ஈஷா மையத்தினருக்கு ஓர் இயற்கை ஆர்வலரின் கேள்விகள்

isha yoga

தகவல் அறியும் சட்டம் மூலம் அரசிடம் கேட்ட கேள்விகளுக்கு ஆக்கிரமிப்பு இல்லை, யானை வழித்தடம் இல்லை என்று பதில் வந்ததாக குதூகளிப்பவர்களிடம் நான் சில கேள்விகளைக் கேட்கலாம் என நினைக்கிறேன்.
உண்மையும் நேர்மையும் இருந்தால் பதில் சொல்லுங்கள் நண்பர்களே.

நீங்கள் தவறு செய்யாதவராக இருந்தால் கட்டடம் கட்டுவதற்கு ஏன் நீங்கள் அனுமதி வாங்கவில்லை? அனுமதி பெற்றுதான் ஒரு கட்டடம் கட்டப்பட வேண்டும் என்கிற அடிப்படை விதி உங்களுக்கு தெரியாதா?

மலைப்பகுதி மேம்பாட்டு ஆணையத்திடம் (HACA) நீங்கள் எப்படி அனுமதி வாங்கினீர்கள்? எப்போது வாங்கினீர்கள்? என்ற உண்மையை வெளிப்படையாக சொல்வீர்களா? காட்டில் இருந்து 50 மீட்டருக்குள் பெருங் கட்டடம் கட்டப்படக் கூடாது என்கிற போது உங்களுக்கு எப்படி அனுமதி கிடைத்தது?

உங்களுக்காக RTI யில் கேள்வி கேட்டவர்கள் அதே அரசிடம் உங்கள் மையம் எப்போது கட்டப்பட்டது? அதற்கு எப்போது அனுமதி வாங்கினீர்கள்? கட்டடம் கட்டியதில் விதிமீறல் உள்ளதா ? என்ற கேள்விகளை ஏன் கேட்கவில்லை? இனியாவது கேட்பார்களா?

WTI ( இந்திய வன உயிரின அறக்கட்டளை) அமைப்பு வெளியிட்ட Right of passage நூலில் உள்ள யானைகளின்
குறுகிய வலசைப் பாதைகள் ( elephant corridor) பட்டியலில் உங்கள் மையம் உள்ள வனப்பகுதி இல்லை என்பதால் அரசு இப்படி பதில் அளித்துள்ளது. ஆனால் அதே நூலில் யானைகளின் குறுகிய வலசைப் பாதைகள் பற்றிய ஆய்வுகள் இன்னும் முடிவு பெறவில்லை என்கிற செய்தி உள்ளதை அறிவீர்களா?

அந்த நூலில் 7 வகையான வலசைப் பாதைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4வது வகையாக செங்குத்தான மலை அடிவாரத்தில் உள்ள யானைகளின் வாழ்விடமும் குறுகிய வலசைப் பாதையாக வரையறுக்கப்படுகிறது.

ஒரே காட்டில் அதிக எண்ணிக்கையில் ஆசிய யானைகள் வாழும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மையப்பகுதியாக கோயமுத்தூர் வனக்கோட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பூலாம்பட்டி வனச்சரகத்தில் குஞ்சரான்மலை உள்ளது. (குஞ்சரம் என்றால் யானை ). அந்த மலை அடிவாரத்தில் உள்ள கோவைகுற்றாலம் தொடங்கி சிறுவாணி சுத்திகரிப்பு நிலையம், முள்ளாங்காடு, பூண்டி மலையடிவாரம் ஆகியவை சமவெளி காப்புக் காடுகள் ஆகும். அவை யானைகளின் வாழ்விடம் . அங்கிருந்து யானைகள் கோயமுத்தூர் வனச்சரகத்தின் ஆனைகட்டி பகுதிக்கு ஆண்டுதோறும் இடம்பெயரும். ( குஞ்சரான்மலை… ஆனைகட்டி… பெயரை கவனியுங்கள் ) அவ்வாறு இடம்பெயரும் இடத்தில் ஈஷா மையம் அமைந்துள்ளது. அந்த மையத்தின் தென்மேற்கு பகுதி சரிவான மலையாகும். அங்கு 500 மீட்டர் உயரத்தில் இருந்து 1500 மீட்டருக்கு சரிவாக மலை உயர்கிறது. குட்டிகளுடன் செல்லும் யானைகள் அத்தகு சரிவுகளில் ஏறாது. அவை கடந்து போக பயன்படுத்திய சமவெளிப் பகுதியில்தான் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில்தான் வனத் துறையின் உதவியோடு 2003ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இப்பகுதி யானைகளின் குறுகிய வலசைப் பாதை (elephant corridor) என்று அறிவிக்கப்பட்டது. அதனால்தான் அதற்குப் பின் வந்த வன அலுவலர்கள் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பினார்கள். அதனால்தானே HACA அனுமதி வாங்க முடியாமல் இருந்தீர்கள்? இந்த உண்மையை ஏன் மறைக்கிறீர்கள்?

யானைகளுக்கு வாழ்விடம் (habitat ), பாராம்பரிய வலசைப் பாதைகள் (treditional migratory paths) , குறுகிய வலசைப் பாதைகள் ( corridor) ஆகியவை மிக முக்கியம். இரு வாழ்விடங்களை இணைக்கும் குறுகிய வலசைப் பாதைகள்தான் elephant corridor என்று அறிவிக்கப்படுகின்றன. குறுகிய வலசைப் பாதைகளை கண்டறியும் ஆய்வுகள் இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால் யானைகளின் பாரம்பரிய வலசைப்பாதையை ( treditional migratory path ) மறித்துதானே நீங்கள் கட்டிடம் கட்டி உள்ளீர்கள்? யானைகள் தடையின்றி நடமாட இந்த வலசைப் பாதைகள் மிக அவசியம் என்பதை அறிவீர்களா?

உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு அண்மையில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட நீலகிரி மாவட்டம் சீகூர் யானைகள் வலசைப் பாதைகளைப் பற்றிய வழக்கில் வலசைப் பாதைகளை மறித்த கேளிக்கை விடுதிகளை அகற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யானைகள் வழித்தடம் பற்றிய அந்தத் தீர்ப்பின் வரையறைப்படி நீங்கள் கட்டடம் கட்டி உள்ள இடம் யானை வழித்தடம் என்பதை தீர்மானிக்க முடியும். இப்போது சீகூர் பாதைக்கான தீர்ப்பு வந்துள்ளது. நாளை கோவை வனக் கோட்டத்தில் யானைகளின் வழித்தடத்தில் எழுந்துள்ள கட்டடங்களுக்கு எதிராக, யானைகளுக்கு ஆதரவாக நீதி கிடைக்கும் என்பதை எப்போது உணர்வீர்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு யானைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் கிராமங்களில் மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டங்களை வனத்துறை நடத்தியபோது உங்கள் மையம் வந்த பிறகுதான் இந்தப்பகுதியில் யானைப் பிரச்சனை அதிகமாகிவிட்டது என்று பழங்குடிகள் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் கூறியதை அறிவீர்களா நீங்கள்? உள்ளூர் மக்கள் பொய் சொல்கிறார்களா?

பட்டா நிலத்தில்தான் கட்டடம் கட்டி உள்ளோம். ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று சாதாரண மனிதர்கள் சொல்லலாம். ஆனால் நாம் பட்டா நிலம், வன நிலம் என்று வரையறுப்பதற்கு முன்பாக அது யானைகளின் இடமாக இருந்தது என்பதை ஊருக்கே உபதேசம் சொல்லும் நீங்கள் அறிய மாட்டீர்களா? யானைகளின் இடத்தை நீங்கள் ஆக்கிரமிக்க வில்லையா?

பசுமையாளராக காட்டிக்கொள்ளும் உங்களுக்கு காட்டை ஒட்டி ஹெலிபேட் அமைத்தால் யானைகள் மட்டுமல்ல பறவைகள் உள்ளிட்ட சிற்றுயிர்கள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகும் எனபது தெரியாதா?

நீலகிரியில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மின் வேலிகள் மட்டுமல்ல எத்தகைய தடுப்பு வேலிகளும் அமைக்கக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. செங்கல்லில், கருங்கல்லில் சுற்றுச்சுவர் கட்டுவதை அறிவோம். ஆனால் பெரும் பாறைகளை வெட்டி எடுத்து வந்து யானைகள் நடமாடும் பகுதியில் சுற்றுச்சுவர் கட்டியுள்ள பயங்கரவாதத்தை செய்துள்ளவர்கள் அல்லவா நீங்கள்?

ஆறுகளைப் பெற்றெடுக்கும் தாய் மடியாக விளங்கும் மலைகளை சேதப்படுத்தி அந்த பாறைகளை வெட்டியது இயற்கை மீதான வன்முறை அல்லவா? ஆறுகளை காப்பாற்றுவோம் என்று கூக்குரலிட உங்களுக்கு கூச்சம் வரவில்லையா?

காடுகளை ஒட்டிக் கட்டடம் கட்டியது மட்டுமல்லாமல் அங்கே இரவு முழுக்க ஆனந்த நடனம், சிவராத்திரி என்று கூச்சல் எழுப்புவதால் பறவைகள் விலங்குகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் படும் வேதனையை உணரும் ஈரம் உங்கள் மனதில் கொஞ்சமும் இல்லையா?

காலங்காலமாய் சிவபக்தியோடு மக்கள் வெள்ளியங்கிரி மலைக்கு ஏறி வருகிறார்கள். ஆனால் அங்கே நீங்கள் முற்பிறவியில் வாழ்ந்த இடம் என்று கதை கட்டி மலையில் ஓரிடத்திற்கு உங்கள் பெயரை சூட்டிக்கொண்டு அந்த சிவன்மலையை உங்கள் மலையாக மாற்ற நினைப்பது பக்தர்களை திசை திருப்பும் செயல் அல்லவா,?

உங்களை நம்பி வந்த பக்தர்களை அனுமதி இல்லாமல் வனப்பகுதியில் மலையேற்றம் அழைத்துச் சென்றபோது யானை தாக்கி இறந்து போனதை வெளி உலகிற்கு சொல்வீர்களா?

தானிகண்டி கிராம பழங்குடி மக்கள் நீலி வாய்க்கால் ஓரமாக போய்வந்த ஒற்றையடிப்பாதை உங்கள் கட்டடம் வந்த பிறகு மறைந்து போனதை நீங்கள் மறைக்கலாம். அந்தப் பழங்குடிகள் மறப்பார்களா?

பாம்புகளை கையில் வைத்துக்கொண்டு வித்தை காட்டுவதை எந்த இயற்கை ஆர்வலர்களாவது செய்வார்களா? அப்படி செய்யும் நீங்கள் அது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதை அறிவீர்களா? RTI இல் கேட்டுப்பாருங்கள்?

உடனே அவர்கள் செய்யவில்லையா? இவர்கள் செய்யவில்லையா? எங்களை மட்டும் ஏன் குற்றம்சாட்டுகிறார்கள்? என்று உங்கள் பக்தர்கள் ஆவேசமாக கூச்சலிடுவார்கள். யானைகளின் வலசை பாதைகளை மறித்த, HACA விதிகளை மீறிய அனைத்து கட்டடங்களும் அகற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். ஆனால், இயற்கையை காப்பாற்ற வந்த அவதாரமாக பறைசாற்றிக் கொள்ளும் நீங்கள் அந்த மலைப்பகுதியை விட்டு வெளியே வாருங்கள். பசுமையாக்கப்பட வேண்டிய வறண்ட நிலங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உண்டு. அங்கே உங்கள் ஆசிரமத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அதற்கான வல்லமையும் வசதியும் உங்களுக்கு உண்டு. தமிழகத்தில் இல்லாவிட்டால் உங்கள் மாநிலமான கர்நாடகத்தில் தேடிப்பாருங்கள். யானைகளின் இடத்தை விட்டுக்கொடுத்து மற்றவர்களுக்கு வழிகாட்டுங்கள். இல்லையேல் காலம் வழிகாட்டும்.

  • குறிஞ்சி நாடன்
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Giri Suji
Giri Suji
2 years ago

இந்த கேள்வியை யாரிடம் கேட்கிறீர்கள்? பொது மக்கள் கேள்வி கேட்க வேணும் எனில் தமிழ் நாடு முழுவதும் உள்ள தனியார், இதுவரை ஆட்சி செய்தவர்கள், மற்றும் அரசு சார்ந்தவர்களை பார்த்து கேட்க வேண்டும். கோவில் நிலங்களை அதிகாரத்தால் அபகரித்தவர்களை கேட்க வேண்டும்….நியாயம் அனைவருக்கும் பொதுவானதே….ஒன்று செய்யலாம், பேசிக்கொண்டே இருப்பதை விட தேரடியாகவே சென்று நீங்கள் கேட்ட கேள்விகளுக்கும், நாங்கள் கேட்ட கேள்விகளுக்கும், சம்பந்தபட்டவர்களிடம் தீர்வு கேட்கலாம்….நீங்கள் தயார் எனில், பொது மக்கள் நாங்கள் தயார். நன்றி

Giri Suji
Giri Suji
2 years ago

ஜம்புக்கல் மலை அழிக்கப்பட்டுள்ளதே….அதற்கான உங்களின் நடவடிக்கை என்ன?

Marimuthu
Marimuthu
2 years ago

இவை இன்று அல்லது நாளை கையகப்படுத்தப்படும்.
அதானி அம்பானி போன்ற ஏழைகளுக்கு பிரித்து நன்கொடையாக அளிக்கப்படும்.
அதில் அவர்கள் ஏதாவது
குடிசை தொழில் செய்து பிழைத்துக்கொள்வார்கள்.
இது சத்தியம்.
‌‌ ஜெய் இந்தி
‌‌‌ பசு மாதாக்கு ஜே
‌‌‌‌‌‌‌ வந்தா ஏமாத்ரோம்.