வணக்கம் தோழர்களே!

நான் குற்றால மலைகளில் வாழும் தென்னிந்திய மந்தி இனங்களின் தலைவன். அருவியில் குளிக்க வரும்போது நீங்கள் என்னையும் என் குடும்பத்தினரையும் கூட்டம் கூட்டமாய் பார்த்திருக்கக்கூடும். எங்களைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் குதூகலமானாலும், எங்களால் நீங்கள் அதிக தொந்தரவுக்கு உள்ளாவதாக உங்கள் பத்திரிகைகளைப் பார்த்து வருத்தமடைந்தேன். ஆனால் எனக்கு அந்த கருத்தில் உடன்பாடில்லை. எனக்கு மட்டுமல்ல இப்புவியின் வடகோளத்திலிருந்து தென்கோளம் வரையுள்ள எம் இனத்தின் எந்த உள்ளினத்தைச் சார்ந்தவருக்கும் அந்த கருத்தில் உடன்பாடில்லை என்பதே உண்மை. உங்கள் குழந்தைகளை நீங்கள் வளர்க்கும்போது “காலையில யாரைப்பாத்தாலும் குட் மார்ணிங் சொல்லணும்”, அப்புறம் “அவங்க சாக்லேட் குடுத்தா தேங்க்ஸ் சொல்லணும்”, நம்மளப் பாத்து அவங்க சிரிச்சா நாமளும் சிரிக்கணும் அப்படிண்ணு ஒவ்வொருவரிடமும் நன்றாகப் பழக பலவிதமான நாகரீகமான(!) இங்கிதங்களைச் சொல்லிக் கொடுக்கிறீர்கள். அதுகுறித்து எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நாங்களும் உங்களைப் பார்த்து எங்கள் பிள்ளைகளுக்கு நிறைய கற்றுக் கொடுப்பதுண்டு. ஆனால் யார் யாரிடம் எப்படிப் பழகவேண்டும் என்பதை ஆராய்ந்து மதிநுட்பத்தோடு செயல்படும் ஆற்றல் பெற்றிருக்கும் நீங்கள் உங்கள் மூதாதையரான எங்களிடம் எப்படிப் பழக வேண்டுமென்ற இங்கிதத்தைத் தெரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.
ஒருவேளை அது தேவையில்லை என்று நீங்கள் நினைத்திருக்கக்கூடும். அல்லது உங்கள் பெற்றோரின் பெற்றோர்கள் வாழ்ந்த இயற்கையோடு இயைந்த வாழ்வை உங்கள் அவசரம் மிகுந்த வாழ்க்கையில் நீங்கள் மறந்திருக்கலாம். அவற்றை இக்கடிதத்தின் மூலம் தங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். அறிவும் தொழில்நுட்ப வல்லமையும் மிக்க உங்களுக்கு அறிவுறுத்தும் தகுதி அடியேனுக்கு இல்லை எனினும் எம் இனத்தின் பிழைத்திருத்தல் குறித்த அச்சமே என்னை இக்கடிதத்தை உங்களுக்கு எழுதத் தூண்டுகிறது.

முதலில் நீங்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். அது “நாங்கள் காட்டு விலங்குகள்” என்பதுதான். எங்களை காட்டு விலங்குகளாகவே வாழவிடுங்கள். ஆம்! நீங்கள் உங்கள் வீட்டு செல்லப் பிராணிகளைப் போல் எங்களை வளர்க்க முற்படாதீர்கள். இத்தனை இலட்சம் ஆண்டுகளாய் எங்கள் இனம் தழைத்திருக்க வேண்டியதற்கான வாழ்க்கை உபாயங்களை இயற்கை எங்களுக்கு அளித்துள்ளது. எங்களால் எங்கள் உணவைத் தேடிக்கொள்ள முடியும். எங்களுக்கு எப்போதும் உணவூட்டாதீர்கள். உங்கள் உணவுகளின் சுவையில் மதிமயங்கிய எங்கள் கூட்டத்தினர் இயற்கையான ஒவ்வொரு காலத்திலும் கிடைக்கக்கூடிய சத்துக்கள் மிகுந்த காய் கனி உணவுகளை மறந்துவிட்டு தோசைக்கும் இட்டிலிக்கும் ரோடுகளில் தவம் கிடக்கின்றனர்.

காடுகளின் மழைக்காலத்தை நம்பியிருந்த எங்கள் உணவு முறை இப்போது உங்கள் சுற்றுலா சீசனை நம்பியிருக்கிறது. எங்கள் பிள்ளைகளுக்கு காட்டில் உணவு தேடுவதுகூட மறந்துபோய்விட்டது. சீறிவரும் உங்கள் வாகனங்களை உணவுக்காய் எதிர்நோக்கியிருக்கும் எங்கள் பெண்கள் அதன் சக்கரங்களில் சிக்கி மாண்டு போகின்றனர். நீங்கள் தூக்கியெறியும் உணவுகள் எங்களுக்கானவை அல்ல. அதன் மசாலாக்களையும் வேதி உப்புக்களையும் செரிக்க எங்கள் உடல் உகந்ததாயில்லை. சுற்றுலாத் தலங்கள் மட்டுமன்று எங்கள் உறவினர் களில் பலர் உங்கள் குடியிருப்புகள் அருகிலும் வசிக்கிறோம். நீங்கள் திறந்து வைத்திருக்கும் குப்பைத் தொட்டிகளில் சிதறியிருக்கும் உணவுகள் அவர்களின் உணவுப் பழக்கத்தை சிதைக்கின்றன. உங்கள் கதவுகளை எப்போதும் இறுக்கி மூடி வையுங்கள். எந்தச் சிக்கலுக்கும் விஷம் வைத்தல் தீர்வாகாது. ஏனெனில் நாங்களும் இப்புவியில் வாழவே விரும்புகிறோம். நீங்கள் வைக்கும் விஷம் அரிதினும் அரிதான எங்களில் சில இனங்களை அற்றுப் போகச்செய்து விடுமோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எங்கள் கோபக்கார நண்பர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ள சில உண்மைகளைச் சொல்கிறேன். கவனமாக அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

காடுகளின் மழைக்காலத்தை நம்பியிருந்த எங்கள் உணவுமுறை இப்போது உங்கள் சுற்றுலா சீசனை நம்பியிருக்கிறது. எங்கள் பிள்ளைகளுக்கு காட்டில் உணவு தேடுவதுகூட மறந்துபோய்விட்டது. சீறிவரும் உங்கள் வாகனங்களை உணவுக்காய் எதிர் நோக்கியிருக்கும் எங்கள் பெண்கள் அதன் சக்கரங்களில் சிக்கி மாண்டு போகின்றனர்.

எப்போதும் எங்களைப் பார்த்து சிரிக்கவோ, பல்லைக்காட்டவோ செய்யாதீர்கள். எங்கள் மொழியில் பல்லைக்காட்டினால் அது “அபாயம்” என்று பொருள். எங்களைக் கேலி செய்யாதீர்கள். குறிப்பாக உணவைத் தருவதுபோல பாசாங்கு செய்து பறித்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் எங்களின் கடி ஆபத்தானது. எங்களைப் பார்த்து ஓடாதீர்கள். அதே போன்று எங்களை நோக்கி எப்போதும் ஓடி வராதீர்கள். நீங்கள் எங்கள் நண்பர்களால் பயமுறுத்தப்பட்டால் ஓடாதீர்கள். மெதுவாக அவர்களைப் பார்த்துக்கொண்டே பாதுகாப்பான தொலைவுக்கு பின்னோக்கி நகருங்கள். நாங்கள் உங்கள் பொருட்களைப் பறித்துக்கொண்டால் நீங்கள் எப்போதும் எங்களோடு சண்டையிடாதீர்கள். ஏனெனில்
உங்கள் உடமைகளைவிட உயிர் முக்கியமானது. அதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம். பல நேரங்களில் உங்கள் பொறுப்பற்றதனமும் சில நேரங்களில் உங்கள் கருணையுமே(!) இருவருக்கும் ஆபத்தாக முடிகின்றன. எங்கள் முகபாவனைகளை உங்கள் புரிதலுக்கேற்ப அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். அது குழப் பத்தையும் ஆபத்தையுமே விளைவிக்கும். இறுதியாக எப்போதும் நாங்கள் காட்டு விலங்குகள் என்பதையும் அப்படியே இருப்பதில் தான் எங்கள் மாண்பு இருக்கிறது என்பதையும் உங்கள் நினைவில் வைத்திருங்கள். இணைந்து வாழ்வோம்!

நன்றி!

பி.கு: இக்கடிதத்தைக் கொண்டுவரும் என் தூதுவருக்கு டிப்ஸ் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டாம்.

இப்படிக்கு,
குற்றாலம்.

ஜீயோ டாமின். ம

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments