மத நம்பிக்கைகளும், காலநிலை மாற்றமும்…!

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் சுமார் 84 சதவீத மக்கள் ஏதோவொரு மதம் சார்ந்த நம்பிக்கைகளுடன் வாழ்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாம் வாழும் இந்த உலகத்தையும், அதில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அம்சங்களையும் தம் மதம் சார்ந்த கடவுளர்களே படைத்திருப்பதாக அனைத்து மதம் சார்ந்த மக்களும் நம்புகின்றனர்.

அடிப்படையில் மதம் என்பது மனிதர்களின் உளவியல் சார்ந்த அம்சம். மனிதனின் உளவியலை வடிவமைப்பதில் பெரும்பங்கு வகிப்பது மதம் சார்ந்த நம்பிக்கையே. ஆனால் மதம் சார்ந்த எந்த நம்பிக்கைகளுக்கும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களைத் தேடினால் விடை கிடைக்காது. ஆனாலும் பெரும்பாலான அறிவியலாளர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் மதம் சார்ந்த நம்பிக்கை கொண்டவர்களே

உளவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து விலங்குகளின் உளவியலை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த விலங்குகளின் உளவியலையும், மனிதர்களின் உளவியலையும் தொடர்ந்து ஒப்பிட்டு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அடிப்படையில் விலங்குகளின் உளவியலுக்கும் மனித உளவியலுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. விலங்குகள் தம் வாழ்க்கையில் சந்திக்கும் இயற்கை நிகழ்வுகளுக்கு ஏற்பட தம் நடத்தையை மாற்றிக்கொள்ளும் இயல்பு படைத்தவை. அவ்வாறு மாறும் நடத்தைகளே காலப்போக்கில் அந்த விலங்குகளின் சந்ததிகளுக்கு இயல்பான நடத்தையாகிவிடும். அதையே விலங்குகளின் உளவியல் என ஆய்வாளர்கள் பதிவு செய்வர். எனவே விலங்குகள் இயற்கைக்கு இயைந்த வாழ்க்கையை மேற்கொள்கின்றன.

ஆனால் மனிதனின் மனம் விந்தையான ஒரு அம்சத்தைக் கொண்டது. விலங்குகளுக்கு கனவுகளோ, கற்பனைகளோ இருப்பதாக இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் மனித மூளையின் தவிர்க்கவியலாத அம்சமாக கனவுகளும், கற்பனைகளும் இருக்கின்றன. இந்த கனவுகளும், கற்பனைகளும்தான் அனைத்து மதங்களையும் உருவாக்கியுள்ளன. இதன்படி மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் இயற்கை நிகழ்வுகளுக்கான காரணத்தை தாம் சார்ந்த மதங்களின் பார்வையில் தேடுகிறான். மதம் சார்ந்த புனைவுகளுக்கு அறிவியல் ஆதாரத்தைத் தேடினால் விடை கிடைக்காது என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால் மதம் சார்ந்த நம்பிக்கைகளை கொண்டிருக்கும் மனிதனின் உளவியல் இயற்கை நிகழ்வுகளுக்கான அறிவியல் பூர்வமான காரணத்தைவிட தம் மதம் சார்ந்த கருத்துகளின் அடிப்படையில் காரணத்தை தேடுகிறது.

நாம் வாழும் இந்தப் பூவுலகையும் இந்தப் பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களையும் கடவுளர்களே படைத்ததாக நம்பிக்கை கொண்டிருக்கும் மதம் சார்ந்த கோட்பாடுகள் அனைத்தும் மனிதனை மட்டுமே முன்னிலைப்படுத்தி  வகுக்கப்படுகின்றன. ஏனென்றால் மதம் சார்ந்த கோட்பாடுகள் அனைத்தும் மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றன. எனவே மனிதன் தன்னை மட்டுமே மையப்படுத்தி இந்தப் பூவுலகை புரிந்து கொள்கிறான். மனிதர்களுக்காக மட்டுமே இந்தப் பூவுலகு இருப்பதாக தவறாக எண்ணி, மற்ற உயிரினங்களை உதாசீனப்படுத்தி அவற்றை அழிவின் விளிம்பிற்கு தள்ளுகிறான். பல மதங்கள் சார்ந்த கோட்பாடுகளும்கூட இந்தப் பூவுலகு படைக்கப்பட்டு மனிதனின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவே கூறுகின்றன. மனிதனின் இந்தப் போக்கு முதல்கட்டமாக வேறு சில உயிரினங்களை அழித்து ஒழித்தாலும், இப்பூவுலகின் உயிர்ச்சமநிலையை குலைத்து காலப்போக்கில் மனிதனின் இருத்தலுக்கும் ஆபத்தையே விளைவிக்கிறது.

மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு சவால் விடும் சம்பவங்களும் அவ்வபோது நடைபெற்று வருகிறது. உதாரணமாக அண்மையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலைக் கூறலாம். அனைத்து மதங்களின் கடவுளர்களும் செயலற்று இருக்க, அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களையும் இழுத்துமூட வேண்டிய நிர்பந்தத்தை கொரோனா ஏற்படுத்தியது. கொரோனா தொற்றியவர்கள் உயிர்வாழத்தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு மட்டுமல்ல – உயிரற்ற உடலை எரிக்கும் மயானங்கள்கூட கிடைக்காத நிலை நிலவியதை நாம் வெகுவிரைவில் மறந்து விட்டோம்.

அதற்கு முன் வந்த சுனாமியை நாம் மறந்தே விட்டோம். எந்த ஒரு இயற்கைப் பேரிடரையும் தூண்டிவிடுவதில் மனித சமூகத்துக்கும் பங்குண்டு. ஆனால் அதை நாம் உணரவிடாமல் தடுப்பது நமது மதம் சார்ந்த நம்பிக்கைகளே. இக்கருத்தில் உங்களுக்கு கேள்விகள் எழலாம். ஆனால் இன்று மீண்டும் சுனாமி நம்மைத் தாக்காது என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? ஒரு வேளை மீண்டும் சுனாமி நம்மைத் தாக்கினால் அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அல்லது குறைப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? கடற்கரைப்பகுதிகளில் அலையாத்திக் காடுகளை உருவாக்கி பாதுகாத்தால் சுனாமிப் பேரலையின் பாதிப்புகளை தவிர்க்கலாம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. நாம் செய்தோமா?

தற்போது இந்த பூவுலகிற்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்குவது காலநிலை மாற்றம் என்ற அம்சம்தான். ஆனால் எந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளிலோ, கோட்பாடுகளிலோ காலநிலை மாற்றம் குறித்து எந்த நேரடியான குறிப்பும் இல்லை. எப்போதாவது ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் குறித்து மதம் சார்ந்த இலக்கியங்களில் பதிவுகள் இருக்கலாம். ஆனால் பூவுலகின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் குறித்து எந்த மதம் சார்ந்த இலக்கியங்களிலும் இதுவரை எந்தப் பதிவும் கண்டறியப்படவில்லை. ஏனெனில் இது குறித்த அனுபவமோ, அறிவோ மதம் சார்ந்த இலக்கியங்களை இதுவரை படைத்த மனிதர்களுக்கு இல்லை.

உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த பூவுலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் கொள்கை சார்ந்த திட்டமிடல்கள், சட்டங்களை இயற்றுதல், விதிமுறைகளை வகுத்தல், அவற்றை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் குவிக்கத் தொடங்கியுள்ளன.

ஒரு நாட்டின் அரசு இயற்றும் சட்டங்களும், வகுக்கும் விதிமுறைகளும் அந்நாட்டின் குடிமக்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவைதான். ஆனால் அந்த குடிமக்களை உளப்பூர்வமாக அணுகும் ஆற்றல் கொண்டவை மதம் சார்ந்த நம்பிக்கைகள்தான். எனவேதான் மதம் சார்ந்த அரசோ, மதம் சாராத அரசோ மக்களின் மத உணர்வுகளை உள்வாங்கியே சட்டங்களையும், விதிமுறைகளையும் வகுக்கின்றன.

இந்நிலையில் காலநிலை மாற்றம் குறித்து அக்கறை கொள்ளும் ஐ.நா. அவையின் அங்கங்களும், மற்ற செயற்பாட்டாளர்களும் பல்வேறு மதங்களும் காலநிலை மாற்றம் குறித்த தெளிவான நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. எனவே அனைத்து மதம் சார்ந்த அதிகார மையங்களும் காலநிலை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.  இதற்கான உரையாடல்களை ஏறத்தாழ அனைத்து மதம் சார்ந்தவர்களும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த சுமார் 15 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மதங்களின் பங்களிப்பு குறித்த உரையாடல்களும், கருத்தரங்குகளும் நிகழ்ந்து வருகின்றன. உலகில் எந்த ஒரு மதமும் ஒற்றைக் கொள்கையையோ, ஒற்றைத் தலைமையையோ ஏற்றுக்கொண்டதாக இல்லை. மேலும் மத நம்பிக்கை கொண்டுள்ள மக்களும், அவர்களது மதம் விதிக்கும் விதிமுறைகளை, கட்டுப்பாடுகளை உறுதிப்பாட்டுடன் கடைபிடிப்பதில்லை. அரசு அமைப்புகளும், மத நிறுவனங்களும் உருவாக்கும் இந்த சட்டங்களையும், விதிமுறைகளையும் மனித மனம் முழுமையாக ஏற்பதில்லை. தனக்கு சாதகமான அம்சங்களை ஏற்கும் மனித மனம், தனக்கு சாதகமில்லாத அம்சங்களை புறக்கணிக்கிறது. இந்த அம்சத்தில் மதரீதியான தலைவர்களும்கூட மிகவும் நெகிழ்வுத்தன்மையுடனே நடந்து கொள்கின்றனர். மதம் விதிக்கும் கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தினால் அந்த மதமே மக்களிடம் ஆதரவை இழந்துவிடும் என்பது அனைத்து மதவாதிகளுக்கும் தெரியும். எனவே தம் மதம் சார்ந்த மக்களின் எண்ணிக்கையை இழந்துவிடாதிருக்க மிகவும் நெகிழ்வுத்தன்மையுடனே மதங்களின் அதிகார பீடங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் காலநிலை மாற்றம் குறித்து மதபீடங்கள் மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளை அந்தந்த மதம் சார்ந்த மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.

காலநிலை மாற்றம் குறித்த செயல்பாடுகளில் அரசு அமைப்புகள், தொழில் – வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இலக்கை நோக்கி பயணிக்க முடியும். ஆனால் நடைமுறையில் காலநிலை மாற்றம் குறித்த செயல்பாடுகளில் தொழில் – வணிக நிறுவனங்கள் உண்மையான அக்கறை காட்டுவதில்லை. ஐக்கிய நாடுகள் அவை, அரசு அமைப்புகள் ஆகியவற்றின் அழுத்தங்களுக்காக சில சீர்திருத்தங்களை செய்வதாக தொழில் – வணிக நிறுவனங்கள் விளம்பரம் செய்தாலும் உண்மை நிலை வேறாகவே இருக்கிறது. இந்த தொழில் – வணிக நிறுவனங்கள் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் மதநம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களது தொழில் – வணிக நிறுவனங்கள் எதுவும் எந்த மதம் சார்ந்த அமைப்பையும் துளிகூட மதிப்பதில்லை என்பதுதான் உண்மை.

காலநிலை மாற்றம் குறித்த விவாதங்களில் மதங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பதும், சில தீர்மானங்களை முடிவு செய்வதும் அண்மைக் காலமாக நடந்து வருகிறது. ஆனால் எந்த ஒரு மதத்திற்கும் ஒட்டுமொத்த பிரதிநிதி யாரும் இல்லை என்பது ஒரு நடைமுறைச் சிக்கலாக இருக்கிறது.

இந்து மதம் என்று கூறப்படும் மதத்திற்கோ ஒற்றைக் கோட்பாடோ, ஒற்றைக் கடவுளோ இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனவே உலகின் பல இடங்களில் நடைபெறும் காலநிலை மாற்றம் குறித்த நிகழ்வுகளில் இந்து மதத்தை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் சில அமைப்புகள் கலந்து கொண்டு விவாதங்களை முன்னெடுத்து தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன. உதாரணமாக கடந்த 2009ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வில் இந்து மதம் சார்பாக பிரம்ம குமாரிகள் அமைப்பு பங்கேற்றுள்ளது. இந்த அமைப்பு தொடர்ந்து காலநிலை மாற்றம் தொடர்பாக பல நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதே போல இந்தியாவிற்கு வெளியே உள்ள பல அமைப்புகள், தாம் இந்துக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக்கொண்டு பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றன.

ஆனால் இந்து மதத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் இந்த அமைப்புகளுக்கும், சாமானிய இந்து மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நிதர்சனமான உண்மையாகும். எனவே ஒரு சாமானிய இந்துவின் நடைமுறை வாழ்விற்கும் இந்த ‘இந்து அமைப்பு’களின் தீர்மானங்களுக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லாமலே போய்விடுகிறது.

நடைமுறையில் மதம் சார்ந்த பெரும்பாலான நடவடிக்கைகள் காலநிலை மாற்றத்தை மிக வேகமாகத் தூண்டும் அளவிலேயே இருக்கின்றன. இதில் எந்த மதமும் விதிவிலக்காக இல்லை. இந்தியாவில் மிக அதிக மக்களால் நம்பப்படும் – கடைபிடிக்கப்படும் இந்து மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்து மத நம்பிக்கைகளின்படி இந்தப் பூவுலகு, பூமித் தாயாக கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலான இந்து மதம் சார்ந்த நடவடிக்கைகள் பூமித்தாயை சிதைக்கும் வகையிலேயே அமைகின்றன. இயற்கை வளங்களை அழித்து வழிபாட்டுத் தலங்களை அமைப்பதில் துவங்கி, வழிபாட்டுத் தலங்களுக்கு பெரும் திரளாக மக்கள் செல்வதும், அங்கு நடைபெறும் பல்வேறு விழா உள்ளிட்ட நிகழ்வுகளும் காலநிலை மாற்றத்தை தூண்டிவிடும் நிகழ்வுகளே! பல்வேறு இடங்களில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் மக்களின் போக்குவரத்து சார்ந்த அனைத்து அம்சங்களும் புவி வெப்பத்தை அதிகரிக்கக்கூடியவை. ஒரு வழிபாட்டுத் தலத்தில் அதன் கொள்ளவைவிட பன்மடங்கு அதிகமாகக் கூடும் மக்கள் திரள் அந்த வழிபாட்டுத் தலத்தின் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி, அம்மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது. அந்த வழிபாட்டுத்தலங்களில் நுகரப்படும் பொருட்கள் அனைத்தும் அதன் உற்பத்தி, பேக்கேஜிங், போக்குவரத்து ஆகிய அனைத்து செயல்பாடுகளிலும் காலநிலை மாற்றத்தை மிகத்துரிதமாக தூண்டிவிடும் செயல்பாடுகளே!

சற்று யோசித்து பாருங்கள்…! தஞ்சை பெரிய கோவில் தமிழனின் பெருமைதான்…! ஆனால் எங்கெங்கோ இருந்த மிகப்பெரிய மலைகளை சிதைத்து, அதைப் பாறைகளாக்கி அதை ஓரிடத்தில் குவித்து ஒரு ஆலயத்தைக் கட்டியதில் மனித உழைப்பு மட்டுமா பயன்படுத்தப்பட்டது? எத்தனை மலைகள், அந்த மலை சார்ந்த பகுதிகள், அந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை சூறையாடப்பட்டிருக்கும்? இயற்கையில் ஏற்பட்ட இந்த இழப்புகளை எந்தக் கடவுளின் சக்தி ஈடு செய்தது?

இதோ தீபாவளி கொண்டாடுகிறோம். இந்தத் தீபாவளிக்காக எத்தனை பேர் பயணம் மேற்கொள்கிறோம்? இதற்கான எரிபொருள் பயன்பாடு காலநிலை மாற்றத்தை உந்தவில்லையா? தீபாவளியின் போது வெடித்துத் தீர்க்கப்படும் பட்டாசு வகைகள் காலநிலையை மட்டுமா பாதிக்கின்றன? நம்மோடு வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இந்தப் பட்டாசுகளால் ஏற்படும் தீங்குகள் குறித்து நாம் சிந்திக்கிறோமா? இந்தப் பட்டாசுகளை வெடித்துத்தீர்ப்பதன் மூலம் நாம் சாதிப்பது என்ன?

இவற்றை நாம் சிந்திப்பதற்கு தடையாக இருப்பது எது மத நம்பிக்கைகளை அரசியல் யுக்தியாக மடைமாற்றும் அமைப்புகளின் – நபர்களின் திட்டம்தான் அது. மதங்களின் மூட நம்பிக்கைகள் குறித்து குரல் எழுப்பினாலே, அது மதங்களுக்கு ஆபத்து என்ற திசைதிருப்பல் மூலம் மத நம்பிக்கைகள் குறித்த விவாதங்களின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. மாற்று மதங்களுடன் போட்டிபோட்டு தாம் சார்ந்த மதவிழாக்களை கொண்டாட வேண்டும் என்ற வெறியேற்றப்படுகிறது. இந்தப் பூவுலகின் நிகழ்காலமோ, எதிர்காலமோ, இம்மண்ணில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட உயிர்களின் நலவாழ்வோ முக்கியமல்ல; மதம் சார்ந்த நம்பிக்கைகளை, அது மூட நம்பிக்கையாக இருந்தாலும் அதை கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற வெறி சாமானிய மக்களின் மனதில் விதைக்கப்படுகிறது.

வடமாநிலங்களில் நடைபெறும் கும்பமேளா, சிவராத்திரி, நவராத்திரி, துர்கா பூஜை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்கள் மற்றும் தென் மாநிலங்களில் உள்ள திருப்பதி, சபரிமலை ஆகிய வழிபாட்டுத் தலங்களில் லட்சக்கணக்கில் திரளும் பக்தர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் காலநிலை மாற்றத்தை விரைந்து தூண்டும் வேலைகளையே செய்து வருகின்றனர்.

இந்நிலையை மாற்றுவது குறித்து நாம் சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மதம் சார்ந்த பண்டிகைக்காக கூறப்படும் கதைகளை நாம் மறுஆய்வு செய்ய ஆரம்பித்தால் மட்டுமே மதங்களின் பெயரால் நடக்கும் சூழலுக்கு எதிரான செயல்பாடுகளைத் தடுக்கவோ, தவிர்க்கவோ இயலும். நம்மில் பலரும் ஆரவாரமாகக் கொண்டாடும் தீபாவளி குறித்து பாவேந்தர் பாரதிதாசன் எழுப்பிய கேள்விகள் இன்னும் விடைகாணாமலே உள்ளது.

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
“உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?”
என்று கேட்பவனை “ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்” என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!

இத்தகைய செயல்பாடுகள் அனைத்தும் இந்து மதத்தில் மட்டுமே நடக்கவில்லை. அனைத்து மதங்களுமே இவ்வாறுதான் நடந்து கொள்கின்றன. கிறித்து பிறப்பு நாள், புத்தாண்டு நாட்களில் கிறித்தவ மதம் சார்ந்தவர்கள் உலகின் பல நாடுகளிலும் இத்தகைய சூழலை சீர்கெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இஸ்லாமிய மதமும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் இந்து மத நம்பிக்கைகளின் அடிப்படையில் நடைபெறும் சூழல் சீர்கேடுகள், மற்ற மதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாக இருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?

-தொடர்ந்து சிந்திப்போம்

  • டார்வின் சார்வாகன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments