உயரும் புலிகள் எண்ணிக்கை; குறையும் காடுகளின் பரப்பளவு

உலக புலிகள் நாளை முன்னிட்டு ஜூலை 29ஆம் தேதி கார்பெட் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அகில இந்திய புலிகள் மதிப்பீடு 2022 அறிக்கை மற்றும் புலிகள் காப்பகங்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீடு அறிக்கையை ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே வெளியிட்டார்.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் சீரிய முயற்சியால் 1973ஆம் ஆண்டில், இந்திய அரசு நாட்டின் புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதையும் உயிர்ப்பன்மையத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட பாதுகாப்புத் திட்டமான புலித் திட்டத்தைத் தொடங்கப்பட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் புலிகள் திட்டம் பாராட்டத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது, புலிகள் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆரம்பத்தில் 18,278 ச.கி.மீ  பரப்பளவில் உள்ள ஒன்பது புலிகள் காப்பகங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது 75,796 ச.கி.மீ. பரப்பளவில் பரவியுள்ள 53 காப்பகங்களில் செயல்பட்டு வருகிறது. மொத்த நிலப்பரப்பில் 2.3% ஐ உள்ளடக்கியது.

தற்போது உலகின் காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75% இந்தியாவில் உள்ளன. 1970 களில் புலிகள் பாதுகாப்பின் முதல் கட்டம் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றுவதிலும், புலிகள் மற்றும் வெப்பமண்டலக் காடுகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதிகளை நிறுவுவதிலும் கவனம் செலுத்தியது. இருப்பினும், 1980 களில் பரவலான வேட்டையாடுதல் காரணமாக புலிகளின் எண்ணிக்கை  வீழ்ச்சியைக் கண்டது. இதன் பிரதிபலிப்பாக, அரசாங்கம் 2005 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியது, நிலப்பரப்பு அளவிலான அணுகுமுறை, சமூக ஈடுபாடு மற்றும் ஆதரவு, கடுமையான சட்ட அமலாக்கம் மற்றும் புலிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவியல் கண்காணிப்புக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை இந்த கட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. இந்த அணுகுமுறை புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்தது மட்டுமல்லாமல், புதிய புலிகள் காப்பகங்களை அடையாளம் காணுதல் மற்றும் புலிகளின் நிலப்பரப்புகள்ளை அங்கீகரித்தல் உள்ளிட்ட பல முக்கியமான இலக்குகளையும் எட்டியது.

 

ஏப்ரல் 9, 2022 அன்று, மைசூருவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு கொண்டாட்டத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி இட்ன்ஹியாவின் காடுகளில் உள்ள குறைந்தபட்ச புலிகளின் எண்ணிக்கை 3167 என்று அறிவித்தார், இது கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டபோது அதில் சிக்கிய பகுதியின் புலிகளின் எண்ணிக்கையைக் கொண்ட மதிப்பீடாகும். இப்போது, இந்திய காட்டுயிர் நிறுவனம், கேமராவில் சிக்கிய மற்றும் கேமராவில் சிக்காத புலிகள் இருக்கும் பகுதிகளில் இருந்து மேற்கொண்ட தரவுகள் மேலும் பகுப்பாய்வின் அடிப்படையிலான  புலிகளின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியக் காடுகளில் வாழும் புலிகளின்  அதிகபட்ச எண்ணிக்கை 3925 ஆகவும், சராசரி எண்ணிக்கை 3682 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஆண்டுக்கு 6.1% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது.

மத்திய இந்தியா மற்றும் ஷிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளிகளில், குறிப்பாக மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைகள் போன்ற சில பகுதிகள் புலிகளின் எண்ணிக்கை சரிவைச் சந்தித்துள்ளன.  மிசோரம், நாகாலாந்து, ஜார்கண்ட், கோவா, சத்தீஸ்கர் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 785 புலிகளும், கர்நாடகாவில் 563 புலிகளும், உத்தராகண்டில் 560 புலிகளும், மகாராஷ்டிராவில் 444 புலிகளும் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 306 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பல்வேறு புலிகள் காப்பகங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளன, மற்றவை சவால்களை எதிர்கொள்கின்றன. சுமார் 35% புலிகள் காப்பகங்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், வாழ்விட மறுசீரமைப்பு, இனப்பெருக்க விரிவாக்கம் மற்றும் அடுத்தடுத்த புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துதல் ஆகியவை தற்போது தேவைப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் நாட்டில் உயரும் புலிகளின் எண்ணிக்கை 

2006 76
2010 163
2014 229
2018 264
2022 306

 

காப்பகங்கள் வாரியாக புலிகள் எண்ணிக்கை

காப்பகங்கள் காப்பகங்களுக்குள் புலிகள் எண்ணிக்கை காப்பகங்களையும் பயன்படுத்தும் புலிகள் எண்ணிக்கை
ஆனைமலை 16 ±0.1 20±2.6
களக்காடு-முண்டந்துறை 5 5
முதுமலை 114±0.4 167±9
சத்யமங்கலம் 85±0.6 114±6.4
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமங்கலம் 12±0.5 18±3.1

 

 

 

இந்திய அளவில் புலிகளின் எண்ணிக்கை

(2006 முதல் 2022 வரையில்)

மாநிலம் புலிகளின் எண்ணிக்கை

 

  2006 2010 2014 2018 2022

 

சிவாலிக் மலை மற்றும் கங்கை சமவெளி நிலப்பரப்பு

 

பீகார் 10 8 28 31 54
உத்தரகாண்ட் 178 227 340 442 560
உத்தரப்பிரதேசம் 109 118 117 173 205
சிவாலிக்- கங்கை 297 353 485 646 819**

 

 மத்திய இந்திய நிலப்பரப்பு  மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

 

ஆந்திரப் பிரதேசம் 95 72 68 48 63
தெலங்கானா 26 21
சத்தீஸ்கர் 26 26 46 19 17
ஜார்கண்ட் 10 3* 5 1*
மத்தியப் பிரதேசம் 300 257 308 526 785
மஹாராஷ்டிரா 103 168 190 312 444
ஒடிசா 45 32 28 28 20
ராஜஸ்தான் 32 36 45 69 88
மத்திய இந்திய & கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 601 601 688 1033 1439

 

 

மேற்குத் தொடர்ச்சி மலைகள் நிலப்பரப்பு

 

கோவா 5* 3 5
கர்நாடகா 290 300 406 524 563
கேரளா 46 71         136 190 213
தமிழ் நாடு 76 163 229 264 306
மேற்குத் தொடர்ச்சி மலைகள் 402 534 776 981 1087

 

வடகிழக்கு மற்றும் பிரம்மபுத்திரா சமவெளி நிலப்பரப்பு

 

 

அருணாச்சலப் பிரதேசம் 14   28* 29* 9

 

 

 

  2006 2010 2014 2018 2022
அசாம் 70 143 167 190 227
மிசோரம் 6 5 3* 0 0
நாகாலாந்து 0 0
வடமேற்கு வங்காளம் 10 3* 0 2
வடக்கிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்திரா 100 148 201 219 236
சுந்தரவனங்கள்   70 76 88 101
மொத்தம் 1,411(1,165- 1,657) 1,706(1,507-1,896) 2,226(1,945 – 2,491) 2,967(2,603-3,346) 3,682(3,167- 3,925)

 

 

 

 

சிறந்த புலிகள் காப்பகம் ஆனைமலை

புலிகள் காப்பகங்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீடு: இறுதி அறிக்கை- 5 வது சுற்று

இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) பாதுகாக்கப்பட்ட பகுதிகள் குறித்த உலக ஆணையத்தின் கட்டமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட மேலாண்மை செயல்திறன் மதிப்பீடு(Management Effectiveness Evaluation (MEE)) என்பது புலிகள் காப்பகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலப்பரப்பின் மேலாண்மை கண்ணோட்டங்களுக்கு  உதவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் மிக முக்கியமான கருவியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்கள் உலகின் மிகச்சிறந்த காப்பகங்களுக்கு அடையாளமாக உள்ளன. இது உயிர்ப்பன்மையத்தைப் பாதுகாப்பதற்கும் மனிதர்களின் நல்வாழ்வுக்குமான இடத்தை வழங்குகிறது. இவை இயற்கை சார்ந்த சுற்றுலாவின் முக்கிய இடங்களாகவும் உள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authourity),  இந்திய காட்டுயிர் நிறுவனம் (Wildlife Institute of India)  ஆகியவை 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இணைந்து நடத்தும் MEE தேசிய புலிகள் பாதுகாப்பு முயற்சிகளின் வெற்றிகரமான மதிப்பீட்டிற்கு வழிவகுத்துள்ளது.

புலிகள் காப்பகங்களின் ஐந்து சுற்றுகளை  திறம்பட முடித்த உலகின் ஒரே நாடு இந்தியாவாகும். இது 18 மாநிலங்களில் 75,796.83 சதுர கி.மீ பரப்பளவில் 53 புலிகள் காப்பகங்களில் நடத்தப்பட்டுள்ளது. இவற்றில் மொத்தம் 51 புலிகள் காப்பகங்கள் 2022ஆம் ஆண்டில் புலிகள் காப்பகங்களின் ஐந்தாவது சுற்றில் MEE செயல்முறை மூலம்  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 51 புலிகள் காப்பகங்களை மதிப்பீடு செய்வதற்காக 10 சுயேச்சையான  ம்ண்டல நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைவர் மற்றும் 2-3 உறுப்பினர்கள் இருந்தனர் (காட்டுயிர் மேலாண்மையில் அனுபவம் கொண்ட ஓய்வு பெற்ற இந்திய வனப்பணி அதிகாரிகள், குறிப்பாக புலிகள் காப்பகம் / பாதுகாக்கப்பட்ட பகுதி மேலாண்மை துறையில்). கூடுதலாக, இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் பேராசிரியர் ஒருவர் இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்கினார். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக, சுயேச்சையான வல்லுநர் குழுக்கள், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின்படி எம்.இ.இ.யை நடத்துவதற்காக அனைத்து 51 புலிகள் காப்பகங்களுக்கும் சென்று கள இயக்குநர்கள் சமர்ப்பித்த ஆவணங்களை  சரிபார்த்த பின்னர் எம்.இ.இ மதிப்பெண் அட்டையை நிரப்பினர்.

 

அதிகபட்ச மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் முடிவுகள்  நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தபட்டன. 50-59%  ‘சுமார் ‘ என மதிப்பிடப்படுகிறது; 60-74% ‘நன்று’ என மதிப்பிடப்படுகிறது; 75-89% ‘மிகவும் நன்று’ எனவும், > = 90% ’சிறந்தது’ எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் காப்பகங்களின் 5வது சுழற்சியின்போது கணிசமான முன்னேற்றம் (அதிக மதிப்பெண்கள் அதாவது > = 90%) இடமளிப்பதற்காக இந்த வகைகளில் சிறிய மாற்றம் மற்றும் “சிறந்தது” என்ற வகை அறிமுகப்படுத்தப்பட்டது.

2022ஆம் ஆண்டில் புலிகள் காப்பகங்களின் ஐந்தாவது சுழற்சியின் முடிவுகள் 51 புலிகள் காப்பகங்களுக்கு ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் 78.01% (50% முதல் 94% வரை) என்பதைக் குறிக்கின்றன. மொத்தம் 12 புலிகள் காப்பகங்கள் ‘சிறந்தது’ என்ற பிரிவிலும், 21 புலிகள் காப்பகங்கள் ‘மிக நன்று’ பிரிவிலும், 13 புலிகள் காப்பகங்கள் ‘நன்று’ பிரிவிலும், 5 புலிகள் காப்பகங்கள் ‘சுமார்’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் தமிழ்நாட்டின்  ஆனைமலை மிகச் சிறந்தது என்றும், முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு- முண்டந்துறை ஆகியவை மிக நன்று என்றும், ஸ்ரீவில்லிபுத்துார், மேகமலை ஆகியவை நன்று என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் புலிகள் திட்டம் கடந்த 50 புலிகள் பாதுகாப்பில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது, ஆனால் வேட்டையாடுதல் போன்ற சவால்கள் இன்னும் புலிகள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன. புலிகளின் வாழ்விடங்கள் மற்றும் தாழ்வாரங்களைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் இந்தியாவின் புலிகள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்காலத்தை பாதுகாக்க முக்கியமானவை.

ஆனால், ஒன்றிய அரசு தொடர்ச்சியாக காடுகளை அழிக்கும் திட்டங்களையும் அதற்கு ஏதுவாக புதிய சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் கொண்டு வருகிறது. இதன் விளைவாக இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் காடுகள் துண்டாடப்படும் நிலை உண்டாகும். அப்போது புலிகள் உட்பட பல்வேறு காட்டுயிர்களின் எண்ணிக்கையும் குறையும். காட்டுயிர் – மனித எதிர்கொள்ளல் நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.

  • பிரபாகரன் வீரஅரசு
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments