புத்தக மதிப்புரை : இ.சுதாகரன், வழக்கறிஞர்

ஒரு கரிசல் கிராமத்தின் 200 ஆண்டுகால மக்கள் வரலாற்றை அவ்வூரின் கண்மாயின் சிறப்பான வாழ்வு, பின் இறுதியில் அதன் அழிவின் மூலமும் சொல்ல விழையும் புதினமே சோ.தர்மனின் ‘சூல்’.

நீர்பங்கீடு ஒரு பெரும்பிரச்சனையாகவும் நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து பெரிதும் பேசப்படும் இன்றைய சூழலில் தமிழ் இலக்கிய களத்தில் சூல் நாவல் ஒரு முக்கிய வரவு என்றே கருதுகிறேன்.

நாவலின் களமான உருளைக்குடி கிராமத் தையும், அதன் கதாபாத்திரங்களான உருளைக் குடி கிராம மக்களையும் மிக இயல்பாக சித்தரித் துள்ளார் ஆசிரியர். நாவல் ஆசிரியர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருப்பது போல் தர்மன் அவர்களின் படைப்பான சூலும் கழிவிரக்கமோ, அரசியல் சீற்றமோ அற்றதே. ஆனால் அதேசமயம், மாறா உண்மைகளையும் அதன் யதார்த்தத்தையும் தன் இயல்பான மொழி நடையில் நம்முள் இறக்கி நம் மனம் கனக்கச் செய்துவிடுகிறார்.

நாவல் உருவாக காரணமாக இருந்ததாக ஆசிரியர் கூறும் ப்ரஷ்ணவ் எழுதிய தரிசுநில மேம்பாடு எனும் நூலில் வரும் சம்பவம், காலந்தோறும் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்து, அதன் போக்கின் நெளிவு சுழிவுகளை அறிந்து தம் பட்டறிவு மூலம் பல பண்பாட்டு அசைவுகளை விட்டுச்சென்றுள்ள கோடான கோடி விவசாயப் பெருமக்களின் அல்லது கரிசல் மொழியில் சொல்வதென்றால் சம்சாரிகளின் அறவாழ்வுக்கு ஒரு அற்புத சான்றாகும்.

நாவலில் கதாபாத்திரங்களின் வழி ஆசிரியர் கூறும் அனுபவக் கதைகளும், நுண்ணறிவு செய்திகளும் ஏராளம். உதாரணமாக முத்துவீரன் தாத்தா கூறும் பருவமழையின் அளவை முன் கூட்டியே தீர்மானிக்க தூக்கணாங்குருவிகள் கட்டும் கூடுகளின் வாசலின் திசை வழி அறியும் விபரம் ஒரு மிகச் சிறந்த பண்பாடு விழுமியம். அதன்படி, கூடுகளின் கீழ்வாசல் தவிர பக்கவாட்டிலும் ஒரு வாசல் இருக்கும். அதில் பெரும்பான்மையான வாசல்கள் தெற்குப் பக்கம் பார்த்தபடி அமைந்திருந்தால் அந்த வருடம் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்யும், அதே பெரும்பான்மையான வாசல்கள்

வடக்குப் பக்கம் பார்த்தபடி இருந்தால் தென்மேற்குப் பருவமழை அதிகம் பெய்யும். தற்போது வழக்கொழிந்த பலசொற்கள் நாவல் முழுவதும் விரவிக்கிடக்கிறது. உதாரணமாக தெலாக்கிணறு, சங்கஞ்செடி இப்படி பல. ஆழ்துளை கிணறுகளும், பாக்கெட் குடிநீரும், சீமைக்கருவேல மரமும் வந்தபின், குறைந்த ஆழம் கொண்ட தெலாக்கிணறுக்கும் கல்தொட்டிக்கும் வேலையும் இல்லை, அவை புழக்கத்திலும் இல்லை. இறைவனுக்கு அடுத்தபடியாக எங்கும் வியாபித்திருக்கும் சீமைக்கருவேலம் வந்தபின் கண்மாய் கரையை வலுப்படுத்தும் சங்கஞ் செடிக்கு ஏது சோலி.

நூலாசிரியர், கதாபாத்திரங்களின் உரை யாடலின் மூலம் அவர்களின் அனுபவத்தினை வாசகனுக்கு கடத்தும் வழியை சிறப்பாக கையாண்டுள்ளார். மழைக்கான அறிகுறிகள் கூறுவது, பிற பிராணிகளின் நடவடிக்கை கொண்டு இயற்கையை புரிய முற்படுவது, விவசாயத்திற்கான விதைகள் சேகரிப்பது, அவற்றைத் தரம் பிரித்து விதைப்புக்கு ஆயத்தமாவது, இப்படி பல விஷயங்கள் கதாபாத்திரங்களின் உரையாடல் வழியாய் வாசகனை வந்தடைகிறது.

நாவல் முழுவதும் விரவிக்கிடக்கும் சொலவடைகளும் அதன் அர்த்தங்களை கதா பாத்திரங்களின் சொல்லிலும் விளக்கத்திலும் நமக்கு நாவலாசிரியர் உணர்த்தும் விதம் ஒரு தாத்தன் பேரனுக்கு கதை சொல்லும் பாணியிலே அமைந்தது நாவலை நம் மனதிற்கு மிக நெருக்கமாக்குகிறது. நாவலில் சொல்லப்படும் அவசரகால வைத்திய முறைகள், கண்மாயை பராமரிக்கக் கையாளும் உத்திகள், விவசாயத்தின் உள் நடவடிக்கைகள், இருகிராமங்களுக்கிடையே நடக்கும் கலகங்களிலிருந்து கிராம உடைமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் என அனைத்தும் கடந்த காலத்தை நம் கண்முன்னே ஒரு படம் போல் ஓடச் செய்கிறார் நாவலாசிரியர்.

சில இடங்களில் கதாபாத்திரங்களின் வார்த்தைகளில் பெரும்பெரும் தத்துவங்களை மிக இயல்பான மக்கள் மொழியில் சொல்லிச் செல்கிறார். உதாரணத்திற்கு மடை குடும்பனுக்கும் அய்யனாரப்பனுக்கும் நடக்கும் உரையாடலில் “தண்ணீரை பங்கு வைப்பதில் ஓரவஞ்சனை செய்பவனின் வம்சம் தழைக்காது. தண்ணீரை வைத்துக் கொண்டு இல்லை யென்று வம்பு பண்ணுகிறவன் வம்சத்தை தண்ணீரே அழிக்கும்“, என்பதெல்லாம் காலந்தோறும் மனித இனம் சந்தித்து வரும் தீராப் பெரும்பிரச்சனைகளை ஆசிரியர் தன் வழிப்பார்வை மூலம் வாசகமனதிற்கு கடத்துகிறார். மேலும், மனிதர்கள் மட்டுமே கொலை செய்வார்கள், மிருகங்கள் அல்ல, அவை செய்வது இரையாக்குவது தன்னுயிர் காக்க அல்லது இரையாகாமல் தன்னுயிர் காக்க. இப்படி நாவல் முழுவதும் பெரும் தத்துவங்களை எளிய மக்கள் மொழியில் விரவி செல்கிறார் ஆசிரியர்.

தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கும் நம் தலைமுறைக்கு, பெய்த மழை போதுமென மழையை நிப்பாட்டும் பொருட்டு உருளைக்குடி மக்கள்
நடத்தும் தூள்மாவுச்சாமி கும்பிடு ஒரு ஆச்சர்ய நிகழ்வே.

நாவலில் ஆசிரியர் ஆவணப்படுத்தும் பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் என அனைத்தும் ஒருகாலத்தில் கரிசல் மண்ணில் எங்கும் விரவிக்கிடந்தவை. உதாரணமாக நாமக்கோழி, உள்ளான், சிறகி, முக்குழிப்பான், கொக்கு, நாரை, மீன்கொத்தி, பாம்புத் தலையான், பொடுதலை, ஆகாயத்தாமரை, நீர்க்குரண்டி, குறுக்குமுத்துச்செடி, பசலை, அமலை, தானாப்பூச்சி என்று பல. ஆனால் இன்று இவை அனைத்தும் அருகி வரும் இனங்களாகிப் போனது மனித தவறுகளின் விளைவே.

தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கும் நம் தலை முறைக்கு, பெய்த மழை போதுமென மழையை நிப்பாட்டும் பொருட்டு உருளைக்குடி மக்கள் நடத்தும் தூள்மாவுச்சாமி கும்பிடு ஒரு ஆச்சர்ய நிகழ்வே.

நாவலில் வரும் சில கதாபாத்திரங்கள் அவர்களின் செயல்பாட்டின் வழி நம் நெஞ்சில் என்றும் நிறைந்து விடுகிறார்கள். முக்கியமாக முத்துவீரன் தாத்தா, கொப்புளாயி, கடைசி வரை பெயர்சொல்லப்படாத நீர்ப்பாய்ச்சி, குப்பாண்டிச்சாமி, குஞ்சான், மாந்திரிகன் ஆகியோர்.

முன்பே சொன்னதுபோல் நாவலில் மையச் சரடு உருளைக்குடியின் பெரியக்கண்மாயே. அதன் வாழ்வும் வீழ்ச்சியுமே கதை. சுதந்தரத் திற்கு முன்பிருந்த அடிமைப்பட்ட எளிய மக்களின் நீர்மேலாண்மையும், அறிவும், அறிவியலின் யுகத்தில் பிறந்து நாகரிகம் அடைந்த சமூகமாக காட்டிக்கொள்ளும் நம்மிடையே இல்லை என்பது நிகழ்காலப் பெருஞ்சோகம். இது திட்டமிட்டு நடந்ததா அல்லது நம் பேராசையின் விளைவால் விளைந்ததா என்பதை வாசகனே முடிவு செய்துகொள்ளும்படி ஆசிரியர் சம்பவங்களை மட்டும் சுட்டிச் செல்கிறார்.

ஒரு படைப்பு தனிமனித ரசனைக்குரியதாக மட்டும் இருந்தால் அதை சமூகம் கொண்டாட தேவையில்லை. ஆனால் அதே படைப்பு சமூகத்தின் கடந்த காலத்தை நம்முன் நிகழ்த்தி அதில் நாம் செய்த தவறுகளை இனங்காட்டி நிகழ்காலத்தில் நாம் படும் துயரங்களுக்கு தீர்வைச் சொல்லும் விதமாக இருக்குமாயின், அப்படைப்பு, அது எழுந்த சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றே. அவ்வகையில் சோ.தர்மனின் ‘சூல்’ நாவலும் தமிழ் சமூகம் நிகழ்காலத்தில் சந்தித்து வரும் வாழ்வியல் பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தரும் ஒரு வழிக்காட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments