அருட்பணி. காட்சன் சாமுவேல்
நமது மண், இலக்கியம், கலாச்சாரம், சமயம் வணிகம் உணவு மற்றும் வரலாறு இவைகள் அனைத்திலும் நீங்கா நெடிய இடம் பிடித்திருக்கும் ஒரே மரம் பனைமரம் தான். அனைத்து இலக்கியங்களும் பனைமரத்தினை தவறாது குறிப்பிடுகின்றன, அனைத்து சமயங்களும் பனைசார்ந்த விழா மற்றும் சடங்குகளில் பனைசார்ந்த பொருட்களை நேரடியாகவும் குறியீட்டு ரீதியாகவும் பயன்படுத்துகின்றன, வரலாறு நெடுக பனை மனிதனுக்கு வழித்துணையாக வருகின்றது, வெண்கொற்றக் குடையும் பன பூமாலையணிந்த சேரனும், கள்ளைக் கொண்டாடும் சமூகமும் என பனை நெடுக வளர்ந்து ஓங்கி நிற்கின்றது. பெரும்பாலும் பழந்தமிழர்கள் பயணித்த இடங்கள் பலவற்றில் காணும் பனைமரங்கள், தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகளான இலங்கை மண்ணிலும் ஓங்கி வளர்ந்திருப்பது, அவர்கள் வாழ்வில் நெருங்கிய உறவோடிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆசியாவெங்கும் தமிழர்கள் சென்ற இடங்களிலும் பனைமரம் வளர்த்து பெருகி பயன்பாட்டில் இருப்பது தமிழர்களுக்கும் பனைக்குமான உறவை சொல்லவல்லது. பனைமரம் நெய்தல் நிலத்தை சார்ந்தது. உப்புநீர் சார்ந்த பகுதிகளிலும் வறண்ட நிலத்திலும் பிற பயன் தரும் தாவரங்கள் வளரா பகுதிகளிலும் பனை பல்வேறு வகைகளில் மனிதர்களுக்கு பலன் தரும் மரமாக காணப் படுகிறது. தமிழகத்தில் சுமார் 5 கோடி பனைமரங்கள் இருப்பதாக அரசு அதிகாரிகள் உட்பட அனேகர் சொல்லி வருகின்றனர். 1965 ஆம் ஆண்டு கூறப்பட்ட புள்ளி விபரம் இது. அதற்குப் பின்னால் காமராஜர் காலத்தில் பனைமரங்கள் பெருமளவில் நடப்பட்டன. எண்பதுகளுக்குப் பிற்பாடு தமிழக அளவிலான ஆதாரபூர்வமான கணக்கெடுப்புகள் ஏதும் நடைபெறவில்லை. ஆகவே கடந்த நாற்பதாண்டுகளாக அழித் தொழிக்கப்பட்ட பனைமரங்களோ வறட்சியால் அல்லது மூப்பினால் பட்டமரங்கள் குறித்த பதிவுகளோ நம்மிடம் இல்லை. இன்று பனைமரங்களை விதைப்போர் பெருகி வரும் சூழலில் மக்கள் சார்ந்த பனைக்கணெக் கெடுப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். பனைகளைக் கணக்கெடுக்கும் போது அலவுபனை (ஆண் பனையின்) எண்ணிகையினை தனியாகவும் பருவப்பனையின் (பெண் பனையின்) எண்ணிக்கையினையும் தனித்தனியாக குறித்துக் கொள்ளவேண்டும். பயன்பாட்டுக்கு வராத வடலிபனைகளை (சிறிய மரங்களை) தனியாக குறித்துக் கொள்ள வேண்டும். மனிதனின் உயரத்திற்கும் குறைவாக இருக்கின்றவைகளை இன்னும் தனியாக குறித்துக் கொள்ள வேண்டும், தற்போது விதைக்கப்பட்ட பனங்கொட்டைகளின் எண்ணிக்கையினை முளைப்புத்திறனை நோக்கும் வண்ணமாக ஆண்டுதோறும் கணக்கெடுக்க வேன்டும். அரசு முயற்சிகளை எடுக்காதவரை இவ்விதமான ஒரு மக்கள் கண்காணிப்பில் மட்டுமே பனை மரங்களை நாம் பேண முடியும். பனைமரம் வேலை வாய்ப்பினை பெருக்கும் ஒரு அரியமரம். ஒரு பனைத் தொழிலாளி இருந்தால் அவரை நம்பி மறைமுகமாக பயன்பெறும் 10 நபர்கள் இருக்கிறார்கள் என கணக்கிட்டு கொள்ளலாம். ஓலை பாய் முடைபவர்கள், ஓலை பெட்டிகள் பின்னுபவர்கள், சுளகு – முறம் செய்பவர்கள், குருத்தோலையில் அழகு பொருட்கள் செய்பவர்கள், நார்பெட்டி பின்னுபவர்கள், நார்கட்டில் பின்னுபவர்கள், தும்பு தொழில் செய்பவர்கள், பத்தை அறுப்பவர்கள், மரவேலை செய்பவர்கள், கருப்பு கட்டி மற்றும் கற்கண்டு செய்பவர்கள், ஆசாரிகள், குயவர்கள், கொல்லர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பிலிருந்து மக்கள் பயனடைகின்றனர். எனினும்,
தமிழகத்தில் தற்போது 95 சதவிகித பனைமரங்கள் பயன்பாட்டில் இல்லை என சுதேசி இயக்கத் தலைவர் குமரிநம்பி அவர்கள் பதிவு செய்கிறார்கள். அப்படியானால் மீத மிருக்கும் பனைமரங்களைப் பயன்படுத்தும் வகையில் முன்னெடுக்கும் பணிகள் பல லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் எனவும் கிராமியப் பொருளாதாரம் மேம்படும் என்பதும் தெரியவருகிறது. 1976ஆம் ஆண்டு கள்ளுக்கான தடை கொண்டு வரப்பட்ட போது தமிழகத்தில் இருந்த 12 லட்சம் பனைத் தொழிலாளர்களில் 10 லட்சம் பேர் அப்பணியில் இருந்து ஒரே நாளில் அப்புறப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கான மாற்று வேலைகளையும் அரசு வழங்கவில்லை. படிப்படியாக அரசு பனைத் தொழிலாளிகளை கைவிட்டு 1996ஆம் ஆண்டுடன் தனது அத்தனை உதவிகளையும் நிறுத்திக்கொண்டது. தற்போது வழங்கப்படும் உதவிகள் யாவும் கோமா நிலையில் படுத்திருக்கும் ஒருவருக்கு செலுத்தும் மருந்துகளுக்கு ஒப்பாகுமே தவிர பனைத் தொழிலாளிகளுக்கோ பனைத்தொழிலுக்கோ ஊ ட் ட ம ளி க் கு ம் வி த த் தி ல் எ வ் வி த திட்டங்களையும் இன்னும் அரசு எடுக்கவில்லை. பனைமரம் சார்ந்த ஆய்வுகள் என ஒன்று அதன் ஆரம்ப நிலையில் தேக்கமடைந்துள்ளதையே காண முடிகிறது. தற்போது பனை நடும் ஆர்வலர்கள் பனைமரத்தினை நடுவதால் காப்பாற்றலாம் என எண்ணிக் கொள்ளுகிறார்கள். அது ஒரு முக்கிய பணி, ஆனால் பனைநடவு செய்வதை விட பனையின் பயன்பாடினை சுவீகரிப்பது மட்டுமே பனையின் வாழ்நாளைக் கூட்டும். பயனற்ற மரங்கள் யாவும் விறகாகும் ஒரு சூழலுக்கே பனைமரங்கள் வந்து நிற்கின்றன. ஏறுவதற்கு ஆட்கள் இல்லை எனும் போது இம்மரங்கள் வீணாய் நிற்பது ஏன் எனும் எண்ணம் கொண்டு மரங்கள் முறிக்கப்படுகின்றன. சாலை ஓரங்களில் உள்ளவைகள் சாலை விரிவாக்கத்திலும், புறநகர் பகுதியில் உள்ளவைகள் நகரமயமாக்கலிலும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் வீடு கட்ட பயன்பட்ட மரங்கள் இன்று அவ்விதமான பயன்பாட்டிலும் எஞ் சியிருக்கவில்லை என்பது பனையின் வீழ்ச்சிக்கு எடுத்துக்காட்டு. சுமார் 200 முதல் 1000 ரூபாய்க்கு பனைமரங்கள் விற்கப்படுகின்றன. 50 ஆண்டுகள் வாழ்ந்து வாழ்வழித்த மரத்திற்கு யூதாசின் வெள்ளிக்காசுகள் போலவே சில்லரைகள் சிதறுவது காலம் மாறவில்லை என்பதனை நன்கு உணர்த்துகிறது. பனைமர பொருட்கள் பாரம்பரியமாக சந்தைகளில் விற்பனையாகிக் கொண்டிருந்தன. குமரி நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங் களில் பனையோலைப் பொருட்கள் சந்தைகளின் ஓர் அங்கமாகவே இருந்து வந்துள்ளன. குறிப்பாக காய்கறி, வெற்றிலை, பூ, மீன், கருப்பட்டி, புளி ஏன் பாட்டில்களைக் கூட ஓலைபெட்டிகளில் வைத்தே பிற இடங்களுக்கு மக்கள் எடுத்துச் செல்லுவது வழக்கம். பனை ஓலைபெட்டிகளில் இயற்கையாக காணப்படும் இடைவெளிகள் நல்ல காற்றோட்டத்தையும், ஓலையின் தன்மை பொருட்களை வெயில் தாக்காமலும், அதன் நெகிழ்வு தன்மை பாட்டில்கள் உடையாமலும் பாதுகாக்கவல்லது. இன்றும் குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில், பனை ஓலையில் செய்த கடவம் என்று சொல்லப்படுகின்ற பெட்டி மண்சுமக்கவும், பொருட்களை சுமக்கும் ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஓலைகளில் செய்த கட்டை என்னும் தண்ணீர் சேமிக்கும் கருவி, றாவட்டி என்று சொல்லப் படும் தண்ணீர் இறைக்கும் பொருள், ஓலையில் பின்னப்பட்ட குடுவை என்ற பதனீர் சேகரிக்கும் பொருள் வழக்கொழிந்து விட்டன. இவைகளை மீட்டெடுக்கும் பணிகள் மிகவும் முக்கியமானது. பனைத் தொழில் சார்ந்து பல்வேறு தாவரங்களும் இன்று அழிந்து வருவது வேதனையானது. கற்கண்டு செய்வதற்காக பானையில் காய்த்த பதனீரை ஊற்றூகையில், கொறடு எனும் செடியின் வேரினை இடுவார்கள். கற்கண்டு பரல்பிடிக்க அது பேருதவியாக இருக்கும். அதுபோலவே பனை ஏறுபவர்களை குளவியோ கடந்தையோ கொட்டினால், பேதவரை (தமிழகத்தின் பிற பகுதிகளில் இதன் பெயர் வேறுபடும்) என்ற தாவரத்தினை அரைத்து பூசுவார்கள். பனைத் தொழிலாளி பயன்படுத்தும் கடிப்பு என்ற கருவி, பனை இனத்தைச் சார்ந்த பாக்கு மரத்தில் செய்யப்படுவது. முற்காலங்களில் பதனீர் சேகரிக்கின்ற குடுவைகள் மற்றும் அவற்றை சேகரிக்கும் கலசங்கள் யாவும் சுரை குடுவையிலிருந்தே பெறப்பட்டன. இன்று பாக்கு மரத்தின் பயன்பாடு கருதியே அவை கல் பெருமளவில் இருக்கின்றன, அதை தவிற பிற தாவரங்கள் முக்கியத்துவம் இழந்து காணப்படுகின்றது. ஆகவே அவைகள் பேணப்படாமல் அழிந்து போகின்றன. திருமணம் போன்ற சடங்குகளே பனை சார்ந்த பொருட்களுக்கான முக்கிய சந்தை எனலாம். உணவு தயாரிக்கும் இடங்களில், ஓலை பாயில் வெந்த அரிசியை தட்டிவைப்பது, கடவப்பெட்டிகளில் பப்படம் போன்றவைகளை எடுத்துச் செல்லுவது, சிறிய பெட்டிகளில் பழங்களை எடுத்து பறிமாறுவது, குழம்புகளை “கோரி” எடுக்கும் தோண்டிகள் போன்றவை
இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக மணமகள் வீட்டிலிருந்து செல்லும் சீர்வரிசையில் முறுக்குப் பெட்டி மற்றும் அரிசிபெட்டி போன்றவை முக்கிய பங்குவகிக்கின்றன. இவைகள் பனைநாரில் வண்ணமிட்டு தயாரிக்கப்படும். இவைகள் உறவினர்களுக்கு உணவுகளைப் பகிர்ந்தளிக்க வேண்டி திருமண வீட்டார் மொத்தமாக வாங்கிச் செல்லுவது மரபு. தற்போது இவைகளின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. சாஸ்திரத்திற்காக ஒன்றோ இரண்டோ மட்டும் வைத்துக் கொள்ளும் சூழலே இன்று எஞ்சியுள்ளது. ஓலைப் பொருட்களில் செய்யப்படும் அழகு பொருட்கள் இன்று வெளிநாடுகளுக்கு பெருமளவில் விற்பனையாகின்றன. இவ்வித அழகு பொருட்களுக்கு பெருமளவில், குருத்தோலைகளே பயன்படுகின்றன. பனை ஏற்றுத்தொழில் அருகி வரும் இக்காலகட்டத்தில் குருத்தோலையை நம்பி இருக்கும் இத்தொழிலும் அழிந்து வருவது கண்கூடு. குருத்தோலை பொருட்கள் செய்யும் பெரும்பாலானோர், ராமனாதபுரத்தில் இருந்தே ஓலைகளைப் பெறுகின்றனர். இவ்வோலைகள் பெரும்பாலும் பனைகளை முறிக்கும் இடங்களிலிருந்து பெறுவது ஆகையால் ஒரு மாபெரும் அழித்தொழிப்புக்கு துணை செய்வதாகவே காணப்படுகின்றது. மிக அதிக அளவில் குருத்தோலைகளில் பொருட்களை செய்யும் மணப்பாடு கூட்டுறவு சங்கத்தில் கூட சுமார் 700 அங்கத்தினரிலிருந்து தற்போது 200 அங்கத்தினரே பணிசெய்யும் அளவிற்கு வீழ்ச்சி அமைந்திருக்கிறது. பனைசார்ந்த தொழிலில் எங்கும் ஒரு வீழ்ச்சியினை நாம் காணும் இச்சூழலில் பனைமரத்தினைக் குறித்த விழிப்புணர்வு பெருகி வருவது மிகப்பெரும் ஆறுதல். ஆகவே தற்கால தேவைகளுக்கு ஏற்ப ஓலைகளை பயன்படுத்துவதும், அவ்விதம் நாம் பயன்படுத்தும் ஓலைகள் பனையை பாதிக்காது இருக்க கவனம் கொள்வதும் அவசியம். பல்வேறு அழகிய பொருட்களை இன்று மக்களின் தேவைக்கேற்ப தயாரிப்பதும், குறைவான குருத்தோலைகளை பயன்படுத்துவதும் பனைக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும். பனை ஓலைகளில் முடைந்து மற்றும் பின்னி செய்யும் பொருட்கள் பெருமளவில் இடத்தைபிடித்துக் கொள்ளும் சூழலில், நுணுக்கமாக நவீன சமூகத்தினர் பயன்படுத்தும் வகையில் நளினமான பொருட்களை வடிவமைப்பது, அவைகளை பரவலாக்குவது மற்றும் அவைகளுக்கு வேண்டிய சந்தை வாய்ப்புகளைக் கண்டடைவது இன்றைய முக்கியத் தேவையாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஓலைகளில் செய்யப்படும் விசிட்டிங்கார்ட், புக்மார்க், நவீன சுவடிகள், ஓலையில் செய்யப்பட்ட வாழ்த்து அட்டைகள், திருமண அழைப்பிதழ்கள், சுவர் ஓவியங்கள் போன்ற பலவற்றையும் இன்றைய நவீன உலகில் ஒருவர் செய்து பொருளீட்டலாம். இவைகளை பள்ளிக் கூடங்களில் பாடமாக வைக்கையில், அனேக சிறுவர்களுக்கு மரபு சார்ந்த விளையாட்டு பொருட்களை ஓலையில் செய்ய கற்றுக் கொடுக்க இயலும். உள்ளுர் கலைஞர்களை இதற்கென அழைத்து ஊக்குவிப்பது, உள்ளூர் திறமைகளையும், வளங்களையும், சீராக பயன்படுத்த உதவுவதோடில்லாமல், குழந்தைகளுக்கு மரபு மற்றும் சூழலியல் சார்ந்த நல்லெண்ணங்களையும் உள்ளத்தில் பதியவைக்க இயலும். பனை சார்ந்த உணவு பொருட்கள் மிக முக்கியமானவை. நான்கு பருவகாலங்களிலும் தவறாது உணவு கொடுக்கும் ஒரே தாவரம் பனை மட்டுமே. அதுவும் பல்வேறு வேதியல் (கெமிக்கல்) சத்துக்களின் கூட்டாக இவைகள் கிடைக்கப் பெறுகின்றன. பதனீர், கள், நுங்கு, பனம்பழம்,
பனம்கிழங்கு, தவண், பனங்குருத்து, கருப்பட்டி, கற்கண்டு, புளிபைனி, போன்றவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். பனைசார்ந்த உணவுகள் பெரும்பாலும் நாட்டு மருந்துகளிலும், சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவமுறைகளிலும் முக்கிய பங்களிப்பாற்றுகின்றது. கருப்பட்டி கற்கண்டு போன்றவை இன்றும் நாட்டு மருந்துகடைகளில் விற்கப்படுகின்ற முக்கிய மருத்துவ பொருளாகும். இன்று இவைகளின் உற்பத்தி பாதிக்கப்படுகையில், கண்டிப்பாக இம்மருத்துவமுறைகள் வழக்கொழிந்து போகின்ற அபாயம் இருக்கிறது. தற்பொழுது சுண்ணாம்பு சேரா பதனீரிலிருந்து நீரா எனும் பானம் தயாரிக்கப்படுகின்றது. நீராபானத்திலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை மதிப்பு கூட்டப்பட்ட உணவாக விளங்குகின்றது. சுமார் 800ரூ அளவிற்கு விற்கப்படும் இப்பொருள் பனை தொளிலாளர்களுக்கு பெருமளவில் இலாபத்தை கொடுக்கும் வாய்ப்புள்ள தொழிலாக இருக்கின்றது. அப்படியே கருப்பட்டியிலிருந்து ஈரப்பதத்தினை உறிஞ்சிவிட்டு அதனை பொடியாக மாற்றி விற்பனை செய்பவர்களும் பெருமளவில் லாபம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. பனை மரத்தினை ஏதோ ஒரு மரம் என எண்ணி அதன் வீழ்ச்சியினை நாம் விட்டு விட முடியாது. முதலில் அது தமிழகத்தின் மாநிலமரம், அதனை தொடர்ந்து அது சமூக, பொருளியல், கலாச்சார, வரலாற்று, சமய மற்றும் மருத்துவ தளங்களில் என பல்வேறு வகைகளில் பனை நமது வாழ்வில் பின்னிப் பிணைந்து இருக்கின்றது. நமது கலாச்சாரத்தினை வடிவமைத்த முக்கிய கூறுகளில் பெரும்பகுதி பங்களிப்பு பனையிலிருந்து. சூழலியலை எடுத்துக் கொண்டால் பனைமரத்தின் பங்களிப்பினை எவரும் இன்று வரை மதிப்பிடவில்லை. ஒருவேளை, இப்பனைமரம் சூழலியலின் மிக முக்கிய பங்கு என தெரிய வரும் காலத்தில் கோடிகள் கொட்டினாலும் அதனை மீட்கும் வாய்ப்புகள் உடனடியாக அமையாது. பனைசார்ந்து எத்தனை பறவைகள் இருக்கின்றன என்றோ? எத்தனை விதமான எறும்புகள் இருக்கின்றன என்றோ? அதில் வாழும் பூச்சிகள் குறித்தோ? ஊரும் பிராணிகள் குறித்தோ, விலங்குகள் குறித்தோ இதுவரையிலும் முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் இல்லை. பனை ஒற்றை மரமாக இருந்தாலும் அது ஒரு சரணாலயமாக செயல்படுகிறது என சூழலியலாளரும் பறவையியலாளருமான முனைவர். கிரப் அவர்கள் தெரிவிக்கிறார்கள். பனைமரம் தானே முளைத்து பல்கி பெருகுவதை காணும் தோறும் மக்கள் அது ஒரு காட்டு மரம் என எண்ணிக் கொள்ளுகிறார்கள். அப்படியல்ல. பனைக்கும் மனிதனுக்குமான தொடர்பு பல்லாயிரம் ஆண்டுகளாக சீராக வளர்ந்துள்ளது. பனைசார்ந்த அறிவு சிறுகச் சிறுக பெற்றது. அந்த அறிவை மனிதர்கள் காப்பாற்றினால், பேணினால் அது மனிதர்களைக் காப்பாற்றும் பேணும். இல்லையென்றால் பனைமரத்தின் முக்கிய பயன்பாடுகளை அனுபவிக்கத் தெரியாத தலைமுறைகளாக மக்கள் வளருவார்கள் பனை இம்மண்ணில் அவர்களை வேடிக்கை பார்த்தபடி இருந்து கொண்டிருக்கும்.