வளர்ப்பு யானைகளை அரசு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு முழுவதும் தனியார் மற்றும் கோயில் நிர்வாகங்களிடம் உள்ள யானைகளை அரசு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகரில் மோசமான முறையில் பராமரிக்கப்பட்டு உரிய அனுமதியின்றி கோயில் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்ட ஷேக் முகம்மது என்கிற தனியாருக்குச் சொந்தமான யானையை மாவட்ட வனத்துறையினர் கைப்பற்றி உரிய சிகிச்சை அளிக்க வனத்துறை தலைமை காட்டுயிர் பாதுகாவலர் கடந்த 21.02.2023 அன்று உத்தரவிட்டிருந்தார். யானையைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவை யானையின் உரிமையாளரிடமிருந்து அபராதமாகப் பெறவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 26.02.2023 அன்று யானை லலிதாவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் பார்வையிட்டார். இதனையடுத்து 27.02.2023 அன்று இந்த யானை தொடர்பாக ஏற்கெனவே வனத்துறை தொடுத்திருந்த மனுவை விசாரித்து யானையின் பராமரிப்பு தொடர்பான முக்கியமான உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். அந்த உத்தரவில் “ விருதுநகரில் சிகிச்சை பெற்றுவரும் யானை லலிதாவை நிரந்தரமாக தமிழ்நாடு வனத்துறை கைப்பற்றிப் வாழ்நாள் முழுக்க பராமரிக்க வேண்டும். யானை நலமடையும்வரை கால்நடைத்துறை மருத்துவர் கலைவாணன் உடனிருந்து சிகிச்சை அளிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கோயில்கள், தனியார் வசமிருக்கும் யானைகளை அரசு மறுவாழ்வு மையங்களுக்கு மாற்றூவாது குறித்து வனத்துறை செயலாளர் அறநிலையத்துறை செயலாளரிடம் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும். தனியாரோ, கோயில் நிர்வாகமோ மேற்கொண்டு யானைகளை வாங்கக் கூடாது என்கிற சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வின் உத்தரவு கண்டிப்பாக அமலாக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

downloaded (2)

-செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments