இந்தியாவில் யானைகளையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க தேசிய யானைகள் பாதுகாப்பு வாரியம் ஒன்றை உருவாக்குவதற்கான அவசியம் இல்லை என ஒன்றிய அரசின் தேசிய காட்டுயிர் வாரியம் முடுவெடுத்துள்ளது.
அண்மையில் ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடந்த தேசிய காட்டுயிர் வாரியத்தின் 74வது நிலைக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவின் மூலம் கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு விவகாரத்தை ஒன்றிய அரசு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் அமலில் இருந்த யானைகள் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் சட்டங்களை மறுஆய்வு செய்ய ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட குழு(Elephant Task Force) தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) பாணியில் ஒரு சட்டப்பூர்வ அமைப்பை யானைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்க வேண்டும் என 2010ஆம் ஆண்டில் பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என கடந்த 13 ஆண்டுகளாக சூழலியல் ஆர்வலர்கள் கோரி வந்த நிலையில் கடந்த கானுயிர் ஆர்வலர் ப்ரேர்னா சிங் பிந்த்ரா 2021ஆம் ஆண்டு மின்சார வேலியில் சிக்கி யானைகள் இறப்பது மற்றும் 2010ஆம் ஆண்டு Elephant Task Force சமர்ப்பித்த கஜா அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். இம்மனுவை கடந்த ஜூன் பிப்ரவரி மாதம் விசாரித்த தலைமை நீதிபதி சந்திராசூட் கொண்ட அமர்வு தேசிய புலிகள் பாதுகாப்பு வாரியத்தைப்போல யானைகளுக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவது தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில்தான் தேசிய காட்டுயிர் வாரியத்தின் நிலைக்குழு இவ்விவகாரத்தை அண்மையில் நடந்த கூட்டத்தில் பரிசீலித்து, தேசிய யானைகள் பாதுகாப்பு வாரியம் ஒன்றை உருவாக்குவதற்கான அவசியம் இல்லை என்கிற முடிவை எடுத்துள்ளது.
இக்கூட்டத்தில் பேசிய நிலைக்குழு உறுப்பினர் டாக்டர் சுகுமார் “ 30 ஆண்டுகளுக்கு முன்பு நாம் எதை யானைகளின் வழிப்பாதை (Corridor) எனக் கருதினோமோ இன்று அவ்வழிப்பாதைகள் அதேபோல் இல்லை. வழிப்பாதை என்பது யானைகள் காப்பகத்தின் நிலப்பரப்பிற்குள் உள்ள வாழ்விடங்களில் யானைகளின் நடமாட்டத்திற்கான இணைப்பை வழங்கும் ஒரு சிறிய நிலப்பரப்பாக கருதப்படுகிறது. கெடுவாய்ப்பாக, இவ்வழிப்பதைகள் அதன் அசல் அர்த்தத்தை இழந்துவிட்டன, மேலும் யானைகள் நடமாடும் ஒவ்வொரு இடத்தையும் வழிப்பாதை என்றழைக்கும் போக்கு உள்ளது.
அண்மையில் ’Elephant Corridors of India’ எனும் ஆவணம் வெளியிடப்பட்டது. இதில் , கர்நாடகா போன்ற மாநிலங்கள் 1-2 கி.மீ நீளம் அல்லது பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலமாக இருக்கக்கூடிய பரப்பை வழிப்பாதைகளாக குறிப்பிடும் சாத்தியம் இருப்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தது. மறுபுறம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் பரந்த அளவிலான வழிப்பாதைகளுக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தன. ஜார்க்கண்டில் யானைகள் வழிப்பாதை என்று குறிப்பிடப்படும் ஒரு பகுதி 120 கி.மீ நீளமும் 5 கி.மீ அகலமும் கொண்டது. இதன் பொருள் 600 கி.மீ2 ஆகும், இது நாட்டின் பெரும்பாலான பாதுகாக்கப்பட்ட பகுதிகளைவிட அதிகமாகும். ஜார்க்கண்டில் 46 கி.மீ நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட மற்றொரு நடைபாதை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த நடைபாதையில் யானைக் கூட்டம் நடக்க வேண்டும் என்றால், அவை ஒரே வரிசையில் செல்ல வேண்டும். இது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், காட்டுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் நிகழ்வுகளில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டில் 25ஆக இருந்த மனித இறப்புகளின் எண்ணிக்கை இன்று ஆண்டுக்கு சுமார் 500-600 மனித இறப்புகளாக உயர்ந்துள்ளது. இதேபோல், யானைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன, யானைகள் இப்போது பல வழிகளில் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி வருவதால் அவற்றின் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவை மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தும் விவசாய நிலப்பரப்பில் நகர்ந்து, மின் கம்பிகளுடன் தொடர்பு கொண்டு, கிணறுகளில் விழுகின்றன. காட்டுப் பகுதிகளுக்கு வெளியே யானைகள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தரவுகள் காட்டுகின்றன. வழிப்பாதைகளின் இந்த விரிவான வரையறையானது, பல வழக்குகளுக்கு வெள்ளக் கதவுகளைத் திறக்கும். இது ஏற்கனவே பல மாநிலங்களில் நடந்து வருகிறது.” எனக் குறிப்பிட்டார்
பின்னர் வனத்துறை தலைமை ஆய்வாளர் பேசுகையில் “ காட்டுயிர் (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் பிரிவு 62 பி இன் கீழ் உத்தரவுகளை வழங்குவதன் மூலம் யானைகள் காப்பகங்கள் மற்றும் வழிப்பாதைகளில் வரும் உள்கட்டமைப்புகளின் தாக்கங்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை சட்டப்பூர்வமாக வழங்க முடியும் என்பதால் யானைகளுக்கான பாதுகாப்பான ஆணையம் அமைக்க அவசியமில்லை” எனக் குறிப்பிட்டார். இதனையடுத்து யானைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க அவசியமில்லை என நிலைக்குழு முடிவெடுத்தது.
யானைகள் காப்பகங்கள் – புலிகள் காப்பகங்கள் ஒரு ஒப்பீடு
புலிகள் காப்பகங்கள் மற்றும் புலிகள் வழித்தடங்களுக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பை யானைகள் காப்பகங்கள் மற்றும் யானை வழித்தடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்புடன் ஒப்பிட்டால், பின்னதன் பாதுகாப்பு மிகவும் குறைவாகும். தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களைச் சுற்றியுள்ள சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் (Eco Sensitive Zone) உள்ள நிலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புடன் யானைகள் காப்பகங்கள் மற்றும் யானைகள் வழித்தடங்களின் நிலைமையை ஒப்பிட முடியாது.
தனியார் மற்றும் சமூக நிலங்களைக் கொண்ட சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படும் செயல்பாடுகளுக்கு, நிலைக்குழுவின் பரிந்துரைகள் தேவைப்படுகின்றன. காடாக வரையறுக்கப்பட்டு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்படாத யானைகள் காப்பகங்கள் மற்றும் யானை வழித்தடங்களைப் பொறுத்தவரை நிலைக்குழுவின் பரிந்துரை அவசியமில்லை. மேலும் புலிகள் காப்பகப் பகுதிகளில் அமைக்கப்படும் திட்டங்களுக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு வாரியத்தின் தடையில்லாச் சான்று அவசியமாகும். அப்படி ஒரு பாதுகாப்பும் யானை வழித்தடங்களுக்கும், காப்பகங்களுக்கும் இல்லை.
காட்டின் வளக் குறியீடாக பார்க்கப்படும் யானை, புலி ஆகிய இரண்டு உயிரினங்களைப் பாதுகாப்பதில் சமமான அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது சூழலியல் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால், யானைகள் திட்டத்திற்கு புலிகள் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. யானைகள் திட்ட த்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்த நிலையில் ஜூன் 23, 2023 அன்று ஒன்றிய அரசு வெளியிட்ட உத்தரவின் வாயிலாக இவ்விரு திட்டங்ளும் ஒன்றாக இணைக்கப்பட்டது.
2023-24 ஆம் ஆண்டின் புலிகள் திட்டம் மற்றும் யானைத் திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த பட்ஜெட் ரூ .331 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது 2022-23 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட குறைவானதாகும். இந்த இரண்டு திட்டங்களும் தனித்தனியாக இருந்தபோதே யானைகள் திட்த்திற்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்தாக நிபுணர்கள் கூறிவந்த நிலையில் இப்போது ஒருங்கிணைந்த பட்ஜெட்டில் யானைத் திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ் நாடு காட்டுயிர் வாரிய உறுப்பினர் ஓசை காளிதாசன் “யானைகள் தங்கள் வாழிடத்தை விரிவாக்கிக் கொண்டே போவது உண்மைதான் என்றாலும் பாரம்பரியமாக அவை பயன்படுத்தி வரும் வழிப்பாதைகளை நாம் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. யானைகள் வழிப்ப்பாதைகளை வரையறை செய்வதில் இருக்கும் முரண்பாடுகளால் நாம் அவற்றைப் பாதுகாக்காமல் விடக்கூடாது. குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை விதிக்கவாவது யானைகள் வழிப்பாதைகளைக் கண்டறிந்து நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்: எனக் கூறினார்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் யானைகளின் வாழிடங்களும் வழிப்பாதைகளும் சிதறுண்டு கிடக்கின்றன. அவற்றைப் பாதுகாத்தால் மட்டுமே யானைகளை நாம் பாதுகாக்க முடியும்.
– சதீஷ் லெட்சுமணன்
NECA