வாசகர் கடிதம்

பூவுலகு இதழ் மாத இதழாக வெளிவருவது மகிழ்ச்சி. டாக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை அணுசக்தி ஒப்பந்தம் குறித்த மறைவான உண்மைகளை வெளியே கொண்டுவந்த நேர்த்தியான கட்டுரை. மழைக்குருவி குறித்த தகவல்கள் அருமை. மரத்வாடா குறித்த கட்டுரை எப்படி வறட்சி திட்டமிட்டு பணப்பயிர்கள், பணப் பலன்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டது என்பதை விரிவாக ஆராய்ந்த மிக முக்கியமான கட்டுரை. நுகர்வுவெறி, தேவையான பொருட்கள் ஆகிய இரண்டினையும் ஆழமாக ஆராய்ந்து எப்படி நுகர்வு வெறிக்கு ஆட்படாமல் வாழ்வது என்பது என தெளிவை ஏற்படுத்திய கட்டுரை என்பேன். உண்பதற்கு ஒருவர் எதனை தேர்ந்தெடுப்பது என்பது அவரின் வாழ்நிலை, பொருளாதாரம் சார்ந்த ஒன்று. அனைவரும் ஒன்று போலவே உணவு சாப்பிடும் நிலை ஏற்பட்டால் அது வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் பலம். உடலுக்கும், செய்யும் வேலை சார்ந்தும் உணவைத் தேர்ந் தெடுக்கலாம். வெளிப்படையாகச் சொன்னால் விவசாயம் என்பதே இயற்கையின சமநிலையை குலைக்கும் ஒன்றே என்று கூறும் கட்டுரை இன்னும் பல்வேறு கருத்துகள், பார்வைகளை முன் வைக்கும் வாசலாக அமையும் என நம்புகிறேன்.

க. அன்பரசு, சென்னை– 78

பூவுலகு இதழ் உள்ளடக்கத்தில் பல மாற்றங் களை காண முடிந்தது. கார்ட்டூன் வழி கருத்து சொல்ல முனைவது நல்ல முயற்சி. ஓவியர் ராம்கி தமது சித்திரப்பார்வை மூலம் மேலும் பல சிந்தனைகளை தூண்டுவார் என்று நம்புகிறேன். பரபரப்பான பிரச்சினைகளையும், எளிமையான அம்சம் கொண்ட கட்டுரைகளையும் இணைத்துக் கொடுத்த விதம் நன்று. தகைவிலான் குருவி குறித்த பிரவீன்குமாரின் கட்டுரையும், குரங்கை வன விலங்காக பாருங்கள் என்று கூறிய ஜீயோ டாமினின் கட்டுரையும் நம் வாழ்வில் நேரில் பார்த்தாலும், கவனிக்க தவறிய அம்சங்களை சுட்டிக்காட்டியது. டார்வின் சார்வாகன் எழுதிய அறிவியல் புனைகதையும் நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

வள்ளி பிரபாகரன், சேலம்

நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, தற்போதய வாழ்விற்கும் மின்சாரம் அவசியம் தேவை. அணுசக்திக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் நீங்கள், வேறு எந்த வழியில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதை சொல்ல வேண்டும். அதைச் செய்யாமல் அணுசக்திக்கு எதிரான பிரச்சாரத்தை மட்டும் செய்வதை ஏற்க முடியாது. அதேபோல விவசாயம் செய்வதே இயற்கைக்கு எதிரானது என்று நிறுவ முயலும் கட்டுரையும் அறிவியலுக்கு எதிரானதாக தோன்றுகிறது. புள்ளிவிவரங்கள் இல்லாமல் எழுதப்படும் இந்தக் கட்டுரைகளின் உள் நோக்கத்தை புரிந்து கொள்வது கஷ்டமல்ல.

எம். சேஷன், திருவல்லிக்கேணி, சென்னை

பூவுலகு பத்திரிகையில் கார்ட்டூன்,அறிவியல் புனைகதை போன்ற மாற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிரியர் குழுவில் பெண்களின் பங்கேற்பும் வரவேற்புக்குரியது. உண்மையிலேயே மாத இதழாக தொடர்ந்து வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன்.

வினோலியா, செங்கல்பட்டு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments