”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” வெளியானது ஐ.பி.சி.சி.யின் அறிக்கை.

கடந்த ஜூலை மாதம் உலகின் அனைத்து பிராந்தியங்களும் வெள்ளம், வறட்சி, புயல், நிலச்சரிவு, கடல் நீர் மட்ட உயர்வு, கனமழை, காட்டுத்தீ போன்ற ஏதோ ஒரு பேரிடரால் பாதிக்கப்பட்டோ அல்லது பாதிப்பிலிருந்து மீண்டுகொண்டோ இருந்தது. இவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பவைதானே இதில் புதிதாக ஏதுமில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை காலநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வரும் எந்த அறிவியலாளராலும் கணித்திருக்க முடியவில்லை.

அறிவியலாளர்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த பேரிடர்களை முன்கூட்டியே கணித்து விடும்  அறிவியல் தொழில்நுட்பங்களால் கூட இந்த வெள்ள பாதிப்பை கணித்திருக்க முடியவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் காலநிலையில் குறிப்பிட்ட அளவு மாற்றம் நிகழும் என ஏற்கெனவே நாம் கணித்திருந்த பல அளவுகோல்களை சுக்கு நூறாக உடைத்தது ஜூலை மாதத்தில் நடந்த தீவிர காலநிலை நிகழ்வுகள்.

இந்த பின்னணியில்தான் ஐ.பி.சி.சி. அமைப்பு இன்று ஜெனிவாவில் தனது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.பி.சி.சி. தற்போது தனது ஆறாவது மதிப்பீட்டு காலத்தில் உள்ளது. இந்த காலத்தில் அமைப்பின் முதல் பணிக்குழுவின் Climate Change 2021: the Physical Science Basis  எனப் பெயரிடப்பட்ட இந்த அறிக்கை காலநிலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் குறித்தும் மனிதர்களால்தான் காலநிலையில் மாற்றங்கள் உண்டாகின்றன என்பதற்கான ஆதாரங்களையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி என்பது பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தங்களது பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தினாலும் கூட இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் சராசரி வெப்பநிலையானது 3° செல்சியசை தொட்டுவிடும் என்பதே ஆகும். 2014ஆம் ஆண்டு வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையில் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்கள் நடவடிக்கை காரணம் என்று குறிப்பிட்டிருந்தது. இன்று வெளியாகியிருக்கும் அறிக்கையில் 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு வளிமண்டலத்தில் நிறைந்துள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவுக்கு சந்தேகத்திற்கிடமின்றி மனித நடவடிக்கைகள் மட்டுமே காரணம் என்பதை அறிவியலாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்

  • புவியின் மீதான மனிதர்களின் செல்வாக்கு ஏற்கெனவே புவியின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள வானிலை மற்றும் தீவிர காலநிலை நிகழ்வுகளை பாதித்துள்ளது.
  • 2014ஆம் ஆண்டு வெளியான ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கைக்குப் பிறகு வெப்ப அலைகள், கனமழை, வறட்சி, புயல் போன்ற பேரிடர்களின் தீவிரத்திற்கு மனிதர்களின் நடவடிக்கை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
  • பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வானது அதிகமாகவோ, நடுத்தரமாகவோ அல்லது குறைவாகவோ என எந்தப் பாதையில் சென்றாலும் புவி வெப்பமானது 1.5 செல்சியஸ் அல்லது 2 செல்சியஸ் அளவை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் எட்டிவிடும்.
  • புவி வெப்பமயமாதலானது நீர் சுழற்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் பருவமழைப் பொழிவு மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் அதி தீவிர மழைப்பொழிவும், வறட்சியும் ஏற்படும். சில இடங்களில் இவ்விரு நிகழ்வுகளும் தொடச்சியாகவோ அல்லது ஒரே நேரத்திலோகூட நிகழும். இதனால் பாதிக்கப்படும் மக்கள் அதிலிருந்து மீளவே முடியாத நிலை உண்டாகும்.
  • கார்பன் டை ஆக்ஸ்டு உமிழ்வு அதிகமாகும் பட்சத்தில் நிலமும் கடலும் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கும் திறனை இழக்கும்.
  • பசுமை இல்ல வாயுக்களின் கடந்த கால மற்றும் எதிர்கால உமிழ்வால் கடல், பனிப்பாறைகள், கடல் நீர்மட்ட உயர்வில் ஏற்படும் மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத நிலை உண்டாகும்.
  • 2019ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் காணப்பட்ட கார்பன் டை ஆக்சைடின் செறிவானது அதற்கு முந்தைய 2 மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவாகும். மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடின் அளவானது அதற்கு முந்தைய 800,000 ஆண்டுகளில் காணப்படாத அளவாகும்.
  • 1970ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்த உலக சராசரி வெப்பநிலை உயர்வானது அதற்கு முந்தைய 2000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும்.
  • 1900ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்ந்த உலகின் சராசரி கடல் மட்ட உயர்வின் வேகமானது கடந்த 3000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒன்றாகும். 2100ஆம் ஆண்டில் 2மீ அளவிற்கும் 2150ஆம் ஆண்டில் 5மீ அளவிற்கும் உயர வாய்ப்புள்ளது.
  • கடல் வெப்ப அலை நிகழ்வுகளின் எண்ணிக்கையானது 1980ஆம் ஆண்டிற்குப் பிறகு இருமடங்காக அதிகரித்துள்ளது.
  • ஆர்க்டிக் கடற் பகுதியில் உள்ள பனிப் பாறைகளின் பரப்பு 1979 முதல் 1988 மற்றும் 2010-2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 40% மற்றும் 10% குறைந்ததற்கு மனிதர்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட வெப்பமயமாதலே காரணம்.

 

அறிவியல் ஆதாரங்களுடன் காலநிலை மாற்றத்தின் தற்போதைய நிலை மற்றும் தீவிரத்தை இந்த அறிக்கை நமக்கு எடுத்துரைத்துள்ளது. பாரிஸ் ஒப்பந்ததின் படி உமிழ்வை குறைத்தால் கூட இனி நமது இயல்பு வாழ்க்கையானது பேரிடர்களுக்கு நடுவில்தான் அமையும் என்பதே இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தியாகும். தற்போது இருக்கும் உமிழ்வு அளவை குறைப்பதோடு மட்டுமில்லாமல் மிக வேகமாக நம் வாழ்விடங்களை பேரிடர்களில் இருந்து தப்பிக்கும் வகையில் தகவமைத்துக் கொள்ள நாம் முயல வேண்டும். இனி நாம் வெளியிடும் ஒவ்வொரு சிறு உமிழ்வும் இப்புவியின் எதிர்காலத்தை சீரழிக்கும் என்பதை அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.

 

இந்த அறிக்கைகளின் அடிப்படையில் திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டிய  இந்திய அரசோ, தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களையும், அனல்மின் நிலையங்களையும், நிலக்கரி மற்றும் யுரேனிய சுரங்கங்களையும் திறப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இது போன்ற திட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களையும் திருத்தி அமைத்து நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் வேகமாக ஈடுபட்டு வருகிறது. அறிவியல் நம் இருத்தியலின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கையை கொடுத்து விட்டது. அதற்கு செவிமடுத்து செயல்பட வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது.

 

அண்மையில் MSSRF அமைப்பின் ஆண்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காலநிலை மாற்றத்தை இந்த அரசு மானுட குலத்திற்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சனையாக கருதுவதாக தெரிவித்திருந்தார். மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய உரையாக அது அமைந்தது. அந்த வகையில் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்தவும் தகவமைத்துக் கொள்ளவும் நமது மாநிலத்திற்கென சிறப்பான காலநிலை மாற்ற செயல் திட்டம் ஒன்றையும் சட்டம் ஒன்றையும் உருவாக்க வேண்டும். மாவட்ட அளவில் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டம் மற்றும் மையங்களை அமைக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் கோருகிறோம்.

 

நன்றி!

முழு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய

https://www.ipcc.ch/report/ar6/wg1/

 

 

 

ஐ.பி.சி.சி என்றால் என்ன?

 

காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு என்பது பல்வேறு அறிவியலாளர்களை கொண்ட ஒரு குழுவாகும். இந்த ஐ.பி.சி.சி. அமைப்பானது 1988ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உலக வானிலை அமைப்பால் இணைந்து உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் என்பது உலக நாடுகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதற்கான அறிவியல் பூர்வ தகவல்களை அளிப்பதாகும். பன்னாட்டு அளவில் காலநிலை மாற்றம் குறித்த உரையாடல்களுக்கு முக்கியமான கருவியாக ஐ பி சி சி தயாரித்து வெளியிடும் அறிக்கைகள் விளங்குகின்றன. இந்த அமைப்பில் தற்போது 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பானது தன்னிச்சையாக ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாது. பல்வேறு நாடுகளில் உள்ள அறிவியலாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளை குழு அமைத்து ஆராய்ந்து அதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள், தாக்கங்கள், எதிர்கால ஆபத்துகள், தடுப்பு மற்றும் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகளாக வெளியிடுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வானிலை அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் தங்கள் காலநிலை விஞ்ஞானிகளின் பெயர்களை சமர்ப்பிப்பார்கள். இப்பட்டியலில் இருந்து ஐ பி சி சி யின் தலைமைக்குழு குறிப்பிட்ட அளவிலான விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பணிக் குழுவை ஒதுக்கும். ஐ.பி.சி.சி. அமைப்பானது மூன்று பணிக்குழுக்கள் மற்றும் ஒரு செயற் குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பணிக் குழுவானது காலநிலை மாற்றத்தை உண்டாக்கும் இயற்பியல் அறிவியலின் அடிப்படை குறித்து ஆராய்கிறது.  இரண்டாவது பணிக் குழுவானது காலநிலை மாற்றத்தின் தாக்கம் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பு குறித்தும் மூன்றாவது பணிக்குழு காலநிலை மாற்றத்திற்கு தகவமைத்துக் கொள்வது குறித்தும் ஆராய்கிறது. செயற் குழுவின் முக்கிய நோக்கமாக பசுமை இல்ல வாயு குறித்த ஆய்வு மற்றும் அதனை நீக்குவது அமைந்துள்ளது.

இந்த அடிப்படையில் ஐ பி சி சி ஆனது இதுவரை 5 மதிப்பீட்டு அறிக்கைகளை (Assesment Report) தயாரித்து வெளியிட்டுள்ளது.

முதல் மதிப்பீட்டு அறிக்கை ( FAR)

1990ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த முதல் மதிப்பீட்டு அறிக்கையானது  காலநிலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் குறித்த ஒரு பரந்த கண்ணோட்டத்தை வழங்கியது மேலும் உலக வெப்பமயமாதலின் ஆதாரங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்தும் இவ்வறிக்கையில் பேசப்பட்டு இருந்தது.

 

இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை ( SAR)

1995ஆம் ஆண்டு வெளியான இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையானது உலக அளவில் காலநிலை மாற்றத்தில் தெளிவாக கண்டறியக் கூடிய அளவில் மனித செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம் என தெரிவித்தது.

மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை (TAR)

2001ஆம் ஆண்டு வெளியான மூன்றாவது அறிக்கை கடந்த 50 ஆண்டுகளில் உலகம் சந்தித்த வெப்பநிலை உயர்வுக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம் என்பதற்கான புதிய மற்றும் வலுவான ஆதாரங்களை முன்வைத்தது.

 

நான்காவது மதிப்பீட்டு அறிக்கை (AR4)

2007ஆம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் உலகளவில் சராசரி காற்று மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் உயருதல் போன்றவற்றை கண்காணித்ததிம் அடிப்படையில் உலக வெப்பமயமாதல் என்பது சந்ததேகத்திற்கிடமின்றி தெளிவாகியதாக கூறப்பட்டிருந்தது.

ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை (AR5)

2014ஆம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் அனைத்து கண்டங்கள் மற்றும் கடல்களில் காலநிலை அமைப்பில் மனிதச் செயல்பாடுகளின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 95% மனிதர்கள் மட்டுமே உலக வெப்பமயமாதலுக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது ஐ.பி.சி.சி. தனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் காலத்தில் உள்ளது. இந்த ஆறாவது அறிக்கை காலமான 2015 முதல் 2023 ல் மொத்தமாக 8 அறிக்கைகள் வெளியிடப்படும். ஏற்கெனவே இதில் 4 அறிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன. இன்று  ஐ.பி.சி.சியின் முதல் பணிக்குழு காலநிலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் குறித்த தனது அறிக்கையை வழங்கியுள்ளது. இந்த ஆறாவது காலத்தின் இறுதி அறிக்கை 2022ஆம் ஆண்டில் வெளியாகவுள்ளது.

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments