தொழிற்சாலைகளின் உமிழ்வைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Image: CCAG

மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உமிழ்வு கண்காணிப்பு முறைகளை முற்றிலும் மறு ஆய்வுக்குட்படுத்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு எண்ணூர், மணலி உள்ளிட்ட வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்து நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி குறித்து தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வந்தது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

இந்த வழக்கில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் காற்று மாசைத் தடுப்பதற்கான செயல் திட்டம் மற்றும் வடசென்னையில் சுற்றுச்சூழல் மேற்கொண்டு புதிய தொழிற்சாலைகளை தாங்கும் அளவிற்கு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய சுற்றுச்சூழல் துறை, மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியம், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.

இக்குழுவானது எண்ணூர் மற்றும் மணலியில் உள்ள ஆறு தொழிற்சாலைகளில் விரிவான ஆய்வை மேற்கொண்டு 11.11.2021 அன்று பசுமைத் தீர்ப்பாயத்திடம் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தது.

ஆய்வு செய்யப்பட்ட தொழிற்சாலைகள்

  1. North Chennai Thermal Power Station (NCTPS) Stage – 1
  2. NTECL Vallur Power Plant,
  3. Chennai Petroleum Corporation Limited (CPCL),
  4. Tamil Nadu Petroproducts Limited (TPL),
  5. Manali Petrochemicals Limited (MPL),
  6. Madras Fertilizers Limited (MFL).

 

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலத்தில் மட்டும் வடசென்னையில் உள்ள ஒரு அனல்மின் நிலையம் உட்பட 9 தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மாசை வெளியேற்றியுள்ளன.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 3வது சுத்திகரிப்பு ஆலை மட்டும் குறிப்பிட்ட ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலத்தில் 418 நாட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாசை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் Resid upgradation ஆலை 352 நாட்களும், சுத்திரிகப்பு ஆலை ஒன்று மற்றும் இரண்டு 334 நாட்களும், ப்ரொப்பிலின் ஆலை 161 நாட்களும், DHDS ஆலை 121 நாட்களும், அளவுக்கு அதிகமாக மாசை வெளியிட்டுள்ளன. இதற்காக மட்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 5ன் கீழ் 6 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அபராதமாக ஏன் விதிக்கக் கூடாது எனக் கேட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் குறிப்பாணை அனுப்பியுள்ளது.

இதேபோல, வடசென்னை அனல்மின் நிலைய ஸ்டேஜ் 1 மட்டும் 273 நாட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாசை வெளியிட்டுள்ளது. இதற்காக 1 கோடியே 22 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை ஏன் அபராதமாக விதிக்கக் கூடாது என மாசு கட்டுப்பாடு வாரியம் குறிப்பாணை அனுப்பியுள்ளது. மொத்தமாக 9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.  இக்குறிப்பாணைகளுக்கு பதிலளித்துள்ள நிறுவனங்கள் அபராதத் தொகையை மறு ஆய்வு செய்யக் கோரியுள்ளனர்.

மேலும், நிபுணர் குழுவானது மணலி தொழிற்சாலை பகுதியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த விரிவான பரிந்துரைகளையும் அளித்துள்ளது. அதில் மிக முக்கியமாக மணலி தொழிற்சாலை பகுதியில் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு வாயுக்களை வெளியேற்றாத ஆலைகளை மட்டுமே மேற்கொண்டு புதிதாக அமைக்க அனுமதிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நுண்துகள் மாசு வெளியேறுவதால் FGD போன்ற காற்று மாசுபாடு தடுப்புக் கருவிகளை விரைவாக பொருத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இறுதித் தீர்ப்பு

இந்த வழக்கில் நிபுணர் குழுவின் அறிக்கை, தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், தொழிற்சாலைகளின் விளக்கங்கள், பதிலுரைகள் ஆகியவற்றைப் பரிசீலித்த பிறகு 20.07.2023ஆம் தேதி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அதில், இந்த வழக்கில் தொடர்புடைய தொழிற்சாலைகள் தங்களது மாசு கட்டுப்பாட்டு உபகரணங்களை நவீனப்படுத்துவதன் மூலம் மாசின் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இருப்பினும், விதிமீறல்கள் நடந்துள்ளது என்கிற உண்மையை மறுக்க முடியாது. அதற்காக, சரியான சுற்றுச்சூழல் இழப்பீட்டை தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ளது.

நாளிதழில் வெளியான செய்தி மற்றும் நிபுணர் குழுவின் அறிக்கை ஆகியவை தொழிற்சாலைகளின் இணையவழி தொடர் கழிவு கண்காணிப்பு அமைப்பு (OCEMS) மற்றும் அதன் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகக் குறிப்பிட்ட தீர்ப்பாயம், தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்OCEMS தரவுகளைக் கண்காணிக்க ஒரு தனிக் குழுவை அமைத்து தீவிரமான முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் பிரச்சினைகளை உடனடியாக உயர்மட்டத்திற்கு கொண்டு சென்று தீர்வுகாண முடியும் என தீர்ப்பாயம் கூறியுள்ளது.

மாசின் அளவுகள் எவ்வளவு வரை மீறலாம் என்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்த விதிமுறைகள் மிகவும் தாராளமானவையாகவும் தொழிற்சாலைகள் அதிக உமிழ்வை வெளியேற்ற ஏதுவாகவும் அமைந்துள்ளதாகக் கூறிய தீர்ப்பாயம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இவ்விதிமுறைகளை மறு ஆய்வுக்குட்படுத்த காற்று மற்றும் நீர் மாசுபாடு தொடர்பான நிபுணர்கள் கொண்ட குழுவை உருவாக்கி புதிய விதிமுறைகளையும் வழிகாட்டுதலையும் 3 மாதத்திற்குள் உருவாக்கி தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியுள்ளது.

மேலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தொழிற்சாலைகள் முற்றிலும் தூய்மையான எரிபொருட்களுக்கு மாற வேண்டும். திரவ எரிபொருளின் பயன்பாட்டை வாயுவாக மாற்றுவது உட்பட. இடைப்பட்ட காலத்தில், தொழிற்சாலைகள் குறைந்த சல்பர் உள்ள எரிபொருட்களைப் பயன்படுத்தலாம்.

விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மணலி தொழிற்சாலைப் பகுதிகளில் போக்குவரத்தால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் சாலையை அகற்றி காங்க்ரீட் சாலைகள் அமைக்கப் பயன்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகள் எங்கெல்லாம் பொருந்துகிறதோ அங்கெல்லாம் தவறாமல் Flue Gas Desulfurization (FGD) எனும் மாசு கட்டுப்படுத்தும் அமைப்பைத் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் பொறுத்த வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளையும் தீர்ப்பாயம் விதித்துள்ளது.

வடசென்னை பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் அனல்மின் நிலையங்களால் அப்பகுதி தொடர்ச்சியாக மாசடந்து வருகிறது. இதற்கெதிராக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமான ஒரு வழக்கில் அபராதமாக பெறப்படும் தொகையை காங்க்ரீட் சாலை அமைக்க பயன்படுத்த உத்தரவிட்ட தீர்ப்பாயம் தொழிற்சாலைகளின் விதிமீறலால் பாதிப்படைந்த மக்களின் உடல் நலன் குறித்த ஆய்வுக்கோ, நலவாழ்வுக்கோ நேரடியாக மற்றும் உடனடியாகப் பயன்படும் வகையில் ஏதேனும் உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கலாம் என்பது சூழல் செயற்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது.

Judgment

– செய்திப் பிரிவு

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments