தென்னிந்தியாவில் காடுகளிலும் காடுகளுக்கு வெளியேயும் தேவாங்குகளின் வாழ்விடங்களை முறையாக ஆய்வு செய்து அவற்றின் எண்ணிக்கையை ஆவணப்படுத்த வேண்டும்.