மரத்வாடா வறட்சியும்

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது மகாராஷ்ட்ராவில் உள்ள மரத்வாடா பகுதி. கடந்த ஏப்ரலில் மட்டும் மரத்வாடாவைச் சேர்ந்த 65 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த வருடத்தில் மட்டும் 300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது உலகப் போர் தண்ணீருக்காக நடக்கும் என்கிற அச்சத்தை உண்மையாக்கி வருகிறது மரத்வாடா. அங்கு தண்ணீருக்காக நடக்கும் வன்முறைகள் ஏராளம். மரத்வாடாவில் உள்ள லத்தூர், பர்பானி போன்ற பகுதிகளில் நீர் விநியோகிக்கப்படும் இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்திருக்கின்றன அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள். நிலைமை அவ்வளவு மோசமாக மரத்வ இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மராத்தியில் உருவான முக்கிய இலக்கியப் பிரதிகளைப் பார்த்தால் அவற்றுள் பல இந்த வறட்சியை மையப்படுத்தியதாக இருக்கின்றன. பல இலக்கிய பிரதிகளில் மரத்வாடாவில் காணக்கிடைக்காத நீர் வளமும் அது சார்ந்த சாதகங்களும் கதை களமாக விரிவது, அதற்காக ஏங்கும் மக்களின் உளவியல் சார்ந்தது என்கிறார்கள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். லத்தூர் போன்ற அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு இடம் பெயர வேண்டுமென்றால் திருமணத்தையே மறுக்கிறார்கள் மரத்வாடா பெண்கள்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக முக்கியமான அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக் கப்படுவது மரத்வாடா மருத்துவ மனைகளில் சகஜம்.
எங்கேயாவது தண்ணீர் கிடைத்துவிடாதா என்கிற ஏக்கத்தில் தனது நிலங்களில் 48 ஆழ் துளை கிணறுகளை போட்டிருக்கிறார் பீட் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி. அதில் ஒரு ஆழ்துளை கிணறு 1000 அடி வரை நிலத்தை ஊடுருவி யிருக்கிறது. தண்ணீர் கிடைத்தபாடில்லை. ஆழ்துளை கிணறுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள் கூடுதல் கடன் சுமையில் உழல நேர்வதாக சொல்கிறார்கள் வல்லுனர்கள். தவிர ஆழ்துளைக் கிணறு அமைப்பது இந்த பகுதியில் முறையற்ற ஒரு தொழிலாகி வருவதாகவும், நிலத்தடி நீரை உறிஞ்சுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மேலும் கடுமையான பாதிப்புகளை உருவாக்குவதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். இப்படி சமூக அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது மரத்வாடா வறட்சி. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று வருடங்களாக நிலவி வரும் இந்த வறட்சி, 1972ன் கொடும் வறட்சியை நினைவூட்டுவதாக இருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள். வறட்சியின் காரணமாக கடன், கடனை அடைக்க விடாமல் தடுக்கும் தொடரும் வறட்சி என்று மரத்வாடா விவசாயிகள் விஷச் சுழலில் சிக்கி யிருக்கிறார்கள்.

காரணம் என்ன?

மரத்வாடா வறட்சிக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இயற்கையாகவே மரத்வாடா வறண்ட பிரதேசம் என்றாலும் அரசுகளின் அதிகார வர்க்கத்தின் அலட்சியம் தான் இன்றைய நிலைக்கு காரணம். அதனாலேயே இதை செயற்கை வறட்சி என்றும் சொல்கிறார்கள். கடந்த வருடம் மரத்வாடாவில் மழை பொய்த்திருக்கிறது என்பது உண்மைதான். மரத்வாடாவில் மட்டுமல்ல பல பகுதிகளில் இரண்டு வருடங்களாக மழை வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே பெய்திருக்கிறது. கடந்த வருடம் மரத்வாடாவில் 882 மிமீ மழை பெய்திருக்கிறது. இன்னொரு வறட்சி பிரதேசமான விதர்பாவில் 1034 மிமீ மழை. மகாராஷ்டிராவில் பொதுவாக 1300மிமீ மழை பெய்திருக்கிறது. ஆனால் எப்போதும் 400 மிமீக்கு மேல் மழை பெய்யாத ராஜஸ்தானை விட இன்று மரத்வாடா மோசமான நிலையில் ஏன் இருக்கிறது என்கிற கேள்வியை நாம் எழுப் பியாக வேண்டும். நீர் மேலாண்மையில் தொடர்ச்சியாக அரசுகள் காட்டிய அலட்சியம்தான் காரணம். 1960லிருந்து எந்தவொரு அரசும் நீர் மேலாண்மையில் – நீர் பாதுகாப்பு, பாசனம், நிலத்தடி நீர் அபிவிருத்தி -அக்கறை காட்டவில்லை என்கிறார்கள் வல்லுனர்கள். இதற்கு காரணம் தொடர்ச்சியாக அரசுகளை நடத்தி வந்தவர்கள் சர்க்கரை தொழிலில் கொடிகட்டி பறப்பவர்கள். இன்றைய தேதியில் மகாராஷ்டிராவில் 205 சர்க்கரை கூட்டுறவு ஆலைகள் இருக்கின்றன. அது தவிர, 80 தனியார் சர்க்கரை ஆலைகளும் இருக்கின்றன. அரசால் நடத்தப்படும் ஆலைகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அதை தனியார் ஆலைகளாக மாற்றுவது மராத்திய அரசியல்வாதிகளுக்கு பிடித்தமான ஒரு பொழுதுப்போக்கு. இதில் ஏற்படும் நீர் விரயம் வேறு விஷயம்.

கரும்பு நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. உத்தர பிரதேசத்துக்கு பிறகு இந்தியாவிலேயே அதிகம் கரும்பு விளைவது மகாராஷ்டிராவில்தான். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் இருப்பது போல நதி நீர் ஆதாரங்கள் மகராஷ்டிராவில் இல்லை. விவசாய நிலத்தில் 4 சதவிகிதம் மட்டுமே கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது என்று அரசு சொன்னாலும் அது எடுத்துக்கொள்ளும் பாசன நீரின் சதவிகிதம் என்னவோ 71.5 சதவிகிதம். மகாராஷ்டிராவில் இது புதிய விஷயம் இல்லை. ஆனால் சர்க்கரை ஆலை முதலாளிகளால் நடத்தப்படும் மகாராஷ்டிர அரசு இந்த நிலையை முறைப்படுத்த முன் வராததில் எந்த ஆச்சரியமும் இல்லை. மகாராஷ்டிராவில் எந்தவொரு அரசியல்வாதியை எடுத்துக்கொண்டாலும் அவருக்கு ஒரு சர்க்கரை ஆலை சொந்தமாக இருக்கும். இதில் கட்சி பேதம், பகுதி பேதம் என்று எதுவும் இல்லை. மரத்வாடாவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்குக்கூட சர்க்கரை ஆலை இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வறட்சி நிலவிய கடந்த மூன்றாண்டுகளில், மக்களுக்கு ரயிலில் குடி நீர் வந்த அந்த காலகட்டத்தில், மரத்வாடாவில் கூடுதலாக 20 சர்க்கரை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நிலைமையை விரைவாக சரிசெய்யாவிட்டால் மரத்வாடா அடுத்த இருபது ஆண்டுகளில் மகராஷ்டிராவின் பாலைவனமாகி விடும்.

ஆனால் இந்த வறட்சிக்கு கரும்புகளை மட்டுமே குறை சொல்ல முடியாது இல்லையா? அதை முறையின்றி பயன்படுத்தும் பேராசையை என்ன சொல்ல?

தவிர பருவ நிலை மாற்றம், அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி மகாராஷ்டிர அரசியல்வாதிகளுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சி. நீர் மேலாண்மை திட்டங்கள் எதுவும் மகராஷ்டிராவில் பெரிய அளவில் செயல்படுத்தப்படவில்லை. இந்த வறட்சி செயற்கை வறட்சி என்று அங்கிருக்கும் வல்லுனர்கள் சொல்வது எவ்வளவு உண்மை?

மகராஷ்டிராவில் மட்டும்தானா?

மகாராஷ்டிராவில் மட்டும் அல்ல, இந்தியாவில் பல மாநிலங்களில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் விரைவில் வறட்சி தாக்கும் என்கிறது ஒரு ஆய்வு. மத்திய நீர் ஆணையம் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையின் படி தேசிய அளவில் உள்ள 91 நீர் தேக்கங்களில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு நீரின் அளவு குறைவாக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. வெறும் 29 சதவீதம் மட்டுமே இருக்கிறது. கடந்த வருடம் 71 சதவிகிதம் இருந்ததென்றும் பொதுவாக 74 சதவிகிதம் இருக்குமென்றும் அந்த அறிக்கை சொல்கிறது. மேற்கு வங்கத்தில் உள்ள பராக்கா அனல் மின்நிலையம் மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ள இரண்டு அனல் மின்நிலையங்களில் தண்ணீர் இல்லாதலால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மிகமோசமான வறட்சியை இந்த ஆண்டு பல மாநிலங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். மரத்வாடாவைப் போல மத்தியப் பிரதேசத்திலும் வறட்சி நிலை உருவாகியிருக்கிறது. சமீபத்தில் பெங்களூரூவில் நீர் வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டார்கள் விவசாயிகள். ஒடிசாவில் ஏரிகளை உடைத்து பயிர் நிலங்களை விவசாயிகள் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த கோடையில் ஆந்திர பிரதேசம், உத்திரகண்ட், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மிக அதிக அளவில் பாதிக்கப்படும் மாநிலங்களாக இருக்க கூடும் என்கிறது ஆணைய அறிக்கை.

தமிழ்நாட்டு நிலை என்ன?

ஏற்கனவே சொன்னது போல தமிழ்நாட்டிலும் வறட்சி உருவாக எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டிற்கு வறட்சி புதிதில்லை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் வறட்சி ஏற்பட்டபோது நிலைமையை சமாளிக்க திருவள்ளூரில் இருந்த கிணறுகளில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் குடிநீர் கொண்டுவர குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்த போது முதலில் அமைதி காத்தார்கள் திருவள்ளூர் விவசாயிகள். இந்த நிலை தொடரவும் ஒரு நாள் குடிநீர் வாரிய அதிகாரிகளை பிடித்து வைத்துக்கொண்டு இனி இது போல நடக்காது என்கிற உத்தரவாதத்தை வாங்கிக்கொண்டே விடுதலை செய்தார்கள். பொதுவாகவே தமிழ்நாட்டில் நீர் பற்றாகுறை உண்டு. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களை கணக் கிட்டால் 1587 கன அடி வரை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் தேவை 1894 கன அடி. இதில் 93 சதவிகிதம் பாசனத்துக்கும் மற்றவை தொழிற்சாலை, குடிநீர் போன்றவற்றுக்கும் போகும். சில மாவட்டங்களில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
பசுமைப் புரட்சிக்கு பிறகு சிறு தானியங்களை விதைக்காமல் நீர் அதிகம் உறிஞ்சும் பயிர்களுக்கு விவசாயிகள் மாறியதால் பாசனத்தேவை
அதிகமானது என்று சொல்லப்படுகிறது. இது தவிர கரும்பு போன்ற பயிர்களும் ஏற்கனவே பார்த்தது போல நிறைய நீர் தேவைப்படும் பயிர். தமிழ்நாட்டில் உள்ள நிலங்களில், 38.3 சதவிகிதம் நிலங்கள் விவசாயத்துக்காக பயன் படுத்தப்படுபவை. காவிரி டெல்டா பகுதிகளில் மொத்த நிலப்பகுதியில் 50 சதவிகித்துக்கும் மேல் விவசாய நிலங்கள். 70களின் தொடக்கத்திலிருந்து பசுமைப் புரட்சியின் காரணமாக நிலத்தடி நீர் பாழாவது தமிழ்நாட்டில் நடந்து கொண் டிருக்கிறது. பசுமைப் புரட்சி காரணமாக சிறு தானியங் களிலிருந்து நெல்லுக்கு மாறியதுதான் தமிழ்நாட்டின் அடிப்படை பிரச்னை. நெல்லுக்கு தொடர்ந்து நீர் தேவைப்படும். தமிழ்நாட்டின் நிலங்களில் 32.3சதவிகிதம் நெல்தான் விளைகிறது. வேறு எந்த பயிரும் இதற்கு அருகில்கூட வர முடியாது. 19.3 சதவிகிதம் நீர் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியாக நீர் தேவைப்படும் பயிராக நெல் இருக்கிறது. மகாராஷ்டிரத்துக்கு கரும்பு போல நமக்கு நெல்.

தமிழ்நாட்டை இப்போது துரத்தும் கேள்விகள் பல

1. 32.3 சதவிகிதம் நெல் விளைவது அவசியமா? அல்லது சிறுதானிய விளைச்சலுக்கு மாறிவிடலாமா?
2. தமிழ்நாடு போன்ற தண்ணீர் பற்றாக்குறை மாநிலத்தில் கரும்பு போன்ற நீரை அதிகமாக பயன்படுத்தக் கூடிய பயிர் வகைகள் விளைச்சல் தேவையா?
3. நீரை அதிகமாக உபயோகப்படுத்தும் மின்சார உற்பத்தி முறை (அணு மற்றும் அனல் மின் நிலையங்கள்) மூலம் மின் உற்பத்தி தேவையா?
4. நம்முடைய மாநிலத்திற்கு தேவையற்ற தொழில்களை, அதுவும் தண்ணீரை அதிகமாக உபயோகப்படுத்தும் தொழில்களை அனுமதிக்கலாமா?

நான்குமே இல்லை என்கிற பதில்தான் உண்மை. ஆனால் அதனால் ஏற்படக்கூடிய அரசியல்,கோட்பாடு ரீதியான பிரச்னைகளை பார்க்கும்போது இந்த முடிவுகளை எடுக்க யாருமே முன் வர மாட்டார்கள். இந்த தாமதத்தின் காரணமாக வறட்சி ஏற்படுவதோடு நிலத்தின் வளமும் குறைய வாய்ப்புண்டு. தமிழ்நாட்டில் மொத்தம் 34 பெரிய நதிகள், சிறிய ஆறுகள், கால்வாய்கள் எனப் பல உள்ளன. இவற்றில் இரண்டு ஆறுகளை தவிர வேறு எதுவும் வருடம் முழுவதும் நீரோடு இருக்காது.

ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றை பார்க்கும் போது நீர் மேலாண்மை என்பது நமது வாழ்வியலின் ஒரு பகுதியாக இருந்தது. ஏரி, குளம், குட்டை, ஊரணி என்று பல விதங்களிலும் நீரை பாதுகாத்து வந்தனர் நமது முன்னோர். நீருக்கென்று விழா எடுத்த பெருமையும் நமக்கு உண்டு. 39200 நீர்நிலைகளை கட்டி பாதுகாத்தவர்களின் வழி வந்த நாம்தான் இன்று இயற்கையோடு இருந்த உறவை முறித்துக்கொண்டு வறட்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். ஆக்ரமிப்புகளால் நீர் ஆதாரங்களை இழக்கும் நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம்.

இந்த நிலை மாற வேண்டுமென்றால் நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க புதிய அரசு முன் வர வேண்டும். பருவ நிலை மாற்றம் பற்றிய தெளிவான கொள்கையும் கொண்டிருக்க வேண்டும். நீர் மேலாண்மையில் அக்கறை கொண்ட அரசாகவும், காலநிலை மாற்றம் தொடர்பாகவும் அது பற்றிய சரியான பார்வை கொண்ட அரசாகவும் அது இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் பேராசைகளுக்காக நீர் மேலாண்மையில் சமரசம் செய்து கொண்டால் இன்று மரத்வாடா பகுதி சந்தித்துக்கொண்டிருக்கும் வறட்சியை விரைவிலேயே தமிழகமும் சந்திக்க வேண்டியிருக்கும். யாரை பழித்தாலும் தாயை பழிக்காதே என்று சொல்லுவார்கள், நாளை அது தாயை பழித்தாலும் நீரை பழிக்காதே என்று தான் சொல்ல முடியும்.

பொறியாளர் சுந்தர்ராஜன்

தமிழகத்திற்கான பாடங்களும்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments