பொதுமக்களுக்கு சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகிறது. அதன் ஒருபகுதியாக சூழல் முக்கியத்துவமிக்க இடங்களை பார்வையிட்டு கேள்விகள் எழுப்பி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கானக் களமாக பசுமை நடை என்ற நிகழ்வை முன்னெடுக்கிறோம். அதன் மூன்றாவது நிகழ்வான இன்று (Marsh Walk) பள்ளிக்கரணை சதுப்புநில வனப்பகுதியையும் பெருங்குடி குப்பைக் கிடங்கையும் பார்வையிட குழந்தைகளோடு பெற்றோரும் இளைஞர்கள் பலரும் வருகைபுரிந்திருந்தனர்.
நிகழ்வைத் தொடங்கி வைத்துப்பேசிய மேகா சதீஷ், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நிலவியல் அமைப்பு, நீரியல் அமைப்பு, உயிர்ப்பன்மையம் போன்ற விஷயங்கள் குறித்து அறிமுகம் செய்தார். துரைப்பாக்கம் – பல்லாவரம் சாலையில் சதுப்புநிலத்தின் ஓரமாய் நடந்தபடியே பல்வேறு பறவைகள், விலங்குகள், தாவரங்களைப் பார்வையிட்டு அவற்றை அடையாளப்படுத்தியதோடு அவற்றைக் குறித்த விபரங்களையும் அவற்றின் சூழல் முக்கியத்துவத்தையும் மேகாவும் ஜீயோ டாமினும் விவரித்தனர். அயல்தாவரங்கள் விலங்குகளால் சதுப்பு நிலத்தின் இயல்பான உயிர்ச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கார்முகில் விவரித்தார்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் தூக்கணாங்குருவிகள் கூடுகட்டுவதை நேரில் வெகு அருகிலேயே பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. நிகழ்வின் இறுதிப் பகுதியாக பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் தற்போதைய நிலை, அதை சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கும் வழிகள், சதுப்புநிலம் எதிர்கொள்ளும் சவால்கள், நீண்டகால அளவில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து வழக்கறிஞர் வெற்றிச்செல்வனும் ஜீயோ டாமினும் பேசினர். நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் பல்வேறு கேள்விகளும், கருத்துகளும் விவாதிக்கப்பட்டன.
கலந்துகொண்ட அனைவரும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியதை உணர முடிந்தது. பூவுலகைக் காக்க விரும்பும் ஒவ்வொரு நண்பர்களுடனும் எங்கள் நடை தமிழகமெங்கும் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டே இருக்கும்!
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்
பூவுலகின் நண்பர்கள் முன்னெடுத்த இயற்கை நடை.
: {short_link}