ஒலி மாசு – ஒளிந்திருக்கும் உண்மைகள்

இந்தியாவிலே இரைச்லான நகரம் சென்னை தான் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் சமீபத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வுகளின் படி இந்தியாவிலே அதிகம் ஒலி மாசு சென்னையில் தான் பதிவாகியுள்ளது.

இரைச்சல் என்று பொருள்படக் கூடிய Noise  என்னும் சொல் லத்தீன் வார்த்தையான Nausea என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது, இதன் பொருள் குமட்டல். அதாவது வாந்தியெடுக்க வேண்டிய அவசியத்தை உணரும் நோய். இரைச்சல் சத்தம் என்பது விரும்பத்தகாத,  மனிதர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒலி ஆகும்.  ஒலியின் தீவிரம் டெசிபல்களில் (dB) அளவிடப்படுகிறது. மனிதக் காது கேட்கக்கூடிய மிக மெல்லிய ஒலி 1 Db ஆகும், அதே போல் மனிதன் கேட்பதற்குப் பாதுகாப்பான அளவுகளாக 50 முதல் 55 டெசிபல்களை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது. 85 டெசிபலுக்கு மேல் சென்றால் அது மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுகளாக கருதப்படுகிறது.

 

இந்தியாவின்ஒலி தர நிர்ணய அளவுகள் பின் வருமாறு:

நீர் மாசு, காற்று மாசு போன்று ஒலி மாசு பிரச்சனையை ஒரு சூழலியல் பிரச்சனையாகக் கருதும் அளவிற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், அண்மைக் காலமாக ஒலி மாசு இந்திய நகரங்களில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது,

65-70 டெசிபல் சத்தத்தை சில மணி நேரம் தொடர்ந்து கேட்டு வந்தால் அது நமக்கு எரிச்சலூட்டும் இரைச்சலாக மாறி விடுகிறது. இதுவே 85 டெசிபல் சத்தத்தை இரண்டு மணி நேரத்திற்கும், 100 டெசிபல் சத்தத்தை 15 நிமிடங்களும், 120 டெசிபல் சத்தத்தை 2 நிமிடங்களும் கேட்டல் அது நம் காதுகளின் கேட்கும் திறனைப் பாதிக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

இரைச்சல் சத்தத்தை நம் காதுகள் கேட்கும் பொழுது அதிக அழுத்தம், இரத்த அழுத்தம், செவி கேளாமை, தூக்கமின்மை, சோர்வு ஆகியவை ஏற்படுகிறது. அதிக ஒலி மாசிற்கு உள்ளாகுபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்புகள் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு.

இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி சென்னையின் பல்வேறு இடங்களில் சராசரி ஒலி மாசின் அளவு 70 டெசிபலாக பதிவாகியுள்ளது, அதிலும் குறிப்பாக தியாகராய நகரில் (டி.நகர்) 80.3 டெசிபலாகவும், நாட்டிலே அதிகப்படியாகக் கிண்டியில் 83.6 டெசிபலாகவும் ஒலி மாசு பதிவாகியுள்ளது.

வாகனங்களின் ஹாரன் ஓசை, அலுவலகங்களில் பயன்படும் கருவிகள், ஆலை இயந்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், கட்டிட பணிகள், மின் விசைகள்,  ஒளிபரப்புக் கருவிகள்,  ஒலிபெருக்கி,  ஆடல் பாடலுக்கான பொழுதுபோக்குச் சாதனங்கள் ஆகியவை அனைத்தும் இரைச்சல் உண்டாவதற்கான காரணிகளாக இருந்தாலும், ஒரு நகரத்தின் 60-70% இரைச்சலுக்குக் காரணமாக இருப்பது அந்த நகரத்தில் உள்ள வாகனப் போக்குவரத்து தான்.

 

சென்னையின் ஒலி மாசிற்கான காரணம் என்ன?:

சென்னையின் வாகனங்கள் தான் அதன் ஒலி மாசிற்கான முக்கியக் காரணம், வாகனத்தில் இருந்து எழுப்பப்படும் ஹாரன் சத்தம் மட்டும் ஒலி மாசிற்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது, வாகன நெரிசலான இடங்களில் வாகனங்களின் சைலன்சர், என்ஜின், சாலையுடன் உராயும் டயர் என வாகனத்தின் அனைத்து அசைவுகளுமே ஒலி மாசு ஏற்படுத்துபவை தான்.

சென்னையின் வாகன நெரிசலுக்கானக் காரணங்கள் பின்வருவாறு ,

மற்ற நகரங்களை விட சென்னையில் ஒலி மாசு அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஒலி மாசை ஏற்ப்படுவதற்கான அத்தனை காரணங்களும் சென்னையில் உள்ளன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகம். அதன் காரணமாகத் தலைநகர் சென்னை திட்டமிடப்படாத அதிவேகமான நகரமயமாக்களுக்கு உட்படுத்தப்பட்டுத் தற்பொழுது சுமார் ஒரு கோடி பேருக்கும் மேல் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது.

GDPயில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 50% வீடுகளில் இருசக்கர வாகனம் இருக்கிறது. இந்தியாவின் எந்த நகரத்தையும் விட அதிக வாகன நெரிசல் உள்ள நகரமாக சென்னை மாறியுள்ளது. சென்னையின் சாலைகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 2093 வாகனங்கள் செல்கின்றன.   இரண்டாவது இடத்தில் உள்ள புனே நகரத்தில் கிலோ மீட்டருக்கு 1260 வாகனங்கள் தான் உள்ளன. தலைநகர் டெல்லியிலோ கிலோ மீட்டருக்கு 245 வாகனம் தான் உள்ளது.

இது மட்டுமல்லாமல் சென்னையின் எந்தப் பகுதியிலும் மண்டல விதிகள் பின்பற்றப்படவில்லை, உதாரணத்திற்கு டி.நகரை எடுத்துக்கொண்டால்  ஒரே பகுதி வணிக வளாகம் உள்ள (Commercial zone) பகுதியாகவும், குடியிருப்புப் (Residential Zone) பகுதியாகவும் , பள்ளிகள் நிரம்பியுள்ள அமைதியான (Silent Zone) பகுதியாகவும் உள்ளது. இப்படி ஒரே பகுதி மூன்று தேவைக்காகப் பயன்படுத்தப்படும் பொழுது வாகன நெரிசல் அதிகரிக்கத் தானே செய்யும்?

அமைதியான இடமாகக் கருதப்படும் (silent zone) பள்ளி கல்லூரியைச் சுற்றி 100மீ தொலைவில் எந்த வணிக வளாகமும், தொழிற்சாலையும் இருத்தல் கூடாது,  ஆனால், டி.நகரின் உஸ்மான் சாலையில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகம் ஒன்றுக்கு 73மீ அருகில் பள்ளிக்கூடம் ஒன்றும் செயல்படுகிறது. இந்த இடத்தில் பாதுகாப்பான பகல் நேர ஒலி மாசின் அளவினை 65 டெசிபல் என்று எடுத்துக்கொள்வதா இல்லை silent zone க்கு உரிய 50 டெசிபல் என்று எடுத்துக்கொள்வதா?

இப்படி ஒலி மாசின் அளவினைத் தர நிர்ணயம் செய்வதிலேயே நிறையப் போதாமைகள் நமது நாட்டில் உள்ளன.

80dB வரை உள்ள ஹார்ன் தான் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய மோட்டார் வாகன சட்டம் தெரிவிக்கிறது. ஆனால், தற்பொழுது  இரு சக்கர வாகனங்களில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் multi tonned horn, modified horn-கள் 130dB முதல் 150dB வரை சத்தம் எழுப்புவதாக உள்ளது.

2018ம் ஆண்டு அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்தியதாக தமிழ்நாட்டில் 23,837 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதில் 11,007 வழக்குகள் கனரக வாகனங்கள் மீதும், 10,157 வழக்குகள் பேருந்துகள் மீதும், வெறும் 2,673 வழக்குகள் மட்டுமே அதிக ஒலிப்பும் ஹார்ன் பயன்படுத்திய  இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் மீது பதியப்பட்டுள்ளது.

 

அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கைகள் எதுக்கு கடுமையான சட்டங்கள் உள்ள போதிலும் தற்பொழுது வரை ஹார்ன் விதி மீறும் இருசக்கர வாகங்கள் மீது வழக்குகள் அதிக அளவு பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின்  முயற்சியில் சென்னையில் ‘No Honk’ ஹார்ன் அடிக்காதே என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது ஒரு நல்ல முன்னெடுப்புதான் என்றாலும் வெறும் ஹார்ன் மட்டுமே ஒலி மாசிற்கு காரணம் என்பது போல் அது சித்தரிக்கப்படுகிறது,

ஒரு பரபரப்பான சாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் பல ஆயிரம் வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்வது தான் வாகன ஒலி மாசுக்கான முக்கியமானக் காரணம் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒலி பெருக்கியைப் பயன்படுத்துவதற்கு தனி விதிகள் உள்ளன, மக்கள் வசிப்பிடங்கள், வணிகப் பகுதி, அமைதியான பகுதி, தொழிற்சாலை இருக்கும் பகுதி என ஒவ்வொரு பகுதிக்கும் ஒலி ,மாசு தர நிர்ணய அளவுகள் வகுக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு பகுதிகளிலும் வரையறை செய்யப்பட்டுள்ள ஒலி அளவுகளை விட 10dB வரை ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனச் சட்டம் சொல்கிறது.

ஆனால், இந்த 10dB வரையறையே சரியான நடைமுறை இல்லை என்பது தான் என் வாதம். உதராணத்திற்கு ஒரு குடியிருப்புப் பகுதியை எடுத்துக்கொள்ளுங்கள், வணிகப் பகுதியில்(Commercial zone) பகல் நேரத்தில் 65dB வரை ஒலி அளவுகள் இருக்கலாம், ஒலிபெருக்கிக்கு அதை விட 10dB அதிகம் ஒலி எழுப்பலாம் என்கிறது விதி. ஆனால், ஏற்கனவே 65dB சத்தம் இருக்கும் ஒரு இடத்தில் 75dB ஒலிபெருக்கியின் சத்தம் சேர்ந்தால் Cumulative noise (Leq) 75.41dB ஆக இருக்கும் . இதுவே ஒலி பெருக்கியின் இரண்டு குழாய்களில் இருந்து 75dB + 75dB சத்தம் வருவதாக இருந்தால் அது கூட்டாகச் சேர்ந்து 78dB சத்தத்தை எழுப்பும். ஆக அப்படி இருக்கும் பட்சத்தில் 65dB அளவு நிர்ணயம் செய்யபட்டுள்ள ஒரு இடத்தில் 75dB ஒலி பெருக்கிகளுக்கு அனுமதி வழங்குவது என்பது சரியான அணுகுமுறை இல்லை. கூட்டுச் சத்தத்தை (Cumulative Noise) பற்றிய அறிவியல் தெளிவு இல்லாமல் இந்தச் சட்ட விதியினை வகுத்திருக்கிறார்கள்.

65dB-க்கும் 75dB-க்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் உண்மையில் வித்தியாசம் பல மடங்கு அதிகமே.  ஒலியை அளவிடும் டெசிபல் ஸ்கேலைப் பொறுத்தவரை அது நமது செண்டிமீட்டர் ஸ்கேலைப் போன்று ஒரே மாதிரியான இடைவெளியைக் கொண்டதல்ல. மாறாக அது மடக்கை அடுக்குகளில் அளவிடப்படுகிறது(Logirthmaticallymeasured). எளிமையாகப் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் 120dB சத்தம் என்பது இரண்டு மடங்கு 60dB இல்லை மாறாக அது 60 டெசிபல் சத்தத்தை விட 1000 மடங்கு ஒலி விசை வேகத்தைக் (Sound Velocity) கொண்டது.

60dB = 0.02pa

120dB = 20 pa

ஒலியில் அளவுகளில் ஏற்படும் ஒவ்வொரு 10 dB அதிகரிப்பும் ஐந்து மடங்கு கூடுதல் ஒலி விசை வேகத்தைக் கொண்டதாகும். எனவே 65dB க்கும் 75dB க்கும் ஐந்து மடங்கு வித்தியாசம் உள்ளது. எனவே தான் ஒலிபெருக்கி ஒலி நிர்ணய விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறோம்.

 

விதிகளை மாற்றி அமைப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறையில் பின்பற்றுகிறார்களா என்ற தீவிரக் கண்காணிப்பு பொறிமுறைகளை உருவாக்குவதும் இங்கு தேவையாக உள்ளது, திருவிழாவின் பொழுதும் பண்டிகையின் பொழுதும் என்றோ ஒரு நாள் தானே வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துகிறார்கள் என்று நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. 1982ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரம் ஒலிபெருக்கி ஒலிமாசு பிரச்சனையில் இருந்து தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலி பெருக்கிகளுக்கான விதிகள் மட்டும் இல்லை பொதுவாகவே ஒலி மாசு விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.  24.11.2000 அன்று கொண்டுவரப்பட்ட ஒலி மாசிற்கானச் சட்ட விதி எப்படி 21 ஆண்டுகளுக்கு பின்பு இவ்வளவு நகரமயமாக்குதலுக்குப் பின்பும் எந்த விதத் திருத்தங்களும் இல்லாமல் அப்படியே பொருந்தும்?

உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ள 53dB-க்கும் நாம் பாதுகாப்பான அளவுகளாக வரையறை செய்துள்ள 85dB-க்கும் 50 மடங்கு வித்தியாசம் உள்ளது.

 

ஒலி மாசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல்:

தற்பொழுது இந்தியாவில் மொத்தம் 7 நகரங்களில் நகரத்திற்குத் தலா 10 இடங்கள் என்று 70 ஒலி மாசு கண்காணிப்புக் கருவிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. ஒலி மாசு அதிகம் ஏற்படும் நெரிசலான இடங்கள் கண்டறியப்பட்டு அனைத்து இடங்களிலும் ஒலி மாசு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அப்பொழுது தான் வரும் காலங்களில் நகர ஒலி மாசினைப் புரிந்துகொள்ளவும் அதனைக் குறைப்பதற்கானத் தொலைநோக்கு நடவடிக்கைகளையும் நம்மால் எடுக்க முடியும்.

வருங்கால நகர வடிவைப்பின் பொழுது ஒலி மாசினையும் கருத்தில்கொண்டு நகரத் திட்டமிடல் இருந்தால் மட்டுமே ஒலி மாசு பிரச்சனையில் இருந்து நம் பெருநகரங்கள் தப்பிக்கும்.

  • பிரபாகரன் வீரஅரசு

[email protected]

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments