அணுக்கதிர்வீச்சு அபாயம்; உப்பையும் கடல் உணவையும் பதுக்கும் தென் கொரிய மக்கள்

புகுஷிமா அணுவுலையில் உள்ள கதிர்வீச்சு நிறைந்த நீரை கடலுக்குள் விட ஜப்பான் தயாராகி வரும் நிலையில் தென்கொரியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஃபுகுஷிமா அணுவுலை விபத்து, அணுவுலைகளின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பியவண்ணம் உள்ளது. விபத்திற்குப் பின் அணுவுலையைக் குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட நீரை வளாகத்திற்குள்ளாகவே கடந்த 12 ஆண்டுகள் சேமித்து வருகின்றர். விபத்து நடந்த அன்று, உலையைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் நீரை ஏற்றுவதற்காக இருந்த மோட்டார்களை இயக்க மின்சாரம் இல்லாமல் போனது. வேறுவழியே இல்லாமல் அன்று கடல்நீரை பயன்படுத்தி குளிர்விக்கும் பணிகளை செய்ய அந்த நிலையத்தின் தலைமை பொறியாளர் “யோஷிடா” முடிவெடுத்தன் விளைவாக அடுத்தடுத்து விபத்துகள் இல்லாமல் ஓரளவிற்குக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. அதில் பணியாற்றிய யோஷிடாவும் அநேக தீயணைப்புப் படை வீரர்களும் அடுத்த சில ஆண்டுகளுக்குள் உயிரிழந்தனர்.

விபத்து நடைபெற்றபோதும், அதன் பிறகும் வெப்பத்தைக் குறைப்பதற்கு பல மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. கதிர்வீச்சு கொண்ட இந்த நீர் அங்கேயே பல பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டு வந்தது. இந்த நீரில் உள்ள கதிர்வீச்சைக் குறைப்பதற்கு “உலகளாவிய வல்லுநர்கள்” அழைக்கப்பட்டு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது ஜப்பானிய அரசு. எவ்வளவுதான் உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும் “ட்ரிடியம்” கதிர்வீச்சை நீக்க உலகில் எங்குமே தொழிநுட்பம் இல்லாததால் அந்த நீர் அங்கேயே வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பெருகிவரும் கதிர்வீச்சு தண்ணீரின் அளவு அதிகரித்து வந்ததால் பசிபிக் பெருங்கடலில், கரையிலிருந்து பல கி.மீ. தூரம் தாண்டி கதிர்வீச்சு நீரைக் கலந்துவிடுவது என தீர்மானித்தது. பன்னாட்டு அணுசக்தி முகமை (IAEA) ஜூலை 4 அன்று ஜப்பானின் தண்ணீரை வெளியிடும் திட்டம் உலகளாவிய பாதுகாப்புத் தரங்களுடன் ஒத்துப்போகிறது என்று அறிவித்தது இதற்கான அனுமதியை அளித்தது.

IAEA அனுமதி குறித்து தென்கொரிய அரசு, தண்ணீர் வெளியேற்றத்தின் விளைவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் என்றும் ஏ.பி.சி. நியூஸ் தெரிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட பல நாடுகள் இந்த அனுமதிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். 12 ஆண்டுகளாக புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு அம்சங்களை மதிப்பாய்வு செய்து IAEA வெளியிட்ட அறிக்கையில், “ஐ.ஏ.இ.ஏ. அல்லது அதன் உறுப்பு நாடுகள் தண்ணீர் வெளியேற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது”. IAEA தொடர்ந்து இதைக் கண்காணிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய அதிகாரிகள் சர்வ்தேச அணுசக்தி முகமையிடம் தண்ணீரை வெளியேற்றுவதற்கான திட்டம் பாதுகாப்பான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய உதவி கோரிய பின்னர், இரண்டாண்டு கால மதிப்பாய்வின் விளைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி ஹோல்டிங்ஸ் டிசம்பர் 2021 இல் சமர்ப்பித்தது.

பெரும்பாலான கதிரியக்கப் பொருட்களை அகற்ற “மேம்பட்ட திரவ செயலாக்க அமைப்பு” மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியேற்றுவதே ஜப்பானின் திட்டம். தண்ணீரை 1,000 கிலோமீட்டர் தொலைவில் கடலில் மெதுவாக வெளியிடுவதற்கு முன், மீதமுள்ள பொருட்களை அனுமதிக்க அளவிற்கு கீழே கொண்டு வந்து நீர்த்துப்போகச் செய்வதே திட்டம். இந்த ஆய்வுகளை சரி என ஏற்றுக்கொண்டுள்ளது ஐ.ஏ.இ.ஏ.

இதனையடுத்து, ஜப்பானின் நெருங்கிய அண்டை நாடான தென் கொரியாவில் உள்ள மக்களும், வியாபாரிகளும் கடல் உணவு மற்றும் கடல் உப்பை மொத்தமாக வாங்கி பதுக்க ஆரம்பித்துள்ளனர். கடலில் கதிர்வீச்சு கலந்து மீன்கள் உள்ளிட்டவை கதிர்வீச்சால் பாதிக்கப்படக்கூடும் , அதனால் உப்பு கூட கதிர்வீச்சால் பாதிக்கப்படக்கூடும் என்பதால் இப்போதிலிருந்தே உப்பையும், மீனையும் பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர்.

– செய்திப் பிரிவு

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments