உணவுச் சந்தைக்குள் நுழையும் விஷம்!

மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிராக எதிர்ப் புகள் நாடு முழுவதும் ஒருபுறம் வலுப் பெற்று கொண்டிருக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளைப் பயிரிடுவதற்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் அளித்தால் மரபணு மாற்றப்பட்ட கடுகு வணிகப் பயன்பாட்டுக்காக மிக விரைவில் விற்பனைக்கு வந்து விடும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே மரப்பணுமாற்ற செய்யப்பட்ட பிடி பருத்தியால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் உண்டாகியதை சிறிதும் பொருட்படுத்தாமல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு
மத்திய அரசு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைபாட்டுக்கு சுற்றுச்சூழல் இயற்கை ஆர்வலர்கள், வேளாண்மை ஆசிரியர்கள் பலர் தங்களது எதிர்ப்புகளைக் கருந்தரங்க நிகழ்வுகள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் என பல்வேறு கட்டங்களில் மக்களிடையே முன்னெடுத்து சென்று வருகின்றனர். கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. கேரள சட்டப்பேரவையில் கடந்த மே மாதம் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து ‘கேரளாவில் மரபணு மாற்றப்பட்ட கடுகை அனுமதிக்கமாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. ராஜஸ்தான் மாநிலமோ கேரளாவுக்கு ஒரு அடி முன்சென்று ‘மத்திய அரசு ஒப்புதல் வழங்கினாலும் இயற்கைக்கு எதிரான மரபணுமாற்றம் செய்யப்பட்ட கடுகுகளுக்கு ராஜஸ்தானில் அனுமதி கிடையாது’ என்றும், அவர்களது பாரம்பரிய முறையிலேயே அதிக விளைச்சலை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தது. மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு ராஜஸ் தானில் அனுமதி வழங்கப்படாது என்பது குறித்து ராஜஸ்தான் விவசாயத்துறை அமைச்சர் பிரபுலால் சைனி கூறியதாவது, ‘விவசாயம் என்பது மாநில அரசின் கீழுள்ள பிரிவாகும். எனவே மத்திய அரசு இதில் தலையிட முடியாது. மத்திய அரசு ஒப்புதல் வழங்கினாலும் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு ராஜஸ்தானில் அனுமதி கிடையாது. எல்லாவற்றையும் தாண்டி மரபணு மாற்றப் பட்ட கடுகின் பாதுகாப்புத்தன்மை பற்றி தெளிவான விளக்கம் தரப்படாத நிலையில் மத்திய அரசு இவ்வளவு விரைவில் அதற்கு அனுமதி அளித்துள்ளது” என்றார். உலகின் அதிகாரமிக்க நாடுகளில் ஒன்றான ரஷ்யா கடந்த 2015 ஆம் ஆண்டு, மரபணு மாற்று விதைகளுக்கு ரஷ்யாவில் இடம் கிடையாது என்று அந்நாடு அறிவித்தது. ஆனால் வளர்ந்து வரும் நாடான இந்தியாவோ அதனைப் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் மரபணு கடுகுக்கு எதிராக நடக்கும் அனைத்துப் போராட்டங்களையும், தீர்மானங்களையும் கைகட்டி நிதானமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த எதிர்ப்பு:

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் அந்த காலத் திலிருந்தே நம் முன்னோர்கள் செய்தது தான் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் தவறு. நம் முன்னோர்கள் செய்தது கலப்புப் பயிர்கள் (ஹைப்ரிட்). கலப்புப் பயிர்கள் என்பது மாங்காயும், மாங்காயும் சேர்ந்து ஒட்டு மாங்கா, எலுமிச்சையும் எலுமிச்சையும் சேர்ந்து ஒட்டு எலுமிச்சை உருவாக்குவது. இதைத் தான் நம் முன்னோர்கள் செய்தார்கள். அறிவியல் முறைப்படி கூற வேண்டும் என்றால், ஒரே இனத்தைச் சேர்த்து அதிலிருந்து புதிய ஜீனை உருவாக்குவது. இதிலிருந்து முற்றிலும் தலைகீழானதுதான்
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். அதாவது மரபணு மாற்றப்பட்ட பயிரில் முற்றிலும் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்த மரபை எடுத்து புதிய ஜீனை உருவாக்குகிறார்கள். இதன் முக்கிய அரசியல் காரணமாக கூறப்படுவது, இயற்கை விதைகளை அழித்து, விதைகளை மக்கள் தனியார் கம்பெனிகளிடத்தில் வாங்க வைப்பதற்கான ஒரு வணிக வழி என்று கூறப்படுகிறது. மேலும் தனியார் இடத்தில் விதைகள் இருந்தால் அவர்கள் அதற்கான உரிமையைப் பெற்றுவிடுவார்கள். விவசாயிகள் விதைகளைத் தனியாரிடத்தில் வாங்கும் நிலைமை ஏற்படும். இந்த உணவு அரசியல்தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. உணவு உறபத்தியைப் பன்மடங்கு பெருக்குவதை குறிகோளாகக் கொண்டு ஆரோக்கியமில்லாத சமூகத்தை ஒருபக்கம் அரசு உருவாக்கி வருகிறது. பாரம்பரிய உணவு பயிரிடும் முறைகளைக் கடைப்பிடித்து உணவு உற்பத்தியில் சாரசரி நிலையை ஏற்படுத்தினால் போதும் என்ற எண்ணம் அரசுக்கு வர வேண்டும். அப்போதுதான் நமது உணவில் விஷத்தைக் கலக்கவரும் இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகைப் புறக்கணிக்க முடியும்.

‘பூவுலகின் நண்பர்கள்’ ஒருங்கிணைத்த மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான கருத்தரங்கில் திரு.தேவேந்திர ஷர்மா பேசியது…

தமிழில்: திண்டி பரத்

மின்மினிப் பூச்சி. மின்மினிப் பூச்சியின் மரபணு செடிகளுக்கு மாற்றப் பெறலாம். ஆனால் அப்படிச் செய்வதில் பெரிய சுவாரஸ்யம் இல்லை. இப்போது மின்மினிப் பூச்சியின் மரபணுவை முயலுக்கு செலுத்துகிறார்கள். முயல் மினுக்குகிறது. இப்போது அதில் சுவாரஸ்யம் கூடிவிட்டது அல்லவா. இன்னும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்கள். தங்க மீன்கள் இருக்கின்றன தெரியுமா? அதில் மின்மினிப் பூச்சியின் மரபணுவைப் புகுத்தினார்கள். இதனால், இரவில் விளக்கை அணைத்தபிறகு தங்க மீன்கள் மினுக்குமாம். இப்போது இந்த மரபணு மாற்றம் பெரும் சுவாரஸ்யம் கொடுக்கிறது அல்லவா. விசித்திரமான வகையில் நியூசிலாந்திலிருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது. அங்கு இந்த மின்மினிப் பூச்சியின் மரபணுவை மாட்டுக்கு செலுத்தினார்களாம். இதைக் கேள்விப்பட்ட உடனேயே மாடுகள் மினுக்குமா என்று எண்ணத் தொடங்கினேன். ஆனால், மாட்டிலிருந்து பெறப்படும் பால் மினுக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. அதைக் குடித்தால் நீங்கள் ஒளிவீர்களா என்பதும் எனக்குத் தெரியவில்லை. மரபணு மாற்றத் தொழில்நுட்பம் எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்பதற்கான சிறிய உதாரணம் இது. மரபணு மாற்றத் தொழில்நுட்பம் செடிகளில் நன்றாக வேலை செய்யக் கூடியது. அப்படித்தான் நமக்கு பி.டி பருத்தி, பி.டி கடுகு என பலவற்றை அறிமுகப்படுத்துகிறார்கள். ஆனால், என்னிடம் ஒரேயரு வினாதான் உள்ளது? ஏன் நம் உணவைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மற்றவரிடத்தில் விட்டிருக்கிறோம். எத்தனைப் பேருக்கு நோய்வாய்ப்பட்டு இருக்கப் பிடிக்கும். ஏனென்றால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுவாகவேதான் மாறுகிறீர்கள். மரபணு மாற்றப்பட்டதால் பெறப்படும் உணவு நமக்கு எந்தவிதத்திலும் நன்மை பயப்பதில்லை. ஆனால், மக்கள் நன்மை பயக்கும் என்று தவறான புரிதலோடு இருக்கிறார்கள். மரபணு மாற்ற உணவுகளுக்கான மெக்கா என்றால் அது அமெரிக்காதான். நம் நாட்டினர் பலர், ‘அமெரிக்கர்களே சாப்பிடுகிறார்களே நாம் ஏன் சாப்பிடக் கூடாது’ என்று மிகவும் புத்திசாலித்தனமாக கேள்வி எழுப்புவர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா, புற்றுநோய்க்காக ஒரு பேனலையே (cancer on panel) அமைத்தார். ஏனென்றால் அங்கிருந்து வரும் ஆய்வு முடிவுகள், 41 சதவிகித அமெரிக்கர்கள் அவர்கள் வாழ்நாளில் புற்றுநோயினால் பாதிக்கப்படுவர் என்று கூறுகிறது. அதாவது, 2-ல் ஒரு ஆணும் 3-ல் ஒரு பெண்ணும் அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றது என்று கூறப்படுகிறது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் மிகப் பெரும் பிரச்னை, அதை முறையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த தொழில்நுட்பத்துக்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் அனுமதிப்பதில்லை. இது ஊழலுக்கு விசாரணையே வேண்டாம் என்பது போன்ற ஒரு வாதம். டி.டி.டி மனிதர்களுக்கு ஆபத்தானது என்று கண்டுபிடிக்க கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால் இப்போது அறிமுகப்படுத்தப்படும் மரபணு மாற்றுப் பயிர்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவைபற்றிப் புரியும். நாம்தான் நமக்கு நம் ஆரோக்கியத்துக்கு எது சிறந்தது என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த நாட்டின் மக்கள் மருத்துவத்துக்கு செலவழிப்பதில் மிகவும் மன மகிழ்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஐ.சி.யூ-வில் சேர்த்து விட்டால் இன்னும் மகிழ்ச்சி. ஆனால், அந்தப் பணத்தை நல்ல உணவுக்கு செலவழிக்கச் சொன்னால், முடியாது என்பார்கள். அதற்குக் காரணம், இயற்கை வேளாண் பொருட்கள் மிகவும் விலை உயர்ந்து காணப்படுகிறது என்று குற்றம் சாட்டுவர். ஆனால் நீரிழிவு நோய்க்கான செலவும் விலை உயர்ந்ததுதானே. இதுதான் இந்தத் தலைமுறையின் சாபக்கேடு. முன்னெச்சரிக்கைப் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. யாராவது ஒரு சினிமா நடிகர் வந்து, ‘‘இந்த உணவு உங்களுக்கு சிறந்தது. இந்த உணவை நீங்கள் பருகலாம்’’ என்று சொல்லி விட்டால் போதும். ஏனென்றே நாம் கேள்வி கேட்பது இல்லை. அரசாங்கம் என்ன சொல்லும் என்பதைத்தான் மக்கள் நம்புகிறார்கள். அமெரிக் காவுக்குப் பிறகு இந்தியாதான் கூடிய சீக்கிரம் அதிக புற்றுநோயாளிகள் இருக்கும் நாடாக வரும். எப்படி இந்த மரபணு மாற்றத் தொழிலால் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அதேபோல விவசாயிகளும் பாதிக்கப்படுவர். 1940-ஆம் ஆண்டுகளில் நடந்த உலகப் போருக்குப் பின்னர், வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வாயுக்கள் தேக்கம் அடைந்துவிட்டன. அப்படித் தேக்கமடைந்த வாயுக்கள் மூன்றாம் உலக நாடுகளில் பூச்சிக் கொல்லிகளாக ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தப் பூச்சிக் கொல்லிகளின் வீரியம் இரண்டே ஆண்டுகளில் குறைந்துவிட்டன. இதனால், பூச்சிகள் செழித்தோங்கின. அதனால் இன்னும் வீரியம் அதிகம் கொண்ட இரண்டாம் தலைமுறைப் பூச்சிக் கொல்லிகள் உருவாக்கப்பட்டன. இந்தப் பூச்சிக் கொல்லிகளின் வீரியம் 4 அல்லது 5 ஆண்டுகளில் குறைந்துவிட்டன. மறுபடியும் பூச்சிகள் வளர ஆரம்பித்தன. பின்னர் மூன்றாம் தலைமுறைப் பூச்சிக்கொல்லிகள். அதன் பிறகு நான்காம் தலைமுறை பூச்சிக் கொல்லிகள் என்று இந்தியா அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தது. இப்போது பஞ்சாப் பக்கம் சென்று, பூச்சிக் கொல்லிகளிகள் இருக்கும் ஒரு காக்டெயில் பாட்டிலை எடுத்து அதில் பூச்சிகளைப் போட்டால், அதற்கு ஒன்றும் ஆகாத நிலை உள்ளது.

ஆனால், ‘வேதிப் பொருட்கள் இல்லாமல் விவசாயமே இல்லையே. வேதிப் பொருட்கள் சாப்பிட்டு வளர்ந்த நான் நன்றாகத்தானே இருக்கிறேன்’ என்று வாதம் வைக்கப்படுகின்றது. மக்கள் இப்போது வாழ்வது உணவினால் அல்ல, மாறாக மருந்துகளால். மக்களின் ஆயுட்காலம் அதிகரித்தது மருந்துகளாலே தவிர உணவினால் அல்ல. இப்போதெல்லாம் குழந்தைகள் கூட நீரிழிவு நோயுடன் பிறக்கிறார்கள். ஒரு ஐஸ்கிரீம் கூட ரசித்துச் சாப்பிட முடியாத சூழல் இருக்கும் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எங்கு சென்றாலும் ஜிடிபி வளர்ச்சி, ஜிடிபி வளர்ச்சி என்று சதா மக்கள் பிதற்றுகிறார்கள். ஆனால் அதைப் பற்றிப் பெரும்பான்மை யானவர்களுக்குப் புரிதல் இருப்பதில்லை. உண்மையில் ஜிடிபி நம்மை நச்சு கலந்த உணவை நோக்கித் தள்ளுகிறது. ஒரு மரம் உயிருடன் நின்று கொண்டிருந்தால் அதனால் ஜிடிபி வளர்ச்சி இருக்காது. ஆனால், அதே மரம் வெட்டப்பட்டு ஒரு பொருள் செய்து பணம் ஈட்டினால் ஜிடிபி வளரும். ஒரு கார் வாங்கினால் ஜிடிபி வளரும். அதே காரை பெட்ரோல் போட்டு அடிக்கடி ஓட்டினாலும் ஜிடிபி வளரும். ஏனென்றால் பொருளாதார அறிஞர்கள், ‘நுகர்வு, வளர்ச்சிக்கு வழிகோலும்’ என்கிறார்கள். சிலர் நாட்டின் ஜிடிபி மேலும் வளர சிக்னலில் சிவப்பு விளக்கின் நேரம் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். இதனால் அதிக காற்று மாசுப்பட்டு அதனால் நாம் நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் செல்வோம். ஜிடிபி வளரும். மருந்து வாங்குகிறேன். ஜிடிபி வளரும்.

அதேபோலத்தான், சுத்தமான நதி ஜிடிபி-க்கு ஆபத்தானது. சுத்தமான நதிகள் இந்தியாவில் இல்லை என்பது வேறு கதை. அசுத்தமான நதிகளே ஜிடிபி-யை வளர்க்கும். நதியைச் சுற்றி நிறுவனங்கள் இருந்தால், அதனால் பொருள் ஈட்டப்பட்டு ஜிடிபி வளரும். நிறுவனங்கள் கழிவுகளை நதியில் கலப்பது பிரச்னை இல்லை. அதற்காக 10,000 கோடி ரூபாயில் சுத்தப்படுத்தும் திட்டம் போடப்பட்டால் மறுபடியும் ஜிடிபி வளரும். இதுதான் ஜிடிபி வளர்ச்சியின் அடிநாதமாகத்
திகழ்கிறது. சுத்தமான, தரமான உணவு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ஆனால் அது ஜிடிபி-க்கு எதிரானது. ஆனால் நச்சான உணவுதான் ஜிடிபி வளர்ச்சிக்கு உதவும். அதனால்தான் உணவை நச்சாக்குவது பொருள் ஈட்டுவதற்கு உதவும். நச்சு கலந்த உணவு நமக்கு நோயைத் தரும். அதனால் மருந்துகள் வாங்குவோம். மருந்துகள் வாங்கப்படுவதால் ஃபார்மா நிறுவனங்கள் வளரும். ஜிடிபி-யும் வளரும். நோய்க்கு ஆளாவதால் காப்பீட்டு நிறுவனங்கள் நோக்கித் தள்ளப்படுவீர்கள். காப்பீட்டு நிறுவனங்கள் வளர்ந்து மறுபடியும் ஜிடிபி வளரும். இது இங்கு மட்டும் நடக்கும் விஷயம் அல்ல. சர்வதேசப் பொருளாதாரம் இப்படித்தான் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தத் தலைமுறையின் சாபக்கேடே கோபப் படுவதில்லை என்பதுதான். கோபப்படுவது என்றால் வெடிகுண்டு வைப்பது அல்ல. ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டு, உள்வாங்கி, அதைப் பற்றிக் கேள்வி கேட்பதுதான் கோபத்தின் வெளிப்பாடு. ஆனால், சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையாக இது இருக்கிறது. அதேபோல நான் எங்கு சென்று பேசினாலும், கூட்டத்தில் யாராவது ஒருவர், ‘சார், நான் ஒரு தனி மனிதன். என்னால் மட்டும் என்ன செய்துவிட முடியும்’ என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான், நீங்கள் தனியாக இருப்பதாக நினைத்தீர்கள் என்றால் உங்களால் எதுவுமே செய்ய முடியாது. நீங்கள் இரவில் உங்கள் படுக்கையறையில் இருக்கும் போது, அந்த அறையினுள் இருக்கும் ஒரேயரு கொசு உங்களுக்கு எப்படியெல்லாம் சவால் கொடுக்கிறது. அந்த ஒரேயரு கொசுவைவிடவா நாமெல்லாம் தாழ்ந்து போய்விட்டோம். நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக குரல் எழுப்பினால் அதுதான் புரட்சி. அப்படிச் செய்வோமானால், யாரும் நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது. நமக்கு என்ன தேவையோ அதை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.’

இந்து

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments